இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும் வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
சுப்ரதீபக் கவிராயர் தனது' கூளப்பநாயக்கன் காதல்' என்ற நூலில் தாசி ஒருத்தி,தன் மகளுக்கு அறிவுரை கூறுவது போன்று ஒரு நிகழ்ச்சி உள்ளது.அதில் தாசி தன் மகளைப் பார்த்துக் கூறுகிறாள்:
''மகளே...நீ அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவன் தேடி வந்தால்,'எனக்கு சுகமில்லை'என்று சொல்லி அனுப்பிவிடு.அவன் ஒரு பைசா கூடத் தரமாட்டான்.
யார் வந்தாலும் வந்தவுடன் விசாரி.அவன் தாத்தா பணக்காரன் என்றால்,நீ அவனை விட்டு விடாதே.அவனுக்கு அவன் தாத்தா பொருள் சேர்க்கப் பட்ட துன்பங்கள் தெரியாது.அள்ளி அள்ளிக் கொடுப்பான்.
தகப்பன் தேடி வைத்த சொத்தை அனுபவிப்பவன் வந்தால் அவனை ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடு.ஏனெனில் அவனுக்குத் தந்தை பட்ட துன்பங்கள் தெரியும்.
வந்தவன் தன உழைப்பால் பணக்காரன் ஆனவன் என்று தெரிந்தால்,அவனை வாசல் நடையில் கூட ஏற்றாதே.அவன் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்ப்பான்.அவனால் எந்தப் பயனும் இல்லை.''
நம் முன்னோர் இருக்கும் திக்கு நோக்கி (எந்தத் திக்கு என்பதுதான் தெரியவில்லை)இரண்டு கரங்களையும் கூப்பித் தண்டனிடுகிறேன் ஆகா,அவர்கள் நமக்கு செய்திருக்கும் நன்மைதான் என்ன!வருடம் 365 நாளில் ஏறக்குறைய 300 நாட்கள் நமக்கு விடுதலை அளித்திருந்தனர்.
இக்காலத்தில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது.ஆனால் நம் முன்னோர் செய்து வைத்த ஏற்பாடு எவ்வளவு அழகானது பாருங்கள்!
மாதங்களில் மார்கழியும் புரட்டாசியும் கெட்டவை.ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் அமாவாசை ,பாட்டிமை,அஷ்டமி,நவமி,திதி இவை உதவா.பின்னர் பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்; சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை.ஆகா,செவ்வாயோ,வெறு வாயோ என்று கேட்டதில்லையா?
பின்னர் மரணயோகம்,கரிநாள்,மாதம்,திதி நட்சத்திரம்,கிழமை, யோகம் எல்லாமே கூடிய நாள் ஒன்றிருந்தால்,அதில் ராகு காலம், தியாஜ்யம், பிரதோஷம் இந்த வேளைகளில் கூடா.இவ்வளவு விபத்துக்களையும் கடந்து ஒருவன் ஏதேனும் காரியம் செய்யப்போனால்,யாரேனும் ஒரு சிறு தும்மல் தும்மி விட்டால் போதும்,அன்று விடுமுறைதான்.
ஆகா,இவ்வளவும் பூரணமாக அமுலிலிருந்த அந்தப் பழைய காலம்......நினைத்தாலே நாவில் ஜாலம் கொட்டுகிறது.இப்போது வரவரக் கலியுகம் அல்லவா முற்றி வருகிறது?
-- முதல் முதலாக கல்கி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை.
ரோமாபுரியில் சீசர் வஞ்சகர்களால் கொல்லப்பட்டார்.எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்.சீசர் கொலைக்கு உடந்தையானவர்கள் என்று யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்பட்டனர்.சீசரின் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாய் வெறியோடு அலைந்தனர்.அப்போது நிலைமையின் தீவிரம் தெரியாது,சின்னா என்பவன் தனக்குள் ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் போனான்.கும்பலில் ஒருவன் கத்தினான்,''அதோ போகிறானே சின்னா,அவன் எதிரிகளின் ஆள்.அவனைக் கொல்லுங்கள்,''உடனே கும்பல் அவனை சூழ்ந்து கொண்டது.எல்லோரும் அவனைத் தாக்க முற்படுகையில் சின்னா சப்தம் போட்டு,''ஐயோ,நான்,நீங்கள் நினைக்கும் சின்னா அல்ல.நான் கவிஞன் சின்னா..''என்றான்.அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது,''மோசமான கவிதைகள் எழுதி எல்லோரையும் கொல்லும் அந்த சின்னாவா நீ?நண்பர்களே,இவன் கவிதைக்காகவே இவனைக் கொல்லலாம்.கொல்லுங்கடா இந்த சின்னாவை.''
