ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுத்துவதும் இல்லை.தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள்.மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
விமரிசனங்கள் பல வகையானவை.அவற்றை எப்படி எதிர்கொள்வது?
காகித அம்பு:
சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி,மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.
கால்பந்து:
சில விமரிசனங்கள்,விளையாட்டாக,உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.
கண்ணாடி:
சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
கத்தி:
சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும்.நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பதுபோல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள்.விலகி விடுங்கள்.
1.மண் புத்தி:(மிருத்து புத்தி)
மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம்.அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.
2.மரபுத்தி:(தாருபுத்தி)
ஆனி சுலபமாக இறங்கும்.ஆனால் சுலபமாக எடுக்க முடியாது.அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.
3.கல்புத்தி:(சிலாபுத்தி)
வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல் பிளக்கும்.அதுபோல சொன்னால் முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.
4.மூங்கில் புத்தி:(வேணு புத்தி)
மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.
5.எண்ணெய் புத்தி:(தைலபுத்தி)
தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும் புத்தி.
******
உலகில் ஏழு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
1.பயந்த குணம் உள்ளவர்கள்.
2.சஞ்சலப் படுபவர்கள்.
3.சதா கற்பனையில் மிதந்து எதார்த்தத்தைக் கோட்டை விடுபவர்கள்.
4.தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5.மற்றவர்களின் செல்வாக்குக்கோ,சொல்லுக்கோ உடன் படமறுப்பவர்கள்.
6.எதிலும் பற்றற்றவர்கள்.
7.மற்றவர்களின் கவலைகளைத் தம் கவலைகளாக எடுத்தப் போட்டுக் கொண்டு செயல் ஆற்றுபவர்கள்.
******
ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.அதன் பின் அந்த ஓட்டினால் எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் ஓட்டின் நோக்கம் நிறைவேறிவிட்டது.ஒரு செடியில் விதை முளைத்து வரும்போது முளையின் இரு புறமும் பருப்புகள் இருக்கும்.செடி வளரத் தேவையான சத்துக்கள் அம்முளையில் அடங்கியிருக்கிறது.செடி வளர வளர பருப்புகள் இற்றுப்போய் விடும்.அதன் பயன் முடிந்துவிட்டது.
சூரியனும் சந்திரனும் ஒளியை வீசி உலகுக்கே பயன் தருகின்றன.ஆனால் அவை எந்த நோக்கத்துடனும் செயல் படுவதில்லை.அதனாலேயே அவை நிலைத்து நிற்கின்றன.நோக்கம் எதுவும் இல்லாத உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும்.தாய் குழந்தையின் மீது செலுத்தும் அன்பிற்கு நோக்கம் எதுவும் கிடையாது.அதனால்தான் உயிருள்ளவரை அந்த அன்பு நிலைத்திருக்கிறது.கடவுள் எந்த நோக்கத்துடன் உலகைப் படைத்தார்.ஒரு நோக்கமும் கிடையாது.அது ஒரு விளையாட்டு.அதனால் தான் அதனை லீலை என்கிறார்கள்.
ஞானிகளுக்கு வாழ்வே ஒரு விளையாட்டு.அவர்கள் எந்த நோக்கமும் கொள்வதில்லை.எந்த வித பயனும் எதிர்பார்ப்பதில்லை.
சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.அவைதான் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன.நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத் தொடங்குகிறோம்.அதைச் சொல்லி விட்டதாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம்.பெரும்பாலான பகைகளும் சினங்களும் சொல்லை விட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.'ஆன்மா குடியிருக்கும் வீட்டில் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை தான்'என்று நாக்கை சுக்ர ஸ்மிரிதி வகுக்கிறது.நாக்கு நம் நலன்களைப் பேணத் தெரியாத பேதை.
சொற்களை அடுத்து எழுத்து.ஓலை எத்தனை மிதமாக எழுதப் பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதாலேயே ஒரு உறுதியைக் கொண்டிருக்கிறது.அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது.வாசிப்பவரின் மனமே அந்த சொற்களுக்குப் பொருள் அளிக்கிறது.எழுதுபவரின் மனம் அல்ல.ஒருவர் வன் குரலில் வாசித்துக் காட்டி அறைகூவலாக ஒலிக்கச் செய்ய முடியும்.
