உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

Showing posts with label ஜென் கதைகள். Show all posts
Showing posts with label ஜென் கதைகள். Show all posts

காரிருள்

2

Posted on : Wednesday, April 16, 2014 | By : ஜெயராஜன் | In :

குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார்,''இரவு முடிந்து பொழுது புலர்கிறது.அந்த நேரத்தில் எந்த நொடியில் பொழுது புலர்ந்து விட்டது என்பதை அறிவாய்?'' ஒரு சீடன் சொன்னான்,''தொலைவில் நிற்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து அது குதிரையா,கழுதையா என்று அறிய முடியும்போது விடிந்து விட்டது என்று பொருள்.''குரு தவறான பதில் என்றார்.இன்னொரு சீடன் சொன்னான், ''இங்கிருந்தே தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தை ஆல  மரமா அரச மரமா என்று சொல்ல முடியும் என்றால் விடிந்து விட்டது என்று அர்த்தம்.''அதற்கும் குரு  மறுப்பாகத் தலை அசைத்தார்.பதில் சொல்லத் தெரியாத சீடர்கள் சரியான விடையைக் கூறும்படி வேண்டினர்.குரு சொன்னார்,''எந்த ஒரு மனிதனைக் கண்டாலும் இவன் எனது சகோதரன் என்றும்,எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும்,எப்போது நீ அறிகிறாயோ, அப்போது தான் உண்மையாகப் பொழுது புலர்ந்து உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள்.அதுவரை உச்சி வெயில் கூடக் காரிருளே.''

நல்ல கேள்விகள்.

2

Posted on : Saturday, April 05, 2014 | By : ஜெயராஜன் | In :

மத போதகர் ஒருவர்,''நல்லவர்களும்,தெய்வநம்பிக்கை உள்ளவர்களும் சொர்க்கத்திற்குப் போவார்கள்,''என்று பிரசங்கம் செய்தார்.ஞானி ஒருவர்,''நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தைத் தருகிறது,''என்றார்.போதகர் விபரம் கேட்க ஞானி கேட்டார்,''ஒருவன் நல்லவனாய் இருக்கிறான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.அவன் சொர்க்கம் போவானா, மாட்டானா? ஒருவன் கொலைக்கு அஞ்சாத்  திருடன். அவனுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கை உண்டு. அவனுக்கு சொர்க்கமா, நரகமா? ஒரு அப்பாவிக்கு நல்லது கெட்டது தெரியாது.அவனுக்கு தெய்வம் பற்றியும் ஒன்றும் தெரியாது.அவனுக்கு எங்கே இடம்?ஒரு மன்னன் அடுத்த நாட்டின் மீது படையெடுத்து,நாட்டைக் கைப்பற்றி,பெரும் செல்வத்தையும் கைதிகளையும் கொண்டு வருகிறான்.அக்கைதிகளை வைத்து அந்த செல்வம் கொண்டு இறைவனுக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறான்.அவனுக்கு சொர்க்கம் தானா? அடிமையாக்கப்பட்ட அந்தக் கைதிகளுக்கு நல்லது செய்ய வழியில்லை.  .தொடர்ந்த துயரங்களால் தெய்வத்தையே நிந்திக்கிறார்கள்.அவர்கள் சொர்க்கம் செல்வார்களா,நரகம் செல்வார்களா?''போதகர் பதில் சொல்ல இயலாது தலை குனிந்தார்.அன்றுஇரவு அவருக்கு ஒரு கனவு வந்தது.கனவில் அவர் ஒரு ரதத்தில் செல்கிறார்.ரதம் எங்கே செல்கிறது என்று வினவ அது சொர்க்கம் நோக்கி செல்வதாகப் பதில் வந்தது.புல்  பூண்டு ஒன்றும் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் பாலை போலக் காட்சி அளித்த ஒரு இடத்தில் ரதம் நின்றது இது எந்த இடம் என்று வினவ இதுதான் சொர்க்கம் என்று பதில் ரதம் ஓட்டியவரிடமிருந்து வந்தது.''புத்தர் காந்தி,இயேசு எல்லாம் இங்கு இல்லையா''என்று கேட்க அப்படி யாரும் இங்கில்லை என்று சொல்லப்பட்டது.பின் ரதம் வேறு திசையில் பயணிக்கிறது.இனிய சோலைகள்,  நதிகள், ஆடிப்பாடும் மக்கள் நிறைந்த ஓரிடத்தில் இப்போது ரதம் நின்றது.இந்தஇடம் எது என்று கேட்க,''இதுதான் நரகம்.நீங்கள் கேட்ட புத்தர் இயேசு எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்.''கனவு கலைந்தது.இப்போது போதகருக்கு தெளிவு ஏற்பட்டது.நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ,அந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும்..

