ஒரு நாள் முல்லா ஒரு பணக்காரரிடம் சென்று தனக்கு ஒரு பெரிய தொகை கடனாகக் கேட்டார்.அவ்வளவு பணம் எதற்கு என்று அவர் கேட்டார்.உடனே முல்லா,''நன் யானை வாங்கப் போகிறேன்,''என்றார்.பணக்காரர் சொன்னார் ,''உன்னிடமோ பணம் இல்லை என்கிறாய்.யானை வாங்கினால் உன்னால் அதை வைத்து பராமரிக்க முடியாது.''முல்லா சொன்னார்,''நான் உங்களிடம் கேட்டது பணம் தான்.அறிவுரை கேட்கவில்லை.''
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு பெற்றோர் தன குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தனர்.அங்கு இருந்த ஆடும் மரக்குதிரையின் மீது ஏறி குழந்தை விளையாட ஆரம்பித்தது.புறப்படும் சமயம் பெற்றோர் குழந்தையை தூக்க சென்றபோது குழந்தை இறங்க மறுத்து அடம் செய்தது.''நம் வீட்டில் மூன்று மரக்குதிரைகள் இருக்கின்றன அதில் போய் விளையாடலாம் வா,''என அழைத்தனர்.குழந்தை வர மறுத்தது.வம்படியாகத் தூக்கி செல்லலாம் என்றால் அது அழுது அலறி ஆர்ப்பாட்டம் செய்தது.என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை.வீட்டுக்காரர்,''பக்கத்திலே ஒரு மனோ வைத்தியர் இருக்கிறார்.அவரை அழைத்து வந்தால் அவர் சரி செய்து விடுவார்,''என்று ஆலோசனை கூறினார்.வைத்தியர் வந்ததும் குழந்தையைப் பார்த்துவிட்டு,தனக்கு வர வேண்டிய ஊதியம் பற்றி முதலில் முடிவு செய்து கொண்டு,குழந்தையின் அருகில் சென்று,அதன் காதில் மெதுவாக ஏதோ சொன்னார்.குழந்தை உடனே கீழே இறங்கித்தான் தாயிடம் வந்து மரியாதையாக நின்று,''நம்ம வீட்டுக்குப் போகலாம் அம்மா,''என்றான்.அதிசயத்துடன் பெற்றோர்கள்,''என்ன மந்திரம் உபயோகித்தீர்கள்.இவ்வளவு விரைவில்நல்ல பிள்ளை ஆகிவிட்டானே!''என்று கேட்டனர்.மருத்துவர் தனஊதியத்தை முதலில் வாங்கிக் கொண்டு சொன்னார்,''உடனே நீ இறங்காவிட்டால்,நான் உன்னை அடிக்கிற அடியில் ஒரு வாரம் எழுந்திருக்க மாட்டாய்.உன்னை அடிக்க எனக்கு பணம் கிடைக்கிறது.அதனால் நான் சொல்வது விளையாட்டில்லை.உன்னை உறுதியாக அடிப்பேன்,என்று சொன்னேன்.''
கியூபாவில் புரட்சிக்கு பாடுபட்ட சே குவாரா ,அதன் பின் காங்கோவில் புரட்சிக்கு வித்திட முனைந்தார்.அப்போது அவர் எகிப்தின் அதிபர் நாசரை சந்தித்தார்.சே யின் முடிவினை அறிந்த நாசர் மிகப் பொறுமையுடன் அவரிடம் சொன்னார்,''மக்களைக் காப்பாற்ற,வழி காட்ட வந்த பல தீர்க்கதரிசிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியுமல்லவா?நீயும்,இன்னும் பெரிய தாடியும்,தீர்க்கதரிசி போன்ற ஆடை அணிந்து வந்தாலும் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.எங்களையும் ஏற்க மாட்டார்கள்.நம் நிறமே அவர்களுக்குப் பிடிக்காது.வெள்ளையர்களுக்கு கருப்பு நிறம் பிடிக்காது.இவர்களுக்கோ வேறு நிறத்தைக் கண்டாலே சந்தேகம்.வெறுப்பார்கள்.விலகிப்போவார்கள்.நம்ப மாட்டார்கள்.நீ இவர்களுக்காகப் போராடி அநியாயமாகக் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை.''இதைக்கேட்டு குவேரா சற்று ஏமாற்றம் அடைந்தார்.எதைக் கேட்டும் மாறாத அவர் நாசர் சொன்னதைக் கேட்டும் மனம் மாறவில்லை.
இரண்டு பாதிரியார்கள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாகச்சென்று கொண்டிருந்தனர்.ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை நிறுத்தி,''ஏன் இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள் விபத்து ஏற்படலாமல்லவா?மெதுவாகச் செல்லுங்கள் ,''என்று கூறினார்.ஒரு பாதிரியார் சொன்னார்,''அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.கடவுள் எங்களுடன் இருக்கிறார்.''உடனே போலீஸ் அதிகாரி சொன்னார்,''அப்படியானால் நான் உங்களை ஓவர்லோடு சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.''பாதிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை.ஏனென்று கேட்க,''உங்களுடன் கடவுளும் இருந்தால் ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்கிறதாகிறது.ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்வது குற்றம்,''என்றார் போலீஸ் அதிகாரி.
சாது ஒருவர் புத்தரைப் பார்க்க வந்தார்.அவர் புத்தரைப் பார்த்து,''உங்களைப் போல ஒரு புத்தரை நான் பார்த்ததில்லை.உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்த வேறொருவர் உலகில் இல்லை.''என்று புகழ்ந்தார்.புத்தர் புன்முறுவலுடன்,''நீங்கள் எத்தனை புத்தரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்?அவர்கள் என்னளவிற்கு இல்லை என்றீர்கள்.அவர்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள்?.''என்று கேட்டார்..சாதுவோ இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை.பதில் சொல்ல இயலாமல் தயங்கினார்.புத்தர் சிரித்துக் கொண்டே,''பரவாயில்லை,உங்களுக்குத்தான் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று சொன்னீர்கள் அல்லவா?என்னைப்பற்றியாவது சொல்லுங்கள்.நான் எப்படி வாழ்கிறேன்?''என்று கேட்டார்.அதற்கும் பதில் சொல்லத்தெரியாது அந்த சாது அமைதி காத்தார்.பின் அங்கிருந்து வெளியே சென்றார்.
தெரியாத விஷயத்தில் மௌனம் காப்பதுதான் சிறந்தது.
சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து விட்டால் என் புறாக்கள் எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் திறக்காமல் துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான் அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம் அதன் விளைவு தான் மன அழுத்தம்.
புத்தர் தன சீடர்களிடம்,''ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?''என்று கேட்டார்.ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்,மற்றொருவர் ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.புத்தர் புன் முறுவலுடன் சொன்னார்,''ஒரு மூச்சு விடும் நேரம்,'' சீடர்கள் வியப்படைந்தனர்.''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர்.''உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.''என்றார் புத்தர்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.அதை முழுமையாக வாழ வேண்டும்.



0