கருமி ஒருவன் இருந்தான் அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள்.ஒருநாள் பையன் முடி அதிகம் வளர்ந்து விட்டது என்று சொல்லி முடி வெட்டக் காசு கேட்டான்.அதற்கு அவன்,''போ,போ,காசு இங்கே காய்த்தா தொங்குகிறது?'' என்று கூறி காசு தர மறுத்து விட்டான்.வருத்தம் அடைந்த சிறுவன்,மறுநாள் முடி வெட்டாமல் போனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணியவாறு அவர்களது தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுந்தது.அவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது.உடனே அந்த தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் முடி திருத்துபவரிடம் கொடுத்து,தேங்காயைப் பெற்றுக் கொண்டு முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டான்.பையனின் தகப்பனின் கருமித்தனத்தை அறிந்த முடி திருத்துபவரும் அனுதாபப்பட்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு முடி வெட்டி விட்டார்.முடி வெட்டியிருந்த பையனைக் கண்ட தந்தை அதிர்ந்தார்.ஆத்திரத்துடன் பணம் ஏது என்று கேட்க பையனும் உண்மையை சொல்லிவிட்டான்.நீண்ட நேரம் கவலையுடன் அமர்ந்திருந்த கருமி எழுந்து பையனிடம் சொன்னான்,''நான் சிரமப்பட்டு பணம் சேர்க்கிறேன்.நீங்கள் எல்லாம் ஊதாரித்தனமாய் செலவு செய்கிறீர்கள்.நான் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்.இன்று முதல் நானும் ஊதாரியாய் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.''பின் தனது அறைக்கு சென்று ஒரு பெட்டியிலிருந்து ஒரு பட்டு வேஷ்டியை எடுத்தான்.மகனிடம் சொன்னான்,''இது என் கல்யாணத்திற்கு என் மாமனார் கொடுத்தது.இதை கடந்த 15 ஆண்டுகளாக நான் உபயோகிக்காமல் பாதுகாத்து வந்தேன் .இன்று முதல் அதை உடுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்.''
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு அந்தணர் தினசரி ஆற்றைக் கடந்து சென்று இறுதிக் கடன்களுக்கான சடங்குகளை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.தேவையான அளவுக்கு வருமானம் வந்த போதிலும் அவர் எதுவும் செலவழிக்க மாட்டார்.சரியான கஞ்சன்.ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வேலைக்கு புறப்பட்டார்.அவர் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பணம் வருமே என்ற ஒரே எண்ணத்தில் அவர் கிளம்பி விட்டார்.போகும்போது கழுத்தளவு நீரில் சிரமப்பட்டு நடந்து அக்கறை போய் அன்றைய வருமானத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வரும்போது ஆற்றில் சகதியில் மாட்டிக் கொண்டார். அவருடைய அலறல் கேட்டு இரக்க குணம் உடைய ஒருவர் ஆற்றில் குதித்து அவரை சகதியிலிருந்து மீட்டார்.அவருக்கு நன்றி சொன்ன அந்தணர் திடீரென மறுபடியும் சகதியில் குதித்து விட்டார்.உதவி செய்த நபர் இந்த அந்தணர் மன நிலை சரியில்லாதவரோ என்று எண்ணிக் கொண்டே அவரது சுபாவத்தினால் மறுபடியும் அவரை சகதியில் இருந்து காப்பாற்றினார். கரைக்கு வந்ததும் அந்தணரிடம் மீண்டும் ஏன் சகதியில் குதித்தார் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்,''சகதியில் நான் மாட்டிக் கொண்ட போது போது இன்று நான் சம்பாதித்த நூறு ரூபாய் நோட்டு சகதியில் விழுந்து விட்டது.நீங்கள் நல்லவராய் தெரிவதால் மறுபடியும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மறுபடியும் குதித்து ரூபாய் நோட்டைக் கண்டு எடுத்து விட்டேன்.''
தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான்.பணத்தையே தெய்வமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.தனது மூன்று மகன்களையும் அழைத்து,''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போதுதான் தெளிந்துள்ளேன்.நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன்.ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது.நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,''என்றார்.பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார்.அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர். வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான்,''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை.எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' இரண்டாமவன் உடனே சொன்னான்,''நீ பரவாயில்லை.எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்,''கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து,''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா?அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,''என்று கன்னாபின்னாவெனத் திட்டினான்.அண்ணன்கள் இருவரும்,''பரவாயில்லை,நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?''என்று கேட்டனர்.கடைக்குட்டி சொன்னான்,''நான் நேர்மையானவன்.அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.''
