சோமு தன் பசுவை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒருவன் அழகாகப் பாடிக் கொண்டு வந்தான்.அந்த பாட்டின் இனிமை சோமுவைக் கவர்ந்தது.எனவே அவன் வந்தவனிடம் சென்று,''அய்யா,எனக்கு இந்தப் பாட்டை ராகத்துடன் சொல்லிக் கொடுக்க முடியுமா?''என்று கேட்டான்.அவன் ,''அதற்கு என்ன சன்மானம் கொடுப்பாய்?''என்று கேட்க,சோமுவும் அவன் தன்னிடம் இருக்குமெதைக் கேட்டாலும் தருவதாகச் சொன்னான்.அவனும் பசுவைக் கொடுத்தால் பாடலை சொல்லித் தருவதாகக் கூறினான்.அந்தப் பாட்டின் மீது இருந்த லயிப்பின் காரணமாக சோமு உடனே அதற்கு ஒத்துக் கொண்டான்.அவனும் பாடலை சொல்லிக் கொடுக்க சோமுவும் அதை விரும்பி கற்றுக் கொண்டான்.பின் தன் பசுவை அவனிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அந்தப் பாட்டை பாடிக் கொண்டே தன் வீடு நோக்கி சென்றான். போகும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்ததும் ஒரு மரத்தடியில் சிறிது இளைப்பாறினான்.அப்போது அவன் இதுவரை பாடிக் கொண்டிருந்த பாடலை யாரோ பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.பாடலை அவனுக்கு சொல்லிக் கொடுத்தவன்தான் பாடிக் கொண்டிருந்தான்.உடனே கோபத்துடனவனிடம்,''இதோ பாருங்கள்,இந்தப் பாடலை நீங்கள் சொல்லிக் கொடுக்குமுன் பாடல் உங்களிடம் இருந்தது.பசு என்னிடம் இருந்தது.இப்போது என்னிடம் பசு இல்லை.பாடல் மட்டும்தான் இருக்கிறது.ஆனால் உங்களிடம் பசுவும் இருக்கிறது. பாடலும் உங்களிடம் இருக்கிறது.இது என்ன நியாயம்?''என்று கேட்டான்.இதற்கு பதில் சொல்லத்தெரியாத அந்த மனிதன் சிரித்துக் கொண்டே பசுவை சோமுவிடமே கொடுத்து விட்டுச் சென்றான்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,''நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,''ஐயோ கடவுளே!பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே!என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,''என்று அழுது வேண்டினான்.கடவுள் சொன்னார்,''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''.அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,கடவுள் சொன்னார்,''இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்.''
ஜென் குரு பொகுஜு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான்.அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது.குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார்.அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித்தான்.குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.அவனைப் பிடித்து,''இதோ உன் கட்டை,''என்று கூறி அவன் கையில் கட்டையைத் திரும்பக் கொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.அங்கிருந்த மக்கள் குருவிடம்,''இவன் ஒரு அயோக்கியன்.இவனைப் பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம் திரும்பக் கொடுக்கிறீர்களே!''என்று கேட்டனர்.குரு கேட்டார் ,''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய்வோம்?என்ன செய்ய முடியும்?''மக்கள் அவர் கூற்றை ஏற்காமல்,''கிளை காய்ந்து போனது.அதற்கு உயிர் இல்லை.அதற்கு அறிவுரை கூற முடியாது.அதற்கு தண்டனையும் கொடுக்க முடியாது.அதற்கு மனம் என்று ஒன்று இல்லை.எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.குரு ,''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான்.என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங்கவோ,தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ,தண்டனை கொடுக்கவோ வேண்டும்?''என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார்.
ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர்.அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார்.கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறினர்.குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.குரு மீண்டும் அவர்களிடம் பேசினார்,''உங்கள் அனைவருக்கும் உலகில் நல்லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை.இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது எது,கெட்டது எது என்று நான் தான் சொல்லித்தர வேண்டும்.எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.''என்றார்.சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''
ஜென் துறவி ஒருவர் தன் வீட்டிற்கு வந்தபோது ஒரு திருடன் இருப்பதைக் கண்டார்.அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லாததால் அவன் திகைத்து நின்றான்.துறவி அவனிடம் சொன்னார்,''ஐயோ பாவம்,என்னை நம்பி நீ எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாயோ!இங்கு ஒன்றும் இல்லையே?ஆனால் நீ வெறும் கையோடு திரும்பப் போகக் கூடாது.,''அவர் தன் உடைகளைக் களைந்து அவனிடம் கொடுத்து எடுத்துப் போகச் சொன்னார்.பின்னர் அவர் சொன்னார்,''அடுத்த முறை வரும்போது முன்கூட்டி சொல்லிவிட்டு வா.நானும் உனக்காக ஏதாவது தயார் செய்து வைப்பேன்.நீயும் ஏமாந்து போக மாட்டாய்.''இருந்த உடைகளைக் கொடுத்துவிட்டு குளிரில் நடுங்கும் துறவியைக் கண்டு என்ன செய்வது என்று அறியாது நின்ற திருடன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றான்.அவன் சென்றபின் படுத்த துறவி வானத்தைப் பார்த்து,''என்னால் மட்டும் முடிந்தால் இந்த நிலவை எடுத்து அவனுக்குக் கொடுத்திருப்பேனே!''
**********
ஒரு இளம் துறவி தன் ஊருக்கு செல்கையில் இடையில் இருந்த ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததால் அக்கரைக்கு செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்க் கரையில் ஒரு ஜென் துறவி நிற்பதைப் பார்த்து எதிர்க் கரைக்கு வருவதற்கான வழி என்னவெனக் கேட்டான்.துறவி சொன்னார்,''இப்போது நீ எதிர்க் கரையில்தானே நிற்கிறாய்?''
**********
ஜென் மாஸ்டர் இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான ,அபூர்வமான தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.உங்களின் தேநீர்க் கோப்பைக்கு காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''



0