பால் விநியோகம் செய்யும் நான்கு இளைஞர்களிடம் மொத்தம் 24 பால் கேன்கள் இருந்தன.அவை எல்லாம் ஒரே அளவுடையவை.ஒரே கொள்ளளவு உடையவை.அவற்றுள் 9 கேன்களில் பால் முழு அளவிற்கு இருந்தது. 10 கேன்களில் பால் பாதிதான் இருந்தது.மீதி 5 கேன்கள் காலியாக இருந்தன. இப்பொழுது இந்த இளைஞர்கள் தங்களுக்குள் கேன்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.அப்படிப் பிரிக்கும் போது ஒவ்வொருவரிடமும் ஒரே எண்ணிக்கையில் கேன்கள் இருக்க வேண்டும்.அனைவரிடமும் பால் ஒரே அளவு இருக்க வேண்டும்.எவ்வாறு பிரிப்பது என்று தெரியாமல் அவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா?
விடை:மூன்று இளைஞர்களும் ஒவ்வொருவரும் பால் முழுமையாக உள்ள இரண்டு கேன்களையும் பாதிப் பால் உள்ள கேன்கள் மூன்றினையும்,ஒரு காலி கேனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.நான்காவது இளைஞர் மூன்று முழுமையான கேன்களையும் ஒரு பாதி நிறைந்த கேனையும் இரண்டு காலி கேன்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது ஒவ்வொருவரிடமும் ஆறு கேன்கள் இருக்கும்.ஒவ்வொருவரிடமும் 3.5 முழுக் கேன் கொள்ளளவிற்குப் பால் இருக்கும்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
புத்திசாலி ஒருவனின் அறிவை சோதிக்க எண்ணிய மன்னன் அவனை சிறையில் அடைத்து அவன் தப்பிக்க சில நிபந்தனைகளை விதித்தான்.
*சிறையிலிருந்து வெளியேற இரு வாசல்கள் உள்ளன.ஒவ்வொரு வாசலிலும் ஒரு காவல்காரன் உண்டு.அவர்களுள் ஒருவன் உண்மையே பேசுவான்.மற்றவன் பொய்யே பேசுவான்.
*ஒரு கதவின் வழியே வெளியேறினால் கடலில் விழுந்து இறந்து போக நேரிடும்.மற்றதின் வழியே வெளியேறினால் தப்பிக்கலாம்.
*காவலாளிகள் இருவருக்கும் சரியான வாசல் எது என்பது தெரியும். அதேபோல யார் உண்மை பேசுபவர் ,யார் பொய் பேசுபவர் என்பதும் ஒருவருக்கொருவர் தெரியும்.ஆனால் புத்திசாலிக்கு இந்த விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
*புத்திசாலி அவ்விரு காவலாளிகளில் ஒருவரிடம் மட்டும் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு புத்திசாலி தப்பி வெளியே வந்து விட மன்னன் அவனை மிகவும் பாராட்டி பரிசளித்தான்.அவன் யாரிடம் என்ன கேள்வி கேட்டு தப்பினான்?
விடை: புத்திசாலி ஒரு காவலாளியிடம்,''நான் தப்பிச்செல்ல சரியான வாசல் எது என்று உன் உடன் உள்ள அந்தக் காவலாளியிடம் கேட்டால் அவன் எந்த வாசலைக் காட்டுவான்?''என்று கேட்டான்.அவன் காட்டிய வாசலைத் தவிர்த்து அடுத்த வாசல் வழியாக சென்று தப்பினான்.புரியவில்லையா? கேள்வி கேட்கப்பட்ட காவலாளி உண்மை பேசுபவன் என்று வைத்துக் கொள்வோம்.அவன்,''அந்தக் காவலாளி,கடலுக்கு செல்லும் வழியைக் காட்டுவான்,''என்று உண்மையை சொல்லுவான்.எனவே அதைத் தவிர்த்து விட்டான்.
கேள்வி கேட்கப்பட்ட காவலாளி பொய் பேசுபவன் என்று வைத்துக் கொள்வோம்.அவன்,அடுத்த காவலாளி சரியான வழியைக் காட்டுவான் என்று தெரிந்திருந்தும் பொய்யாகத் தவறான வழியைக் காட்டுவான்.எனவே அதைத் தவிர்த்து விட்டான்.