ஆகவே எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும்,உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.கேட்பவரின் முகத்தையும்,சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியை சொல்ல வேண்டும்.கேட்பவன் உருவாக்கும் எதிர் வினைகளுக்கேற்ப தணிந்தும்,நயந்தும்,தேவை என்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.அதன் பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்த ஓலையை அளிக்கலாம்.
--ஜெயமோகன் எழுதிவரும் 'வெண் முரசு 'என்னும் நூலிலிருந்து.
எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளை கல்லாக்கி கோவிலில் வைத்திருக்கிறது.கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும்.ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை.
******
நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால்,குளிர்ந்த கோபம் தான் கண்ணீர்.உறைந்த கண்ணீர் தான் சிரிப்பு.
******
வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதான் இருக்கிறது.எங்கேயோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேன்டியதுதான் ;விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு,புரிந்த கணக்கு,முன்னால் போட்ட கணக்குதான்.
******
சாவதையும்,வாழ்வதையும் விட,எதற்காகச் சாகிறோம்,எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.வாழ்க்கை வீம்பாகி விடும்போது,அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை.
******
சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடைய மாட்டான்.பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.
******
என் எண்ணங்களை நானே நூற்று,என் மேலேயே பின்னிக்கொண்டு,அவை இன்னதென்று கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.
******
வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை?உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கிறதா?பார்க்க முடியுமா?அதேபோல் உயிர் பிரிகையில் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா?
******
--'லா.ச.ராமாமிர்தம் கதைகள்' என்னும் நூலிலிருந்து.
சந்தோசப்படும்போது சிரித்து,வருத்தப்படும்போது அழுபவனை நான் காண விரும்புகிறேன்.சுகம்,துக்கம் இரண்டையும் அடக்கிக்கொண்டு 'கண்ணீர் பெருக்குவது பலவீனம்,சிரிப்பது லேசானது,'என்று நினைப்பவர்களுடன் எனக்கு எந்தவிதமான கருத்து ஒற்றுமையுமில்லை.வாழ்க்கை என்னைப் பொறுத்தவரையில் ஆனந்தமான விளையாட்டு,தன்னிச்சையானது, எளிமையானது.அதில் போட்டி,பொறாமை,கோபம்,அற்பத்தனத்திற்கு இடமே இல்லை.கடந்த காலத்தைப்பற்றி நினைப்பதில்லை.எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுமில்லை.எனக்குநிகழ்காலம்தான்யாவும்,எல்லாமும்.எதிர்காலத்தைப் பற்றிய கவலை,நம்மைக் கோழையாக்கி விடுகிறது.கடந்த காலத்தின் சுமை நம் இடுப்பை முறித்து விடுகிறது.நாம் வீணாக சுமையை நம்மீது சுமத்திக் கொண்டு நம்பிக்கைகள்,பழகி விட்ட பழக்கவழக்கங்கள்,வரலாறுகளின் இடிபாடுகளுக்கிடையே அழுந்திக் கிடக்கிறோம்.அதிலிருந்து மீண்டெழும் வலிமையோ,ஆற்றலோ நமக்கில்லை.மீண்டு எழ வேண்டுமென்ற நினைப்புக்கூட நம்மிடம் இல்லை.எங்கு வாழ்க்கை இருக்கிறதோ,அன்பும்,இனிமையும்,செயல்பாடும் உள்ளதோ,அங்குதான் இறைவன் உள்ளான்.வாழ்க்கையை இன்பமுள்ளதாக,இனிமை கூடியதாக ஆக்கிக் கொள்வதுதான் உபாசனை.அதுதான் மோட்சமும்.உன்னால் அழ முடியாவிட்டால்,சிரிக்க முடியாவிட்டால்,நீ மனிதனே அல்ல,பாறாங்கல் எனச் சொல்லுகிறேன்.
--பிரேம்சந்த் எழுதிய 'கோதானம்'என்னும் நூலிலிருந்து.
அதிகாரம் என்பதுஒவ்வொரு அதிகாரியாலும்,தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட,அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான். உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும்.ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது.தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான்.கூடவே அது எப்படி உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான்.மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது.அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறான்.சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான்.அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.மொழி,பாவனைகள்,நம்பிக்கைகள் மட்டுமல்ல,முகமும் கூட பிறரைப்போல ஆகி விடுகிறது.
