மூதறிஞர் ராஜாஜி ஒரு முறை சேலம் நகர் மன்றத் தலைவராய் இருந்தார்.ஒரு நகர் மன்றக் கூட்டத்தில்,ஒரு உறுப்பினர் சேலம் சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.அது சம்பந்தமாக விவாதம் நடந்தது.ஒரு சிலர் வேண்டும் என்றும் ஒரு சிலர் வேண்டாம் என்றும் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.நகராட்சியில் நிதிநிலைமை சரியில்லாதிருந்தது.அதைக் கருத்தில் கொண்டாலும் சுற்று சுவர் உடனைதேவையில்லை என்பது ராஜாஜியின் எண்ணம்.நிதி நிலை பற்றி வெளியில் சொல்வது சரியாய் இருக்காது என்று அவர் கருதினார்.விவாதம் மிக சூடான நிலையில் அதுவரை அமைதியாய் இருந்த ராஜாஜி தலையிட்டார்.
அவர் சொன்னார்,''சுடுகாட்டுக்கு சுற்று சுவர் தேவையில்லை.''என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பதை அறிய அனைவரும் ஆவல் கொண்டனர்.ராஜாஜி தொடர்ந்தார்,''சுடு காட்டுக்கு உள்ளே சென்றவன் வெளியே வரமாட்டான்.வெளியே இருப்பவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்.அப்படி இருக்க சுற்று சுவர் எதற்கு?''அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.நிதிநிலை பற்றி அறிந்தவர்கள் அந்த சூழலை ராஜாஜி சரி செய்தசாமர்த்தியத்தை எண்ணி வியந்தனர்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கவியரசர் கண்ணதாசன் காரில் போய்க் கொண்டிருந்தார்.அவர் பொதுவாக தாமதமாய்த்தான் விழாக்களில் கலந்து கொள்வார்.அன்றும் விழா ஆரம்பிக்கும் தருணம் வந்து விட்டது. ஓட்டுனர் காரை அதி விரைவாக ஓட்டிச் செல்கிறார்.அந்த வேகத்தில் கார் கூட அதிர ஆரம்பிக்கிறது.கவியரசருக்கு வயிறே கலங்குகிறது.உடனே ஓட்டுனரிடம்,''கொஞ்சம் மெதுவாகப் போகலாமே,''என்றார்.ஆனால் தாமதம் ஆகிறது என்பதனை உணர்ந்த ஓட்டுனர் வேகத்தைக் குறைக்காமலேயே
ஓட்டினார்.கண்ணதாசன் சற்று கோபமாக,''மெதுவாகப் போ என்று சொன்னேனே?''என்றார்.ஓட்டுநரோ,''ஐயா,இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்குப் போய் சேர முடியும் ,''என்றார்.கவிஞர்,''நான் சொல்வதைக் கேள்.ஒரு கால் மணி நேரம் தாமதமாகப் போனால் கூடப் பரவாயில்லை.பத்து வருடம் முன்னாலேயே போய் விடக் கூடாது,''என்றார் சிரிக்காமலேயே. ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!
கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வந்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காரு!அண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில் அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.உடனே என்.எஸ்.கே.முகத்தை குழந்தைத் தனமாக வைத்துக் கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே பேசுங்கள்,''என்று சொன்னார்.
ஒரு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சிலும்,இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.ராதாகிருஷ்ணன் கையை சுத்தமாகக் கழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்.சர்ச்சில் கரண்டி,முள் கரண்டி ஆகியவற்றை உபயோகித்து சாப்பிட ஆரம்பித்தார்.ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைப் பார்த்த சர்ச்சில் ''என்ன இது,கரண்டியை உபயோகித்து சாப்பிடுங்க.அதுதான் சுகாதாரமானது.''என்றார்.உடனே ராதாகிருஷ்ணன், ''இல்லை அய்யா,கைதான் ரொம்ப சுகாதாரமானது.''என்றார்.உடனே சர்ச்சில்,'அது எப்படி?''என்று கேட்க,நமது ஜனாதிபதி சொன்னார்,''கைதான் சுகாதாரமானது.ஏனென்றால்,அதை வேறு யாரும் உபயோகப் படுத்த முடியாது.மேலும் எனது கை சுத்தமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.உங்களால் உங்கள் கரண்டி சுத்தமாக இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?''சர்ச்சில் பதில் சொல்ல முடியாது திகைத்து நின்றார்.
கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார்.''முப்பது வயதில் நீ ஒரு சமதர்ம வாதியாக இல்லாவிட்டால் உன்னிடம் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல முப்பது வயதுக்குப் பின்னும் நீ சமதர்மவாதியாகத் தொடர்ந்தால் அப்போதும் உன்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்''என்று சொன்னவர் அவர்.
ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச்
சொன் னார்.ஒருவர் 'கொட்டி' என்றும் இன்னொருவர் 'கோட்டி' என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?''என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
பாரசீகத்தை சாஞ்சன் என்னும் மன்னன் ஆண்டபோது அவரது அரசவையில் ரஷீத்,பொகானி என்ற இரண்டு பெரும் புலவர்கள் இருந்தனர்.இருவருமே சிறப்பாக செயல் படக்கூடியவர்கள்.இருந்தபோதும் அவர்களுக்குள் கடும் காழ்ப்புணர்ச்சி.ஒருவரை ஒருவர் காலை வாருவதற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.ஒருநாள் மன்னர் பொகானியிடம் கேட்டார்,''ரஷீத்தின் கவிதைகள் எப்படி?உங்கள் அபிப்பிராயம் என்ன?''பொகானி சொன்னார், ''நன்றாகத்தான் இருக்கிறது.ஆனாலும் உப்பு போதாது.''மன்னர் சிரித்துக் கொண்டே ரஷீத்திடம் இதுபற்றி அவருடைய பதிலைக் கேட்டார்.ரஷீத்தும் சிரித்துக் கொண்டே,''அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ''என்றார். அவருடைய பதில் கேட்டு அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்,பொகானி.ரஷீத் தொடர்ந்தார்,''எனது கவிதை வரிகளில் தேனும் சர்க்கரையும் அதிகமாக இருக்கும்.உப்பு அதில் இருந்தால் அது கெட்டு விடும்.அதனால்தான் என் கவிதைகளில் நான் உப்பு சேர்ப்பதில்லை.ஆனால் பொகானி யின் கவிதைகளில் உப்பு அதிகம்.ஏனெனில் அவருடைய கவிதைகள் அழுகிய முட்டைக்கோஸ்,கத்தரிக்காய் போன்றது.அது தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் நிறைய உப்பு போட வேண்டும் அல்லவா?''
ஒரு முறை பீகார் மாநில சம்பந்தமான பிரச்சினை ஒன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது.காலத்தின் அருமை கருதிஅவைத் தலைவர் இந்த விவாதத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் பேசலாம் என்றார்.அப்போது பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எழுந்து பேச ஆரம்பித்தார்.உடனே அவைத்தலைவர் தலையிட்டு,''நீங்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவராயிற்றே.அதனால் நீங்கள் பேசக் கூடாது,'' என்றார்.அதற்கு வாஜ்பாய்,''நானும் பீகாரிதானே,'' என்றார். அவைத் தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.வாஜ்பாயியே பின்னர் சிரித்துக் கொண்டு சொன்னார்,''என் முழுப் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய் தானே!அதனால் நானும் பேசலாம் என்று நினைத்தேன்.''
இங்கிலாந்தில் ஒரு மூத்த அரசியல்வாதி இருந்தார்.அவர் உடல் பருத்த மனிதர்.அவருடைய தொப்பை மிகப் பெரியதாக இருக்கும்.அவரைக் கேலி செய்ய நினைத்த சர்ச்சில் ,''என்ன சார்,எப்போது உங்களுக்கு பிரசவம்?குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதாக உத்தேசம்?''என்று பலர் முன்னால் கேட்டார்.அவரும் சளைக்காமல்,''ஆணாக இருந்தால் மன்னரின் நினைவாக ஜார்ஜ் என்று பெயர் சூட்டுவேன்.பெண்ணாகப் பிறந்தால், ராணியின் நினைவாக மேரி என்று பெயர் சூட்டுவேன்.வெறும் வாயுவாக இருந்தால்,உங்கள் நினைவாக சர்ச்சில் வயிறு என்று என் வயிற்றுக்கு பெயர் சூட்டி விடுவேன்.''என்றார்.அதன்பின் அங்கே சர்ச்சில் நிற்பாரா என்ன?
********
இந்தி நடிகர் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தில் ஜோக்கராக நடித்து புகழ் பெற்றிருந்த நேரம்.அவரை ஒரு அரசியல்வாதி சந்தித்தார்.,''நீங்கள் ஏன் ராஜ்ய சபா எம்.பி.பதவிக்குப் போட்டி போடக் கூடாது?''என்று கேட்டார்.அதற்கு ராஜ்கபூர் சொன்னார்,''பாராளுமன்றத்தில் நான் முட்டாளாக இருப்பதை விட படத்தில் ஜோக்கராகவே இருந்து விட்டுப் போகிறேனே!''
