உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்.பூமியில் கால் படாமல் வானில் ஆகாய விமானத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தால் நம் கீழே உலகம் நம்மை விட்டுச் சுற்றுமா?
சுற்றாது.பூமிக்கு மேலே சில கிலோமீட்டர் வரை காற்றழுத்த மண்டலம் உண்டு.அந்த மண்டலமும் பூமியோடு சேர்ந்து சுற்றுகிறது.எனவே காற்றழுத்த மண்டலத்தில் இருப்பவர்களும் (பூமியில் கால் படாமல் இருந்தாலும)பூமியோடு சேர்ந்து சுற்றத் தான் செய்வர்.
**********
நம் முகத்தில் யாராவது பளாரென்று அடித்தால் நாம் நட்சத்திரங்கள் பறப்பதாக உணருகிறோம் அல்லவா?சிலர் இதைப் பூச்சி பறப்பது போல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இது ஏன்?
கண் நரம்பு ,பொதுவாகக் கண்ணில் விழும் ஒளிக் குறிகளைத் தான் மூளைக்கு எடுத்துச் செல்லும்.ஆனால் வலி போன்ற பாதிப்புகளை,அந்த நரம்பு மூளைக்கு உணர்த்தும் போதும்,மூளை,அதை ஒளிக் குறிப்பாகவே,பழக்கம் காரணமாக எடுத்துக் கொள்கிறது.அதனால் தான் நம் உடலில் வலியோ,சூடோ ஏற்படும் போது நாம் பூச்சிகள் அல்லது நட்சத்திரங்கள் பறப்பதாக உணர்கிறோம்.
**********
பனிக் கட்டியைப் பார்த்தால் அதைச் சுற்றிப் புகை வருகிறதே?ஏன்?எப்படி?
அந்தப் புகை பனிக் கட்டியிலிருந்து வருவதில்லை. பனிக்கட்டியைச் சுற்றி காற்றில் நீராவி இருக்கிறது.ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.பனிக்கட்டியின் குளிர்ச்சி நீராவியைக் குளிர்வித்து மிக நுண்ணிய நீர்த் திவலையாக மாற்றுகிறது.அது தான் புகை மாதிரி தெரிகிறது.இன்னும் சொல்லப் போனால் அதுவும் ஒரு வகை மேகம் தான்.
**********
நெற்றிப் பொட்டில் அடித்தால் மரணம் சம்பவிப்பது ஏன்?
நெற்றிப்பொட்டுப் பகுதி மற்ற பகுதிகளை விட வலிமை குறைந்தது.அடியால் அது பாதிக்கப் படும் போது தலைக்குள் மண்டையோடு முழுவதும் வியாபித்திருக்கும் மூளை அதிர்கிறது.மரணம் அளவுக்கு அப்பதிப்பு போகிறது.
**********
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
தீமையில் முடிவடைவது;--அகந்தை.
மகிழ்வைத் தருவது ;--நட்பு
மரணத்தைக் காட்டிலும் கொடியது;--வஞ்சகம்.
விலை மதிப்பிட முடியாதது;--காலத்தே செய்த உதவி.
அலட்சியம் செய்யப் பட வேண்டியவை ;--தீயோர்,மாற்றானின் மனைவி,
பிறர் உடமை.
வாழ்கின்ற உயிர்களைக் கட்டுப் படுத்துபவர்கள் ;--
உண்மையே பேசுபவர்கள்.
இனிமையாகப் பேசுபவர்கள்.
அடக்கத்துடன்இருப்பவர்கள்.
இடம் அறிந்து பேசத் தெரியாதவன் ;--ஊமை
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் ;--உலகை வெல்பவன்.
கற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.;--குருடன்.
நல்லவற்றையே கேட்காதவன் ;--செவிடன்.
கேட்காமல் கொடுப்பது ;--கொடை
தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன் ;--நண்பன்.
பேச்சுக்கு அழகு தருவது ;--சத்தியம்.
மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது ;--நல்ல நடத்தை.
மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய பணிகள் ;--
நலிந்தோர் பால் இரக்கம் கொள்வது.
நல்ல நடத்தையுள்ள நண்பர்களிடம் பழகுவது.
---ஆதி சங்கரர்.
(ப்ரச்னோத்ர ரத்னா மாலிகா)
தமிழில் 'கை'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!
'கை'கொடுத்தான்.
'கை' கூடி வர வேண்டும்.
'கை' ரொம்ப தாராளம் அவனுக்கு.
கையைக் கடித்து விட்டது.
கையோடு கையாய்
உள்ளங்கை நெல்லிக்கனி.
கை சுத்தமில்லைஅவனுக்கு.
அவனைக் கை கழுவித் தொலை.
கையால் ஆகாதவன்.
கை விட்டு விட்டான்.
எச்சிற்கையால் காக்காய் கூட விரட்ட மாட்டான்.
கையாடல்செய்து விட்டான்.
கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.
ஒரு கை குறையுது.
அடிக்கிற கை தான் அணைக்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல்....
கை மேல் பலன்.
கை நாட்டுப் பேர்வழி.
கையை நனச்சிட்டு வந்தான்.
கையைப் பிடித்தான்.
கை வைக்காதே.
ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.
கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.
ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.
கி.வா.ஜ வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந்தாள்.ஆள் கொஞ்சம் பருமன்.ஒரு நாள் கி.வா.ஜ.,ஒரு நண்பருடன் தரையில் அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.''என்ன இது?விசாலம் பெருக்க வேண்டும்.நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!''என்றார் கி.வா.ஜ.வின் மனைவி.''விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?''என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.
தன எதிரியை நன்றாக உதைக்க எண்ணி ஒருவன் குத்துச்சண்டை பழகவிரும்பினான்.முதல் நாள் பாடம் படிக்குமுன் அவன் உடம்பில் ஏகப்பட்ட குத்துக்கள் விழுந்தன.அடுத்த நாள் அவன் குருவிடம் சொன்னான்,''எனது எதிரியை நையப் புடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்.இப்போது அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன்.நாளை என் எதிரியை இங்கே அனுப்புகிறேன்.அவனுக்கு மீதியை நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்.''
நெப்போலியன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி பேசும் போது,''ரஷ்யாவில் நாங்கள் சண்டை போடுவது என்றால் அது கௌரவத்திற்காகவே,''அடுத்துப் பேசிய நெப்போலியன்,''அது உண்மை தான் அம்மணி!இல்லாத ஒன்றிற்காகத்தானே எல்லோரும் சண்டையிடுவார்கள்,''என்று சொன்னாராம்.
நீங்கள் யார்?
சார்லஸ் லாம்ப் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தார்.கூட்டத்தினர்,''ஷ்ஷ்ஷ்.....'' என்று ஓசைப் படுத்தினார்கள்.லாம்ப் கூட்டத்தைப் பார்த்து,''பாம்பு,வாத்து,முட்டாள் மூவரும் தான் இம்மாதிரி ஒலி எழுப்புவது உண்டு.மேடைக்கு வந்து நீங்கள் யார் என்பதை அறிமுகப் படுத்திக் கொள்கிறீர்களா?என்றார்.
ஒரு ஊரில் ஒரு கெட்டிக்கார சோம்பேறி இருந்தான்.அவன் எந்த வேலையும் தான் செய்யாது,மற்றவர்கள் மூலமே செய்து கொள்வான்.