-- ஜெயமோகன் எழுதிய 'நூறு நாற்காலிகள்'என்ற நூலிலிருந்து.
சீடன் ஒருவன் தனது குரு கன்பூசியசிடம் ,''இறந்த பிறகு என்ன நடக்கும்?''என்று கேட்டான்.அதற்கு அவர்,''இதற்குப் போய் நேரத்தை வீணடிக்காதே.நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப் பற்றி சிந்தனை செய்து கொள்ளலாம்.இப்போது அதைப் பற்றிக்
கவலைப்படாதே.''என்றார்.இந்த மாதிரிதான் அநேகம் பேர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாமும் அப்போது சிந்தனை செய்து கொள்ளலாம்.ஒன்றும் அவசரமில்லை.யாராவது இறக்கும்போது மற்றவர்கள் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டு,''ஐயோ,மனிதர்களெல்லாம் கடைசியில் கல்லறையைத்தான் சந்திக்க வேண்டுமா?'' என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் தானா?''நான் பிறக்கும்போது நான் எந்தக் கவலையும் சுமந்திருக்கவில்லை.எந்த மாதிரியான துன்பங்களை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.இப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே இருந்தேன்.ஏன்,அப்போது,'நான்' என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.அதைப் போல இறக்கும்போதும்,அதே உணர்வுடன் தான் இருப்பேன்,''என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் துன்பம் ஏது?
அரசியல் தத்துவ மேதை ரூசோவின் சில சிந்தனை சிதறல்கள் :
*ஒரு மனிதன் தன்னிச்சையாகக் காரியங்கள் செய்ய அனுமதிக்கப் படுகிற வரையில்தான் தர்ம நியாயமாக நடந்து கொள்வான்.
*மானிட சுபாவம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சுபாவம் இல்லை.அதேபோல எப்போதும் சமாதானமாக வாழும் சுபாவமும் இல்லை.
*விருப்பம் போலக் காரியங்கள் செய்வது அடிமைத்தனம்.தானே வகுத்துக் கொண்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது சுதந்திரம்.
*சமூகமானது,உடல் பலத்தின் காரணமாக மனிதர்களிடையே உண்டாகிற சமத்துவமின்மைக்குப் பதிலாக ,ஒழுக்க ரீதியான,சட்ட ரீதியான ஒரு சமத்துவத்தை அளிக்கிறது.மனிதர்கள் உடல் பலத்திலும்,அறிவிலும் வித்தியாசப்பட்டவர்களாக இருந்தபோதும் சட்ட ரீதியாக சமத்துவம் உடையவர்களாக ஆக்குகிறது.
*ஒரு தேசத்தில் எவ்வளவுகெவ்வளவு சட்டங்கள் இயற்றப்படுவது குறைவாக இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அத்தேசம் புகழ் பெறுகிறது.
*அரசு அதிகாரிகள் மக்களுடைய எஜமானர்கள் அல்ல.அவர்களுடைய காரியஸ்தர்கள்.அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்.
*அரசுப்பணி என்பது ஒரு நபருக்குக் காட்டப்படுகிற சலுகை அல்ல.ஒரு நபருக்கு அளிக்கப்படும் பொறுப்பு.
மரண தண்டனை தரலாமா கூடாதா என்ற விவாதங்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன.பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தத்துவமேதை ரூசோ தனது'சமுதாய ஒப்பந்தம்' என்னும் நூலில் இது குறித்து என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
''நாட்டின் நலனுக்காக ஒரு மனிதன் இறக்க வேண்டும் என்றால் அந்த மனிதன் இறக்க வேண்டியதுதான்.நாட்டின் நலனுக்காக,கேட்டபோது உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மீதுதான் ,அவனுடைய உயிர்,இதுவரை,நாட்டினால் காப்பாற்றப்பட்டு வந்தது.ஒரு நாட்டின் பிரஜையாக அவன் எப்போது ஆகிறானோ,அப்பொழுதே அவனுடைய உயிர் அவனுக்கு சொந்தமில்லை.அவனது உயிர், நாட்டினால் அவனுக்கு அளிக்கப்பட நன்கொடையாகி விடுகிறது.
