உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

Showing posts with label உருவகம். Show all posts
Showing posts with label உருவகம். Show all posts

கடவுளிடம் ஒரு பேட்டி.

0

Posted on : Monday, November 11, 2013 | By : ஜெயராஜன் | In :

கடவுளைப் பேட்டி காண்பது போல கனவொன்று கண்டேன்.''ஓ.என்னைப் 
பேட்டி காண வேண்டுமா?''என்று புன்னகையுடன் கடவுள் கேட்டார்.'உனக்கு நேரம் ஒதுக்க முடியுமானால் ...''என்று இழுத்தேன்.''காலமே நான் தானே?.சரி,என்ன கேள்விகள்  கேட்க விரும்புகிறாய்?''என்று கடவுள் என்னைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார்.நான் கேட்டேன்,''மனித குலம் எந்த வகையிலாவது உன்னை ஆச்சரியப் படுத்துகிறதா?''கடவுள் சொல்ல ஆரம்பித்தார்,''மனிதன் குழந்தையாய் இருக்கும்போது விரைவில் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.பெரியவன் ஆகிய பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா,என்று ஏங்குகிறான்.அடுத்து,உடல் நலம் கெட்டாலும் பரவாயில்லை என்று ஓய்வின்றிப் பணம் சேர்க்கிறான்.பின்னர் நோய் வந்து பணத்தை முழுவதும் உடல் நலத்திற்காக செலவழிக்கிறான்.இதை விட முக்கியமானது ஒன்று உள்ளது.எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு நிகழ்  காலத்தை மறந்து விடுகிறான்.ஆனால் அவன் நிகழ்  காலத்திலும் வாழ்வதில்லை.எதிர் காலத்திலும் வாழ்வதில்லை.
தனக்கு மரணமே கிடையாது என்ற எண்ணத்தில் வாழ்கிறான்.ஆனால் எப்போதுமே வாழாமல் இறக்கிறான்.''பின் சிறிது நேரம் எங்களுக்குள் மௌனம் நிலவியது.
மீண்டும் நான் கேட்டேன்,''குழந்தைகள் வாழ்க்கையில் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய்?''கடவுள் திருவாய் மலர்ந்து,
''யாரும் நம்மீது அன்பு செலுத்த மாட்டார்கள்.,நாம்தான் பிறர் அன்பு செலுத்துமாறு நடந்து கொள்ள வேண்டும்.நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதில்லை.சில நொடிகளில் பிறரைக் காயப் படுத்தி விடலாம்.ஆனால் அதை சரி செய்ய பல ஆண்டுகள்  ஆகும்.இரண்டு மனிதர்கள் ஒரே பொருளை வெவ்வேறு கோணத்தில் பார்க்க முடியும்.இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே மனதில் படும்படி சொல்லி வையுங்கள்.''
''நன்றி கடவுளே,வேறேதேனும் குழந்தைகளுக்கு சொல்ல விரும்புகிறீர்களா?''என்று நான் கேட்க கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''நான் எப்போதும் இங்கு இருக்கிறேன்...''

பென்சிலும் ரப்பரும்

1

Posted on : Wednesday, September 05, 2012 | By : ஜெயராஜன் | In :

பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்:எதற்காக மன்னிப்பு?
பென்சில்:நான் தவறு செய்யும்  போதெல்லாம் நீ சரி செய்கிறாய்.ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்.என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.ஆனால் எனக்காக நீ வருத்தப்படுவது எனக்குக் கவலை தருகிறது.

இங்கு ரப்பர் என்பது பெற்றோர்.பென்சில் என்பது அவர்களது பிள்ளைகள். பிள்ளைகள் தவறு செய்யும் போதெல்லாம் அதை அவர்கள் சரி செய்கிறார்கள்.நாளடைவில் அவர்கள் தேய்ந்து போகிறார்கள்.ஆனால் பிள்ளைகளை சரி செய்வதை மகிழ்வுடனே செய்கிறார்கள்.தங்களுக்குப் பதிலாக தன்  பிள்ளைகளுக்கு கணவனோ மனைவியோ வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.ஆனால் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்காகப் பிள்ளைகள்  வருத்தப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

மல்லிகை

0

Posted on : Wednesday, October 06, 2010 | By : ஜெயராஜன் | In :

பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள்,
என் தலை முடியைப் பார்த்து,
''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும்
குறுக்கே புகுந்த நீங்கள்
''இது நரையா?முப்பது வருடம் மல்லிகைப் பூவை
சூடிச்சூடி இவள் கூந்தலும்
மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள்.
 ''அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள்.
கட்டிக் கொண்டவளை விட்டுக் கொடுக்க
அவருக்குத் தெரியாது,மகளே.

