உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

Showing posts with label சிந்தனைக்கான கதைகள். Show all posts
Showing posts with label சிந்தனைக்கான கதைகள். Show all posts

கடவுள் கல்லா?

1

Posted on : Monday, September 01, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க குழுவாய் சிலர் வந்திருந்தனர்.அவர்கள் பெரியாரிடம்,''ஐயா,நாங்கள் எல்லாம் தங்களது சுய மரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.தாங்கள் இந்த சமூகத்துக்கு செய்யும் தொண்டு  மிக சிறப்பானது.ஆனாலும் எங்களுக்கு உங்கள் மீது சிறு வருத்தமும் உண்டு.நாங்கள் அனுதினமும் வணங்கும் ஆண்டவன் சிலைகளை நீங்கள் வெறும் கல்  என்கிறீர்கள்.அப்படி சொல்வதை மட்டும் நீங்கள் நிறுத்தினால் நாங்கள் மிக மகிழ்வடைவோம்,'' என்றார்கள். பெரியார், ''கல்லை கல்  என்று சொல்லாமல் வேறு எப்படி  அய்யா சொல்வார்கள்?''என்று கேட்டவர்,''சரி நீங்கள் என் பின்னால் வாருங்கள்,''என்றார்.அவர் எங்கே செல்கிறார் என்பதை ஆவலுடன் கவனித்த அவர்கள்,அவர் ஒரு கோவிலுக்குள் செல்வதைக் கண்டதும் மிக வியப்புக்குள்ளானார்கள் .பெரியார் நேரே கடவுளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த பூசாரியிடம் சென்றார்.அவரிடம், பெரியார் கேட்டார்,''ஐயா,இந்த சாமி சிலை பொன்னால் ஆனதா,இல்லை ஐம்பொன்னால் ஆனதா?''அர்ச்சகர் சொன்னார்,''இல்லை ஐயா,இது கல்தான்,''உடனே பெரியார் வந்திருந்தவர்களிடம் திரும்பி சொன்னார்,''ஐயா,பூசாரி சொன்னதைக் கேட்டுக் கிட்டீங்களா?அவரே இது கல்தான் என்று சொல்லிவிட்டார்.இப்போதாவது நான் சொன்னது உண்மை என்று நம்புகிறீர்களா?''வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

பறவையும் அம்பும்

0

Posted on : Tuesday, August 12, 2014 | By : ஜெயராஜன் | In :

துரோணர் தனது சீடர்களுக்கு,மரத்திலிருந்த ஒரு பறவையின் கண்ணைக்  குறிபார்த்துஅம்பு எய்யக் கூறினார்.பின் ஒவ்வொரு சீடரையும் அவனுக்கு என்ன தெரிகிறது என்று கேட்க,ஒருவர் மரம் தெரிகிறது என்று சொல்ல அடுத்தவர் கிளை தெரிகிறது என்று சொல்ல அர்ஜுனன் மட்டும் எனக்கு பறவையின் கண் மட்டும் தான்  தெரிகிறது என்று சொல்லி பறவையின் கண்ணில் அடித்து வீழ்த்தியது அனைவரும்  அறிந்த கதை.அந்த சம்பவம் நடக்கும்போது கர்ணனின் நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சியை ஒளிந்திருந்து கவனித்துவிட்டுப் பின் கர்ணனிடம் நடந்ததை  சொன்னான்.பின் அவன் கர்ணனிடம்,''வில் பயிற்சியில் நீ அர்ஜுனனுக்குக் குறைந்தவனா,என்ன?நீயும் முயற்சி செய்.அதோ,மரத்தில் இருக்கும் அந்தப் பறவையின் கண்ணை அடித்து வீழ்த்து,பார்ப்போம்,''என்றான்.கர்ணனும் சம்மதித்து வில்லைக் கையில்
எடுத்தான்.நண்பனுக்கு துரோணர் கேட்ட கேள்வி ஞாபகம் வரவே,அவன் கர்ணனிடம்,''கர்ணா,உனக்கு மரத்தில் என்ன தெரிகிறது?''என்று கேட்டான். கர்ணன்,''எனக்கு ஒன்றும் தெரியவில்லை.''என்றான்.நண்பனுக்கு ஏமாற்றம்.கண் மட்டுமே தெரிகிறது என்று அவன் சொல்வான் என்று எதிர் பார்த்ததால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.கர்ணனும் அதே பதிலை சொன்னான்.அடுத்த நொடியே கர்ணனின் வில்லிலிருந்து இரண்டு அம்புகள் பறந்தன.பறவை அடிபட்டுக் கீழே விழுந்தது.நண்பன் பறவையைப் பார்த்தான்.என்ன அதிசயம்!பறவையின் இரண்டு கண்களுமே அம்பால்  தாக்கப் பட்டிருந்தன.நண்பனுக்கோ ஒரே ஆச்சரியம்.''இது எப்படி முடிந்தது?'' என்று கேட்க,கர்ணன் சொன்னான்,''எனக்கு மரத்தில் ஏதும் தெரியவில்லை, ஏனெனில் நான் அந்தப் பறவையோடு பறவையாக ஐக்கியமாகி விட்டேன். அதனால்  ஒரு அம்பு கொண்டு ஒரு கண்ணை தாக்கிவிட்டு அந்தப் பறவை திரும்பிக் கீழே விழுவதைக் கணித்து அடுத்த அம்பினால் அடுத்த கண்ணையும்  எய்தேன்,''என்றான்.நண்பன் கர்ணனைக் கட்டிப் பிடித்து,''இவ்வளவு  திறமை வாய்ந்த  உனக்கு அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லையே!''என்று கலங்கினான்.

