பலர் அன்றாட வாழ்வில் முக்கிய காரியங்களை திதி பார்த்து செய்கின்றனர்.திதியின் பேர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள் அவற்றின் பொருள் தெரியுமா?அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இருந்து
ஒவ்வொரு நாளும் அவை மாறுகின்றன.
பிரதமை=முதன்மை,அதாவது முதல் நாள்.(நாட்டின் முதல்வன் பிரதமர்)
துவிதியை.துவி என்றால் இரண்டு.(சைக்கிளைதுவிச்சக்கரவண்டி என்பர்)
திரிதியை.இதற்கு மூன்றாவது என்று பொருள்.
சதுர்த்தி.சதுர் என்றால் நான்கு.(சதுரம் என்பது நான்கு பக்கங்களை உடையது.)
பஞ்சமி.பாஞ்ச் என்றால் ஐந்து.
சஷ்டி என்றால் ஆறு.
சப்தமி.சப்த என்றால் ஏழு.(சப்த கன்னியர் என்று ஏழு கன்னிமார் தெய்வங்களைக் குறிப்பிடுவர்.)
அஷ்டமி.அஷ்ட என்றால் எட்டு.(உடலில் எட்டு கோணல்கள் இருந்தால் அஷ்ட கோணல் என்பர்.)
நவமி.நவம் என்றால் ஒன்பது.(நவராத்திரி.)
தசமி.தசம் என்றால் பத்து.(தசாவதாரம் என்பது பத்து அவதாரம்)
ஏகாதசி.ஏகம் +தசம்.அதாவது ஒன்று+பத்து=பதினொன்று.
துவாதசி.துவம்+தசம்.அதாவது இரண்டு+பத்து=பன்னிரண்டு.
திரயோதசி.திரியோ+தசம்.அதாவது மூன்று+பத்து.
சதுர்த்தசி.சதுர் +தசம்.அதாவது நான்கு+பத்து.
பதினைந்தாவது நாள் அமாவாசை அல்லது பவுர்ணமி.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
விமரிசனங்கள் பல வகையானவை.அவற்றை எப்படி எதிர்கொள்வது?
காகித அம்பு:
சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி,மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.
கால்பந்து:
சில விமரிசனங்கள்,விளையாட்டாக,உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.
கண்ணாடி:
சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
கத்தி:
சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும்.நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பதுபோல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள்.விலகி விடுங்கள்.
வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதில்லை.
******
நாம் வீழ்ச்சி அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல நண்பர்கள் வருவார்கள்.நாம் உயர்வு அடைந்து விட்டாலோ,தங்களுடைய உதவியால்தான் என்று பறை அடிப்பார்கள்.
******
எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும்.கெட்டவர்களுக்கு அது கிரீடம். நல்லவருக்கு அது நஞ்சு.
******
வயிற்றெரிச்சல் தனது வன்ம விஷத்தையே உறிஞ்சிக் குடித்துத் தனக்குத்தானே நஞ்சிட்டு நாசப் படுத்திக் கொள்ளும்.
******
வழக்கம் என்பது வன்மையான,வஞ்சகமான ஒரு வாத்தியார்.அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தின் காலடியை நம் மீது ஊன்றி விடுவார்.
******
நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம்,பயன்,நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
******
தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்ல முயற்சி செய்யக் கூடாது.
******
பேராசைக்குக் கூட நிறைய சொத்து உண்டு.ஆனால் பொறாமைக்கோ, வேதனை விரக்தியைத் தவிர வேறு எந்த லாபமும் இல்லை.
******
புகழை நோக்கி ஓடாதீர்கள்;புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.
******
என்னிடம் உள்ள மிக சிறந்த நற்பண்பில் கூட ஏதோ கொஞ்சம் பாவத்தின் சாயம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்.
******
சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும்.பெருந்துன்பங்கள் ஊமையாக்கும்.
******
தேவை என்பது ஒரு மூர்க்கமான வாத்தியாரம்மா.