சமுதாய உரிமைகளை பாதிக்கக்கூடிய விதமாக எவன் ஒருவன் நடந்து கொள்கிறானோ,அவன் ஒரு குற்றவாளி.அவன் நாட்டிற்கு துரோகம் செய்தவன் ஆகிறான்.சமுதாயத்தின் சட்ட திட்டங்களை மீறி நடக்கிற அவன் அந்த சமுதாயத்தில் ஒரு உறுப்பினராய் இருக்க தகுதியற்றவன் ஆகிறான்.மற்றும் சமுதாயத்தின் மீது போர் தொடுத்தவன் ஆகிறான்.இப்படிப்பட்ட நிலையில் நாட்டின் நலனுக்கும்,அவனுடைய நலனுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.முரண்பாடு ஏற்பட்டுள்ள இரண்டில் ஒன்று அழிய வேண்டும்.ஒன்று அந்த நாடு அழிய வேண்டும்,அல்லது அவன் அழிய வேண்டும். ஒரு கொலை செய்தவனை அரசானது தூக்கு மேடை ஏற்றுகிறபோது அவனை தனது பிரஜை என்ற முறையில் செய்வதில்லை.அவனை நாட்டின் எதிரியாகக் கருதியே தூக்கு மேடை ஏற்றுகிறது.ஏனெனில்,எப்போது அவன் சமுதாயத்தின் உறுப்பினரான இன்னொருவனைக் கொலை செய்து விடுகிறானோ,அப்போதே அவன்,ஒரு பிரஜைக்குரிய தகுதியை இழந்து விடுகிறான்.ஒரு தேச விரோதியை அந்த தேசத்தில் வைத்திருக்கலாமா?
ஒரு நாடானது சிதைவுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த நாட்டில் அதிகமான குற்றங்கள் நிலவுகின்றன.ரோமாபுரியில் குடியரசு முறை செழித்தோங்கி இருந்த காலத்தில் செனட் சபையோ,அதிகாரிகளோ,குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்ததே கிடையாது.அடிக்கடி மன்னிப்பு அளிப்பது குற்றங்களை அதிகப்படுத்தும்.''
பின் குறிப்பு:இது ஒரு கருத்துதான் இதை ஏற்க வேண்டும் என்பதில்லை.இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அன்றைய சூழலில் ஏற்பட்ட கருத்தென்றும் கொள்ளலாம்.
சில எண்ணங்களும்,பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள்,சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.மக்கள்,எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள். கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும்போதுதான் உண்மையான புரட்சி ஏற்படும். இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல்,பொருளாதாரம்,மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி.
--ஜவஹர்லால் நேரு.
சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது.எப்படி என்று கேட்கிறீர்களா?அவருடைய நாயன்மார்களில்
திருக்குறிப்புத்தொண்டர்--வண்ணார்.
திருநாளைப்போவார் ------பறையனார்.
திருநீல கண்டர் --------------குயவனார்.
ஏனாதிநாயனார் -------------நாடார்.
திருஞான சம்பந்தர் ---------பிராமணர்.
திருநாவுக்கரசர் --------------வேளாளர்
கண்ணப்ப நாயனார்---------வேடர்.
சேரன் பெருமாள் நாயனார் -சத்திரியர்.
முனை அடுவார் நாயனார் --மறவர்.
அதிபத்த நாயனார் -------------பரதவர்.
காரைக்கால் அம்மையார்---செட்டியார்.
பழமொழிகள் நிறையப் படித்திருக்கிறோம்;கேட்டிருக்கிறோம்.அவற்றின் அர்த்தமும் தெரிந்திருக்கிறோம் .ஆனால் சிலவற்றிற்கு வித்தியாசமான விளக்கங்களும் கொடுக்கப் படுகின்றன.சான்றாக இதோ சில:
''ஆறிலும் சாவு,நூறிலும் சாவு ''என்று ஒரு முதுமொழி உண்டு.மனிதன் ஆறு வயதிலும் சாகலாம்,நூறு வயதிலும் சாகலாம் .இது எல்லோருக்கும் தெரிந்தது.இப்பழமொழி எப்படி வந்தது?