********
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கனின் முகம் வடுக்களுடனும் சிடுசிடுப்பாக இருப்பது போலும் இருக்கும்.ஆனால் அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருந்தது.ஒரு நாள் பொது விவாதம் ஒன்றில் லிங்கன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு எதிராகப் பேசிய ஒரு அரசியல்வாதி அவருக்கே உரித்தான பாணியில்,''லிங்கன் இரட்டை முகம் கொண்டவர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி முகத்தை மாற்றி வைத்துப் பேசுவார்,''என்று பேசினார்.அவர் சொல்ல வந்தது,லிங்கன் தனது கொள்கையில் ஒரே மாதிரி கருத்துடன் இருப்பதில்லை என்பதே.ஆனாலும் லிங்கன் பேசும்போது,''எதிர்க் கட்சி நண்பரின் இந்தக் கூற்றை பார்வையாளர்களான உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.எனக்கு மட்டும் இரண்டு முகங்கள் இருந்தால்,இந்த அசிங்கமான முகத்தை ஏன் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்?மாற்றிக் கொண்டிருக்க மாட்டேனா?''என்றதும் எதிர்க் கட்சிக்காரரின் முகத்தில் ஈ ஆடவில்லை.
பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைனிடம் ஒரு பழைய குடை இருந்தது.அவர் எப்போதும் இந்தக் குடையுடன் தான் காணப்படுவார்.ஒரு நாள் அவருக்கே இந்தக் குடை கிழிந்து அசிங்கமாக இருக்கிறதே என்று தோன்றியது .அதை உடனே வழியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றார்.சிறிது நேரத்திலேயே அவருடைய நண்பர் ஒருவர்,''என்ன உன் குடையைத் தவறிக் கீழே விட்டு விட்டாயா?யாரோ குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். நல்லவேளை,அதை நான் பார்த்ததால் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். கவனமாகப் பார்த்துக்கொள்,''என்று கூறிக் கொடுத்துச் சென்றார், ட்வைன் தலையில் அடித்துக் கொண்டார்.கீழே போட்டால்தானே எடுத்துக் கொடுக்கிறார்கள் என்று எண்ணிய அவர் மறுநாள் .அக்குடையை ஒரு கிணற்றில் போட்டு விட்டு சென்றார்.மறுநாளே கிணற்றைத் தூர் வாரச் சென்ற ஒருவன் குடையை எடுத்து அது ட்வைனுடையது என்பதறிந்து அவரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டான்.அவருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது.எங்கு போட்டாலும்,வேண்டாம் என்று நினைத்த குடை திரும்ப வந்து விடுகிறதே என்று வருந்திய அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்.அடுத்த நாள் மழை பெய்து கொண்டிருந்தது.அவரைப் பார்க்க வந்த நண்பர் வெளியே செல்ல அவரிடம் ஏதாவது குடை இரவல் தர முடியுமா என்று கேட்டார்.மகிழ்ச்சியுடன் அவரும் தனது குடையை எடுத்துக் கொடுத்தார்.அதன்பின் அந்தக் குடையைப் பற்றிய கவலை அவருக்கு வரவே இல்லை.இரவல் கொடுத்த பொருள் திரும்ப வருமா?
முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த பேச்சாளர். இலக்கியவாதியும் கூட.அவருடைய சேவையைப்ப் பாராட்டி ஒரு பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.ஏற்புரை கூற வந்த அவர் ''ஆண்களுக்கு சமமாக பெண்களை முன்னேற்ற செய்ய வேண்டும் என்று பாடு பட்டு வந்தோம்.ஆனால் இப்போது பெண்களுக்கு சமமாக ஆண்களை முன்னேற்ற வேண்டிய நிலை வந்து விட்டது,''என்று கூறி பேச்சை சில நொடிகள் நிறுத்தினார்.எல்லோரும் ஆவலுடன் அவரை நோக்க அவர் தொடர்ந்தார்,''உதாரணத்துக்கு என் மனைவியை சொல்லலாம்.அவர் 25 ஆண்டுகளுக்கும் முன்னரே டாக்டராகி விட்டார்.நான் இப்போதுதான் டாக்டராகியுள்ளேன்.''(அவரது மனைவியின் பெயர் டாக்டர் விசாலாக்ஷி நெடுஞ்செழியன்.)