ஒரு சிறுவன் தனது தோளில் எப்போதும் ஒரு ட்ரம்மை வைத்து அடித்துக் கொண்டே இருப்பான்.அதை அவன் மிக ஆவலுடனும் ரசித்தும் செய்து கொண்டிருந்தான்.ட்ரம் அடிக்க அவனுக்குக்கால நேரம் என்று எதுவும் கிடையாது நினைத்த போதெல்லாம் அடித்துக் கொண்டிருப்பான்.ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாவிட்டாலும் போகப்போக சுற்றியிருந்தவர்களுக்கு அது எரிச்சல் தருவதாக இருந்தது.பலரும் அறிவுறுத்தியும் அவன் மாறுவதாக இல்லை.ஒரு பெரியவர் ட்ரம் அடிப்பதை நிறுத்தா விட்டால் காதில் ஓட்டை போடுவேன் என்று பயமுறுத்தினார்.அதற்கு அவன் மசியவில்லை. ஒருவர்,''இது கோவிலில் செய்யும் புனிதமான வேலை இதை எப்போதும் செய்யக் கூடாது ''என்று அறிவுறுத்தினார்.சிறிது நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் அவன் அடிக்க ஆரம்பித்தான்.ஒருவர் அவனுக்கு தியானம்சொல்லிக் கொடுத்தார்.தியான நேரம் தவிர மற்ற நேரம் தரம் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.எல்லோரும் அவர்களுடைய முயற்சிகளில் தோல்வியையே தழுவினர்.ஆனால் அவன் ட்ரம்மிலிருந்து வரும் கொடூரமான ஒலி அவர்களை இம்சைப் படுத்தியது.அப்போது வெளியூரிலிருந்து வந்த பெரியவர் விஷயம் அறிந்து அந்த சிறுவனிடம் சென்று,''தம்பி,இந்த ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று தெரியுமா?''என்று கேட்டார்.அவன் தெரியாது என்றான்.அவர்,'' எனக்கும் தெரியாது,உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமா?''என்று கேட்க அவனும் ஆர்வ மிகுதியில் சரியென்று சொன்னான்.உடனே அவர் ஒரு கத்தியை வைத்து ட்ரம்மைக் கிழித்துப் போட்டார்.ஊர்க்காரர்களின் பிரச்சினை தீர்ந்தது.
எண்பது வயது நிரம்பிய ஒரு வயதான மனிதன் தனது வீட்டு முன் பகுதியில் இருந்த மதில் சுவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு தெருவில் போகிற வருகிற வாகனங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.அவ்வாறு செய்வதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.விதவிதமான கார்களை மிகவும் ரசித்துக் கைகொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியவண்ணம் இருந்தார்.அவரது வித்தியாசமான செய்கையை காரில் செல்பவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.அப்போது ஒரு விலை உயர்ந்த கார் அந்தப் பக்கம் வந்தது.அந்தக் காரைப் பார்த்தவுடன் கிழவருக்கு மகிழ்ச்சி அதிகமாகி முகமெல்லாம் மலர்ந்திருந்தார்.அந்தக் காரில் வந்த பணக்காரர் அவரைப் பார்த்து காரிலிருந்து இறங்கி விட்டார்.அவர் கிழவரைப் பார்த்துக் கேட்டார்,''இவ்வளவு விலை உயர்ந்த காரை நான் வைத்திருக்கிறேன்.அதில் மிக சொகுசாய் பயணம் செய்கிறேன்.ஆனாலும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும் உங்களுக்கு மிக அதிகமாயிருக்கிறதே!உங்கள் செய்கை வியப்பைத் தருகிறது.''கிழவர் சொன்னார்,''நீங்கள் வீதியில் காரில் பயணித்தவாறு பல வீட்டு மதில் சுவர்களையும் பார்த்த வண்ணம் மகிழ்வுடன் செல்கிறீர்கள்.நான் என் வீட்டு மதில் சுவரில் உட்கார்ந்தவாறு வீதியில் செல்லும் கார்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.இரண்டும் ஒன்றுதானே!இதில் வித்தியாசம் என்ன இருக்கிறது?''
