சிந்தனைதான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி.எனவே மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு.
ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் இலட்சியத்தைப் பிடித்துக்கொள்.ஆயிரம் தடவைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் முயற்சி பண்ணிப்பார்.
வலிவுடன் இரு.எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டு அப்பால் செல்.விடுதலை பெறு.
எந்த வேலையும் அற்பமானதல்ல.தனது மனதுக்குப் பிடித்த காரியத்தை ஒரு முட்டாள் கூட செய்து முடிக்க முடியும்.ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்பவனே புத்திசாலி.
உன் தவறுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்லாதே.உன் கால்களிலேயே நில்.முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்.
நீ இன்றிருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு.நீ எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ,அப்படியே ஆவதற்கான ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
உதவி கிடைக்கவில்லை என்று கதறாதே.உதவி வெளியிலிருந்து வராது.உனக்குள்ளிருந்தே வரும்.
நல்ல கருத்துக்களையே நினைத்து நல்லதையே செய்.நம்பிக்கையோடு இரு.
வளவளவென்று பேசாதே.மிக அமைதியான நிலையிலிருக்கும்போதுதான் மனிதனின் முழு சக்தியும் வெளிப்படுகிறது.
--சுவாமி விவேகானந்தர்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்.நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:
*பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும்.
*பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம்.பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள்.
*மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியதுதான்.அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை.
*அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல.கரப்பான்களும்,பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலும் சிறிய படங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.
*வீட்டை போட்டோ ஸ்டுடியோ ஆக்கி விடாதீர்கள் ஆல்பம் வைத்துக் கொள்ளுங்கள்.
*இலவசமாகக் கிடைக்கிறது என்று வீடு முழுவதும் காலண்டர்களை மாட்டி வைக்காதீர்கள்.
*பால் கணக்கு,டெலிபோன் நம்பர் ஆகியவற்றை சுவற்றில் எழுதி வைக்காதீர்கள்.சிறிய டயரியில் குறிக்கப் பழகுங்கள்.
*குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்கள் புழங்கப் பழகுங்கள்.
*கொடியில் துணிகளைத் தோரணமாக தொங்க விடாதீர்கள்.பார்க்க சகிக்காது.
*தேவைக்கு உணவு தயாரித்து சமையல் அறையில் பழைய உணவுகளின் வாசனை இருந்தால் நன்றாக இருக்காது.
*தலையணை சிக்குப் பிடிக்காமல் அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும்.
*ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம்,அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்கள் (A place for everything and everything in its place.)என்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
மன்னிப்பு கேளுங்கள்.வாழ்க்கையில் முன்னேறுங்கள்.சும்மா ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்தால் அந்த மன்னிப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
*மன்னிப்பு கேட்குமுன் நாம் செய்தது தவறு என்பதனை மனதார உணர வேண்டும்.இனி இத்தவறை செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும் .
*மன்னிப்பு கேட்க வெறும் வார்த்தையோ பேச்சோ போதாது.அதற்கான மாற்று நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான்நமது மன்னிப்பு முழுமையடைகிறது.
*மன்னிப்பு கேட்க முடிவு செய்து விட்டால் நாளைத் தள்ளிப் போடாதீர்கள்.தாமதப்படுத்துகிற.பொறுப்பைத் தட்டிக் களிக்கிற ஒவ்வொரு வினாடியும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும்.அதன்பின் மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை.
*நீங்கள் மன்னிப்புக் கேட்கப்போகும் நபர் உங்களைவிடக் குறைந்த நிலையில் இருந்தாலும் தயங்காது மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிடில் அந்த உறவு முழுமையாக சிதைந்துவிடும்.
மன்னிப்பு கேட்டு அது ஏற்கப்படா விட்டால் என்ன செய்வது என்று கவலைப் பட வேண்டியதில்லை.என்ன சொல்வாரோ என்று மன்னிப்பு கேட்கத் தயங்கினால் வாழ்நாள் முழுவதும் எந்தத் தவறுக்கும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை.மன்னிப்புக் கேட்பதனால்,தவறை மீண்டும் செய்ய மாட்டோம்;மற்றவர்களுடன் உறவு சீரடையும்.வாழ்க்கை சுமுகமாகும்.
From'The one minute apology'written by Horper Collins.
அன்பு மகனுக்கு,
அன்பு மகளுக்கு,
*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
'எனக்குத் தெரியாது',மன்னிக்கவும்',என்பதை சொல்லத் தயங்காதே.
முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.
நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள்.
1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.
2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்.
