இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும் வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும்
செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.
*யானைப் பாகனுக்கு மாவுத்தன் என்றும்,குதிரைப் பாகனுக்கு ராவுத்தன் என்றும் பெயர்.மயிலில் குதிரை போல ஏறிச் செல்வதால்,அருணகிரினாதர் ''மயிலேறிய ராவுத்தனே,''என்று முருகனைப் பாடியுள்ளார்.
*அசஹாய சூரன் என்றால் துணை வேண்டா வீரன்என்று பொருள்.
*பூஜ்யத்திற்குத் தமிழில் 'பாழ்' என்று சொல்லப்படுகிறது.
*தம்மிடத்தில் உள்ளவற்றை விட முடியாமல் பற்றிக் கொள்வது பற்று.
பிறரிடத்தில் உள்ளவையும்தமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவது அவா.
*'தா' என்பது கேடு,குற்றம் என்னும் பொருளுடையது.'தாவிலை'என்றால் குற்றம் இல்லை என்று பொருள்.இதுதான் மருவி தேவலை என்று ஆகிவிட்டது.
*அசூயை என்பது பிறர் நலம் கண்டு பொறாமைப் படுவது.
ஈரிசை என்பது பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.
*கண்டம் என்றால் பிரிவு.அகண்டம் என்றால் பிரிவில்லாதது.காவேரி நதியிலிருந்து கிளை நதிகள் பிரிவதற்கு முன் உள்ள காவேரியே அகண்ட காவேரி.அகன்ற காவேரி என்பது பிழை.
*யோஜனை என்பது நாலு காத தூரம்;கிட்டத்தட்ட நாற்பது மைல்.
*மைனாவிற்குப் பழைய பெயர் நாகணவாய்ப்புள்.
*ஸ்ரீ காளி புரம் என்பதே மருவி சீகாழி ஆகிப் பின் சீர்காழி ஆயிற்று.
*கருனை என்பதற்குப் பொரியல் என்று பொருள்.எனவே கருனைக் கிழங்கு
என்று சொல்வதே சரி.
*கோஜலம் என்பது பசுவின் சிறுநீர்.கோமயம் என்பது பசுவின் சாணம்.
*சொக்கம் என்றால் அழகு.சொக்கத் தங்கம் என்பது கலப்பில்லாதது.சொக்கன் என்றால் அழகன்.
*அரசன் மனைவி,குருவின் மனைவி,அண்ணனின் மனைவி,மாமியார்,தாயார் ஆகியோரை ஐவகைத்தாயார் என்பர்.
*புத்தருடைய விக்ரகம் உள்ள கோவிலுக்கு சைத்தியம் என்று பெயர்.
*கொல்லாமை,பொய்யாமை,கள்ளுண்ணாமை,காமமின்மை,இரவாமை என்ற ஐந்தை பஞ்சசீலம் என்பர்.
*பாரத யுத்தத்தின் முடிவில் எஞ்சியவர் பத்துப்பேர்தான்.அவர்கள்:பஞ்ச பாண்டவர் ஐவர்,அசுவத்தாமா,கிருபர்,கிருதவர்மா,சாத்தகி,கிருஷ்ணன்.
*பழந் தமிழகத்தில் ஒரு வீரன், தான் கொன்ற புலியின் பற்களைக் கோர்த்து தனது காதலிக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்தது.அந்த வழக்கமே பின்னர் தாலி கட்டும் வழக்கமாக மாறியது.
*காமம்,கொலை,கள்ளுண்டல்,பொய்,களவு இவை ஐந்தும் பஞ்சமாபாதகங்கள்.
*சரம் என்றால் நாணல்.வனம் என்றால் காடு .நாணல் மிகுந்த காடு சரவணம்.அங்கு உள்ள பொய்கை சரவணப் பொய்கை.
*இரண்டு கைகள்,இரண்டு கால்கள்,வயிறு,இரண்டு கன்னம்,முகம் என்னும் எட்டு அங்கங்கள் நிலத்தில் படும்படி வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம்.இரண்டு கைகள்,இரண்டு முழங்கால்கள்,முகம் என்னும் ஐந்தும் பூமியில் படும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம்.