******
தலைக் கனம் என்பது இரண்டு வகை.தன்னைப் பெரிதாக நினைப்பது.முதல் வகை.தலைக்கனமுள்ள பிறரைத் தாழ்வாக நினைப்பது இரண்டாம் வகை.
******
செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்தைப் பொறுத்தது.
******
சட்டங்கள் இல்லாவிடில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவோம்.
******
சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம்,கர்வம்,பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
******
படைக்கலங்களின் முழக்கம்,சட்டத்தின் குரலை மூழ்கடித்து விடுகிறது.
******
ஆசையும்,இன்பம் துய்த்தலுமே நம்மை ஆத்திரக்காரர்களாக உருமாற்றுகின்றன.
******
மூடனுக்குக் கல்வியறிவின் மீது கோபம்;குடிகாரனுக்கு யோக்கியன் மீது ஆத்திரம்;ஒழுக்க சீலனுக்கு அயோக்கியத்தனம் செய்யச் சொல்வதே தண்டனை.தேகப் பயிற்சியே சோம்பேறிக்குத் தண்டனை.
******
மக்கள் தங்கள் ஆசைகளுக்கும்,விசமத்திற்கும் வன்செயலுக்கும் உற்சாகம் என்னும் பெயரை சூட்டுகிறார்கள்.
******
நமது மூளையை மற்றவர்களின் மூளையோடு தேத்தப் பள பளப்ப்பாக்கிக் கொள்வது நல்லது.
******
நல்ல சுபாவமும்,நேர்மைப் பயிற்சியும் இல்லாதவனுக்கு மற்ற அறிவனைத்தும் தொந்தரவுதான்.
******
பெண்ணொருத்தி தன் அழகை அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த வித சித்திரவதையையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பாள்.
******
ஒரே மாதிரியான இரு தலைமுடியோ,இரு தானியங்களோ,இரு கருத்துக்களோ,இந்த உலகில் இருந்ததில்லை.வேறுபாடு தான் இந்த உலகின் பொதுவான பண்பு.
******
மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சில நேரங்களில் வெற்றி பெறுவதுண்டு.
******
தடைகளை நீக்க வன்முறை நிரந்தரமாக்கப் படும்போது பேரழிவே எஞ்சியிருக்கும்.
******
தலைமையினைக் கேள்வி கேட்க முடியாத செயல்பாடுகள் உண்மைக்குப்
புறம்பானவைகளாகவே இருக்கும்.
******
ஒரு பொருளைப் பார்ப்பதால் மட்டும் முக்கியத்துவம் ஏற்படாது.எப்படிப் பார்க்கிறோம் என்பதனால்தான் ஏற்படும்.
******
இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும் வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது.
இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும்
செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.
*யானைப் பாகனுக்கு மாவுத்தன் என்றும்,குதிரைப் பாகனுக்கு ராவுத்தன் என்றும் பெயர்.மயிலில் குதிரை போல ஏறிச் செல்வதால்,அருணகிரினாதர் ''மயிலேறிய ராவுத்தனே,''என்று முருகனைப் பாடியுள்ளார்.
*அசஹாய சூரன் என்றால் துணை வேண்டா வீரன்என்று பொருள்.
*பூஜ்யத்திற்குத் தமிழில் 'பாழ்' என்று சொல்லப்படுகிறது.
*தம்மிடத்தில் உள்ளவற்றை விட முடியாமல் பற்றிக் கொள்வது பற்று.
பிறரிடத்தில் உள்ளவையும்தமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவது அவா.
*'தா' என்பது கேடு,குற்றம் என்னும் பொருளுடையது.'தாவிலை'என்றால் குற்றம் இல்லை என்று பொருள்.இதுதான் மருவி தேவலை என்று ஆகிவிட்டது.
*அசூயை என்பது பிறர் நலம் கண்டு பொறாமைப் படுவது.
ஈரிசை என்பது பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.
*கண்டம் என்றால் பிரிவு.அகண்டம் என்றால் பிரிவில்லாதது.காவேரி நதியிலிருந்து கிளை நதிகள் பிரிவதற்கு முன் உள்ள காவேரியே அகண்ட காவேரி.அகன்ற காவேரி என்பது பிழை.