நனையும் குழந்தை.

1

Posted on : Monday, June 21, 2010 | By : ஜெயராஜன் | In :

கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன முதுகையே கூடாரமாக்குவாள்.அப்படியும் அக்குழந்தை நனையும்,தாயின் கண்ணீர்த்துளிகளால்.
                                                    --மேனாட்டுக் கவிதை ஒன்றிலிருந்து

தியாகி

0

Posted on : Sunday, June 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு கல்லின் மேல் அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான் ஒரு சலவைத் தொழிலாளி.''அழுக்கடைவது துணி;அதை வெளுக்கும் போது அடிபடுவது நீ.ஆஹா,உன் தியாகமே தியாகம்.,''என்று கல்லைப் புகழ்ந்தது கழுதை.''மன்னியுங்கள்.துணி வெளுக்கப்படும் போது நானும் வெளுக்கப்படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.,''என்றது கல்.அசடு வழிந்தகழுதை முணுமுணுத்தது,''பிழைக்கத்தெரியாத தியாகி.''

ஆடிப்பெருக்கு

0

Posted on : Tuesday, June 08, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆடி பதினெட்டு அன்று அதிகாலை.காவிரியின் கரையிலிருந்த ஒரு மரம்,காவிரியைப் பார்த்து,''நீ ஏன்இன்று இப்படிப் பெருக்கெடுத்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது.காவிரி சொன்னது,''பொழுது விடிந்ததும் பாவங்களைப் போக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பயங்கரமான பாவிகள் எல்லாம் என்னிடம் ஓடி வரப் போகிறார்கள்.அவர்கள்வருவதற்கு முன் தப்பித்து விட வேண்டும் என்று தான் நான் பயந்து ஓடுகிறேன்.''

விழும் போது

0

Posted on : Tuesday, April 27, 2010 | By : ஜெயராஜன் | In :

விடிகாலை சேவல் கூவியது.
'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது.
மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது.
''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே!என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா?எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன்  கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன்.
''எழும் போது தாங்க வருபவன் எல்லாம்
விழும் போது தாங்க வருவதில்லை.''
சூரியன் உணர்ந்து சொல்லியது..

தண்ணீர்

0

Posted on : Friday, March 05, 2010 | By : ஜெயராஜன் | In :

தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார்,
''இதுவே மேலும் குளிர்ந்தால்...?''
'பனிக்கட்டி'என்றான் சீடன்.
''கொதித்தால்...?''
'நீராவி'
ஞானி சொன்னார்,
''மனிதனும் குளிரும் போது திடமாகிறான்.
கொதிக்கும் போது ஆவியாகிறான்.''

அழகும் பலனும்

0

Posted on : Wednesday, February 10, 2010 | By : ஜெயராஜன் | In :

புல் வெளி.
அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது,
''இந்த அந்தி நேர மேகம் தான் எத்தனை அழகு!தகதகவென தங்க நிறத்தோடு.அந்த அழுக்கு மேகத்தைத்தான் பிடிக்கவில்ல.கன்னங்க ரேல்என்று.''
அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி.
சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது.நா உலர்ந்தது.
உயிர் மெல்ல மெல்ல வறண்டது.
அதே நேரத்தில்,
அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது.
புல்வெளி எங்கும் பூரிப்பு.
அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது:
''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது,பார்த்தாயா?
அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.''

விடாமுயற்சி

0

Posted on : Sunday, January 17, 2010 | By : ஜெயராஜன் | In :

கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.
முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
''உனக்கு என்ன தெரிகிறது?''
'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'
குரு சொன்னார்,
''சில நேரங்களில் அலைகளாய் இரு;
சில நேரங்களில் கரையாய் இரு.''