பழைய காலத்தில் வைத்தியர் குடும்பம் ஒன்று இருந்தது.அவர் வீட்டில் எல்லோரின் பெயரும் வித்தியாசமாக இருந்தது.வைத்தியர் பெயர்,'தெரியாது'.அவரின் மனைவியின் பெயர்,'புரியாது'.மூத்த மகனின் பெயர்'புரியுமா'.இளைய மகனின் பெயர்'தெரியுமா'.மூத்த மருமகள் பெயர்,'சொன்னால் கேட்கிறேன்'.இளைய மருமகள் பெயர்,'கேட்டால் சொல்கிறேன்'.ஒரு பேரனின் பெயர்,'எனக்குத் தெரியும்'.இன்னொரு பேரனின் பெயர்,'எனக்குப் புரியும்'.அவர்கள் வீட்டில் ஒரு கழுதையும் இருந்தது.அதற்கும் அவர்கள் ஒரு வித்தியாசமான பெயரைத்தான் வைத்திருந்தார்கள். அது,என்னவென்று கண்டுபிடியுங்கள்.
விடை:இது ஒரு புதிரே அல்ல.இதில் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.அந்தக் கழுதையின் விசித்திரமான பெயர்தான்,'என்னவென்று கண்டுபிடியுங்கள்'.
''டைம் பாஸ் ''வார இதழிலிருந்து.
1.இலியட்,ஓடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஹோமர் பார்வை இழந்தவர்.ஒரு நாள் மீனவச் சிறுவன் ஒருவன் அவரை வழிமறித்து ஒரு புதிருக்கு விடை கேட்டான்.அப்புதிர்,''பிடித்து விட்டால் வெளியே விட்டு விடுகிறோம்.பிடிபடாவிட்டால் எடுத்துச் செல்கிறோம்.அது என்ன?'' திருதிருவென விழித்தார் ஹோமர்.நீங்களாவது விடை சொல்லுங்களேன்!
******
2.ஒரு கூடையில் பத்து மாம்பழங்கள் இருந்தன.நாங்கள் பத்துபேர் ஆளுக்கொரு மாம்பழம் எடுத்துக் கொண்டோம்.பின்பும் கூடையில் ஒரு மாம்பழம் இருந்தது.எப்படி?
******
விடைகள்:
1.தலைமுடியில் வாழும் பேன் .
2.ஒரு நபர் மாம்பழத்தைக் கூடையுடன் எடுத்துக் கொண்டார்.
1.செத்தவன் சந்தைக்குப் போகிறான்.-அது என்ன?
******
2.ஒருவனுக்குள் ஒளிந்திருப்பவர் நால்வர்.-அது என்ன?
******
3.குண்டுப் பாப்பா குழியில விழுந்திட்டா.
குச்சிப் பாப்பா அவளை எடுத்துப் போடுறா.-அது என்ன?
******
4.ஒரு பொட்டியில ரெண்டு தைலம் .-அது என்ன?
******
5.வண்ணான் வெளுக்காத வெள்ளை இல்லை;
கொசவன் செய்யாத சட்டி இல்லை;
கிணத்தில் இல்லாத தண்ணியில்லை.=அது என்ன?
******
6.கீழயும் மேலயும் கல்லுக் கோட்டை.
நடுவில் இருப்பவன் செல்லப் பிள்ளை.-அது என்ன?
******
7.கத்தாழ வேலிக்குள்ளிருக்கு கருஞ்சுருட்ட பாம்பு.
வந்தவை போனவைகளுக்கெல்லாம் வழி சொல்லுது.-அது என்ன?
******
8.அண்ணன்தம்பி அஞ்சு பேரு.
அஞ்சு பேருக்கும் ஒரே வீடு.-அது என்ன?
******
9.காத வழி போனாலும்
கை கடுக்காச்சுமை.அது என்ன?
******
10.தத்தக்கா பித்தக்கா நாலு காலு;
தானே நடக்கையிலே ரெண்டு காலு;
உச்சி வெளுக்கையில மூணு காலு.