********
ஜின் காக்டு என்பவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்.அவரிடம் ஒரு நண்பர்,''உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உண்டா?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''உறுதியாக நம்புகிறேன்.எனக்கு பிடிக்காதவர்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?''
********
மேரி கோரல்லி என்று ஒரு ஆங்கில நாவல் ஆசிரியை இருந்தார்.அவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.அவருடைய சினேகிதி ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.அதற்கு அவர் சொன்னார்,''நான் செல்லமாக ஒரு நாய்,கிளி,பூனை வளர்க்கின்றேன்.அவை என்னிடம் அன்பாக இருக்கின்றன.ஒரு நாய் வளர்க்கிறேன்.அது நாள் முழுவதும் குரைக்கிறது.கிளி ஒன்று வளர்க்கிறேன்.அது பகல் முழுவதும் திட்டுகிறது.பூனை ஒன்று வளர்க்கிறேன்.அது இரவு முழுவதும் வெளியே போய் விடுகிறது.இப்படி ஒரு கணவன் பல்வேறு தருணங்களில் செய்யக் கூடிய காரியங்களை இவை செய்து விடுகின்றன.பின் எதற்காக நான் மணம் செய்து கொள்ள வேண்டும்?''
********
ஒரு கூட்டத்தில் கல்கி பேசினார்.அவருக்கு முன் கிருஷ்ணசாமி அய்யரும்,டி .கே.சி.யும் பேசி முடித்திருந்தனர். கிருஷ்ணசாமி அய்யர் திருப்புகழை நன்கு படித்தவர்.டி.கே.சி.'ரசிகமணி' என்று அழைக்கப் பட்டவர்.கல்கி,''மேடையில் இந்தப் பக்கம் திருப்புகழ் மணி.மறுபக்கம் ரசிகமணி.இடையில் நின்று பேசும் நானோ ஒரு பெண்மணி கூட இல்லையே!'' என்றதும் ஒரே கைதட்டல்.
********
பிரபல ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு முறை இந்தியா வந்திருந்தார்.நண்பர்களுடன் கங்கை நதிக் கரைக்கு சென்றார்.மிக எதிர் பார்ப்புடன் வந்த அவர் கங்கை நீரைப் பார்த்துவிட்டு,''கங்கை நீர் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறதே?''என்று கேட்டார்.நண்பர்கள் விட்டுக் கொடுக்காமல் , ''பார்க்க அப்படித்தான் இருக்கும்.உங்கள் நாட்டு விஞ்ஞானிகளே இந்த நீரை சோதித்துப் பார்த்துவிட்டு இதில் எந்த நோய்க் கிருமியும் வாழ முடியாது என்று கூறி விட்டனர்,''என்றனர்.மார்க் ட்வைன் சிரித்துக் கொண்டே சொன்னார்,''சரிதான்.சுய மரியாதையுள்ள எந்த உயிர்க் கிருமியும் இதில் வாழ ஒத்துக் கொள்ளாது.''
********
விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்து பாராட்டியது.அந்த ஊர் மதுவுக்கு புகழ் பெற்றது.எனவே விருந்தில் மது தாராளமாகப் புழங்கியது.ஆனால் எவ்வளவோ வற்புறுத்தியும் ராமன் மது அருந்த மறுத்து விட்டார்.விருந்து முடிந்தவுடன் நண்பர்கள்,ராமன் மது குடிக்காமல் எப்படித் தப்பித்தார் என்று கேட்டார்கள்.அவர் சொன்னார்,''இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மதுவில் 'ராமனின் விளைவு' எப்படியிருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.இன்று ராமனிடம் மதுவின் விளைவு எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்தார்கள்.''
********
'போர்க்காலக் கதாநாயகன்'என்று பெயர் பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கும் அவரது மருமகனுக்கும் கொஞ்சமும் ஒத்துப் போவதில்லை.ஒரு நாள் சர்ச்சிலின் நண்பர் அவரிடம் கேட்டார்,''போர் முடிவில் யார் அதிகம் பிரபலம் அடைவார்கள் ?''மருமகனைப் பற்றிய ஏதோ வெறுப்பில் இருந்த அவர்,''முசொலினி தான் பிரபலம் அடைவார் ,'' என்றார்.நண்பருக்கு அவர் பதிலினால் வியப்பு ஏற்பட்டது. அவருடைய பதிலுக்கான காரணத்தைக் கேட்டார்.சர்ச்சில் வெறுப்புடனேயே சொன்னார்,''முசொலினிக்குதான் தன்னுடைய மருமகனை சுடக் கூடிய தைரியம் இருந்தது.''நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
********
ஒரு நிருபர் பேரறிஞர் பெர்னாட்ஷாவிடம் கேட்டார்,''பெரிய அறிஞர்களுக்கெல்லாம் ஞாபக மறதி அதிகம் என்று நீங்கள் ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் அல்லவா?''ஷா அமைதியாக சொன்னார்,''எனக்கு ஞாபகம் இல்லையே!''
