முல்லா ஒரு அருங்காட்சியகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.அவருக்கு கதவருகே நின்று உள்ளே வரும் பார்வையாளர்களைக் கண்காணிக்கும் பணி கொடுக்கப்பட்டது.நீண்ட நாள் வேலை கிடைக்காமல் தவித்தபின் இவ்வேலை கிடைத்ததால் நன்றாக வேலை பார்த்து அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முல்லா நினைத்தார்.எனவே அவருடைய மேலாளரிடம்,''இந்த வேளையில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகளை தயவு செய்து சொல்லுங்கள்,''என்று கேட்டார்.அவரும் ஒரு விதிகள் அடங்கிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.அன்று இரவே முல்லா அதை முழுமையாகப் படித்து முடித்து விட்டார்.மறுநாள் காலை மிகவும் தைரியமாகப் பணிக்கு சென்றார்.முதலில் ஒரு பார்வையாளர் வந்தார்.அவரிடம் முல்லா,''முதலில் உங்கள் குடையை வெளியே வைத்துவிட்டு வாருங்கள்.அதன் பின்தான் நீங்கள் உள்ளே அனுமதிக்கப் படுவீர்கள்,''என்றார்.அந்தப் பார்வையாளரோ அதிர்ச்சியுடன்,''நான் குடையே எடுத்து வரவில்லையே?''என்று கேட்டார்.முல்லா அமைதியாகச் சொன்னார்,''அய்யா,நான் சொல்வது இங்குள்ள சட்டப்படிதான்.நீங்கள் அதன்படி நடக்கத்தான் வேண்டும்.எனவே நீங்கள் திரும்பப் போய் ஒரு குடையை எடுத்துவந்து அதை வெளியே வைத்து விட்டுப் பின் உள்ளே செல்லலாம்.இங்குள்ள விதிப்படி குடையை வெளியே விட்டுச் செல்லாமல் எந்தப் பார்வையாளரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.''
|
|
Post a Comment