ஏடாகூடம்

2

Posted on : Friday, March 21, 2014 | By : ஜெயராஜன் | In :

புகழ்பெற்ற ஜென் குரு  ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம்.அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான்.மிகத் திறமைசாலி.அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன.குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப்   பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே!நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும்.சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப்  பேசினார்.அப்போது குரு,''''அப்படியா,அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே!அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.குறை சொன்னவர்,புகழ்ந்தவர் இருவருக்கும் குழப்பம்.குரு இப்படி ஏடாகூடமாகப் பேசுகிறாரே,அவனைப் பற்றி அவர் உண்மையில் என்னதான் நினைக்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பி அவரையே கேட்டனர்.
குரு சொன்னார்,''நான் அவனைப் புகழவும் இல்லை,இகழவும் இல்லை.எந்த மனிதனையும் எடை போட நாம் யார்?ஒருவனை நல்லவன் என்றோ,தீயவன் என்றோ கூற உங்களிடமோ,என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது? எதையும் ஒப்புக் கொள்வதோ,மறுப்பதோ என் வேலை அல்ல.அவன் நல்லவனும் இல்லை,கெட்டவனும் இல்லை.அவன் அவனாகவே இருக்கிறான்.அவன் அவனே!அவன் செயலை அவன் செய்கிறான்.உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்,''

நிம்மதி

1

Posted on : Wednesday, February 26, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்தது.ஜென் குரு  ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும்  மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும்,  தனக்கு மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு,''ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,''என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல்,'எடுத்தக் கொள்ளுங்கள் குருவே,''என்றார்.குரு,''நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?''என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.குரு தயங்காது,''எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்?நீ என்னிடமே வேலை பார்க்கலாமே?என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா.ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று சொல்ல மன்னனும் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆண்டு கழித்து குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,''நாடு எப்படி இருக்கிறது?வரவு செலவு எப்படி இருக்கிறது?நீ எப்படி இருக்கிறாய்?''என்று கேட்டார்.மன்னனும்,''நாடு சுபிட்சமாக இருக்கிறது.நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன்.இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,''என்று சொன்னார்.குரு,''அதற்கு அவசியமில்லை.நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால்  இந்த நாடு,'என்னுடையது'என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதி இல்லை.இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,''என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை  பெற்றார்.

யார் அந்த இறைத்தூதர்?

2

Posted on : Friday, January 31, 2014 | By : ஜெயராஜன் | In :