*யோஜனை என்பது நாலு காத தூரம்;கிட்டத்தட்ட நாற்பது மைல்.
*மைனாவிற்குப் பழைய பெயர் நாகணவாய்ப்புள்.
*ஸ்ரீ காளி புரம் என்பதே மருவி சீகாழி ஆகிப் பின் சீர்காழி ஆயிற்று.
*கருனை என்பதற்குப் பொரியல் என்று பொருள்.எனவே கருனைக் கிழங்கு
என்று சொல்வதே சரி.
*கோஜலம் என்பது பசுவின் சிறுநீர்.கோமயம் என்பது பசுவின் சாணம்.
*சொக்கம் என்றால் அழகு.சொக்கத் தங்கம் என்பது கலப்பில்லாதது.சொக்கன் என்றால் அழகன்.
*அரசன் மனைவி,குருவின் மனைவி,அண்ணனின் மனைவி,மாமியார்,தாயார் ஆகியோரை ஐவகைத்தாயார் என்பர்.
*புத்தருடைய விக்ரகம் உள்ள கோவிலுக்கு சைத்தியம் என்று பெயர்.
*கொல்லாமை,பொய்யாமை,கள்ளுண்ணாமை,காமமின்மை,இரவாமை என்ற ஐந்தை பஞ்சசீலம் என்பர்.
*பாரத யுத்தத்தின் முடிவில் எஞ்சியவர் பத்துப்பேர்தான்.அவர்கள்:பஞ்ச பாண்டவர் ஐவர்,அசுவத்தாமா,கிருபர்,கிருதவர்மா,சாத்தகி,கிருஷ்ணன்.
*பழந் தமிழகத்தில் ஒரு வீரன், தான் கொன்ற புலியின் பற்களைக் கோர்த்து தனது காதலிக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்தது.அந்த வழக்கமே பின்னர் தாலி கட்டும் வழக்கமாக மாறியது.
*காமம்,கொலை,கள்ளுண்டல்,பொய்,களவு இவை ஐந்தும் பஞ்சமாபாதகங்கள்.
*சரம் என்றால் நாணல்.வனம் என்றால் காடு .நாணல் மிகுந்த காடு சரவணம்.அங்கு உள்ள பொய்கை சரவணப் பொய்கை.
*இரண்டு கைகள்,இரண்டு கால்கள்,வயிறு,இரண்டு கன்னம்,முகம் என்னும் எட்டு அங்கங்கள் நிலத்தில் படும்படி வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம்.இரண்டு கைகள்,இரண்டு முழங்கால்கள்,முகம் என்னும் ஐந்தும் பூமியில் படும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம்.
*'காசி'என்றால் பிரகாசிப்பது என்று பொருள்.
*சூர்ப்பம் என்பது முறத்திற்குப் பெயர்.முறம் போன்ற நகங்களை உடையவள் சூர்ப்பனகை.
*'ரசகதளி'என்ற பேரே ரஸ்தாளி என்று மருவியது.
*'ரூப்யம்'என்றால் வெள்ளி என்று பொருள்.முன்னர் வெள்ளியினால் செய்யப் பட்டதால் நாணயத்திற்கு ரூபாய் என்று பெயர் வந்தது.
நாம் அன்றாட வாழ்வில் புரியாமல் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு அறிஞர் கி.வா. ஜெகநாதன் எழுதிய விடைகள் ஆயிரம் என்ற நூலில் விடைகள் இருக்கின்றன. அவற்றில் சில:
*அரிக்கு இல்லமாகிய ஊர்தான் அரியிலூர்.அதுவே மருவி அரியலூர் ஆகிற்று.
*சீதை அசோக வனத்தில் இருந்த காலம் பத்து மாதங்கள்.
*பாவை என்பது பொம்மையைக் குறிக்கும்.பொம்மை போல வண்ணங்களுடன் அழகாக இருப்பதால் பெண்களைப் பாவை என்கின்றனர். பூவை என்பது மைனாவிற்குப் பெயர்.அதன் பேச்சைப் போல இனிமையாகப் பேசுவதால் மங்கையரை பூவை என்று அழைக்கின்றனர்.