வடக்கே காசி,ஹரித்துவார் என்று ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார் ஒரு சாமியார்.ஊர் எல்லையிலேயே அவரை வரவேற்றனர் அவருடைய சீடர்கள்.ஊரில் ஏதாவது விசேசம் உண்டா என்று சாமியார் கேட்டார்.ஒரு சீடன் அழுது கொண்டே சொன்னான்,''குருவே,நேற்று பெய்த கடும் மழையில் என் வீடு இடிவிழுந்து விட்டது,''சாமியார் அவனிடம், ''இதெல்லாம் சென்ற பிறவியில் நீ செய்த பாவங்களுக்கான தண்டனை. மனதை தேற்றிக்கொள்.''என்றார்.அவன் மீண்டும் அழுது கொண்டே சொன்னான்,''குருவே,மழையில் தங்கள் ஆசிரமும் முழுமையாக சேதம் அடைந்து விட்டது.''அதிர்ச்சியடைந்த குரு,பின் சுதாரித்துக் கொண்டு,''என்ன செய்வது,இறைவன் நல்ல பக்தர்களை சில சமயம் இப்படி சோதிப்பதுண்டு.''என்றார்.
மன்னர் ஒருவரை புகழ்ந்து பாடி பரிசு பெறச் சென்றார் ஒரு தமிழ்ப் புலவர்.மன்னரும் அவரது பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து,குதிரை லாயப் பொறுப்பாளரை அழைத்து,புலவருக்குஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அனுப்பச் சொன்னார்.அந்த பொறுப்பாளருக்கு, நல்ல குதிரை எதையும் புலவருக்குக் கொடுக்க மனதில்லை.எனவே அவர் புலவருக்கு இருப்பதிலேயே வயதானதும்.தொத்தலுமான ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து புலவரிடம் கொடுத்தார்.மறுநாளும் மன்னரைக் காண புலவர் அரண்மனைக்கு வந்தார்.ஆனால் அவர் நடந்தே வந்தார்.மன்னர் புலவரைப் பார்த்து,''ஏன் நடந்து வருகிறீர்கள்?குதிரையில் வந்திருக்கலாமே?''என்று கேட்டார்.புலவர்,''மன்னா,நீங்கள் பரிசாகக் கொடுத்த குதிரை சாதாரணக் குதிரை அல்ல.மிக வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை.வந்த ஒரே நாளில் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்குப் பறந்து விட்டது என்றால் அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,'' என்றார்.ஆம்,குதிரை வந்த ஒரே நாளில் இறந்து விட்டதைத் தான் புலவர் அவருக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார்.நடந்ததை அறிந்த மன்னர் வருந்தி அவருக்கு வேறு பரிசுகள் கொடுத்து அனுப்பினார்.