கலீல் ஜிப்ரான் -8

0

Posted on : Monday, June 16, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சாமியார் கோவில் வாசலில் நின்று மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினர்.
சில நாட்கள் கழித்து அதே கோவில் வாசலில்  ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான்.கேட்டவர் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில்  அவர்கள் எங்கே,தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள்.கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.
இன்னும் சில நாட்கள் கழிந்தன.புதிதாக ஒரு மனிதன் வந்து,ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான்.இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது.பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு;ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா மன்னிப்பாரா என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.
அடுத்து வந்த வேறு ஒருவன்,''கடவுள் மூன்று பேர் உண்டு.அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு,''என்று சொன்னான்.இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர்.கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது  பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும்  அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர்
அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.

கலீல் ஜிப்ரான் -7

0

Posted on : Sunday, June 15, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு பூனை ஒரு நாயிடம் சொன்னது,''நண்பா,நீ முழு மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்.தொடர்ந்து நீ அவ்வாறு செய்தால் ஒரு நான் இறைவன் உனக்கு அருள் புரிவார்.இதில்  சந்தேகத்திற்கே இடமில்லை.இறைவனின் அருட்பார்வை உன் மீது பட்டுவிட்டால் போதும்.வானிலிருந்து எலிகள் மழையாய்ப் பொழியும்.நீ விரும்பும் அளவுக்கு அள்ளியள்ளி உண்ணலாம். ''இதைக் கேட்ட நாய்,விழுந்து விழுந்து சிரித்தது.அது பூனையிடம் சொன்னது, ''ஏ,முட்டாள் பூனையே,எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்து விட்டாயா?என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்,'மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் எலி மழை பொழியாது,எலும்பு மழை தான் பொழியும்.அதை நாம் ஆசை தீரக் கடித்துத் தின்று மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.''
அவரவர் பாடு அவரவர்க்கு.

கலீல் ஜிப்ரான் -6

0

Posted on : Saturday, June 14, 2014 | By : ஜெயராஜன் | In :

சாலையில் ஒருவன் குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தான் அப்பக்கம் ஒரு தத்துவஞானி வந்தார்.அவர் அவனைப் பார்த்து,''ஐயோ பாவம்,உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.உன் வேலை மிகக் கடினமானது.அசிங்கமான வேலையும் கூட,''என்றார்.அதை ஒப்புக் கொண்ட அவன்,''ஐயா,என் மீது பரிதாபம் காட்டியதற்கு நன்றி.அது சரி,நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?''என்று கேட்டான்.தத்துவ ஞானி சொன்னார்,''நான் மனிதர்களைப் படிப்பவன்.அவர்களின் மனதையும் அவர்களுடைய செயல்களையும் அவர்களின் ஆசைகளையும் படிக்கிறேன்,''இதைக் கேட்டதும் அந்த ஆள் மெல்ல சிரித்தபடி தனது வேலையைத் தொடர்ந்த வண்ணம் சொன்னான்,''நீங்களும் பாவம்தான் ஐயா.நானும் உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன்.''
மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களும்,அவனது செயல்களும் ஆசைகளும் அவ்வளவு மோசமான குப்பைகள்!