*கர்ணனுடைய இயற்பெயர் விஷுஷேணன் .
*பொய்கை என்பது இயற்கையான நீர்நிலை.தடாகம் என்பது மனிதர் உருவாக்கிய நீர்நிலை.
*தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு.அகத்தில் நட்பின்றி,புறத்தில் நண்பர்போல நடிப்பவரின் நட்பு கூடா நட்பு.
*மனிதன் உண்பது உணவு.விலங்குகள் உண்பது இரை .
*ஜல்பம்,விதண்டை என்று வாதங்களில் இரு வகை உண்டு.வாதப் பிரதிவாதிகள் தமது குணங்களையும் எதிரியின் குற்றங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம்.தமது குற்றம் மறைத்து எதிரியைக் கண்டிப்பது விதண்டை.
*ஒரு கோவிலில் கர்ப்பக் கிரகத்துக்கு மேலே உள்ளதை விமானம் என்றும்,மற்றவற்றைக் கோபுரம் என்றும் கூறுவது மரபு.
*'அனுத்தமா' என்பதற்கு 'தனக்கு மேற்பட்டவர் இல்லாதவள்' என்று பொருள்.
அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது.குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு பிடித்துக் கொடுத்தால்தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது.ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் ஒரு நகை
கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார்.அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது.ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றான்.தாமதத்திற்குக் காரணமும் கேட்டான்.ஞானி சொன்னார்,''நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில் எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை.மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால் நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள்.எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை.நகையை அப்படியே வைத்துக் கொண்டால் அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள்.எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை.அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன். ''மன்னன், ''இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?''என்று கேட்டான்.அதற்கு ஞானி,''தர்ம வழியில் நடக்கும் ஒருவனை தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை,''என்று சொல்லியவாறு கம்பீரமாக அங்கிருந்து நடந்தார்.மன்னன் வணங்கி விடை கொடுத்தான்.
பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையா?''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா?''என்று கேட்டான்.அனைவரும் தலை குனிந்தனர்.இப்போது சிவன் பார்வதியிடம் சொன்னார், ''எல்லோரும்தான் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் அவன் ஒருவன் தானே அதை நம்பினான்.நம்பியவருக்கு மட்டுமே கைலாயத்தில் இடம் உண்டு.''பார்வதியின் சந்தேகம் நீங்கியது.
துரோணர் தனது சீடர்களுக்கு,மரத்திலிருந்த ஒரு பறவையின் கண்ணைக் குறிபார்த்துஅம்பு எய்யக் கூறினார்.பின் ஒவ்வொரு சீடரையும் அவனுக்கு என்ன தெரிகிறது என்று கேட்க,ஒருவர் மரம் தெரிகிறது என்று சொல்ல அடுத்தவர் கிளை தெரிகிறது என்று சொல்ல அர்ஜுனன் மட்டும் எனக்கு பறவையின் கண் மட்டும் தான் தெரிகிறது என்று சொல்லி பறவையின் கண்ணில் அடித்து வீழ்த்தியது அனைவரும் அறிந்த கதை.அந்த சம்பவம் நடக்கும்போது கர்ணனின் நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சியை ஒளிந்திருந்து கவனித்துவிட்டுப் பின் கர்ணனிடம் நடந்ததை சொன்னான்.பின் அவன் கர்ணனிடம்,''வில் பயிற்சியில் நீ அர்ஜுனனுக்குக் குறைந்தவனா,என்ன?நீயும் முயற்சி செய்.அதோ,மரத்தில் இருக்கும் அந்தப் பறவையின் கண்ணை அடித்து வீழ்த்து,பார்ப்போம்,''என்றான்.கர்ணனும் சம்மதித்து வில்லைக் கையில்