பாண்டவர்களின் தாய் குந்தி,கர்ணனும் தனது மகன்தான் என்பதை அறிந்து அவனிடம் சென்று,அவனைப் பாண்டவர்களுடன் சேர்ந்து விடச் சொல்லி வற்புறுத்துகிறாள்.அப்போது கர்ணன் குந்தியிடம்,''அம்மா,நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவது ஆளாய் இருந்தாலும்,நூறு கெளரவர்களுடனே இருந்தாலும் எனக்கு சாவு நிச்சயம்.அதனால் நான் உண்ட சோற்றிற்காக நன்றி உணர்வுடன் கெளரவர்களுடனேயே இறுதிவரை இருந்து விடுகிறேனே,''என்றான்.இந்த நிகழ்வே இப்பழமொழி உண்டானதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
''பந்திக்கு முந்து,படைக்குப்பிந்து''.இப்பழமொழிக்கு இரு விளக்கங்கள் தரப்படுகின்றன.
அ.பந்தியில் பரிமாறுபவர் முதலில் சாப்பிட வேண்டுமாம்.அப்படியானால்தான் அவர்களுக்கு உணவில் உப்பு,காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தெரியும்.சரி செய்தபின் மற்றவருக்குப் பரிமாற வேண்டும்.
ஆ.பந்தியில் பரிமாறும்போது வலது கை முன்னால் வரும்.அதே சமயம் படையில் வேல் கொண்டு எறியும்போது வலது கை பின்னால் வந்து ,வலுவாய் வேலைப் பாய்ச்சும்.
''ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.''
இதற்கான விளக்கம்:
மனைவியானவள் ஊரார் பெற்ற பிள்ளை. கருவுற்றிருக்கும் காலத்தில்அவளை ஊட்டி வளர்த்தால் கருவிலிருக்கும் தனது குழந்தை தானே நன்றாக வளரும்.
ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. .ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை.ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை.ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை.கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம்,வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும்.தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்
ஆசை நிறைவேறுமா,நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள்.
காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது.அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும்.
நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா?அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம் அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும்.சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும்.
இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள்.சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன.
பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வது விவேகம் அல்ல.பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கூடும் பல கூட்டங்கள் துன்பத்தில் முடிந்துள்ளன. உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லையென்றால் நீங்கள் பிறருக்குப் பிரச்சினையை உண்டாக்குவீர்கள்.ஏதாவது ஒரு பிரச்சினை உங்கள் கையில் இருந்தால்தான் உங்கள் மனம் ஒருமுகப்படும்.எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் நீங்கள் மற்றவர்களுக்குப் பிரச்சினை ஆகி விடுவீர்கள். எனவே பிறருக்குப் பிரச்சினையாக இருப்பதை விட நாம் ஒரு பிரச்சினையோடு இருப்பது நல்லது.
******
சலிப்போடு இருந்தால் உங்களை நீங்களே சாந்தப் படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே திருப்திப் படுத்திக் கொள்ளுங்கள்.இன்னொருவர் உங்களை சாந்தப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது நீங்கள் தெளிவாயில்லை என்பதன் அடையாளம்.இதுதான் அறியாமையின் வேர்.எப்போதும் உற்சாகத்துடன் இருங்கள்.
******
குறை கூறுகிற முகத்துடன் தெய்வீக அன்பைப் பெறுதல் இயலாதது.அது முன்னுணர்வு இல்லாத மனதின் அடையாளம்.குறை கூற வேண்டும் என்றால் ஆண்டவனிடம் கூறுங்கள்.ஏனெனில் அவர் காதுகளை மூடிக் கொண்டுள்ளார்.
******
இன்னொருவர்க்குக் கீழ் வேலை செய்ய மறுப்பது பலவீனத்தின் அடையாளம்.தன் பலம் தெரிந்தவர்கள் யாருக்குக் கீழ் வேலை செய்தாலும் அதை வசதிக் குறைவாக எண்ண மாட்டார்கள்.பலவீனமானவர்களும் ஊக்கம் குன்றியவர்களும் தான் இன்னொருவருக்குக் கீழ் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரிவதில்லை.
