எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளை கல்லாக்கி கோவிலில் வைத்திருக்கிறது.கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும்.ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை.
******
நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால்,குளிர்ந்த கோபம் தான் கண்ணீர்.உறைந்த கண்ணீர் தான் சிரிப்பு.
******
வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதான் இருக்கிறது.எங்கேயோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேன்டியதுதான் ;விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு,புரிந்த கணக்கு,முன்னால் போட்ட கணக்குதான்.
******
சாவதையும்,வாழ்வதையும் விட,எதற்காகச் சாகிறோம்,எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.வாழ்க்கை வீம்பாகி விடும்போது,அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை.
******
சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடைய மாட்டான்.பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.
******
என் எண்ணங்களை நானே நூற்று,என் மேலேயே பின்னிக்கொண்டு,அவை இன்னதென்று கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.
******
வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை?உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கிறதா?பார்க்க முடியுமா?அதேபோல் உயிர் பிரிகையில் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா?
******
--'லா.ச.ராமாமிர்தம் கதைகள்' என்னும் நூலிலிருந்து.
|
|
சமாதானம் உட்பட அனைத்தும் அருமை ஐயா... பகிர்வுக்கு நன்றி...