குரு ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.கண் விழித்தபோது எதிரே ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.வந்தவர்,''ஐயா,நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தலைவர்.அந்த மடத்தைப் பற்றி நீங்கள் கூடக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.எங்கள்  மடம் மிகப் பழமையானது எங்கள்  மடத்தைத் தேடி உலகம் முழுவதிலிருந்தும் பலர் வந்த வண்ணம் இருப்பார்.சமீப காலத்தில் இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது.இதற்குக் காரணம் எங்கள்  மடத்திலுள்ள பிக்குகளுக்கிடையே ஒற்றுமை கிடையாது.யார் பெரியவர் என்ற போட்டிதான் உள்ளது.இந்தப் பிரச்சினையிலிருந்து மடத்தை மீட்டுப் பழைய நிலைக்குக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கத்தான் உங்களிடம் வந்தேன்,''என்றார்.அவர் குரலில் தென்பட்ட வேதனையைக் கண்ட குரு  சொன்னார்,''இந்த நிலைமைக்கு அறியாமைதான் காரணம்,''வந்தவர்,''அறியாமையா?''என்று வியப்புடன் கேட்டார்.குரு சொன்னார்,''உங்கள் பிக்குகளுக்கிடையே ஒரு இறைத்தூதர் இருக்கிறார்.அவரை நீங்கள் அறியவில்லை.அதை அறிந்து கொண்டு செயல் பட்டால் உங்கள் மடம் பழைய நிலைக்கு வந்துவிடும்.''இப்படிச் சொல்லிவிட்டு குரு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.'நம்மிடையே யார் இறைத்தூதர்?''என்ற கேள்வி மனத்தைக் குடைய அவர் மடத்துக்கு வந்து பிக்குகள் அனைவரையும் அழைத்து விபரம் சொன்னார்.இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.அவநம்பிக்கையுடனும்,அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.''யார் அந்த இறைத்தூதர்?''என்ற கேள்விதான் அங்கு ஒரே பேச்சு.யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில்,அவராக இருக்குமோ,இவராக இருக்குமோ என்று எண்ணி ஒவ்வொருவரும் அடுத்தவர்களிடம் மிக மரியாதையாகவும் பணிவுடனும்  நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.விளைவு?மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.மடத்திற்கு வந்தவர்கள் அங்கு நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலையை மற்றவர்களுக்கு சொல்ல,இப்போது மடம் முன்பு இருந்ததைக் காட்டிலும் சிறந்த பேருடன் சிறப்பாக விளங்கியது.அங்கே  ஆன்மீகமும் புகழும் போட்டிபோட்டு வளர்ந்தன.மடாலயத் தலைவர் இப்போது ஒன்றினைப் புரிந்து கொண்டார்.இறைத்தூதர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துள்ளார்!

தெளிவு

0

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.;;வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

பகிர்வு

1

Posted on : Friday, September 07, 2012 | By : ஜெயராஜன் | In :

பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டார்,''பல மணி நேரம் உங்களிடம் பேசி விட்டுச் சென்றாலும்,சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றாலும் என் மனம் அமைதியாகி விடுகிறது.ஆனால்,வீட்டிற்குப் போனதும் மீண்டு துக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறதே,ஏன்?அதே சமயம் நீங்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறீர்களே,அது எப்படி?''சிரித்தபடி ஜென் ஞானி சொன்னார்,''நான் உங்களுடன் என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் எப்போதும் என்னோடு உங்கள் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறீர்கள்.அதுதான் காரணம்.''

மனதை வெல்ல வேண்டும்.

0

Posted on : Tuesday, April 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறந்த வில் வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார்,இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது.கீழே அதலபாதாளம்.குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார்.பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப் பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான்.கால்கள் நடுங்க ஆரம்பித்தன.அவன் வில்லை எடுத்து ஒரு பறவையைக் குறி வைத்தான்.ஆனால் அவன் எங்கே கீழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்துடன் இருந்ததால் அவனால் சரியாகக் குறி பார்க்க முடியவில்லை.பதட்டத்துடன் குருவிடம்,''ஐயோ,என்னைக் காப்பாற்றுங்கள்.நான் கீழே விழுந்து இறந்து விடுவேன்.''என்று அலறினான்.குருவும் சாதாரணமாக  பலகையில் நடந்துசென்று அவனைக் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.திரும்ப அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.ஆனால் கர்வம் அழிந்த அந்த சீடன் நினைத்துக் கொண்டான்,''வில் அம்பை முழுமையாக வென்றால்  மட்டும் போதாது,நம் மனதையும் வெல்ல வேண்டும்.அதுதான் முக்கியம்.''

மரக்கிளை

0

Posted on : Tuesday, December 27, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு பொகுஜு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான்.அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது.குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார்.அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித்தான்.குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.அவனைப் பிடித்து,''இதோ உன் கட்டை,''என்று கூறி  அவன் கையில் கட்டையைத் திரும்பக் கொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.அங்கிருந்த மக்கள் குருவிடம்,''இவன் ஒரு அயோக்கியன்.இவனைப் பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம் திரும்பக் கொடுக்கிறீர்களே!''என்று கேட்டனர்.குரு கேட்டார் ,''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய்வோம்?என்ன செய்ய முடியும்?''மக்கள் அவர் கூற்றை ஏற்காமல்,''கிளை காய்ந்து போனது.அதற்கு உயிர் இல்லை.அதற்கு அறிவுரை கூற முடியாது.அதற்கு தண்டனையும் கொடுக்க முடியாது.அதற்கு மனம் என்று ஒன்று இல்லை.எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.குரு ,''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான்.என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங்கவோ,தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ,தண்டனை கொடுக்கவோ வேண்டும்?''என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார்.