******
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
பல விசயங்களில் நாம் ஆர்வமாக ஈடுபடுகின்றோம்.கொஞ்ச தூரம் போனதும்தான்,''ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!ஜகா வாங்க வேண்டியதுதானா?''என்கிற கலவர நினைப்பு வரும்.ஆனால் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நினைப்பும் சேர்ந்தே வரும்.இவை நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தி விட்டுப் போகும்.அதாவது,'என்ன ஆனாலும் சரி,ஒரு கை பார்த்து விடுவது,''என்று இறங்கி,முகத்தைப் பெயர்த்துக் கொள்வார்கள்.இது புத்திசாலிக்கு அழகல்ல.எவ்வளவோ விசயங்களை ஆர்வக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்,அப்போது பிரச்சினை பூதாகரமாகத் தெரிவதில்லை.இறங்க இறங்கத்தான் ஆழம் மட்டுப் படுகிறது.சுட்டுப் பொசுங்கிய பின்தான் சூடு புலப்படுகிறது.இது பின் வாங்க வேண்டிய தருணம்!அதற்காக எந்த விசயத்தில் தடங்கல் வந்தாலும் உடனே உதறி விட்டு ஓடி விட வேண்டும் என்று பொருள் அல்ல.கடைசி வரை போராட வேண்டியது தான்.ஆனால் நம்பிக்கை ஒளி கொஞ்சம் கூடத் தெரியாத பிரச்னை எண்ணும் மலை முகட்டில்,போலியான கௌரவத்திற்காகவும்,யார் என்ன நினைப்பார்களோ என்ற அர்த்தமற்ற வாதத்திற்காகவும் நடந்து,நடந்து அதல பாதாளத்தில் விழுந்து விடக் கூடாது.சொல்லியும் கேளாமல் சுயமாயும் புரியாமல்,'எனக்கு நானே குழி தோண்டிக் கொள்கிறேன்,''என்ற வரட்டுத் தனத்திற்கு நாம் ஒரு போதும் விலை போய் விடக் கூடாது.இடையில் பின் வாங்குவது அவமானம் எனத் தயங்குபவர்கள் முழுப் பாதையும் கடந்தபின் வாங்கப் போவது அதை விடப் பெரிய அவமானம் என்பதை உணர வேண்டும்.பாதித் தவறை செய்து திருத்திக் கொண்டவனை மன்னிக்க உலகம் தயாராக இருக்கிறது.ஆனால் முழுத் தவறை செய்து விட்டால் சாமான்யமாய் மறக்காது;மன்னிக்கவும் செய்யாது.
நிச்சயமாகத் தவறு என்று தெரிந்து விட்டால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பின் வாங்குவதில் தவறேயில்லை!
பெண்ணை மலிவாக நினைக்காதே.,இழிவாகப்பேசாதே,
அடிமையாக நடத்தாதே!
அவளை சக மனுஷியாக நினை;சரிசமமாக நடத்து.
சரியும்,தவறும் செய்யும் சராசரி பிறவியாக நினை.
அதை விட்டுவிட்டு,ஏண்டா பாவி,
தேவதையாக வர்ணிக்கிறாய்,தெய்வமாக வணங்குகிறாய்,
'உலகமே'என்று உளறுகிறாய்?
சமமானவளை சாமியாக்கி,சாமியாடிவிட்டு,
சகஜம் புரியும்போது,சமாதானம் ஆக முடியாமல்
சமாதியாகி விடுகிறாய்.
கற்பை she-mail க்கு மட்டும் அனுப்பாதே,அது he-mail க்கும்தான்.
எந்த லட்சணத்தில் நீ காப்பாற்றுகிறாயோ கற்பை,
அதே லட்சியத்தில் அவளும்,புரிந்து கொள்!
******
பிடிக்கலையின்னு சொல்ல காரணம் ஆயிரம் இருக்கும்.
ஆனால் பிடிச்சதுக்குக் காரணம் என்னமோ,அனேகமாக 'என்னமோ'வாகத்தான் இருக்கும்.
******
வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி அல்ல அறிவிக்க:
அது ஒரு அனுபவம்-அனுபவிக்க;சுவை-சுவைக்க;ரசனை-ரசிக்க.
******
தன்னிடமுள்ள ப்ளஸ்களை மட்டுமே
சீவிச் சிங்காரித்துக் காட்டி சிக்கிக் கொண்டவர்களின்
காதல் மட்டுமே கல்யாணத்துக்குப் பிறகு
ஒரு சிறு மைனஸ் தென்பட்டாலும் முறிந்துவிடும்.
******
ரா .பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்'என்ற நூலிலிருந்து.
அர்ஜுனன் மனதை மாற்ற கண்ணன் ஐந்து பார்வைகளை விளக்குகிறார்.