********
ஒரு முறை அறிஞர் அண்ணா தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்தார்.இருப்பினும் அவர் வருகைக்காக பெருந்தொகையான மக்கள் காத்திருந்தனர்.அண்ணா பேசினார்,
''மாதமோ....சித்திரை.
மணியோ பத்தரை.
தழுவுவதோ நித்திரை.
இடுவீர் எமக்கு முத்திரை.''
மக்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆகியது.
********
அண்ணா முதல்வராயிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார், ''புளி விலை இப்போது அதிகமாக இருக்கிறது எங்கள் ஆட்சியில் புளியின் விலை மிகக் குறைவாக இருந்தது.இது யாருடைய சாதனை?''அண்ணா சொன்னார்,''இது புளிய மரத்தின் சாதனை!''
********
மிகச்சிறந்த தமிழ் அறிஞரான மறைமலை அடிகள் ஆரம்ப காலத்தில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்.அவருக்கு நேர்முகத் தேர்வு நடந்தது.தேர்வில் தமிழ் இலக்கணத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.எல்லாவற்றிற்கும் உடனுக்குடன் பதில்களை அவர் கூறினார்.தேர்வுக் குழுவிலிருந்த அனைவருக்கும் திருப்தி.இருந்தாலும் ஒருவர் இறுதியாக ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.அவர் அடிகளாரிடம்,குற்றியலுகரத்திற்கு இரு உதாரணங்கள் சொல்லுமாறு கேட்டார்.அவரும் உடனே,''எனக்கு தெரியாது,''என்றார்.கேள்வி கேட்டவர்,''கடினமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்த உங்களால் இந்த சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையா?''என்று கேட்டார்.அடிகளார்,''சரியான பதிலைத்தானே நான் சொன்னேன்,''என்று சொல்ல கேட்டவர் விழிக்க,அருகிலிருந்த இன்னொருவர்,''சரிதானே அய்யா,எனக்கு என்ற வார்த்தையும்,தெரியாது என்ற வார்த்தையும் குற்றியலுகரம்தானே,''என்றார்.அனைவரும் சிரித்துவிட்டனர்.
உவமைக் கவிஞர் சுரதாவைப் பார்க்க உயரம் குறைவான ஒருவர் வந்தார்.அவர் சுரதாவிடம்,''நீங்கள் ஒரு பாடலில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா,ஆறடி நிலமே சொந்தமடா 'என்று சொல்லியிருக்கிறீர்கள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ,'சட்டப்படி பார்த்தா எட்டடிதான் சொந்தம்'என்று எழுதியுள்ளார்.எது சரி?''என்று கேட்டார்.அதற்கு சுரதா சொன்னார்,''பட்டுக்கோட்டையார் நன்கு வளர்ந்தவர்.எனவே அவருக்கு எட்டடி தேவைப்பட்டது.நான் சராசரியான ஆள்.எனவே எனக்கு ஆறடி போதும்.உன்னைப்போன்ற குள்ளமான ஆட்களுக்கு மூன்றடியே போதும்.''கேட்டவர் உட்பட சுற்றியிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.
சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது ஒரு சமயம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுக்களை அடுக்கின.மேலும் அவற்றிற்கு மறுநாளே பதில் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.அலுவலகம் வந்த சர்ச்சில் அனைத்து துறை உயர் அதிகாரிகளையும் வரவழைத்து எதிர்க் கட்சியினரின் கேள்விகளுக்கு தக்கபடி பதிலுரைக்க தேவையான அனைத்துப் புள்ளி விபரங்களையும் தருமாறு கேட்டார்.அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கியபடி இருந்தனர்.சர்ச்சில் காரணம் கேட்க தலைமைச் செயலர் சொன்னார்,''ஐயா,எப்படிப் பார்த்தாலும் இந்தப் புள்ளி விபரங்கள் சேகரிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்,''சர்ச்சில் முகத்தில் ஒரு மலர்ச்சி.தலைமைச் செயலர் சொன்னதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்திக் கொண்டார்.பின்னர் அதிகாரிகளிடம் ஒன்றும் சொல்லாமல்,''நீங்கள் போகலாம்,''என்று சொன்னார்.அதிகாரிகள் கலக்கத்துடன் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நகன்றனர்.மறு நாள் பாராளுமன்றத்தில் சர்ச்சில் ஏகப்பட்ட புள்ளி விபரங்களைக் கூறி எதிர்க் கட்சியினரின் வாயை அடைத்து விட்டார்.தலைமை செயலர் பின்னர் அவரிடம் அதிசயத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டார்,''நேற்று நாங்கள் யாரும் எந்தப் புள்ளி விபரமும் தரவில்லையே!உங்களால் எப்படி இவ்வளவு புள்ளி விபரங்களை எடுக்க முடிந்தது?''சர்ச்சில் சிரித்துக் கொண்டே சொன்னார்,''நீங்கள் தான் அவற்றை எடுக்க இரண்டு வருடம் ஆகும் என்றீர்களே!அதனால் நான் என் விருப்பத்திற்கேற்றார்போல புள்ளி விபரங்களை எடுத்து அடுக்கினேன்.அவை சரியா என்று தெரிந்து கொள்ளவே எதிர்க் கட்சியினருக்கு பல ஆண்டு ஆகுமே!உங்களுக்கே தெரியாதது அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்?''.
அறிஞர் கி.வா ஜ.க்கு ஒரு நண்பர் விருந்து கொடுத்தார்.விருந்தில் பரிமாறப்பட்ட அனைத்து உணவு வகைகளும் மிகவும் சுவையாக இருந்தன.அவருக்கு எதையும் விட மனதில்லை .ஆனால் அதே சமயம் வயிறு நிரம்பி விட்டது .ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தார்.நண்பர்,''சாப்பாடு எப்படி இருந்தது?ஏதாவது குறைபாடு உண்டா?''என்று கேட்டார். கி.வா.ஜ.சொன்னார்,''எல்லாம் சரி;இன்னும் ஒன்று செய்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்.''நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.பார்த்துப் பார்த்து செய்தும் ஏதோ குறை இருந்திருக்கிறதோ என்று எண்ணி அவரிடம் பதட்டத்துடன்,''என்ன இல்லை?என்ன செய்திருக்க வேண்டும்?தயவு செய்து சொல்லுங்கள்,''என்று வேண்டிக் கேட்டார்.கி.வா.ஜ.சிரித்துக் கொண்டே,''ஒன்றும் பெரிதாக இல்லை.எனக்கு இன்னும் ஒரு வயிறு செய்து கொடுத்திருந்தால் இன்னும் ஒரு பங்கு சாப்பிட்டிருப்பேனே!'' என்றார்.நண்பரின் முகத்தில் இப்போது மிகுந்த மகிழ்ச்சி.
பெர்னாட்சா தன் வீட்டில்,அவரைக் காண வந்தவர்களிடம் பல நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.வந்தவர்கள் முகத்தில் மிக்க மகிழ்ச்சி.இவ்வளவு நல்ல அறிவுரைகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர்களுக்கு ஒரு பெருமிதம்.மிகக் கவனமுடன் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது ஷாவின் மனைவி தையல் மெஷினில் ஒரு துணியைத் தைத்துக் கொண்டிருந்தார்.அவருடைய முழு கவனமும் தையல் மெஷினில் தான் இருந்தது.அவர் ஷாவின் பேச்சைக் கொஞ்சம் கூடக் கவனிக்கவில்லை.வந்தவர்களில் ஒருவருக்கு இது மிக வித்தியாசமாகப் பட்டது.பொறுக்க முடியாமல் அவர் ஷாவின் மனைவியைப் பார்த்து,''அம்மா,அய்யா எவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்!நாங்கள் எல்லாம் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லையே,ஏன்?''என்று கேட்க ஷாவின் மனைவி சொன்னார்,''ஏற்கனவே அவர் சொல்லி ஆயிரம் முறை நான் கேட்ட விஷயங்களைத்தான் சொல்லிக் கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியாதா?நல்ல வேளை என் கைகள் தையல் மெஷின் வேலையில் ஈடுபட்டுள்ளன..இல்லாமல் போனால் அவர் பேசுவதைக் கேட்க வேண்டி வரும்,அப்போது என் கைகள் அவர் கழுத்தை நெறுக்கிக் கொன்றிருக்கும்.''ஷா உலகத்துக்குத்தான் பெரிய அறிஞர்.ஆனால் அவர் வீட்டிலோ................



1