கலீல் ஜிப்ரான் -5

0

Posted on : Friday, June 13, 2014 | By : ஜெயராஜன் | In :

நான் ஒருதுறவியை சந்திக்க சென்றபோது அங்கு ஒரு திருடன் வந்தான். களைத்திருந்தாலும் துறவியை திருடன் பார்த்ததும் பரவசத்துடன் அவர்முன் மண்டியிட்டு,''ஐயா,நான் செய்த பாவங்கள் பெரும் பாரமாக என்னை அழுத்துகின்றன.என்னைக்  காப்பாற்றுங்கள்.''என்றான்.துறவி புன்னகை புரிந்தவாறே,''மகனே,நானும் பாவங்கள் செய்துள்ளேன் .அவை என்னையும் அழுத்துகின்றன.''என்றார்.திருடன் முகத்தில் அதிர்ச்சி.அவன் பதட்டத்துடன் சொன்னான்,''ஐயா,அப்படியெல்லாம் பேசாதீர்கள்.நீங்களும் நானும் ஒன்றா?நான் ஒரு திருடன்;பொல்லாதவன்.''உடனே துறவி, ''மகனே, நானும் ஒரு திருடன்தான்;பொல்லாதவன்தான்.''என்றார்.திருடன்,''ஐயோ,நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை.நான் ஒரு கொலைகாரன்.நான் கொலை செய்தவர்களின் கதறல் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.'' என்றான்.துறவி,''நானும் கொலைகாரன் தான்.உன் அனுபவம் எனக்கும் உள்ளது,''என்றார்.இதைக் கேட்ட திருடன், ஆச்சரியத்துடன்  எழுந்து நின்றான்.பின் அவன் நடையில் ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வெளியே சென்றான்.அவன் பார்வை மறைந்ததும் நான் துறவியிடம் ,''ஏன் இப்படி நீங்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்ததாக சொன்னீர்கள்?அவனுக்கு வரும்போது உங்கள் மீது இருந்த மரியாதையும் நம்பிக்கையும் போய் விட்டன மறுபடியும் அவன் தறுதலையாகத் திரியப் போகிறான்,''என்றேன்.துறவி மெலிதாகப் புன்னகைத்தவாறே சொன்னார்,''மகனே அவனுக்கு என் மீது நம்பிக்கை போய் விட்டது என்பது உண்மைதான்.ஆனால் அவன் இங்கு வரும்போது இருந்ததை  விட அதிக மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் திரும்ப சென்றிருக்கிறான்.''அப்போது தூரத்தில் எங்கோ,அந்தத் திருடன் பாடிய பாடலிலிருந்த மகிழ்ச்சி அந்த மலையையும் பள்ளத்தாக்கையும் நிறைத்தது.