சைக்கிள் வாடகைக்கு விடும் கடைக்கு ஒருவன் வந்து ஒரு சைக்கிள் வாடகைக்கு ஒரு நாள் முழுக்க வேண்டும் என்று கேட்டான்.வந்தவனை கடைக்காரர் பார்த்தார்.அவனை அவர் இதற்குமுன் பார்த்ததே இல்லை.எனவே அவன் ஊருக்குப் புதுசா என்று கேட்க அவனும் ஆமாம் என்றான். ''ஏனப்பா,முன்னேபின்னே தெரியாத உன்னை நம்பி ஒரு சைக்கிளை ஒரு நாள் வாடகைக்கு எப்படி விட முடியும்?''என்று கேட்க அவன்,''அய்யா,எனக்கு அவசரமாய் ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.என்னை நீங்கள் நம்பலாம்,''என்றான்.சைக்கிள் கடைக்காரர் சிறிது நேரம் யோசித்துவிட்டு,''சரி, சைக்கிளை நான் தருகிறேன்.ஆனால் நீ சைக்கிளின் விலைக்கு உண்டான பணத்தைக் கட்டி எடுத்துப்போ.நாளைக்கு சைக்கிளைத் திரும்பக் கொடுக்கும்போது உன் பணத்தை வாங்கிக் கொள்,''என்றார்.அவனும் சரியென்று கூறி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துச் சென்றான்.மறுநாள் சைக்கிளைத் திரும்ப ஒப்படைத்ததும் கடைக்காரர் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.அவனும் கிளம்பினான்.கடைக்காரர்,
என்னப்பா, வாடகை கொடுக்காமல் போகிறாயே?''என்று கேட்டார்.அவன் சொன்னான்,''நேற்று நான் சைக்கிளை உங்களிடம் விலைக்கு வாங்கினேன்.எனவே சைக்கிள் என்னுடையதாகி விட்டது.இன்று சைக்கிளை உங்களுக்கு விற்று விட்டேன்.இப்போது சைக்கிள் உங்களுடையது. என் சைக்கிளை நான் உபயோகப் படுத்தியதற்கு வாடகை எதற்குக் கொடுக்க வேண்டும்?''கடைக்காரர் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.
மிகவும் பேர்பெற்ற ஒரு மதத் தலைவர் மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர்.அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். பின்னர் வார்டனிடம் அந்த ஆள் என்ன சொன்னார் என்று வினவ வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,'''என்ன கொடுமையடா சாமி,இவனெல்லாம் வெளியே இருக்கிறான்,நான் உள்ளே இருக்கிறேன்.'என்கிறான் அய்யா,''
ஒரு மதகுரு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் கூட்டத்தில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர்.அதைப் பார்க்க அவருக்கு வருத்தமாயிருந்தது.அதைக் கூடப் பொறுத்துக் கொண்டார்.சிலர் விட்ட குறட்டை சப்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது.அது அவருடைய சொற்பொழிவுக்கு இடைஞ்சலாக இருந்தது .உடனே அவர் சம்பந்தம் இல்லாமல் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.அவர்,''ஒரு நாள் நான் ஒரு பாலைவனத்தில் சென்று கொண்டிருந்தேன்.அங்கே யாரும் இல்லை.நானும் எனக்குத் துணையாகக் கழுதை மட்டுமே அங்கு இருந்தோம்.திடீரெனக் கழுதை என்னுடன் பேச ஆரம்பித்தது.''என்று சொன்னவுடன் எல்லோரும் விழித்துக் கொண்டனர்.ஒருவர் கூட இப்போது தூங்கவில்லை.அப்போது அவர் கதையை அந்த நிலையிலேயே விட்டு விட்டு தன் முதல் சொற்பொழிவைத் தொடர ஆரம்பித்தார்.உடனே சிலர் மிகுந்த ஆவலுடன் எழுந்து''அந்தக் கழுதை உங்களிடம் என்ன பேசியது?''என்று கேட்டனர்.உடனே அவர் சற்று கோபத்துடன்''நான் என்ன கூறுகிறேன் என்பதில் உங்களில் யாருக்கும் ஆர்வம் இல்லை.ஆனால் கழுதை என்ன பேசியது என்பதை அறிய மட்டும் தூக்கத்தைக்கூட விட்டுவிட்டு ஆர்வத்துடன் கேட்கிறீர்களே, உங்களுக்கே இது நியாயமாய் இருக்கிறதா?''என்று கேட்டார். எல்லோரும் தலை கவிழ்ந்தனர்
மனம் தேவையற்றதைத்தான் யோசிக்கும்:நேசிக்கும்.வம்பு பேசத்தான் அது எப்போதும் பசியோடிருக்கும்.ஒன்றுக்கும் உபயோகமில்லாத விஷயத்தை மிகக் கவனத்துடன் கேட்கும்
ஒரு சீடன் குருவைப் பார்த்து,''என்னால் முழுக் கீதையையும் படிக்க முடியாது.ஆகவே எது முக்கியமோ,அதை மட்டும் சொல்லுங்கள்,''என்றான்
''சரி பதினேழு அத்தியாயத்தைத் தள்ளிவிட்டு பதினெட்டாம் அத்தியாயத்தை மட்டும் படி.''