சரியா ,தவறா ?

0

Posted on : Monday, December 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர்.அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார்.கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறினர்.குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.குரு மீண்டும் அவர்களிடம் பேசினார்,''உங்கள் அனைவருக்கும் உலகில் நல்லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை.இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது  எது,கெட்டது எது என்று நான் தான்  சொல்லித்தர வேண்டும்.எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.''என்றார்.சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

சொல்லி விட்டு வா

0

Posted on : Friday, December 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் துறவி ஒருவர் தன் வீட்டிற்கு வந்தபோது ஒரு திருடன் இருப்பதைக் கண்டார்.அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லாததால் அவன் திகைத்து நின்றான்.துறவி அவனிடம் சொன்னார்,''ஐயோ பாவம்,என்னை நம்பி நீ எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாயோ!இங்கு ஒன்றும் இல்லையே?ஆனால் நீ வெறும் கையோடு திரும்பப் போகக் கூடாது.,''அவர் தன்   உடைகளைக் களைந்து அவனிடம் கொடுத்து எடுத்துப் போகச் சொன்னார்.பின்னர் அவர் சொன்னார்,''அடுத்த முறை வரும்போது முன்கூட்டி சொல்லிவிட்டு வா.நானும் உனக்காக ஏதாவது தயார் செய்து வைப்பேன்.நீயும் ஏமாந்து போக மாட்டாய்.''இருந்த உடைகளைக் கொடுத்துவிட்டு குளிரில் நடுங்கும் துறவியைக்  கண்டு என்ன செய்வது என்று அறியாது நின்ற  திருடன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து  சென்றான்.அவன் சென்றபின் படுத்த துறவி வானத்தைப் பார்த்து,''என்னால் மட்டும் முடிந்தால் இந்த நிலவை எடுத்து அவனுக்குக் கொடுத்திருப்பேனே!''
**********
ஒரு இளம் துறவி  தன் ஊருக்கு செல்கையில் இடையில் இருந்த ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததால் அக்கரைக்கு செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்க் கரையில் ஒரு ஜென் துறவி நிற்பதைப் பார்த்து எதிர்க் கரைக்கு வருவதற்கான வழி என்னவெனக் கேட்டான்.துறவி சொன்னார்,''இப்போது நீ எதிர்க் கரையில்தானே நிற்கிறாய்?''
**********

இறப்பு

1

Posted on : Thursday, December 08, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் மாஸ்டர் இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான ,அபூர்வமான  தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.உங்களின் தேநீர்க் கோப்பைக்கு காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''

தடை

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும்  சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன்  குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை  வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

நீயே அறிவாய்.

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு ஒருவர் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டு ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மூன்று  பிக்குகள் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஜென் வழியைப் பின்பற்றுபவர்கள் அல்ல.எனினும் ஜென் குருவை அடையாளம் கண்டு அவர் அருகில் வந்து நின்றார்கள்.அவர்களில் ஒருவர் ஜென் குருவிடம்,''ஜென் ஆறு எவ்வளவு ஆழம்?''என்று கேலியாகக் கேட்டார்.கண் இமைக்கும் நேரத்திற்குள் குரு கேள்வி கேட்டவரைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு சொன்னார்,''நீயே அளந்துபார்,''

