ஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை
இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,''இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்.''கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,''ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?''
அவன் உடனே படபடப்புடன் சொன்னான்,''தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.''கூட்டம் வாயைப் பிளந்தது.
|
|
Post a Comment