எடுத்தான்.நண்பனுக்கு துரோணர் கேட்ட கேள்வி ஞாபகம் வரவே,அவன் கர்ணனிடம்,''கர்ணா,உனக்கு மரத்தில் என்ன தெரிகிறது?''என்று கேட்டான். கர்ணன்,''எனக்கு ஒன்றும் தெரியவில்லை.''என்றான்.நண்பனுக்கு ஏமாற்றம்.கண் மட்டுமே தெரிகிறது என்று அவன் சொல்வான் என்று எதிர் பார்த்ததால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.கர்ணனும் அதே பதிலை சொன்னான்.அடுத்த நொடியே கர்ணனின் வில்லிலிருந்து இரண்டு அம்புகள் பறந்தன.பறவை அடிபட்டுக் கீழே விழுந்தது.நண்பன் பறவையைப் பார்த்தான்.என்ன அதிசயம்!பறவையின் இரண்டு கண்களுமே அம்பால் தாக்கப் பட்டிருந்தன.நண்பனுக்கோ ஒரே ஆச்சரியம்.''இது எப்படி முடிந்தது?'' என்று கேட்க,கர்ணன் சொன்னான்,''எனக்கு மரத்தில் ஏதும் தெரியவில்லை, ஏனெனில் நான் அந்தப் பறவையோடு பறவையாக ஐக்கியமாகி விட்டேன். அதனால் ஒரு அம்பு கொண்டு ஒரு கண்ணை தாக்கிவிட்டு அந்தப் பறவை திரும்பிக் கீழே விழுவதைக் கணித்து அடுத்த அம்பினால் அடுத்த கண்ணையும் எய்தேன்,''என்றான்.நண்பன் கர்ணனைக் கட்டிப் பிடித்து,''இவ்வளவு திறமை வாய்ந்த உனக்கு அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லையே!''என்று கலங்கினான்.
சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டும் அல்ல,இடத்தோடும் இழைந்து இருக்கிறது.'
''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,''என்று சம்பந்தர் பாடும்போது காதல் என்பது பக்தி.
''காதல் திருமகன்,''என்று ராமனை தசரதன் குறித்தபோது காதல் என்பது அன்பு.
''ஆதலினால் காதல் செய்வீர்,''என்று பாரதி பாடியபோது,காதல் என்பது ஆண்,பெண் நட்பு.
''காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த,''என்று பாரதிதாசன் பாடிய போது,காதல் என்பது உடல் உறவு.
''முதியோர் காதல்''என்று எழுதிய போது காதல் என்பது உடல் கடந்த உணர்வு நிலை.
காதல் என்பது கடவுள் மாதிரி-இழுத்த இழுப்புக்கு வரும்;இஷ்டத்துக்குப் பொருள் கொள்ளலாம்.
===கவிப் பேரரசு வைரமுத்து.
மூதறிஞர் ராஜாஜி ஒரு முறை சேலம் நகர் மன்றத் தலைவராய் இருந்தார்.ஒரு நகர் மன்றக் கூட்டத்தில்,ஒரு உறுப்பினர் சேலம் சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.அது சம்பந்தமாக விவாதம் நடந்தது.ஒரு சிலர் வேண்டும் என்றும் ஒரு சிலர் வேண்டாம் என்றும் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.நகராட்சியில் நிதிநிலைமை சரியில்லாதிருந்தது.அதைக் கருத்தில் கொண்டாலும் சுற்று சுவர் உடனைதேவையில்லை என்பது ராஜாஜியின் எண்ணம்.நிதி நிலை பற்றி வெளியில் சொல்வது சரியாய் இருக்காது என்று அவர் கருதினார்.விவாதம் மிக சூடான நிலையில் அதுவரை அமைதியாய் இருந்த ராஜாஜி தலையிட்டார்.
அவர் சொன்னார்,''சுடுகாட்டுக்கு சுற்று சுவர் தேவையில்லை.''என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பதை அறிய அனைவரும் ஆவல் கொண்டனர்.ராஜாஜி தொடர்ந்தார்,''சுடு காட்டுக்கு உள்ளே சென்றவன் வெளியே வரமாட்டான்.வெளியே இருப்பவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்.அப்படி இருக்க சுற்று சுவர் எதற்கு?''அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.நிதிநிலை பற்றி அறிந்தவர்கள் அந்த சூழலை ராஜாஜி சரி செய்தசாமர்த்தியத்தை எண்ணி வியந்தனர்.