ஒரு கஞ்சன் சென்னைக்கு சென்றான்.ஒரு தெருவிற்கு சென்றான். கையிலிருந்த விலாசத்தைக்காட்டி பலரிடம் விசாரித்து ஒரு வீட்டுக்கு வந்தான்.அந்த வீடு ஒரு விலைமகளிர் வசித்து வந்த வீடு.ஒரு மனிதன் தனது வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் அந்தப் பெண் மிக மகிழ்வுடன் அவனை வரவேற்று உபசரித்தாள்.அவனும் அவளுடன் மகிழ்ச்சியாய் இருந்துவிட்டு புறப்படுகையில் பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.அவள் அவனிடம் சொன்னாள் ,''மிக்க நன்றி இதுவரை யாரும் பெருந்தன்மையுடன் இவ்வளவு பெருந்தொகையை எனக்குக் கொடுத்தது கிடையாது.ஆமாம்,நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?''அவன் சொன்னான்,''மதுரையிலிருந்து வருகிறேன்.''அவள் வியப்பைத் தனது முகத்தில் காட்டியவாறே,''அடடே,நானும் மதுரைக்காரிதான்.''என்றாள் .அவனும்,''எனக்குத் தெரியும் பெண்ணே,''என்றான்.அந்தப்பெண் எப்படித்தெரியும் என்று கேட்க,அவன் சொன்னான்,''நான் சென்னைக்கு ஒரு வேலையாய் வருவது தெரிந்து உன் தந்தைதான் என்னிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உன் முகவரியையும் கொடுத்து உன்னிடம் கொடுக்கச் சொன்னார்.''அந்தப்பெண் மயங்கி விழுந்தாள் .
ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.அந்தக் கஞ்சனும் பெருமையாக,''எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்,'' என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,கஞ்சன் சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.''
ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,''அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.''அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,''தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,''என்றார்.
********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,''அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.''அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,''செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.''
********
ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ''தம்பி,நலமாக இருக்கிறாயா?''என்று கேட்டுவிட்டு,''ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!''என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,''நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே!''என்றானே பார்க்கலாம்!
********
புகழ் பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் சொல்வது அப்படியே பலிக்கும் என்று அந்த ஊர் மக்கள் நம்பினார்கள்.அதே ஊரில் இருந்த ஒரு பணக்காரக் கஞ்சன் செலவு செய்யாமல் அவரிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டான்.ஒரு திருமண வீட்டிற்கு சென்ற கஞ்சன் அங்கு ஜோதிடரும் வந்திருப்பதை அறிந்து அவர் பக்கத்தில் அமர்ந்தான்.மெதுவாக ஜோதிடம் பற்றி பொதுவாகப் பேசிவிட்டு தனது பிரச்சினைகள் பற்றி சொன்னான்.ஜோதிடரும் ஜாதகத்தைப் பார்த்தால்தான் தீர்வு சொல்ல முடியும் என்று சொல்ல இதற்காகவே காத்திருந்த கஞ்சன் தனது ஜாதகத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.இடம் காலம் பாராது ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லுகிறாரே என்ற வருத்தம் இருந்த போதிலும் ஜாதகத்தைப் பார்த்து சில விளக்கங்களையும் தீர்வுகளையும் ஜோதிடர் சொன்னார்.அதற்குள் விருந்துக்கு அழைப்பு வரவே இருவரும் எழுந்தார்கள்.ஜோதிடர் பணம் கேட்டு விடுவாரோ என்று நினைத்து,கஞ்சன் சொன்னான்,''அய்யா,நான் உங்கள் வீட்டிற்கு வந்து ஜோதிடம் கேட்கவில்லை.இங்கு விருந்துக்கு வந்த இடத்தில் நீங்கள் ஜோதிடம் சொன்னதால் இது தொழில் முறை ஆகாது. எனவே இதற்கு நான் பணம் கொடுக்க வேண்டியதில்லை,''என்றான்.ஜோதிடரும் மெதுவாக,''என் வீட்டிற்கு வந்து தொழில் முறையில் ஜோதிடம் கேட்பவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது பலிக்கும்.மற்ற இடத்தில் நான் சொல்வது பலிக்காது.''இஞ்சி தின்ற குரங்கு போல கஞ்சன் செய்வதறியாது நின்றான்.
ஒருவன் கஞ்சனாக இருந்தான்.அவன் மகனோ அவனை விடக் கஞ்சனாக வளர்ந்தான்.ஒரு நாள் மகன் வெளியே ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது.தந்தையிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று பார்த்தால் அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.எனவே தந்தையை தொந்தரவு செய்யாது வெளியே சென்றான்.இரண்டு கி.மீ.தூரம் நடந்து சென்றபின்,வீட்டில் விளக்கை அணைத்தோமா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.அது எரிந்து கொண்டிருந்தால் வீண் செலவாகுமே என்று கருதிய அவன் வீட்டிற்கு திரும்ப நடந்தான்.வீட்டிற்கு வந்தபோது வெளியே நின்றிருந்த அவன் தந்தை விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்.பின் தந்தை ,''நீ சரியாகக் கவனிக்காமல் சென்றதால் இப்போது இரண்டு கி,மீ.தூரம் திரும்ப வந்திருக்கிறாய்.இதனால் உன் செருப்பு அதிகப் படியாகத் தேய்ந்திருக்குமே ,இது நமக்கு கட்டுப்படியாகுமா?''என்று கேட்டார்,பையன் உடனே ,''நான் ஒன்றும் முட்டாள் இல்லை,''என்று சொல்லியவாறு கக்கத்தில் இருந்த செருப்பை எடுத்துக் காட்டினான்.தகப்பன் சொன்னான்,''அந்த மட்டுக்கும் பரவாயில்லை.இப்போது நீ ஏற்கனவே சென்ற தூரம் வரை செருப்பு போடாமலே போ.''
