நேர்மையான கடவுள் பக்தி மிக்க வியாபாரி ஒருவர் இறந்து விட்டார்.அவர் மேலுலகம் சென்றதும் தேவர் ஒருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு சொர்க்கம்,நரகம் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார்.பின் அவர் வியாபாரியிடம் சொன்னார்,''பூமியில் நல்ல காரியங்கள் பல புரிந்திருப்பதால் உங்களுக்கு இங்கு எங்கு தங்கிக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்து சொன்னால் அங்கு நீங்கள் தங்க அனுமதி அளிக்கப்படும்.ஆனால் ஒரு தடவை முடிவு செய்து விட்டால் அதை மாற்ற முடியாது.'' .சொர்க்கத்தில் பக்திப் பாடல்கள் பாடுவதும் ஆடுவதுமாக இருந்தது.எல்லோரும் அமைதியாக எளிமையாக இருந்தனர்.நரகத்தில் ஒரே ஆட்டம் பாட்டம்.எங்கு பார்த்தாலும் அழகிய பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.குடிக்கோ பஞ்சமில்லை. வியாபாரி யோசித்தார்.''பூமியில் வாழ்நாள் முழுவதும் பஜனை, கோவில், குளம் என்று இருந்து விட்டேன்.இங்கு சொர்க்கத்திலும் அதேதான் இருக்கிறது.இங்கு நரகத்திலோ சகல இன்பங்களும் இருக்கின்றன.பூமியில் தவறவிட்டதை இங்கு அனுபவிக்கலாமே என்று நினைத்து தான் நரகத்திலேயே தங்கிக் கொள்ள விரும்புவதாக சொன்னார். பின் அவர் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இப்போது நரகம் முழுவதும் வித்தியாசமாக இருந்தது.எங்கு பார்த்தாலும் அழுகைக் குரல். கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகள்.பயந்துபோன வியாபாரி தன்னை அழைத்து வந்தவரிடம்,''நான் முதலில் பார்த்த நரகம் எங்கே?''என்று கேட்டார். அதற்கு அந்த தேவர் சொன்னார்,''சமீப காலமாக நரகத்திற்கு அதிகம் பேர் வரவில்லை.எனவே நரகத்தின் விளம்பரத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள்தான் முதலில் உங்களுக்குக் காட்டப்பட்டது.ஆனால் இதுதான் நரகம்.''
|
|
Post a Comment