5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.
6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்' என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக இருக்கும் பலரும் தவறு செய்தவர்கள்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
9.மற்றவர்களிடம் அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது,தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள்.
பார்க்கின்ற பொழுதில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் நமக்கு சாதகமானதை மட்டும் நம்புகின்ற ஒரு மன நிலையையே மனப்பாங்கு அல்லது கண்ணோட்டம் என்கின்றோம்.தோல்வி பற்றி பொதுவாக நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது?
நாம் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது தோல்வியைத் தழுவி விடுவோமோ எனப் பயந்து விடுகிறோம்.வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கின்றோம். .ஆனால் அவை நடை முறை சாத்தியமாக இருப்பதில்லை.எடுத்துக் கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும், உடனடியாக சரியாக செய்து விட வேண்டும் என்ற பதட்டமும், கால இடைவேளை தேவைப்படுகின்ற வேலைகளை அவசரமாக செய்வதாலும், அகலக்கால் வைத்து விடுவதாலும், பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் அமைந்து விடுவதாலும், தொடங்கும் போது உள்ள ஆர்வம் தொடர்ந்து இல்லாமல் போய்விடுவதாலும் நாம் பல முறை தோல்வியை தழுவி விடுகிறோம்.
தோல்வி என்பது வலிக்கும்.ஆனால் அது புதிதாக உடல் பயிற்சி செய்பவருக்கு உண்டாகும் வலியைப் போன்றதுதான் என்பதனை உணர வேண்டும்.தோல்வி உடனடியாக துன்பத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் நன்மை பயப்பதாக இருக்கும்.
தோல்வி என்பது கசக்கும்.இது வியாதியை குணமாக்கும் மருந்தின்கசப்பைப் போன்றதுதான் என்பதனை அறிய வேண்டும்.தவிர்க்க முடியாததும் அவசியமானது என்றும் அது நமக்கு உமர்த்துகிறது.
தோல்வியினால் நாம் நகைப்புக்கு உள்ளாகிறோம்.இது நமக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது.இதனால் தீயவர் நட்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது.தோல்விகள், நமக்கு சிந்திக்க, திட்டமிட, புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளிக்கிறது.
தோல்வியும் இயற்கையானதே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்வி அளிக்கும் அனுபவத்தினால் நாம் நம் வழிகளையும் முறைகளையும் சீர்படுத்திக் கொள்ள முடிகிறது.மாற்றத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் நமக்குப் புரிகிறது.தோல்வி என்பது தற்காலிகமானது.அதைப் புரிந்து கொண்டு அதில் வெற்றிக்கான விதைகளைத் தேடுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
கவலை வாழ்வைத் துன்பமயமாக்கி விடுகிறது.எனவே கவலைகளை ஒழித்தே ஆக வேண்டும்.அதற்கான சில பயிற்சிகள்:
1 தனிமையில் அமைதியாக உட்காருங்கள்.பேப்பர்,பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.
2 உங்கள் கவலைகளையெல்லாம் தொகுத்து வரிசைப் படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்.
3 கவலைதரும் சிக்கல்களை கீழ்க்கண்ட நான்கு வகைகளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
அ .அனுபவித்தே தீர வேண்டிய கவலைகள்.(தீராத நோய்,மரணம்,பொருள் இழப்பு போன்றவை)
ஆ.தள்ளி வைத்துப் பொறுமை கட்ட வேண்டிய கவலைகள்.(பருவம் வந்தும் திருமணம் ஆகாமை போன்றவை)
இ.அலட்சியப்படுத்த வேண்டிய கவலைகள்.(பிறரின் கருத்து வேறுபாடு, பொறாமைப் பேச்சு,செயல்கள் போன்றவை)
ஈ.உடனே தீர்த்து விட வேண்டியவை.(கடன் தொல்லை,பாகப் பிரிவினை,தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.)
இவ்வாறு தரம் பிரித்தவுடன் அவற்றிற்கேற்றவாறு செயல் பட வேண்டும்.
4 ஒரு சிக்கலை விரைவாகத் தீர்க்க உணர்ச்சி வசப்பட்டு செயலாற்ற வேண்டாம்.அறியாமையால் சிக்கல்களை மேலும் உண்டாக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.
5 முன்பு வந்த கவலைகள் எப்படித் தீர்ந்தன என்று யோசித்துப் பாருங்கள்.