''அதில் 78 சுலோகங்கள் இருக்கின்றன.என்னால் அவ்வளவு படிக்க முடியாது.''
''சரி,அதில் 68 வது சுலோகத்தை மட்டுமாவது படி.''
''ஆ,அதில் 12 வார்த்தைகள் உள்ளன.என்னால் முடியாது.''
''பரவாயில்லை,அதில் கடைசி இரு பதங்களை மட்டும் படி.''
''அதற்கு என்ன பொருள் என்று நீங்களே சொல்லி விடுங்களேன்.''
''கவலைப்படாதே என்று பொருள்.''
''எப்பொழுது கவலைப்படாமல் இருக்கலாம்?''
''''பகவான் சொன்னபடி செய்தால் கவலைப் பட வேண்டாம்.''
''அப்படி பகவான் என்னதான் சொன்னார்?''
''அது முழு கீதையையும் படித்தால்தான் தெரியும்.''
சோமு தன் பசுவை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒருவன் அழகாகப் பாடிக் கொண்டு வந்தான்.அந்த பாட்டின் இனிமை சோமுவைக் கவர்ந்தது.எனவே அவன் வந்தவனிடம் சென்று,''அய்யா,எனக்கு இந்தப் பாட்டை ராகத்துடன் சொல்லிக் கொடுக்க முடியுமா?''என்று கேட்டான்.அவன் ,''அதற்கு என்ன சன்மானம் கொடுப்பாய்?''என்று கேட்க,சோமுவும் அவன் தன்னிடம் இருக்குமெதைக் கேட்டாலும் தருவதாகச் சொன்னான்.அவனும் பசுவைக் கொடுத்தால் பாடலை சொல்லித் தருவதாகக் கூறினான்.அந்தப் பாட்டின் மீது இருந்த லயிப்பின் காரணமாக சோமு உடனே அதற்கு ஒத்துக் கொண்டான்.அவனும் பாடலை சொல்லிக் கொடுக்க சோமுவும் அதை விரும்பி கற்றுக் கொண்டான்.பின் தன் பசுவை அவனிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அந்தப் பாட்டை பாடிக் கொண்டே தன் வீடு நோக்கி சென்றான். போகும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்ததும் ஒரு மரத்தடியில் சிறிது இளைப்பாறினான்.அப்போது அவன் இதுவரை பாடிக் கொண்டிருந்த பாடலை யாரோ பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.பாடலை அவனுக்கு சொல்லிக் கொடுத்தவன்தான் பாடிக் கொண்டிருந்தான்.உடனே கோபத்துடனவனிடம்,''இதோ பாருங்கள்,இந்தப் பாடலை நீங்கள் சொல்லிக் கொடுக்குமுன் பாடல் உங்களிடம் இருந்தது.பசு என்னிடம் இருந்தது.இப்போது என்னிடம் பசு இல்லை.பாடல் மட்டும்தான் இருக்கிறது.ஆனால் உங்களிடம் பசுவும் இருக்கிறது. பாடலும் உங்களிடம் இருக்கிறது.இது என்ன நியாயம்?''என்று கேட்டான்.இதற்கு பதில் சொல்லத்தெரியாத அந்த மனிதன் சிரித்துக் கொண்டே பசுவை சோமுவிடமே கொடுத்து விட்டுச் சென்றான்.