ஊர விட்டுப் போகையில பத்துக் காலு. அது என்ன?
******
விடைகள்;
1.கருவாடு. 2. பால்,தயிர்,மோர்,வெண்ணை. 3.பணியாரம். 4.முட்டை. 5.தேங்காய். 6. நாக்கு. 7.நாக்கு. 8. ஐந்து விரல்கள்,உள்ளங்கை. 9.குழந்தை. 10.குழந்தைப் பருவத்தில் கை இரண்டு,கால் இரண்டும் காலாய் உபயோகப்படுவதால் நான்கு கால்கள்;தானே நடக்கும்போது இரண்டு கால்கள் மட்டும் உபயோகப் படுகின்றன.தலை நரைத்தவுடன் ஊன்று கோல் உதவியுடன் நடப்பதால் மூன்று கால்கள்.இறந்தவுடன் தூக்கிச் செல்பவர் நான்கு பேரின் கால்கள் எட்டு.இறந்தவரின் கால்கள் இரண்டு.ஆக மொத்தம் பத்து.
1.ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை-அது என்ன?
******
2.தங்கை விளக்கு காட்ட,அண்ணன் மத்தளம் கொட்ட,
அம்மா தண்ணீர் தெளிக்க,அது என்ன?
******
3.அடுக்கடுக்கா இருந்தாலும் ,பிரிச்ச பிறகு
அடுக்க முடியாது-அது என்ன?
******
4.தாடிக்காரன்,மீசைக்காரன்;
கோவிலுக்குப் போனா வெள்ளைக்காரன்-அது என்ன?
******
5.சின்ன இடையல்ல ;ஆனாலும்
அன்ன நடை-அது என்ன?
********
6.இருட்டுப் புதையிலே,இடி விழுந்த பாறையிலே,
நான் வச்ச கட்டுச்சோறு நனையாம இருக்குது-அது என்ன?
******
7.காடு பெருங்காடு,அடர்ந்த ஒசத்தியான காடு;
அந்தக் காட்டிலே அடக்க ஆளில்லாம
நினைச்சபடி விளையாடறா வீராயி
பெத்த புள்ள-அது என்ன?
******
8.பச்சை வீட்டிற்கு சிவப்பு வாசல் -அது என்ன?
******
9.சின்னப் பையன்னு சின்னப் பொண்ணு சேர்ந்து கட்டின வீடு;அதைச் சிக்கெடுத்துக் கொடுத்த பேருக்கு
சென்னப்பட்டினம் தாரேன்-அது என்ன?
******
10.அன்னு கூடி அன்னு
அழியும் பட்டணம்-அது என்ன?
******
விடைகள்:
1.நிலா 2.மின்னல்,இடி,மழை. 3.வெள்ளைப்பூண்டு 4.தேங்காய். 5.ஆமை 6.தேன்கூடு. 7.பேன். 8.கிளி 9.குருவிக்கூடு. 10.சந்தை.
- முனைவர் தி பெரியசாமி எழுதிய 'விடுகதை இலக்கியம்'என்னும் நூலிலிருந்து.
1.கடித்தால் கடிபடாது.
பிடித்தால் பிடிபடாது.அது என்ன?
******
2.முள்ளு முள்ளாய் இருக்கும்,பலாக்காயுமல்ல ;
உள்ளே பழுத்திருக்கும்,பாகற்காயுமல்ல;
உருக்கினால் நெய் வடியும்,வெண்ணெயும் அல்ல.அது என்ன?
******
3.இரவெல்லாம் பூங்காடு;
பகலெல்லாம் வெறுங்காடு.அது என்ன?
******
4.அட்டைக்கு ஆயிரம் கண்கள்;
முட்டைக்கு மூன்று கண்கள்;
அயோத்தி ராமனுக்கு ஒரே கண்.அது என்ன?
******
5.மஞ்சக் குருவி ஊஞ்சலாடுது.அது என்ன?
******
6.ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்.அது என்ன?
******
7.உடம்பில்லாதவன் ஊரெல்லாம் போவான்.அது என்ன?