ஒரு சமயம் அவன் தன தோட்டத்தில் ஒரு புதிய கிணறு தோண்ட விரும்பினான்.சில அடி தூரம் அவன் தானே தோண்டி விட்டு மேலே ஏறி வந்து தன வேட்டியையும் முண்டாசையும் அவிழ்த்துப் பள்ளத்தருகே வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
அவன் போன பின் அந்தப் பக்கம் வந்த கிராம மக்கள் பாதி தோண்டப்பட்ட கிணற்றோரம் அவன் துணிகளைப் பார்த்து விட்டு உள்ளே எட்டிப் பார்த்து ஒருவரும் இல்லாததால் அவனை மண் சரிந்து மூடி விட்டது என்றெண்ணி எல்லோரும் கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.தண்ணீர் தென்படும் வரை தோண்டியும் உடல் கிடைக்காததால் எல்லோரும் வீடு திரும்பினர். சிரமப்படாமல் தன கிணறு முழுக்கத் தொண்டப்பட்டதைக் கண்டு அந்தக் கெட்டிக்காரச் சோம்பேறி மகிழ்ச்சி அடைந்தான்.
ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.
கி.வா.ஜ.வும் அவர் நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர்.வழியில் கார் நின்று விட்டது.;;சரி,இறங்கித் தள்ளுங்கள்,''என்றார் ஓட்டுனர் கி.வா.ஜ.வும் இறங்கித் தள்ளச் சென்ற போது மரியாதை காரணமாக ''நீங்கள் சும்மா இருங்கள்,''என்றார் காரின் சொந்தக்காரர்.கி.வா.ஜ.,கேட்டார்,''ஏன்,நான் தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா?''
தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் --மடல்
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் --கீரை
ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.''கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.''அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?'என்று கேட்டார்.அவனோ,''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,''என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான். புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,''என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.உடன் பதில் வந்தது.''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.''
2519 ஒரு விந்தையான எண்
இதை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும்.
இதை 8 ஆல் வகுத்தால் 7 மீதி வரும்
இதை7 ஆல் வகுத்தால்6 மீதி வரும்
இதை 6 ஆல் வகுத்தால் 5 மீதி வரும்
இதை5 ஆல் வகுத்தால்4 மீதி வரும்
இதை4 ஆல் வகுத்தால்3 மீதி வரும்
இதை3 ஆல் வகுத்தால் 2 மீதி வரும்
இதை2 ஆல் வகுத்தால்1 மீதி வரும்
அந்தரே என்பவர் இலங்கைமன்னரின் அரசவை விகடகவி.அந்தரே ஒரு முறை மன்னரைப் பழி வாங்க எண்ணினார்.அரசருக்குச் சொந்தமான வயலில் நெல் அறுவடை ஆரம்பம் ஆகியது.வைக்கோலையும் நெல்லையும் பிரிக்க காளை மாடுகள் தேவைப்பட்டன.அந்தரேயைக் கூப்பிட்டுமன்னர்,''நூறு காளைகளுக்குச் சொல்லி விடு,''என்று சொல்லி விட்டார்.மறு நாள் காலை மன்னரும் மற்றவர்களும் காளைகளுக்காகக் காத்திருந்தனர்.ஆனால் காளைகள் வரவில்லை.மன்னர் அந்தரேயைக் கூப்பிட்டு காரணம் கேட்க, அந்தரே ,''நானே நேரே போய்,காலையில்வந்து விட வேண்டும் என்று நூறு காளைகளிடம் சொல்லி விட்டு வந்தேன்.அவை கூட வருவதாகத் தலையையும் காதுகளையும் ஆட்டி சம்மதித்தன.ஆனால் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.''என்றாரே பார்க்கலாம்!
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான சார்லஸ் லாம்ப்,முதல் முதலாக நாடகம் ஒன்றை எழுதி முடித்தார்.நாடகம் நடந்தது.கூடியிருந்த மக்களுக்கு நாடகம் பிடிக்க வில்லை.கூச்சலிட்டனர்.கூட்டத்தினர் கூச்சலிட்ட போது சார்லஸ் லாம்பும் சேர்ந்து கூச்சலிட்டார்.கூட இருந்த நண்பர்,''நீங்களும் ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?''என்று கேட்டார்.லாம்ப் கூறினார்,''இல்லாவிடில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் நான் தான் என்று கண்டு பிடித்து உதைத்திருப்பார்களே?''
வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி; ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு;தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி; சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்; பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை;தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
--மகா கவி பாரதியார்.
ஒரு பெரிய வழக்கு. அதில் சி.ஆர்.தாஸ்,நார்ட்டன் துரை ஆகியோர் எதிர் எதிர் வழக்கறிஞர்கள்.ஒரு முறை சி.ஆர்.தாஸ் வாதம் செய்து கொண்டிருக்கையில் நார்ட்டன் எழுந்து துடுக்காக,''மிஸ்டர் தாஸ்!ரொம்பப் பேச வேண்டாம்.உம்மை என் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வேன்,''என்றார்.உடனே தாஸ், ''அப்படிச் செய்தால் உம்முடைய தலையில் இருப்பதை விட உமது பாக்கெட்டுக்குள் அதிக மூளை இருக்கும்.''என்றாராம்.
பிரெஞ்சுக்காரரான வால்டேர் ஒருமுறை நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.அப்போது இங்கிலாந்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மனோநிலை மக்களிடம் இருந்தது.ஒரு நாள் அவர்ஒரு தெரு ஓரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் கூட்டமாய் அவ்வழியே வந்தனர்.வால்டேரைப் பார்த்தவுடன்,''அதோ,ஒரு பிரெஞ்சுக்காரன் போகிறான்.அவனைத் தூக்கிலிடுங்கள்,''என்று கத்திக் கொண்டே அவரை சூழ்ந்து கொண்டனர்.வால்டேர் அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''இங்கிலாந்தின் பெருமக்களே!நான் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் ஒரு பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே பெரிய தண்டனை என்று நான் எண்ணுகிறேன்.இந்தத் தண்டனை போதாதா?இதற்கு மேலும் ஒரு தண்டனை அவசியம் என்று நினைக்கிறீர்களா?''அவருடைய சமயோசிதமான பதிலைக் கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.அவர் த்ங்குமிடத்திற்குப் பத்திரமாக அழைத்து சென்றார்கள்.
கவலையில்லாத மனிதன் ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் புல்வெளிகளிலேஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் திரிவான்.அவனுக்கென்று ஒரே ஒரு துண்டு தவிர வேறு உடமைகள் கிடையாது.கவலையில்லாத அவனைக் கண்டு சைத்தானுக்குக் கவலை உண்டாயிற்று.அவனுக்குக் கவலை உண்டாக்க முடிவு செய்தது.ஒரு நாள் பகலில் அவன் ஒரு மரத்தடியில் ஆனந்தமாகப் படுத்திருந்த போது சைத்தான்,அசரீரியாகச் சொன்னது,''மனிதனே,நீ படுத்திருக்கும் இடத்திற்கு கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது.அதையெடுத்துச் சென்று மகிழ்வுடன் இரு.''முதலில் அக்கறை காட்டாத அம்மனிதன் பிறகு அசரீரி உண்மையானது தானா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்து தோண்டிப் பார்க்கையில் எழு ஜாடிகள் தென்பட்டன.ஆர்வமுடன் அவற்றை எடுத்துப் பார்த்ததில் ஆறு ஜாடி முழுக்கவும்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிலும் தங்கக் காசுகள் இருந்தன.அவனுக்கு தங்கக் காசுகளைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.ஆனால் ஏழாவது ஜாடியில் பாதி அளவே தங்கம் இருந்தது அவனுக்கு வருத்தத்தைத் தந்தது.உடனே அவன் ஒரு முடிவு செய்தான்.கடுமையாகப் பாடுபட்டுச் சம்பாதித்தேனும் அந்த ஏழாவது ஜாடியைத் தங்கக் காசுகளால் நிரப்ப வேண்டும் என்று எண்ணி அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.சம்பாதித்த பணத்தை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான் பல காலம் உழைத்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.அவனுடைய மகிழ்ச்சி,ஆனந்தமான பாடல்கள்,ஆட்டபாட்டங்கள் எல்லாம் அவனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டன.அவன் இப்போது கவலையே உருவானவனாக இருந்தான்.சைத்தான் அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்.அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஒரு துறவி அவனுடைய சமீப கால மாற்றங்களைக் கண்டு அவனிடம் கேட்டார்,''எங்கே போயிற்று உன் சந்தோசமெல்லாம்?அந்த ஏழு ஜாடி தங்கம் உனக்குக் கிடைத்ததா?''அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவருக்கு இது எப்படித் தெரிந்தது என்று வினவினான்.துறவி சொன்னார்,''இதற்கு முன் இந்த ஜாடிகளை எடுத்தவர்கள் கதி இவ்வாறே ஆயிற்று.மேலும் இந்த ஏழாவது ஜாடி இறந்த ஒரு பேராசைக்காரனின் மண்டை ஓட்டில் செய்யப்பட்டது.அதை நிரப்ப யாராலும் முடியாது.முதலில் அந்த எழு ஜாடிகளையும் தூக்கி எறிந்து விட்டு முன் போல் ஆனந்தமாக வாழ்வாயாக!''
பணத்தின்குணமே அதுதான்.எவ்வளவு சேர்த்தாலும் அது திருப்தி
ஏற்படுத்தாது.மேலும் மேலும் சேர்க்கவே தூண்டும்.மனிதனுடைய மகிழ்ச்சியை அழித்து விடும்.
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான்.அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார்.உடல் நடுங்க மகன் சொன்னான்,''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே,நீங்கள் பார்க்கவில்லையா?''
ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.
வீழ்ச்சி அடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.
**********
வெற்றி தலைக்கும் ,தோல்வி இதயத்திற்கும்
செல்லாது பார்த்துக்கொள்.
**********
காலம் என்பது........
நம்பிக்கைகளின் தொட்டில்;
ஆசைகளின் கல்லறை;
முட்டாள்களுக்குக் கற்றுத் தரும் குரு.
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்.
**********
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
**********
இளமையாக இருக்கும் போது ரோஜா மலர்கள் மேல் படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மேல் படுக்க நேரிடும்.
**********
செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்;
ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது.
**********
பரவசத்தோடு பார்;எல்லாம் பரவசமாகும்!
எல்லாமே பார்க்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
**********
பயம் எப்போதும் எலியைக் கூடப் புலியாகக் காட்டும்.
**********
மனிதனுடைய பெரிய பிரச்சினை அடுத்த மனிதன் தான்.
கூடவே இருந்தாலும் பிடிக்காது;இல்லாவிட்டாலும் பயம்.
**********
தன கோபத்துக்கு மரியாதை இல்லை என்று தெரிந்தால்
யாரும் கோபப் படுவதில்லை.
**********
ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''
லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில் மஜ்னு என்றால் பைத்தியம் என்று பொருள்.அவனுடைய இயற்பெயர் கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள்.லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது.கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர்.இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ஆசைப்பட்டார்.லைலாவைப் பார்த்த மன்னர் கயசை வரவழைத்து,''இந்தப்பெண் அப்படி ஒன்றும் அழகாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ இல்லையே!நீ ஏன் அவள் பின் பைத்தியமாகத் திரிகிறாய்?உனக்கு இவளைவிட எல்லா வகையிலும் சிறந்த பெண்ணைப் பார்த்து உனக்கு நான் கல்யாணம் செய்து வைக்கிறேன்.''என்று சொன்னார்.கயஸ் சொன்னான்,''லைலாவின் அழகை கயஷின்கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும்.வேறு கண்களுக்கு அவளின் அழகும் பெருமையும் தெரியாது.''