மனப்பக்குவம்

0

Posted on : Wednesday, August 31, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் ஜென் ஞானி தன பயணத்தில் ஒருநாள் இரவு ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.அந்த ஊர்க்காரர்களுக்கு ஜென கொளகைக்காரகளைக் கண்டாலே பிடிக்காது.அந்த பெண் துறவியும் ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி தங்க இடம் கேட்டார்.ஒருவரும் இடம் தராததுடன் எல்லோரும் கதவை சாத்திவிட்டனர்.வேறு வழியில்லாததால் கிராமத்தின் வெளியே தங்க நேர்ந்தது.அவர் ஒரு பழ மரத்தடியில் தங்கிக் கொண்டார்.கடுமையான குளிர் .காட்டு விலங்குகள் வேறு கத்திக் கொண்டிருந்தன.களைப்பின் மிகுதியால்  சற்றே கண்ணயர்ந்து தூங்கினார்.நள்ளிரவில் குளிர் தாங்க முடியாது விழித்துக் கொண்டார்.வானத்தில் முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.மரத்திலிருந்து மணமுடைய மலர்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.வயலில் செடிகள் காற்றுக்கு அழகாக ஆடிக் கொண்டிருந்தன.இந்த மனோரம்மியமான காட்சிகளைக் கண்டு மனம் மயங்கினார் அந்தத் துறவி.மறுநாள் காலை அவர் ஒவ்வொருவர் வீடாகச் சென்று அவர்கள் தனக்கு தங்க இடம் கொடுக்காததற்கு நன்றி கூறினார்.கிராமத்து மக்கள் புரியாமல் விழிக்க அவர் சொன்னார்,''உங்களில் யாரேனும் தங்க இடம் கொடுத்திருந்தால் நேற்று இரவு இயற்கையின் அழகினை அள்ளிப் பருகியிருக்க மாட்டேன்.தங்க நிலவினை காணவும் , மலர்களின் மணத்தை அறியவும், மூடுபனியை ரசிக்கவும் வயல்செடிகளின் நாட்டியத்தையும் காண வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி,''எந்த சூழ்நிலையிலும் இன்பம் அடையும் மனப்பக்குவம் தான் ஜென் வழிமுறைகள்.

உயிருள்ள புத்தர் .

0

Posted on : Saturday, August 27, 2011 | By : ஜெயராஜன் | In :

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த  ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.அன்று இரவு  கடுங்குளிர்..கிழவரால்  குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,''நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களே''என்று கோபத்தில் கதறினார்.உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,''நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?''கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,''புத்தம் சரணம் கச்சாமி,''என்று  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,''என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான்  புத்தரா?''என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ''மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?'

துடிப்பு

0

Posted on : Saturday, June 11, 2011 | By : ஜெயராஜன் | In :

புகழ் பெற்ற ஜப்பானியத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு ஜென் துறவியை அழைத்திருந்தார்.துறவி வந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அவற்றைப்  பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்.துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை.முடிவில் துறவி,அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட,வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு  கிண்ணத்தைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தார்.அதைக் கண்ட தளபதியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கோபத்தில் துடித்துக் கத்த ஆரம்பித்தார். துறவி அமைதியாகச் சொன்னார்,''உன் கண் முன்னாள் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்கியதை உன் மனத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வேதனையுடன் போர்க்களங்களில் வலியுடன் இறந்து போயின? உன் கண் முன்னே எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?அப்போது ஏன்  உன் மனது துடிக்கவில்லை?''தளபதிக்குத் தன அறியாமையும் இயல்பும் புரிந்து விடவே தானும் துறவியானார்.

பதில்

0

Posted on : Monday, March 14, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் இரண்டு கோவில் பூசாரிகளுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர். பூசாரிகள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது  என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,''எங்கே போகிறாய்?''என்று கேட்டான்.அடுத்தவன் பதில் சொன்னான்,''காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,''என்றான்.  கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,''இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை  வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,''என்றார்.சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,''நீ எங்கே செல்கிறாய்?''என்று கேட்க,அவன் சொன்னான்,''கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,''என்றான்.இவனுக்கு சிரமமாகி விட்டது.தன தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப்  பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க அவனும் சொன்னான்.அவர் சொன்னார்,''அந்தப் பையன் அந்தக் கூட்டத்தார்க்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய்  என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,''
அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,''காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.'' மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக்கூறி ''நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,''என்றான்.
வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள்.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்..

அசையும் கொடி

0

Posted on : Friday, February 18, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல,மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''

விடுதி

0

Posted on : Saturday, November 13, 2010 | By : ஜெயராஜன் | In :

மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.''சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,''என்றார் அவர்.மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,''குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?''குரு கேட்டார்,''மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?''மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,''உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?''என்று கேட்டார்.மன்னனும்,''அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,''என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,''உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?''அரசன் சொன்னான்,''என் மகன்,அதன் பின் என் பேரன்.''குரு,''ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?''என்று கேட்டார்.