******
8.தங்க மாம்பழம்.
திங்க முடியல்லே.அது என்ன?
******
9.பிச்சிப்பூ சிதறிக் கிடக்கு.பொறுக்க நாதியில்லே;
ராசா மகா கோபிச்சுக்கிட்டுப் போறா,அழைக்க நாதியில்லே;
சமுக்காளம் கிழிஞ்சு கிடக்கு,தைக்க நாதியில்லே.அது என்ன?
******
10.கணக்கிலாப் பிள்ளைகளை கழுத்தைச் சுற்றி
சுமக்கும் தாய்,அது எந்தத் தாய்?
******
விடைகள்:
1.தண்ணீர். 2.ஆமணக்கு. 3.வானம். 4.சல்லடை,முட்டை,ஊசி. 5.எலுமிச்சம்பழம் 6.மூக்கு. 7.காற்று,புகை. 8.நெருப்பு. 9.நட்சத்திரங்கள்,நிலா,வானம். 10.தென்னை
ஒரு புத்திசாலியான பெரியவர்.அவர் ஏதோ தவறு செய்து விட்டார்.விசாரணை நடைபெற்றது.தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லை.நீதிபதி அவரைப் பார்த்து,''கடைசியாக நீர் சொல்ல விரும்புவதை சொல்லலாம்.ஆனால் ஒரு விஷயம்.நீர் உண்மை சொன்னால் உம்மைத் தூக்கில் போடுவோம்.பொய் சொன்னால் உமது தலை வெட்டப்படும்.''என்று சொன்னார்.பெரியவர் சொன்னார்,''எனது தலை வெட்டப்படட்டும்.''இதைக் கேட்டதும் நீதிபதி குழப்பமடைந்து தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.ஏன்?
பெரியவரின் தலையை வெட்டினால் அவர் குற்றம் செய்தது உண்மை என்றாகும்.அது உண்மை என்று ஆனால் அவரைத் தூக்கில் போட வேண்டும்.சரி, அவரைத் தூக்கில் போடலாம் என்றால் அப்போது அவர் சொன்னது பொய் என்றாகிவிடும்.அப்படிஎன்றால் அவர் தலை வெட்டப்பட்டிருக்க வேண்டும்.நீதிபதியால் என்ன செய்ய முடியும்?
ஒரு நாள் இரு சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டது.அங்கு ஒரு படகு, ஆள் இல்லாமல் இருந்தது.அவர்கள் அனைவரும் அந்தப் படகின் உதவியுடன் ஆற்றைக் கடக்க முடிவு எடுத்தனர்.படகில் சில குறிப்புகள் இருந்தன;
தாங்கக் கூடிய எடை;120 கிலோ கிராம்.
அவர்களால் ஆற்றைக் கடக்க முடியுமா?
தந்தையின் எடை 82kg
தாயார் எடை79kg
மூத்த சிறுவன் எடை 65kg
இளைய சிறுவன் எடை 50kg.
விடை;
அவர்களால் ஆற்றைக் கடக்க முடியும்.
முதலில் இரு சிறுவர்களும் ஆற்றைக் கடக்க வேண்டும்.
அடுத்து மூத்தவன் இளையவனை அக்கரையில் விட்டுவிட்டு திரும்ப இக்கரைக்கு வர வேண்டும்.
தாய் படகை எடுத்துக் கொண்டு அக்கரை சென்று இறங்கிக் கொள்ள வேண்டும்.
இளையவன் படகை எடுத்து இக்கரை வரவேண்டும்.
திரும்பவும் இரு சிறுவர்களும் படகில் அக்கரைசெல்ல வேண்டும்.
மறுபடியும் மூத்தவன் இளையவனை இறக்கிவிட்டு இக்கரை வர வேண்டும்.
தந்தை இப்போது படகை எடுத்துக் கொண்டுபோய் அக்கரையில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இளையவன் படகை எடுத்துக் கொண்டு இக்கரை வர வேண்டும்.
இரண்டு சிறுவர்களும் படகில் ஏறி அக்கரையில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது அனைவரும் அக்கரை போய் சேர்ந்து விட்டனர் அல்லவா?



0