அக்பர் ஒருநாள் ஒரு கிராமத்து வழியே சென்று கொண்டிருக்கையில் ஒரு அபூர்வமான காட்சியைக் கண்டார்.வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் வேலையின் இடையே வெளியே வந்து மரத்தடிக்கு சென்று தன வயிற்றில் இருந்த குழந்தையைத் தானே பிரசவம் பார்த்து வெளியே எடுத்து அங்கிருந்த நீரில் குளிப்பாட்டி,பாலூட்டி பின் ஒரு துணியை மரத்தில் தொட்டிலாகக் கட்டி அதில் படுக்கப் போட்டுவிட்டு மீண்டும் வயலில் இறங்கித் தன வேலையைத் தொடர்ந்தாள்.அக்பர் நினைத்தார்,''இந்தப் பிரசவம் எவ்வளவு எளிதாக முடிந்தது!நம் ராணிகள் இதை சாக்காக வைத்து செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கு அளவே இல்லையே!அவர்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.''அரண்மனை திரும்பியதும் கருவுற்ற பெண்களுக்கு எந்த விதமான உதவியோ,செய்முறைகளோ செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார்.இதைக் கேள்விப்பட்டு கவலையுற்ற மகாராணி,பீர்பாலை அழைத்து மன்னரை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அடுத்த நாள் பீர்பால் அக்பர் தினசரி விரும்பி வரும் அவர் தோட்டத்தில் சில செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த மன்னர்,''முட்டாளே,காட்டில் வளரக் கூடிய செடிகளை தோட்டத்தில் நட்டால் எப்படி வளரும்?''என்று கேட்டார்,''அதற்கு பீர்பால் சொன்னார்,''தினமும் கடுமையாய் உழைக்கும் கிராமத்துப் பெண்களைப் போல அரண்மனைப் பெண்களும் குழந்தை பெற முடியுமானால்,காட்டுச் செடிகள் நம் தோட்டத்தில் ஏன் வளராது?''அக்பர் தன தவறினை உணர்ந்து தன ஆணையைத் திரும்பப் பெற்றார்.
புலவர்கள் எல்லாம் அக்பரை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.பல பரிசுகளைப் பெற்றுச் சென்றார்கள்.இறுதியாக பீர்பாலின் முறை வந்தது.பீர்பால் சொன்னார்,''அரசே,தாங்கள் செய்யக் கூடியதை அல்லாவாலும் செய்ய முடியாது,''புலவர்கள் பலரும்,''என்ன இருந்தாலும் பீர்பால்,கடவுளை விடப் பெரியவராக அரசரைக் கூறியது தவறு,''என்றனர்.அரசரும் அதை ஒத்துக்கொண்டு பீர்பாலை அதற்கு விளக்கம் அளிக்கக் கோரினார்.பீர்பால் சொன்னார்,''அரசே!தங்களுக்குக் கோபம் வந்தால் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றலாம்.ஆனால் கடவுளால் அது முடியாது அவர் எங்கே அனுப்புவார்?இந்த அண்டமே அவருக்குரியதுதானே?''பீர்பாலின் சாமர்த்தியமான பதில் அரசரை மகிழ்வித்தது.
அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருந்தபோது அந்த சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப்படுவதைக் கண்டான்.எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை.பணத்தை மட்டும் வசூலித்தான்.ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றியது.பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்,''ஐயா,இது யாருடைய பிணம்?''அவர்கள் சொன்னார்கள்,''இந்த ஊரிலுள்ளு பணக்காரர்களில் இவரும் ஒருவர்.வட்டிக்குப் பணம் கொடுப்பதே இவர் தொழில்.''அரிச்சந்திரன் அமைதியாகத் தலை அசைத்தான்.பிணத்திற்கு நெருப்பூட்டிவிட்டு
அவர்கள் சென்றார்கள்.சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டு பிணம் எழுந்து உட்கார்ந்தது. அரிச்சந்திரன் கத்தினான்,''வட்டி வசூலாகி விட்டது.''பிணம் மீண்டும் படுத்துக் கொண்டது.
**********
''கல்யாணி ராகம் என்றாலே எனக்குப் பிடிக்காது,''என்றார் பாகவதர்.
'ஏன்?'என்று கேட்டான் சிஷ்யன்.
''என் மனைவி பெயர் கல்யாணி.''என்றார் அவர்.
**********
--கண்ணதாசன் எழுதிய தோட்டத்துப் பூக்கள் என்ற நூலிலிருந்து.