கலீல் ஜிப்ரான் -4

1

Posted on : Thursday, June 12, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நதி  கடலில் கலப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தது.அதில் இருந்த இரண்டு நீரோடைகள் தமக்குள் பேசிக் கொண்டன.முதல் ஓடை அடுத்ததிடம்
கே ட்டது,''நண்பா,உன் பயணம் நல்லபடியாக இருந்ததா?'' இரண்டாம் ஓடை சொன்னது,''அதை ஏன் கேட்கிறாய்.நான் வந்த வழி மிக மோசமாக இருந்தது. சரியான வழி நடத்துபவர் இல்லாமல், கண்ட பாதைகளில் பல சோம்பேறி மனிதர்களைக்கடந்து வந்தேன்.அது சரி,உன்  பயணம் எப்படி இருந்தது?''முதல் ஓடை சொன்னது,''நான் வந்த பாதை எங்கும் ஒரே சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம். மலைப்பாதையில் நறு மணம் மிக்க மலர்களையும் மரங்களையும் கடந்து வந்தேன்.அழகிய ஆண்களும் பெண்களும் என் நீரை அள்ளிக் குடித்தார்கள். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தார்கள்.''இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நதி அதட்டலாக சத்தம் கொடுத்தது,''என்ன சலசலப்பு அங்கே?எல்லோரும் பேசாமல் என்னோடு வாருங்கள்.நாம் இப்போது பெரிய கடலில் கலக்கப் போகிறோம்.இனி எதுவும் பேசாமல் என்னோடு வந்தாலே போதும்.கடலுக்குள் கலக்கும்போது நம்முடைய பழைய அனுபவங்களோ, மகிழ்ச்சிகளோ,வருத்தங்களோ,சலிப்புகளோ எதுவும் ஞாபகம் இருக்கப் போவதில்லை.நம் கடல் அன்னையின் இதயத்தை அடைந்தபின் நாம் எல்லோரும்சமம்தான்.''

கலீல் ஜிப்ரான் -3

0

Posted on : Wednesday, June 11, 2014 | By : ஜெயராஜன் | In :

இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர். இருவரில் ஒருவருக்குத்தான்.நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்.சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான். அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்.திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,''உனக்கு  நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?'' இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத்  தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது.நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில்  அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.''

கலீல் ஜிப்ரான்-2

0

Posted on : Tuesday, June 10, 2014 | By : ஜெயராஜன் | In :

மன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன்.அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,''இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.''அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்?''என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,''என்னைப் போல
எ ப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்?''என்று கேட்டான்.என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.'' பின்னர் அவன் என்னிடம்,''நீ இங்கே எப்படி வந்தாய்? என்னைப் போல்தானா?'' என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான்  வந்திருப்பதாகக் கூறினேன்.அவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்,''ஓஹோ,அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா?''

கலீல் ஜிப்ரான்

2

Posted on : Monday, June 09, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிப்பி இன்னொரு சிப்பியிடம் சொன்னது,''ஐயோ,என்னால் வலி தாங்க முடியவில்லையே!''இரண்டாவது சிப்பி காரணம் கேட்க முதல்  சிப்பி, ''என்னுள் ஒரு கனமான உருண்டைப் பந்து ஒன்று சுழல்வது போல இருக்கிறது.அதனால் ரொம்பவலி.''என்றது.இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.மிகுந்த பெருமையுடன் அது கூவியது,''நல்ல வேளை,எனக்கு அப்படி எந்த வலியும் ஏற்படவில்லை. நான் நலமுடன் உள்ளேன்.இறைவனுக்கு நன்றி.''சிப்பி இரண்டும் பேசிக் கொண்டிருந்ததை ஒரு நண்டு கேட்டுக் கொண்டிருந்தது .அது இரண்டாவது சிப்பியிடம் சொன்னது,''உனக்கு தற்போது எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம்.உன் நண்பனை சிரமப்படுத்தும் அந்த வலி,இன்னும் சில நாட்களில் ஒரு அழகான முத்தை உருவாக்கும்.வலியைத் தாங்க விரும்பாத நீ எப்போதும் இப்படி வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான்.''
There is no gain without pain.

பிராமணன்

2

Posted on : Thursday, May 08, 2014 | By : ஜெயராஜன் | In :

