ஆப்பிரிக்காவில் ஒரு கர்வம் மிகுந்த அரசன் இருந்தான்.ஒரு நாள் அரசவையில் அங்கிருந்த அனைவரையும் பார்த்து,''நான் தான் உலகின் அதிபதி.எல்லா மனிதரும் எனக்கு வேலைக்காரகளே,''என்றான்.'நீங்கள் சொல்வது தவறு.அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.அரசன் கோபத்தில் வெடித்தான்,''என்னையும் வேலைக்காரன் என்று சொன்னது யார்?''கம்பை ஊன்றியபடி ஒரு வயதான மனிதன் முன்னால் வந்து,'நான்தான் சொன்னேன்.'என்றான்.நீயார் என்று அரசன் கேட்க,முதியவர் சொன்னார்,'நான் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்.எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை.ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்ளவே இங்குவந்தேன்,'உடனே அரசன் ஏளனத்துடன் சொன்னான்,''அப்படியானால்,நீயே பிச்சை கேட்க வந்திருக்கிறாய்.ஆனால் என்னையும் வேலைக்காரன் என்று சொல்லும் அளவுக்கு உனக்குத் திமிர்.''கிழவன் பயம் ஏதுமின்றி மீண்டும் சொன்னான்,'நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்கிறோம்.அதை என்னால் இப்போதே நிரூபிக்க முடியும்.'அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உன் ஊரில் ஒன்றல்ல,மூன்று கிணறு தோண்ட ஏற்பாடு செய்கிறேன்.''கிழவன் அமைதியாக''எங்கள் ஊரில் ஒரு பழக்கம் இருக்கிறது.ஒருவரின் சவாலை ஏற்றுக்கொள்ளும் போது,சவால் விட்டவரின் பாதத்தைத் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் பாதத்தைத் தொட அனுமதியுங்கள்.''என்று கூறி அரசன் அனுமதித்ததும்,'இந்த ஊன்றுகோலை ஒரு நிமிடம் பிடியுங்கள்,'என்று கூற அரசனும் அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டான்.அரசனின் காலை வணங்கிவிட்டு,'இப்போது ஊன்று கோலைத் திரும்பக் கொடுங்கள்,'என்று சொல்ல அரசனும் அதைத் திரும்பக் கொடுத்தான்.உடனே கிழவன்,'இதைவிட என்னநிரூபணம் வேண்டும்?'என்று கேட்டான்.''என்ன நிரூபித்தாய்?''என்று அரசன் கேட்டான்.'இந்த ஊன்று கோலைப் பிடியுங்கள் என்றேன்.உடனே பிடித்துக் கொண்டீர்கள்.திரும்பக் கொடுங்கள் என்றேன்.உடனே திரும்பக் கொடுத்து விட்டீர்கள் .நான் சொன்ன மாதிரி நல்ல மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்றான் கிழவன்.அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனின் ஊரில் மூன்று கிணறு தோண்ட ஆணையிட்டதோடு கிழவனையும் தன் ஆலோசகராக வைத்துக் கொண்டான்.
|
|
Post a Comment