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.அவன் மகாக் கருமி.அந்த ஊரில் பொதுவில் கோவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு நிதி பலரிடமும் வாங்கிவிட்டு பணக்காரனிடம் வந்தார்கள்.அவனிடம் பணம் வசூலிக்க முடியாது என்று பலரும் சொல்லியும் எப்படியும் அவனிடம் வசூலிக்க வேண்டும் என்று சிலர் வந்தனர்.இதுவரை பணம் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டனர்.அதில் பணக்கார்கள் முதல் பாமரர் வரை பணம் கொடுத்த விபரம் இருந்தது.அதை முழுவதும் வாசித்தால் இப்படி அனைத்துத் தரப்பினரும் பணம் கொடுத்திருக்கும்போது தான் மட்டும் கொடுக்காவிடில் ஊரில் அசிங்கம் என்று நினைத்து அவன் எப்படியும் பணம் கொடுத்து விடுவான் என்று நினைத்தார்கள்.அப்படியே அந்த பட்டியலையும் அவனிடம் வாசித்தார்கள்.அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி.வந்தவர்களுக்கு நம்பிக்கை.கோவிலுக்கு எவ்வளவு எழுதப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்க அந்தக் கஞ்சன் சொன்னான்,''நீங்கள் எண்ணப் புரிந்து கொள்ளவில்லை.நான் இதுவரை பல வகையில் பொருள் சேர்த்துள்ளேன்.இப்போது நீங்கள் எனக்குப் புது வழி காண்பித்து விட்டீர்கள்,'' வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் தொடர்ந்தான்,''இது வரை நான் பிச்சை எடுத்து பொருள் சேர்த்ததில்லை.இப்போது இந்த ஊரில் பிச்சை போட நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை முயற்சி செய்யப் போகிறேன்.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.''
பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள்.
இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள்.
மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள்.
படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடைபவர்கள் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர்.
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாகவும் ஆகிறார்கள்.எல்லாத் தரப்பினரும் அவர்கள் சொல்லும் வழியில் செல்கிறார்கள்.
ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள் கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
ஒரு கருமியான பணக்காரன் சாகும் தருவாயில் இருந்தார்..அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்..மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு.''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,''சபாஷ்,நீதான் சரியானபையன்.ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.''
புகை வண்டி நிலையத்திலிருந்து சாமான்களுடன் வந்த ஒரு கஞ்சன் செலவில்லாமல் வீட்டிற்குச் செல்ல யோசனை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வண்டி வருவதைக் கண்டதும் மயக்கம் வந்தவர் போல கீழே விழுந்தார்.ஆம்புலன்ஸ் டிரைவர் அவரைத் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பின்னர் வீட்டில் சாமான்களுடன் அவரை பத்திரமாக இறக்கிச் சென்றார்.
ஒரு கஞ்சனிடம் கஞ்சன் என்று எழுதச் சொல்லியதற்கு,கருமி என்று எழுதினானாம்.ஏனென்று கேட்டதற்கு கஞ்சன் என்ற வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள்;கருமி என்ற வார்த்தைக்கோ மூன்று எழுத்துக்கள் தானே என்றானாம்.
**********
கருமி ஒருவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.தன்னைக் காப்பாற்ற மற்றவர்களைக் கூவி அழைத்தான் அவன் மகன்.தண்ணீருக்குள் இருந்து ஒரு முறை எம்பிப் பார்த்த தந்தை கத்தினான்,''டேய்,அவர்கள் வந்து காப்பாற்றுவதாய் இருந்தால் காப்பாற்றட்டும்;ஆனால் ஐந்து ரூபாய்க்கு மேல் தர ஒத்துக் கொள்ளாதே.''
**********
கஞ்சன் ஒருவனைப் புலி ஒன்று கௌவிக்கொண்டு சென்றது.அவனுடைய மகன் புலிக்குப் பின்னால் ஓடி வந்தான்.வில் அம்புகளோடு புலியை அவன் குறி வைக்கையில் புலியின் வாயிலிருந்து எட்டிப் பார்த்து தந்தை சொன்னான்,''காலைப் பார்த்து அம்பு விடு.புலியின் உடலில் எங்காவது பட்டு தோல் வீணாகி விடப் போகிறது.''
**********
கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.அவனிடம் கஞ்சனின் மனைவி,''இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,''எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,'அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.'என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.
ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.இப்போது கஞ்சன் வெளியே வந்து,''இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,''என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,''இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?''என்று கேட்க கஞ்சன் சொன்னான்,''நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.''



2