முன்னொரு காலத்தில் ஒரு பிராமணர் இருந்தார்.அவருக்கு ஒரு மகன் இருந்தான்.ஜாதிகள் பற்றிய தீவிரமான பாகுபாடுகள் இருந்தகாலம் அது.பிராமணரின் மகன் ஒரு உழவர் வீட்டுப் . பெண்ணைக் காதலித்தான். ஆனாலும் தந்தை சம்மதிக்க மாட்டாரே என்று கவலைப்பட்டான்.நண்பன் ஒருவன் யோசனை சொன்னான்,''நீ உன் தந்தையிடம் அந்தப் பெண் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவள் என்று துணிந்து சொல்,''இளைஞனும் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு தந்தையிடம் நண்பன் சொன்னதுபோலப் பொய் சொன்னான்.அதிர்ச்சியுற்ற அந்தப் பெண் உடனே,''ஐயா,உங்கள் மகன் சொல்வது தவறு.நான் உழவர் வீட்டை சேர்ந்த பெண் தான்.நீங்கள் அனுமதித்தால் மட்டுமே இத்திருமணம் நடைபெறும்'' என்றாள்.பிராமணர் புன்னகை புரிந்தபடி சொன்னார்,''அம்மா,உன் அப்பா எந்தத் தொழில் செய்தால் என்ன?துணிந்து உண்மை சொன்ன நீயும் ஒரு பிராமணப் பெண்தான்.உண்மையான பிராமணர் பொய் சொல்ல மாட்டார்கள்.பிராமண  குலத்தில் பிறந்தாலும் என் மகன்  பொய் சொல்லி விட்டான்.அவன் உண்மையான பிராமணன் அல்ல...பிராமணன் அல்லாத இவனை நீ திருமணம் செய்து கொள்ள பிராமணரான உனக்கு ஆட்சேபம் இல்லாத நிலையில்  இத்திருமணத்திற்கு எனக்கு முழு சம்மதமே.''

சீடன்

0

Posted on : Thursday, May 08, 2014 | By : ஜெயராஜன் | In :

சாக்ரட்டீசிடம் நிறையப் பேர் தம்மை சீடராக்கிக் கொள்ள வேண்டி வருவதுண்டு.அப்போது சரியான சீடனைத் தேர்வு செய்ய அவர் ஒரு வினோதமான தேர்வு வைப்பார்.வந்தவரை அவர் ஒரு குளத்தைப் பார்த்து என்ன தெரிகிறது என்று கேட்பார்.அவர் சொல்லும் பதிலை வைத்தே சீடனைத் தேர்ந்தெடுப்பார்.அவர் எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.நண்பர் ஒருவர் அவரிடம் விபரம் கேட்டார்.சாக்ரடீஸ் சாதாரணமாகச் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நண்பரே!நான் குளத்தில் நீந்தும் மீன்களைப் பார்க்கிறேன் என்று சொல்பவர்களை எனது சீடராக ஏற்றுக் கொள்வேன்.அதற்கு மாறாக எனது முகம் தெரிகிறது என்று சொல்பவர்களை நான் நிராகரித்து விடுவேன்.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.தன்னையே மறக்காத ஒருவர் பிறரையும் மற்றவற்றையும் கண்டறிய முடியாது,''

கண்ணாடி

0

Posted on : Wednesday, May 07, 2014 | By : ஜெயராஜன் | In :

மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.குரு அவனிடம், ''இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,''என்றார்.அவனும்,''மக்கள் போய் வருகிறார்கள்,''என்றான்.குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,''இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,''என்றார்.அவனும் பார்த்து விட்டு,''என் முகம் தெரிகிறது,''என்றான்.''மக்கள் யாரும் தெரியவில்லையா?''என்று குரு கேட்க அவன் இல்லை என்றான்.இப்போது குரு சொன்னார்,''இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன.ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை.ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது.நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும்.அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி,''

தன்னம்பிக்கை

1

Posted on : Tuesday, May 06, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.அங்கு வந்து நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும் பார்த்து,''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார் செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.ஊரின் பெரும் பணக்காரர்,''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை செலவழித்தாலும் பத்தாதே,''என்று அங்கலாய்த்தார்.படைத்தலைவர் ஒருவர்,''ஏதாவது போர் என்றால் நாட்டு மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன்.ஆனால் பட்டினி கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.நிலச்சுவான்தார் எழுந்து,''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில் சுத்தமாக விளைச்சல் இல்லை.இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப்போகிறேன் என்பதே எனது இப்போதைய கவலை.எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது.''என்றார்.அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி,''பட்டினி கிடப்பவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்,''என்றாள்.அனைவருக்கும் ஆச்சரியம்.''அது எப்படி உன்னால்  முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.அவள் பணிவுடன் சொன்னாள்,''ஐயா,நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன்.அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று சொன்னவர்கள் தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.அவளுடைய தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார்.
மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும்.

நஷ்டம் என்ன?

1

Posted on : Monday, May 05, 2014 | By : ஜெயராஜன் | In :

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை  வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப்  பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் . பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத்  தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள். அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே,  அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்.

வாத்தும் குதிரையும்.

1

Posted on : Tuesday, April 22, 2014 | By : ஜெயராஜன் | In :

வாத்து ஒன்று குதிரையைப் பார்த்து சொன்னது,''நான் எல்லா வகையிலும் உன்னைக் காட்டிலும் சிறப்புடையவன்.உன்னைப்போல தரையில் என்னால் நடக்க முடியும்.எனக்கு அழகான இறக்கைகள் இருக்கன்றன.அது கொண்டு வானில் என்னால் பார்க்க முடியும்.என்னால் ஆற்றில் நீந்திக் குளிக்க முடியும்.என்னிடம் ஒரு பறவை,ஒரு மீன்,ஒரு மிருகம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன.''
குதிரை சொன்னது,''உன்னிடம் மூன்று வித குணாதிசயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் இந்த மூன்றில் எதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நீ இல்லை.உன்னால் ஒரு கிளி போலப் பறக்க முடியாது.சிறிது தூரம்தான் உன்னால் பறக்க முடியும்.உன்னால் நீரில் நீந்த முடியும்.ஆனால் உன்னால் மீன் போல நீரிலேயே வாழ முடியாது.உன் சப்பை காலுடனும் நீண்ட கழுத்துடனும் நடக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள்!என் அங்கங்கள் எவ்வளவு கன  கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன!என்னுடைய வலிமையை நீ அறிவாயா?என் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும்?மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன்.அதில் எனக்கு மகிழ்ச்சியே!''

முன் வைத்த காலை...

5

Posted on : Tuesday, March 04, 2014 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ்.பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை.இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத்தன உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம்,''இப்போது திரும்பினால்,பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம்.கடலில் வீணாக உயிர்விட வேண்டாம்,''என்றனர்.ஆனால் கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை.தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால்  கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர்.கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள்.அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்.அவர் மாலுமிகளிடம் சொன்னார்,''நண்பர்களே,உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது.ஒருவர் குறைந்தால்  கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும்.எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்கி செலுத்துங்கள்.அதற்குள் கரை தென்படாவிட்டால் என்னைக்  கொன்று விட்டுத் திரும்புங்கள்.அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும்வரை உணவு சரியாக இருக்கும்,''என்றார்.கொலம்பஸ் இவ்வாறு சொன்னதும் மற்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.ஒன்றும் சொல்லாது கப்பலை முன்னோக்கி செலுத்தினர்.அடுத்த சில மணி நேரங்களிலேய கரை தென்பட்டதும் எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்கு கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவுதான் காரணம்.

அபு பென் ஆடம்

1

Posted on : Friday, January 10, 2014 | By : ஜெயராஜன் | In :

நள்ளிரவு நேரம்.வெள்ளை நிலவு.உள்ளே அபுபென் ஆடம் தூக்கத்தில் இருந்தான்.அவன் முகத்தில் அமைதி.அறைக்குள் ஏதோ சப்தம்.மெல்லக் கண் திறந்து பார்த்தான்.ஒரு அழகான தேவதை அவன் மேசையருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது.அபு அருகில் சென்றான்.எதிரே விரித்து வைக்கப் பட்டிருந்தஒரு தங்கப் புத்தகத்தில் மயிலிறகு கொண்டு எழுதிக் கொண்டிருந்த தேவதை நிமிர்ந்து பார்த்தது.
''என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?''அபு கேட்டான்.
''யாரெல்லாம் இறைவனை நேசிக்கிறார்கள் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்,''என்றது தேவதை.
''அதில் என் பெயர் இருக்கிறதா?''என்று ஆவலுடன் கேட்டான் அபு.
ஒன்றும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கியது தேவதை.
அபு மனம் உடைந்து விடவில்லை.கம்பீரமாக தேவதையைப் பார்த்து சொன்னான்,''என்பெயரை சக மனிதர்களை நேசிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்.''
கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து விட்டது தேவதை.மறுநாள் இரவு.மறுபடியும் வந்தது தேவதை.
''தனது அன்புக்குப் பாத்திரமானவர்களின் பெயர்கள் உள்ள பட்டியல் ஒன்றைக் கடவுள் என்னிடம் கொடுத்தார்.அதை நீ பார்க்கின்றாயா?''என்று கேட்டது.அபு ஒன்றும் பேசவில்லை.தேவதை அதுவாகப் பட்டியலைத் திறந்து காண்பித்தது.
அதில் முதலில் இருந்த பெயர்,'அபு பென் ஆடம்.'!
சக மனிதர்களை நேசிப்பவன் ஆண்டவனை நேசிப்பவனே!
                                         --மூலம்:ஒரு ஆங்கிலக் கவிதை.

