நம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம் என்பது ஒரு வெற்றியே.முடிவு எப்படியிருப்பினும் கடைசி வரை முயற்சிப்பது வெற்றியே.சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகக் கவனம் செலுத்துவது ஒரு வகை வெற்றியே. எதிர் பார்த்த வாய்த்த வாய்ப்புகள் வராதபோதும் கிடைத்த வாய்ப்புகளில்
இ ருந்து கூடிய அளவு அனுபவம் பெற்றுவிடுவதும் வெற்றியே. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டி வந்தாலும் தொடர்ந்து முயல்வதும் அதற்கான உறுதியும் ஒரு வெற்றியே.
'இன்று சிலர் செய்யும் தவறுகள் நாமும் நேற்றுத் தெரியாமல் செய்த தவறுகளே'என்பதை உணர்ந்து அவர்களை மன்னிப்பதும் வெற்றியே.'சிறு செயல்களை செய்தாலும் பலருக்கும் பயன்படும் விதமாக செம்மையாக செய்தோம்'என்ற உள்ளக் களிப்பும் வெற்றியே.பெருந்தோல்வி ஒன்று முழுமையாக வீழ்த்தி விட்ட போதிலும் மாபெரும் கடமைகளால் உந்தப்பட்டு மீண்டும் எழும் உள்ளம்வெற்றிக்கு ஒரு வித்து.
'நல்லதை விழையும் முயற்சியில் நமக்குத் தற்போது அவப்பெயர் வந்தாலும் பிறகு புரிந்து கொள்வார்கள்,'என்று பொறுத்துக் காத்திருப்பதும் வெற்றியே. திட்டங்கள் செயல் முறைக்கு வரும்போது நடைமுறை உண்மைகளை கண்டுணர்ந்து தன் தவறுகளை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் ஒரு வெற்றியே.
வெற்றிக்குத் தடையாக இருக்கும் நினைப்புகளை அகற்றுங்கள்.யாரோ வேண்டுமென்று உங்கள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்களே,அந்த நினைவை அகற்றுங்கள்.நீங்கள் குறுக்கே வந்து விட்டதாக மற்றவர்களும்,அவர்கள் குறுக்கே வந்து விட்டதாக நீங்களும் நினைத்துக் கொண்டால் எப்படி?
உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளத் தயங்கும்போதுதான் யாரையேனும் குறை சொல்லி உங்கள் முயற்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கும்போத்தான் குறுக்கு சுவர்கள் எழுகின்றன.நாம் எழுப்பிய சுவர்களை நாம்தான் உடைக்க வேண்டும்.
எல்லாம் தெரியும் என்ற நினைப்பைக் கைவிடுவதும், தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதும்,தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் தீமைகளைக் கலைவதும் வெற்றிகளே.
வேண்டா வெறுப்பை விடுத்து கவனத்தோடு செயலாற்றுவது,பிறருடைய இயல்புகளை அறிந்து நளினமாகச் செயல்படுவது,வேண்டாத பின் விளைவுகள் வராத வண்ணம் சிந்தித்துச் செயல் படுவது,இடையில் வரும் அலுப்பை பொருட் படுத்தாது தொடர்ந்து முயல்வது,முதலில் செய்ய வேண்டிய வேலையை முதலில் செய்யும் கட்டுப்பாடு,எடுத்த வேலையைக் கடைசி வரை செய்து முடித்து விடும் ஈடுபாடு யாவும் நல்ல பண்பின் வெற்றிப்படிகள்.
|
|
Post a Comment