உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இந்திய தேசியம்

0

Posted on : Friday, November 25, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்று சிலர் கூறுவது போல இந்திய தேசியம் என்பது பிரிட்டிஷ்காரர்கள்  உருவாக்கம் அல்ல.பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்த பல தனித் தேசங்கள் மீது ஒட்டு மொத்தமான ஒரு மேலாதிக்கமாக இருந்ததேயொழிய நாற்பத்து ஏழில் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை பிரிட்டிஷார் இந்தியாவை ஒரே அரசியல் அமைப்பாகவோ,ஏன் ஒரே நிர்வாக அமைப்பாகவோ கூட ஆக்கவில்லை என்பது மிகச் சாதாரணமாக எவரும் வாசித்தறியக் கூடிய உண்மை.உதாரணமாக திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டியதே தவிர மற்றபடி ஒரு தனி
அரசியல்,பொருளியல் தேசமாகவே சுதந்திரம் வரை நீடித்தது.அப்படி பற்பல சமஸ் தானங்கள்  இருந்தன.அதைத்தவிர பிரெஞ்சு,போர்ச்சுக்கல் பகுதிகள் தனி அரசியல் தேசமாகவே நீடித்தன.இந்தியாவை கடைசிவரை ஒரு தேசமாக பிரிட்டிஷார் ஒத்துக் கொள்ளவில்லை.இந்தியாவை விட்டுச் செல்லும்போது  கூட இந்தியாவை தனித்தனி தேசங்களாகவே விட்டுச் சென்றார்கள்.இந்தியாவின் எந்த தேசத்துக்கும் தனி நாடாகப் போகும் உரிமை உண்டு என்ற நிபந்தனையை வைத்தே அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.இந்தியாவின் தனி நாடுகள் ஒருபோதும் ஒற்றைத்தேசியமாக ஒத்துக் கொள்ளாது என்றும் ஆகவே இந்தியா போரிட்டு அழியும் என்றும் நினைத்தார்கள்.ஆனால் பிரிட்டிஷாரை அதிர்ச்சி கொள்ள வைத்தபடி ஓரிரு மாதங்களில் இந்தியா ஒரே தேசமாக ஆகியது.பெரிய படை எடுப்புகளோ போர்களோ தேவையாக இருக்கவில்லை.இந்தியாவெங்கும் பல்வேறு சமஷ்தானங்களில் இருந்த மக்கள் அந்தந்த அரசர்களுக்கு எதிராகத் திரண்டு

போராடி இந்தியாவை ஒரே தேசமாக ஆக்கினார்கள்.
ஆனால் இந்தியா ஒரே தேசமாக ஆனபின் இந்தியா என்ற தேசியத்தை நிகழ்த்தியது தாங்களே என வெள்ளையர்களின்  வரலாற்றாசிரியர்கள்  சொல்ல ஆரம்பித்தார்கள்.இந்தியாவைப் பட்டேல் எப்படி ஒற்றுமைப்படுத்தினார்?ராணுவ வல்லமை மூலம் அல்ல.ஒப்புநோக்க அந்தப் பணிக்கு மிகக் குறைவாகவே படைபலம் பயன்படுத்தப்பட்டிருந்தது.அன்று இந்திய சமஷ்தானங்கள் இந்திய மைய அரசுக்கு எதிராகப் போரைத் தொடுத்திருக்க முடியுமா?முடியும்,அந்த அரசுக்குள் இருந்த மக்கள் அந்த அரசுகளை ஆதரித்திருந்தால்.தேசப் பிரிவினையின் விளைவான மதப்பிரிவினையால் அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம் பலவீனமாக இருந்தது.மக்களாதரவுடன் சமஷ்தானங்கள் போரிட்டிருந்தால் இந்திய அரசு தாக்குப் பிடித்திருக்காது.பட்டேலுக்கு உதவிய பெரும் சக்தி அந்தந்த சமஷ்தானங்களில் இருந்த மக்கள்தான்.
                          --ஜெயமோகன் எழுதிய 'இன்றைய காந்தி 'என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment