உலகில் நாம் கோமாளிகளாகக் காட்சி அளிக்கக் காரணம் என்ன?அடிப்படையான பிழைப்பு க்குக்கூட நம்மை நம்புவதைக் குறைத்துக் கொண்டு கடவுளை நம்பி இருப்பது தான்.இந்த உலகில் தங்கள் தேவைகளைப் பெற மண்புழு முதல் யானைவரை தங்கள் திறமையைத் தான் நம்பி இருக்கின்றன.ஆனால் புத்திசாலியான மனிதன் மட்டும் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.உழைக்காமல் சாப்பிடவும்,படிக்காமல் தேர்வடையவும்,உங்கள் தவறுகள் கவனிக்கப் படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்க வேண்டுகிறீர்கள்.வாழ்க்கை திடுமெனப் புரண்டு விட்டால் என்ன செய்வது என்று கடவுளைத் துணையிருக்கச் சொல்கிறீர்கள்.கோவில் கோவிலாக அதற்கான பிரிமியம் கட்டுகிறீர்கள்.
வாழ்க்கை பற்றிய அச்சம் மட்டும் கடவுளைப் பற்றிய நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது.வாழ்க்கையும் மிஞ்சாது.சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை.கடவுளிடம் பணிவது போன்ற பாசாங்கு தான் நிகழ்கிறது.பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ,அதனுடன் இரண்டறக் கலப்பதுதான்.
உங்கள் தவறுகளுக்கான பழியை ஏற்றுக் கொள்ள சக மனிதர்கள் தயாராக இல்லாதபோது,தெய்வச் செயல் என்று அவற்றைச் சுமத்த வசதியான தோள்கள் ஆகக் கடவுளை வைத்திருக்கிறீர்கள்.அதன் பெயர் பக்தி இல்லை.உங்களின் வாழ்வைக் கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாகவே வாழக் கற்றுக் கொண்டீர்களேயானால் உங்கள் வாழ்வு மேன்மை ஆகிவிடும்.
|
|
Post a Comment