புலவர் புகழேந்தி சோழ மன்னனின் தமிழ் அவையில் தான் எழுதிய நள
வெண்பாவை அரங்கேற்ற ஆரம்பித்தார்.பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி,''மல்லிகையே வெண்சங்கா வண்டூத,''என்று பாடினார்.அதன் பொருள்,''மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி செய்த போது, '' என்பதாகும்.சோழ மன்னனின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தனும் உண்டு.அவருக்கும்,புகழேந்திக்கும் ஏழாம் பொருத்தம்.புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தார். புகழேந்தி மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும் வெகுண்டு எழுந்தார்,ஒட்டக்கூத்தர். அவர் கூறினார்,''சங்கு ஊதுபவன் சங்கின் பின் புறம் இருந்து ஊதுவதுதான் முறை.மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது.புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல.வெறும்பா,''சபையில் கடுமையான அமைதி நிலவியது. புகழேந்தி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.புகழேந்தி சொன்னார், ''ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான்.ஆனால் உமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையே!கள் குடிப்பவனுக்கு தலை எது கால் எது என்று தெரியுமா?கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?''சபையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.
ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கவியரசர் கண்ணதாசன் காரில் போய்க் கொண்டிருந்தார்.அவர் பொதுவாக தாமதமாய்த்தான் விழாக்களில் கலந்து கொள்வார்.அன்றும் விழா ஆரம்பிக்கும் தருணம் வந்து விட்டது. ஓட்டுனர் காரை அதி விரைவாக ஓட்டிச் செல்கிறார்.அந்த வேகத்தில் கார் கூட அதிர ஆரம்பிக்கிறது.கவியரசருக்கு வயிறே கலங்குகிறது.உடனே ஓட்டுனரிடம்,''கொஞ்சம் மெதுவாகப் போகலாமே,''என்றார்.ஆனால் தாமதம் ஆகிறது என்பதனை உணர்ந்த ஓட்டுனர் வேகத்தைக் குறைக்காமலேயே
ஓட்டினார்.கண்ணதாசன் சற்று கோபமாக,''மெதுவாகப் போ என்று சொன்னேனே?''என்றார்.ஓட்டுநரோ,''ஐயா,இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்குப் போய் சேர முடியும் ,''என்றார்.கவிஞர்,''நான் சொல்வதைக் கேள்.ஒரு கால் மணி நேரம் தாமதமாகப் போனால் கூடப் பரவாயில்லை.பத்து வருடம் முன்னாலேயே போய் விடக் கூடாது,''என்றார் சிரிக்காமலேயே. ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!
கவிஞர் வைரமுத்து எழுதிய ''பாற்கடல்'' என்னும் நூலிலிருந்து:
கல்மேல் உளி விழுவது போன்ற தாக்குதலும்,
விதை மேல் மழை விழுவது போன்ற பாராட்டும்
மனிதனை உயர்த்தும்.
******
அன்பு என்பது கூட ஒரு வகை ஆதிக்கம்தான்.
******
நடை கற்றுத் தருவதே பெற்றோர் கடமை;
சாலைகள் அவரவர் உரிமை.
******
நிலா என்பது வளர்ந்த குழந்தை.
குழந்தை என்பது வளரும் பிறை.
வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு.
வளரும் பிறைக்குக் களங்கம் இல்லை.
******
பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சிகள்.
சிலவற்றைப் பிடித்துக் கொள்கிறோம்.
பல பறந்து விடுகின்றன.
******
அறிவைப் பொருளாக்குதல் பலம்.
பொருள் தேடும் அறிவு மட்டும் போதும் என்பது பலவீனம்.
******
நூறாண்டு வாழப்போகும் மனிதன் அழுது கொண்டே பிறக்கிறான்.
சில நாட்கள் வாழப்போகும் பூ சிரித்துக் கொண்டே மலர்கிறது.
******
பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு.
******
நின்ற இடத்திலேயே நிற்க வேண்டுமா?
ஓடிக் கொண்டே இரு.
******
சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாய் இருப்பது ஒழுக்கம்.
கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.
******
0