*'காசி'என்றால் பிரகாசிப்பது என்று பொருள்.
*சூர்ப்பம் என்பது முறத்திற்குப் பெயர்.முறம் போன்ற நகங்களை உடையவள் சூர்ப்பனகை.
*'ரசகதளி'என்ற பேரே ரஸ்தாளி என்று மருவியது.
*'ரூப்யம்'என்றால் வெள்ளி என்று பொருள்.முன்னர் வெள்ளியினால் செய்யப் பட்டதால் நாணயத்திற்கு ரூபாய் என்று பெயர் வந்தது.
நாம் அன்றாட வாழ்வில் புரியாமல் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு அறிஞர் கி.வா. ஜெகநாதன் எழுதிய விடைகள் ஆயிரம் என்ற நூலில் விடைகள் இருக்கின்றன. அவற்றில் சில:
*அரிக்கு இல்லமாகிய ஊர்தான் அரியிலூர்.அதுவே மருவி அரியலூர் ஆகிற்று.
*சீதை அசோக வனத்தில் இருந்த காலம் பத்து மாதங்கள்.
*பாவை என்பது பொம்மையைக் குறிக்கும்.பொம்மை போல வண்ணங்களுடன் அழகாக இருப்பதால் பெண்களைப் பாவை என்கின்றனர். பூவை என்பது மைனாவிற்குப் பெயர்.அதன் பேச்சைப் போல இனிமையாகப் பேசுவதால் மங்கையரை பூவை என்று அழைக்கின்றனர்.
*கர்ணனுடைய இயற்பெயர் விஷுஷேணன் .
*பொய்கை என்பது இயற்கையான நீர்நிலை.தடாகம் என்பது மனிதர் உருவாக்கிய நீர்நிலை.
*தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு.அகத்தில் நட்பின்றி,புறத்தில் நண்பர்போல நடிப்பவரின் நட்பு கூடா நட்பு.
*மனிதன் உண்பது உணவு.விலங்குகள் உண்பது இரை .
*ஜல்பம்,விதண்டை என்று வாதங்களில் இரு வகை உண்டு.வாதப் பிரதிவாதிகள் தமது குணங்களையும் எதிரியின் குற்றங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம்.தமது குற்றம் மறைத்து எதிரியைக் கண்டிப்பது விதண்டை.
*ஒரு கோவிலில் கர்ப்பக் கிரகத்துக்கு மேலே உள்ளதை விமானம் என்றும்,மற்றவற்றைக் கோபுரம் என்றும் கூறுவது மரபு.
*'அனுத்தமா' என்பதற்கு 'தனக்கு மேற்பட்டவர் இல்லாதவள்' என்று பொருள்.
அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது.குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு பிடித்துக் கொடுத்தால்தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது.ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் ஒரு நகை
கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார்.அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது.ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றான்.தாமதத்திற்குக் காரணமும் கேட்டான்.ஞானி சொன்னார்,''நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில் எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை.மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால் நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள்.எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை.நகையை அப்படியே வைத்துக் கொண்டால் அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள்.எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை.அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன். ''மன்னன், ''இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?''என்று கேட்டான்.அதற்கு ஞானி,''தர்ம வழியில் நடக்கும் ஒருவனை தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை,''என்று சொல்லியவாறு கம்பீரமாக அங்கிருந்து நடந்தார்.மன்னன் வணங்கி விடை கொடுத்தான்.
பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையா?''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா?''என்று கேட்டான்.அனைவரும் தலை குனிந்தனர்.இப்போது சிவன் பார்வதியிடம் சொன்னார், ''எல்லோரும்தான் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் அவன் ஒருவன் தானே அதை நம்பினான்.நம்பியவருக்கு மட்டுமே கைலாயத்தில் இடம் உண்டு.''பார்வதியின் சந்தேகம் நீங்கியது.



2