6 வாழ்வில் சிக்கல்களே இருக்கக் கூடாது என்று எண்ணவோ ,இருப்பவற்றை எல்லாம் வேரோடு களைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யவோ, செயலாற்றவோ வேண்டாம்.ஒரு சிக்கல் தீர்ந்து மற்றொன்று முளைக்கும் போது ஏற்படும் கவலைகளைத் திட்டமிட்டு செயலாற்றி நீக்கிக் கொண்டால் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம்.
மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான் எங்கோ குழப்பி விட்டீர்கள்.குழப்பத்தை விடுங்கள்.மகிழ்ச்சியாய் இருங்கள்.உயர்ந்த குறிக்கோள் தேவைதான்.ஆனால் அது நம் நிகழ் காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான் இருக்கின்றன.ஆனால் போகும் வழியில் உள்ள மரங்கள், செடிகள்,கொடிகள்,நீர்நிலைகள்,மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.
உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும்,தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.
'';எனக்குத் தலைவலி,காய்ச்சல்,என் உடல் நிலை சரியில்லை,''என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.'நானே சரியில்லை,'என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும். உடல்நிலை ,மனநிலையில் தெரியும்
ஏதாவது சாதனைகள் செய்தால்தான் மகிழ்ச்சி என்பதில்லை.சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும்,காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.மழை கூட மகிழ்ச்சிதான்.நனைந்துதான் பாருங்களேன்!ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?
மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை.மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை.ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும்போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.
மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது.நீங்கள் அதை விரட்ட விரட்ட,அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.புல் தரையில் அமைதியாக அமர்ந்தால்,அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.
பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?
ஆசையை ஒழிக்க முடியாது.ஒழிக்கவும் வேண்டியதில்லை.ஆசையை ஒழுங்கு படுத்தினால் வாழ்வு வளம் பெரும்.
*உங்களின் எல்லா ஆசைகளையும் வரிசையாக ஒரு தாளில் தனிமையில் உட்கார்ந்து தொகுத்து எழுதிக் கொள்ளுங்கள்.
*ஒவ்வொரு ஆசையையும் முன் வைத்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளை ஆராய்ந்து எழுதுங்கள்.
அ)இது இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாதா?இது இன்றியமையாததா?
ஆ)இதை அடைய என்னிடம் உடல் நலம்,மன வளம்,பொருள் வளம் இருக்கிறதா?
இ)இதனால் எனக்கு ஏதேனும் தொல்லைகள் பின் விளைவாக உண்டாகுமா?
ஈ )இதைப் பெற்றால் ஏற்படப்போகும் நன்மை என்ன?இதில் எவ்வளவு தேவை.?
*'அவசியம் தான்,வசதியும் போதும்,பின் விளைவும் நன்மை' என்றால் ஆசையை ஏற்றுக் கொள்ளுங்கள்.நேர்மையான வழியில் அதை அடையத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
*அவசியம் இல்லை என்று கருதினால் இன்ன இன்ன காரணத்தினால் இது தேவையில்லை என்று முடிவு காட்டுங்கள்.
இவ்வாறு முடிவு செய்தால் முறையற்ற ஆசை எழாது.நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் வளர்ச்சி பெரும்.அடுத்தடுத்து வாழ்வில் பல வெற்றிகள் கிட்டும்.மன அமைதியும் பெறலாம்.
இன்றைய தினத்தையே நோக்குங்கள்.
ஏனென்றால் அதுதான் வாழ்வின் ஜீவன்.
நேற்று என்பது வெறும் கனவாக இருந்தது.
நாளை என்பதோ ஒரு மனத் தோற்றம்தான்.
இன்றைய தினத்தை நன்றாக வாழ்ந்தால்
நேற்றைய தினம் ஒரு அற்புதமான கனவு.
நாளைய தினம் நம்பிக்கை நிறைந்த
மனத்தோற்றமாகவும் மாறும்.ஆதலால்
இன்றைய தினத்தை நன்றாக நோக்குங்கள்.
அது நம் விடியற்காலை வணக்கமாகட்டும்.
--காளிதாசர்.
கணவன் மனைவி ஜோடியைப் பார்த்து 'என்ன பொருத்தம்!'என்று சொல்ல வேண்டுமா?சில டிப்ஸ்:
*கணவன் மனைவி இருவருக்குள்ளும் இரகசியம் என்பதே இல்லாமல் இருப்பதே உத்தமம்.சின்ன சின்ன விஷயமானாலும் மறைக்க வேண்டாம்.
*எந்தப் பிரச்சினை ஆனாலும் மற்றவரைக் கட்டாயப் படுத்தி சாதிக்க வேண்டாம்.மற்றவருக்கு முடியவில்லையா,விருப்பம் இல்லையா,விட்டு விடுங்கள்.
*எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைத் தவிருங்கள்.மற்றவர் சொல்வதை மனப் பூர்வமாக நம்புங்கள்.
*ஒரு தலைவலி ,ஜுரம் என்றால் கூட அலட்சியப்படுத்தாமல் சில நிமிடம் அருகில் அமர்ந்து இதமாகப் பேசுங்கள்.
*மற்றவர்கள் எதிரில் விட்டுக் கொடுக்காமல் பேசப் பழகுங்கள்.மட்டம் தட்டாதீர்கள்.அப்படித் தப்பித்தவறி ஒரு சிரிப்புக்காகச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் புன்னகையுடன்,ஸ்போர்டிவாக ஏற்கப் பழகுங்கள்.
*ஒருவொருக்கொருவர் விருப்பு வெறுப்பு அறிந்து நடந்து கொள்ளுங்கள்..மற்றவரின் எண்ணங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு கூடுமானவரை அதன்படி நடக்க முயலுங்கள்.
*ஒருவர் மூடுக்குத் தகுந்தாற்போல அடுத்தவர் நடந்து கொள்ளுங்கள்.ஒருவர் கோபத்துடன் கத்தினால் அடுத்தவர் மௌனம் சாதியுங்கள்.
*'தேங்க்ஸ்','சாரி'போன்ற சொற்களை வீட்டிலும் உபயோகிக்கலாம்.அது அன்பை வளர்த்து வாழ்வின் பல் சுமைகளைக் குறைக்கும்.
நாலு பேரிடம் நல்லவன் என்று பெயர் வாங்குவது ஒரு அரிய கலை.இதோ சில குறிப்புகள்:
*யாரைப் பற்றியாவது ஒரு பாராட்டு உங்கள் காதில் விழுந்தால் அதை உரியவரிடம் தெரிவிக்கத் தவறாதீர்கள்.முகஸ்துதியாக இல்லாமல் நிஜமான பாராட்டாக இருக்கட்டும்.
*அறிமுகமானவரின் பெயரையோ முகத்தையோ அப்போதே மறந்து விடாதீர்கள்.அறிமுகமானவரிடம் அப்போதே அவர் பெயரை உச்சரித்துப் பேசுங்கள்.முகம்,பெயர் மறக்காமல் இருக்கும்.
*உரையாடலின்போது ஏதேனும் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே நாசூக்காகப் பேச்சை மாற்றி அனைவரின் கவனத்தையும் வேறு புறம் திருப்புங்கள்.மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
*யாரையும் நையாண்டி செய்து பேசுவது வேண்டவே வேண்டாம்.சிறிய நிலையில் இருப்பவரும் தம்மைப் பற்றி அவரே உயர்வாக நினைக்கும்படி செய்யுங்கள்.
*உங்களிடம் கூறப்படும் ரகசியத்தை யாருக்கும் சொல்லாதீர்கள்.
*விவாதங்களின்போது உங்கள் தவறை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுங்கள்.அதனால் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.
*நண்பரிடம் அவரைப் பற்றியே அதிகம் பேசுங்கள்.'நான்','எனது'என்று உங்களைப் பற்றிய புராணம் வேண்டாம்.
*நீங்களே பேசிக் கொண்டிருக்காமல் எதிராளியை நிறையப் பேச விடுங்கள். உள்ளுக்குள் மகிழ்ச்சியோ துயரமோ எது இருந்தாலும் வெளியே பண்புடன் நடந்து கொள்ளுங்கள்.
*அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள்.பிறகு,'மனம் புண் பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறிப் பயனில்லை.
How to develop your personility என்ற நூலிலிருந்து.
பிறர் அபிப்பிராயத்திற்காக உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.பிறர் நம் அபிப்பிராயங்களை ஏற்கவில்லை என்பதற்காக இடிந்து போகாதீர்கள்.பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு காரியம் செய்துவிட்டு பின்னால் அவர்கள் நம்மை இப்படி செய்ய வைத்து விட்டார்களே என்று வருத்தப்படாதீர்கள்.முதலிலேயே இயலாது என்றால் முடியாது எனத் தைரியமாய்க் கூறிவிடுங்கள்.எதற்கும் மன்னிப்புக் கேட்கும் மனோபாவம் கொள்ளாதீர்கள்.எதற்கும் உங்களையே நொந்து கொண்டு,தன நிலைக்குப் பரிதாபப்பட்டு சித்திரவதை செய்து கொள்ளாதீர்கள்.பிறர் உங்களைக் குழந்தையாய்ப் பாவித்து உச்சி மோந்து,சீராட்டி,பாராட்டி,தாலாட்டும் நிலையில் உங்களைப் பிறரிடம் பறிகொடுக்காதீர்கள்.
நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா?
தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது.
பாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது.
மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம்.
மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது:
சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த தவறை செய்ய மாட்டேன்'',என்றெல்லாம் சிந்திப்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறர் உதவி கேட்கும்போது
முகம் சிறுத்துப் போகாமல் புன்னகை மாறாமல் பேச வேண்டும்.இயலாது என்றால்கூட அதை புன்னகை மாறாமல் சொல்ல வேண்டும்.உதவி மறுக்கப்படலாம்.ஆனால் மறுக்கப்பட்ட விதம் மோசமானதாக அமைந்து விடக்கூடாது.
நாம் அவமானப் படுத்தப்படும்போது
மிக அமைதியாய்,மிகவும் சிந்தனை வயப்பட்டவரைப்போல,முடிந்தால் எந்த வித சலனமும் முகத்தில் காட்டாது இருக்க வேண்டும்.
உடன்பாடற்ற கருத்தை ஒருவர் சொல்லும்போது
இலேசான கேலிப் புன்னகை அல்லது ஒரு அதிருப்தி சிரிப்பு.
நாம் பாதிக்கப்படும்போது.
இந்த பாதிப்பு என்னை ஒன்றும் செய்து விடாது என்பதுபோல அந்த விஷயத்தை அதிகம் பொருட்படுத்தாதவர்போல (அது உள்ளுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும்) முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் கேலி செய்யப்படும்போது
அது இயல்பான நகைச்சுவை என்றால் நாமும் சேர்ந்து சிரிக்கலாம்.
கேலியில் எந்தவித உண்மையும் இல்லை:சற்று மோசமான விஷயம் என்றால் இலேசான அலட்சியப் பார்வை போதும்.
பிறர் நம்மைப் பார்க்க வரும்போது
நிச்சயம் பிரகாசமாய் ,சற்றும் முகம் சுளிக்காமல் மிக மகிழ்ச்சியாய் முகம் இருக்க வேண்டும்.
நீண்ட நாள் வாழ சர்.எம்.விஸ் வேஸ்வரையா சொல்லும் ரகசியங்கள்:
*எப்போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாய் இருங்கள்.
*மனசாட்சிக்கு மாறான செயல்களை செய்யாதீர்கள்.
*அளவாக உண்ணுங்கள்.
*நன்றாகத் தூங்குங்கள்.
*சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள்.
*சம்பாதிக்கும் காலத்திலேயே சேர்த்து வையுங்கள்.
*வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள்.
*மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
*குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுங்கள்.
*உழைப்பதற்குத் தயங்காதீர்கள்.
''கயிற்றின் நுனிக்கே வந்து விட்டீர்கள்.நுனியின் பிடியை விட்டு விழுந்தால் எலும்பு கூடக் கிடைப்பது கடினம்.அந்த நொடியில் நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று ஒருவர் கேட்க,''அடுத்த கயிற்றை முடிச்சுப் போடப் பார்ப்பேன்,''என்று நிதானமாகக் கூறினாராம்,ஆப்ரஹாம் லிங்கன்.எந்த சூழ் நிலையிலும் டென்ஷன் வசப்படாத அந்த நிதானம் தான் அவரை அமெரிக்க நாட்டின் தலைவராக்கியது.டென்ஷனைக் குறைக்கக் கடைப் பிடிக்க வேண்டியவை:
*கோப உணர்வுகளைத் திசை திருப்புங்கள்.
*எதையும் என்னால் சமாளிக்க முடியும் என்று துணிவு கொள்ளுங்கள்.
*அடுத்தடுத்து பிரச்சினைகள் உள்ளபோது அப்போதைக்கு எது முக்கியமோ அதைத் தேர்ந்தெடுங்கள்.
*தனிமையை உடைத்தெறிய முயற்சி செய்யுங்கள்.
*உங்களுக்குப் பிடித்த விளையாட்டினை அரை மணி நேரம் விளையாடுங்கள்.
*இசையில் விருப்பம் இருந்தால் இசையைக் கேளுங்கள்.சில நிமிடங்களில் மனது பஞ்சுபோல இலேசாகிவிடும்.
குழந்தைகள் தவறு செய்யும்போது அடிக்கலாமா?அடிக்கலாம் என்பதைவிட தண்டிக்கலாம்.குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு முறையே சிறந்தது.
நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம் சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.
நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன் முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர் கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''



2