சேதம்

0

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு யானை தோட்டத்தில் நுழைந்தால் அது உண்பதை விட சேதமாவதேஅதிகமாக இருக்கும்.தேனீ தேன்எடுப்பது மட்டும் வித்தியாசமானது.அது தேனை எடுப்பதால் பூவிற்கு எந்த சேதமும் மாற்றமும் ஏற்படுவதில்லை.ஒரு பூவைப் பார்த்து அதில் தேனீ தேன் எடுத்ததா இல்லையா என்பதை அறிய முடியாது.

ஒப்பீடு

0

Posted on : Monday, January 04, 2010 | By : ஜெயராஜன் | In :

காக்கையும் கருப்புதான்;குயிலும் கருப்பு தான்.இவற்றுக்குள் என்ன வித்தியாசம்?
வசந்த காலம் வந்து விட்டாலும்,காக்கை காக்கை தான்!குயிலும் குயில் தான்!
கருப்பாக இருப்பதால் காக்கையும் குயிலும் ஒன்று போல் தோன்றலாம்.
ஆனால் வசந்த காலத்தில்
பாடும் குயிலின் குரலோடு,கத்தும் காக்கையின் குரலை ஒப்பிட்டுப் பார்க்க நினைவும் தோன்றுமா?
அமரகோஷத் என்னும் சம்ஷ்க்ருத செய்யுளின் கருத்து.

கழுதை

0

Posted on : Friday, November 27, 2009 | By : ஜெயராஜன் | In :

குனிந்த தலை குனிந்தபடி மூட்டை சுமந்து செல்லும் கழுதையைப் பார்த்து ஒரு காகம் வருத்தப்பட்டது.''பாவம்,இந்தக் கழுதை எப்போது பார்த்தாலும் யாருக்காகவோ மூட்டை சுமந்து கஷ்டப்படுகின்றது.''
''நாம் என்ன செய்ய முடியும் ?கழுதை தான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.,''என்றது இன்னொரு காகம்.
''ஏன் அப்படிச் சொல்கிறாய்?''என்று கேட்டது முதல் காகம்.
''குனிந்து கொண்டே இருப்பவன் சுமந்து கொண்டே இருப்பான்.''என்றது அடுத்த காகம்.
இலங்கைக் கவிஞர் காசி ஆனந்தன்.

நிழல்

0

Posted on : Thursday, November 26, 2009 | By : ஜெயராஜன் | In :

நான் மாறும் போது தானும் மாறியும்
நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்.

மலரின் அழகு

1

Posted on : Wednesday, November 25, 2009 | By : ஜெயராஜன் | In :

தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.

தெளிவு

0

Posted on : Wednesday, November 25, 2009 | By : ஜெயராஜன் | In :

தண்ணீர் தெளிவானது.கண்ணாடி தெளிவானது. அதே போல் தான் மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும் படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போதுதான் அடுத்தவரைப் பார்த்து சிரிக்க தோன்றும்.தெளிவு வந்து விட்டால் தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம்.நம்முடைய அகந்தையில் செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.

சுமை

0

Posted on : Monday, November 23, 2009 | By : ஜெயராஜன் | In :

குடையும் ஒரு சுமை தான்
மழை இல்லாத போது.
படிப்பும் ஒரு சுமை தான்
வேலையில்லாதபோது.

பசுவின் புகழ்

0

Posted on : Monday, November 23, 2009 | By : ஜெயராஜன் | In : ,

பன்றி,பசுவிடம் தன ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன்.இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .''
பசு கூறியது,''நீ கூறுவது உண்மையே.அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''

நான் எங்கே?

0

Posted on : Sunday, November 22, 2009 | By : ஜெயராஜன் | In :

நண்பனே.
என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்?
நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை.
என்னை உண்மையில் தேடினால்
ஒரு கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய்.
நான் உன் நம்பிக்கையில் இருக்கிறேன் நண்பனே!
---கபீர்தாசர்

மாற்றம்

0

Posted on : Wednesday, October 28, 2009 | By : ஜெயராஜன் | In :

ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?''
ஆந்தை: கீழ் திசை நோக்கி .
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய்.
_சீனக் குட்டிக் கதை