அர்ஜுனனுக்கு பகவத் கீதையை முழுக்க உபதேசித்துவிட்டு ரதத்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டானாம் கிருஷ்ணன்.யுத்தம் நடந்ததாம். அபிமன்யு இறந்து விட,தன மகனின் சடலத்தை தன ரத்தத்திலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு புலம்பினானாம் அர்ஜுனன்.கப்போது மேற்கூரையிலிருந்து பத்து சொட்டு கண்ணீர் அர்ஜுனனின் தலையில் விழுந்ததாம்.கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.அர்ஜுனன் கேட்டானாம்,''கண்ணா!நான்தான் மகனுக்காக அழுகிறேன்.மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?''என்று.கண்ணன் சொன்னானாம்,''இல்லை,அர்ஜுனா,மனதைத் திடமாக வைத்துக் கொள்வது பற்றி உனக்கு இவ்வள்ளவு நேரம் கீதை உபதேசித்தேனே.அது எவ்வளவு சீக்கிரம் வீணாகி விட்டது என்றுதான் கண்ணீர் வடிக்கிறேன்,''என்று.
-கண்ணதாசன் சொன்ன கதை.
ஒரு சர்வாதிகாரி தன பிறந்த நாளில் தன் படத்தைக் கொண்ட தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார்.ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.தன செயலரை அழைத்து காரணம் கேட்டார்.செயலர் சொன்னார்,''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை.அதனால்தான் சரியான விற்பனை இல்லை,''சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது.தபால் நிர்வாகியை அழைத்து,''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே?ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?''என்று கேட்டார்.நிர்வாகி சொன்னார்,''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.''
மகாராணி எலிசபெத் ஒரு நாள் அலுவலக வேலையினை நீண்ட நேரம் பார்த்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு தன படுக்கை அறைக்கு வந்தபோது அறையின் கதவு உள்ளே பூட்டியிருந்தது தெரிந்தது. தன கணவர் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த ராணி மெதுவாகக் கதவைத் தட்டினார்.முதலில் பதில் ஏதுமில்லை.மறுபடியும் மெதுவாகத் தட்டினார். அப்போது உள்ளிருந்து,''யாரது?''என்று குரல் கேட்டது.ராணியோ,''நான்தான்,'' என்று பதிலுரைத்தார்.''நான்தான் என்றால்யார்?பெயர் எதுவும் கிடையாதா?''என்று கதவைத் திறக்காமலேயே கணவர் கேட்டார்.''நான்தான்,மகாராணி வந்திருக்கிறேன்,''என்று சொன்னதும்,''இந்த நடுஇரவில் மகாராணியாருக்கு என் அறையில் என்ன வேலை?'' என்ற கேள்வி வந்தது.உடனே ராணி சிரித்துக் கொண்டே,''நான்தான் உங்கள் அருமை மனைவி எலிசபெத் வந்திருக்கிறேன் கதவைத் திறங்கள்,''என்று சொன்னதும் அவர் கணவர் புன்னகையுடன் வந்து கதவைத் திறந்தார்.
வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர்.வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது.வணிகன் கேட்டான்,''இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?'' .எமதூதர் சொன்னார்,''மூன்று வழிகளில் ஒன்று பூமியிலிருந்து நாம் வந்த பாதை.ஒன்று சொர்க்கத்திற்குப் போவது.மூன்றாவது நரகத்திற்குப் போகும் வழி.நீ பூமியில் இருந்தபோது சில நல்ல காரியங்களும்செய்திருக்கிறாய்.சில கெட்ட காரியங்களும் செய்திருக்கிறாய்.எனவே நீ கொஞ்ச காலம் சொர்க்கத்திலும்,கொஞ்ச காலம் நரகத்திலும் இருக்க வேண்டும்.முதலில் எங்கு செல்வது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும்.''என்றார்.வணிகன் உடனே சொன்னான்,''என்னிடம் கேட்டால்,நான் இந்த இடத்திலேயே இருந்து விடுகிறேன்.எவ்வளவு அருமையான முச்சாலை சந்திப்பு!இங்கு மட்டும் ஒரு கடை வைத்து விட்டால் வியாபாரம் எப்படி இருக்கும்!எனக்கு சொர்க்கமும் வேண்டாம்.நரகமும் வேண்டாம்.''



2