வேதாந்தப்பார்வை :ஆன்மா ஒன்றுதான் அழிக்க முடியாதது.அழிவது உடல்தான்.
சுயதர்மப் பாதை:சுய தர்மத்திலிருந்து பின் வாங்கக் கூடாது. குறை யிருப்பினும் கை விடக்கூடாது.நெருப்புக்குப் புகை இருப்பதுபோல எச்செயலிலும் குறை இருக்கத்தான் செய்கிறது.உனக்கென விதிக்கப்பட்ட கடமையை செய்யும் போது அதில் எந்தப் பாவமும் ஏற்படுவதில்லை.
கர்மயோகப் பார்வை:கடமையைக் கடமைக்காகச் செய்ய வேண்டும்.விருப்பு வெறுப்பு கூடாது.கடமையை செய்.வரப்போகும் பலன் உன்னை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது.பலனை விரும்பியோ,வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை எந்த விதத்திலாவது கட்டுப் படுத்தி விடும்.செயலில் ஆசை ,கோபம்,விரக்தி போன்ற உணர்வுகள் சேரக் கூடாது.உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.இறைவனை எண்ணி,அகங்காரம் இன்றி ,பலன் கருதாது செயல்படு.
பக்திப்பார்வை:எல்லாவற்றையும் செயலாக்குவது கடவுள்.அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.செயலுக்கு நீ ஒரு கருவிதான்.உன் செயல்களை இறைவனுக்காக செய்.எப்போதும் கடவுள் உன்னிடம் இருப்பார்.
தத்துவப்பார்வை:செயல்படுவது ஒருவனுடைய சுபாவம்தான்.எந்தக் காரியத்தை செய்ய மாட்டேன் என்று பின் வாங்குகிறாயோ ,அதையே செய்யும்படி உன் சுபாவம் கட்டுப் படுத்தும்.
இறுதியாக கண்ணன் சரணாகதி பற்றி சொல்கிறான்:
உன் சுமையை என் மேல் இறக்கி வை.தருமம் அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீ அல்ல.என்னையே புகலிடமாகக் கொண்டு உன் கடமையை செய்.
சூபி ஞானி ஜப்பார் தன்னிடம் வருபவர்களையெல்லாம் உட்கார்,ஆரம்பி என்று சொல்வார்.அவர் எந்த போதனையும் செய்வதில்லை.வருபவர்கள்தான் பேச வேண்டும்.அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் பேசி வெளியேற்றி விட வேண்டும்.சில சமயம் அவர்கூட கண்டபடி உளறுவார்.அதுபோல வருபவரையும் உளறச்சொல்வார்.மனிதர்களால் எவ்வளவு நேரம்தான் உளற முடியும்?எவ்வளவு நேரம்தான் பேச முடியும்?எல்லாம் கொட்டியபின் மனம் வெறுமையாகி விடும்.அவர்கள் மௌனமாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள். மனம் காலியான பின் ஒரு சூன்யம் தோன்றும்.அந்த வெறுமையில் தோன்றுவதுதான் விழிப்புணர்வு எனும் சுடர்.உண்மையில் அது அங்கேதான் இருந்தது.அதை மூடியிருந்த சிந்தனைகளையும், எண்ணங்களையும், இரைச்சல்களையும் எடுத்தெரிந்த பின்னர் அது தானே வெளிப்படுகிறது. ஜப்பார் கொண்டு வந்த இந்த முறை பிரபலமடைந்து,இன்று அவர் பெயரால் ஜிப்ரிஷ் என்று அழைக்கப் படுகிறது.
உடலுக்கும் இதே தன்மை உண்டு.எண்ணற்ற இறுக்கங்கள் உண்டு.நிர்ப்பந்தம் இல்லாமல் அது விரும்பும் அசைவுகளைச் செய்ய விடுங்கள். ஆடலாம், பாடலாம்,விழுந்து புரளலாம்,எதுவாயினும் சரி,செய்யட்டும்.வலிந்து திணிக்கக் கூடாது.அவ்வளவே.உடல் விரும்பிய அசைவுகளை செய்ய விட்டால் ஏற்படும் இறுக்கம் நீங்கிய தளர்வு நிலை இருக்கிறதே,அது ஒரு பரம சுகமான நிலை.



0