தவமாய் தவமிருந்து....

1

Posted on : Tuesday, December 31, 2013 | By : ஜெயராஜன் | In :

முனிவர் ஒருவர் காட்டில் கடவுளை வேண்டி நீண்ட நாட்கள் தனது உடலை வருத்தி தவமிருந்தார்.கடவுளும் அவரது வேண்டுதலுக்கு இரங்கி நேரில் தோன்றினார்.''பக்தா,உன் பக்தியை மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும்?''என்று கேட்டார்.முனிவரும்  மிக்க மகிழ்வுடன்,''இறைவா,நான் நீரில் நடக்க வேண்டும்:நெருப்பு பட்டு என் உடல் அழியாதிருக்க வேண்டும்,'' என்று கேட்டார்.இறைவனும் அவர் வேண்டிய வரத்தை அளித்து விட்டு மறைந்தார்.முனிவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.தனது வரத்தை சோதித்துப் பார்க்க எண்ணி ஆற்றிற்கு  சென்று நீரின் மீது காலை வைத்தார்.அவர் கால் நீருக்குள் இறங்கவில்லை.அவருக்கு நீரில் நடப்பது மிக எளிதாக இருந்தது. எல்லோரும் அவரை ஆச்சரியத்துடன் வணங்கினர்.மறுநாள் காலை அவர் குளித்துவிட்டு வழக்கமான பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட எண்ணி ஆற்றிற்கு சென்றார்.குளிப்பதற்கு ஆற்றினுள் இறங்கினார்.அந்தோ பரிதாபம்!அவரால் நீரில் நடக்கத்தான் முடிந்ததே ஒழிய அவரால் நீரில் இறங்கிக் குளிக்க முடியவில்லை.குளிக்காமல் பூஜையில் ஈடுபட முடியாது.அவருக்குப் பயம் வந்து விட்டது.குளிக்காததாலும் அதனால் பூஜைகள் செய்ய இயலாததாலும் தான் இதுவரை அடைந்திருந்த சக்திகள் அனைத்தையும் இழக்க நேரிடுமே என்ற அச்சத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.அவரது பிணத்தை எடுத்துச் சென்று அதற்குக்கொள்ளி வைக்க முயற்சிக்கையில் அந்த உடலில் தீப்பற்றவில்லை.அதனால் செய்வதறியாது அவரது உடலை அப்படியே விட்டு சென்றனர்.அவரது உடல் காக்கைக்கும் கழுகுக்கும் இரையானது.
நாம் ஆசைப்படுவதெல்லாம் நமக்கு தேவையானதாய் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.

அழகும் கொடூரமும்

0

Posted on : Thursday, December 26, 2013 | By : ஜெயராஜன் | In :

ஓவியர் ஒருவர்,உலகிலேயே மனிதருள்  ஒரு அழகான முகத்தையும் ,ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார்.முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார்.நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை.திடீரென  அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார்.கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார்.மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார்.பின்,கொடூர முகத்தையும் வரைந்து,இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார்.கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது.அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்!ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை.அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை.ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது.அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது.சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார்.வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார்.அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.ஏன்?அவன் வேறு யாருமில்லை.அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ,அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான்  அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.