புகழ் பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் சொல்வது அப்படியே பலிக்கும் என்று அந்த ஊர் மக்கள் நம்பினார்கள்.அதே ஊரில் இருந்த ஒரு பணக்காரக் கஞ்சன் செலவு செய்யாமல் அவரிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டான்.ஒரு திருமண வீட்டிற்கு சென்ற கஞ்சன் அங்கு ஜோதிடரும் வந்திருப்பதை அறிந்து அவர் பக்கத்தில் அமர்ந்தான்.மெதுவாக ஜோதிடம் பற்றி பொதுவாகப் பேசிவிட்டு தனது பிரச்சினைகள் பற்றி சொன்னான்.ஜோதிடரும் ஜாதகத்தைப் பார்த்தால்தான் தீர்வு சொல்ல முடியும் என்று சொல்ல இதற்காகவே காத்திருந்த கஞ்சன் தனது ஜாதகத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.இடம் காலம் பாராது ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லுகிறாரே என்ற வருத்தம் இருந்த போதிலும் ஜாதகத்தைப் பார்த்து சில விளக்கங்களையும் தீர்வுகளையும் ஜோதிடர் சொன்னார்.அதற்குள் விருந்துக்கு அழைப்பு வரவே இருவரும் எழுந்தார்கள்.ஜோதிடர் பணம் கேட்டு விடுவாரோ என்று நினைத்து,கஞ்சன் சொன்னான்,''அய்யா,நான் உங்கள் வீட்டிற்கு வந்து ஜோதிடம் கேட்கவில்லை.இங்கு விருந்துக்கு வந்த இடத்தில் நீங்கள் ஜோதிடம் சொன்னதால் இது தொழில் முறை ஆகாது. எனவே இதற்கு நான் பணம் கொடுக்க வேண்டியதில்லை,''என்றான்.ஜோதிடரும் மெதுவாக,''என் வீட்டிற்கு வந்து தொழில் முறையில் ஜோதிடம் கேட்பவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது பலிக்கும்.மற்ற இடத்தில் நான் சொல்வது பலிக்காது.''இஞ்சி தின்ற குரங்கு போல கஞ்சன் செய்வதறியாது நின்றான்.
|
|
ஜோதிடரின் 'நல்ல' பதில்...