ஒரு கணவன் வடை தின்ன ஆசை கொண்டு,தேவையான பொருட்களை வாங்கி மனைவியிடம் கொடுத்து வடை சுட்டு வைக்கச் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டான்.அவள் நூறு வடை சுட்டாள்.ருசி பார்ப்பதற்காக ஒரு வடையை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள்.வடை மிகவும் ருசியாயிருக்கவே அவளால் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்ந்து சாப்பிட்டாள்.இப்படியே 99 வடைகளை சாப்பிட்டு விட்டாள்.கணவன் வந்ததும்,மீதமிருந்த ஒரு வடையை மட்டும் பயந்து கொண்டே ஒரு தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தாள்.விபரம் அறிந்து கொண்ட கணவன் ஆச்சரியத்துடன்,''அதெப்படி 99 வடைகளை சாப்பிட்டாய்?என்று கேட்டான்.வடையின் ருசியிலிருந்து இன்னும் மீளாத அந்தப்பெண் ,'இப்படித் தான் தின்றேன்!'என்று கூறிக் கொண்டே மீதமிருந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்று விட்டாள்.
பாலஸ்தீன நாட்டுக்கு ஒருவர் உல்லாசப் பயணம் சென்றார்.அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது.இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை.படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.இருபதுடாலர் என்று அவன் சொன்னான்.இந்த தொகை மிகவும் அதிகம் என்று வாதிட்டார்,பயணி.''அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.''என்றான் படகோட்டி.'நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்.'என்றார் பயணி.''ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார்,தெரியுமா?''என்று கேட்டான் படகோட்டி.''.படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால்,நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!''என்று ஒரு போடு போட்டார் பயணி.
வயதான மனிதன் ஒருவன்,காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது,முடியவில்லை.நொந்து போய்,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?எமதர்மா!எமதர்மா,''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,'அப்பனே,என்னை நீ அழைத்த காரணம் என்ன?'என்று கேட்டான்.திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்,''என்றாராம்.உயிர் என்றால் யாருக்கும் வெல்லக்கட்டி தானே!
ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள்.அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள்.எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார்,''எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும்.''சிறுமி சிறிது நேரம் யோசித்து விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்,'அம்மா,நீங்களே பகிர்ந்து கொடுங்கள்.உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.'
மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான்.அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும்இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.'அது எப்படி செயல் படுகிறது ?'என்று கேட்டான்.''சொல்கிறேன்.ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.''என்றான்.வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும்.அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.''வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான்,'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது.இப்படித்தான் நீ மீன் பிடிப்பாயா?அது சரி,இன்றுஇந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?'மீனவன் சொன்னான்,''இன்று நீ ஆறாவது.''
முல்லாவிடம் ஒரு கொழுத்த ஆடு இருந்தது.சிறுவர்கள்,அதை வெட்டி விருந்து வைக்கச் சொல்லி முல்லாவை நச்சரித்தனர்.முல்லாவிற்கு மனம் இல்லை.சிறிது நாள் போகட்டும் என்றார்.சிறுவர்களோ விடவில்லை.''முல்லா,நாளை உலக அழியப் போவது உனக்குத் தெரியாதா?அதனால் இன்றே விருந்தை வைத்துக் கொள்ளலாம்.''என்றனர். முல்லா உடனே உல்லாசப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்து,அங்கு சென்று ஆட்டை வெட்டினார்.முல்லா சமைக்க ஆரம்பிக்கும் முன் சிறுவர்கள் அங்கிருந்த குளத்தில் குளிக்கப் போனார்கள்.முல்லா சமைக்க ஆரம்பித்தார்.சிறுவர்கள் குளித்து வந்த பின் பார்த்தால்,அவர்களின் ஆடைகளைக் காண வில்லை.முல்லாவிடம் அது பற்றி விசாரித்தனர்.முல்லா சொன்னார்,''அடே,உலகம் நாளை அழியப் போகிறது. உங்களுக்கு ஆடைகள் எதற்கு?எனவே உங்கள் ஆடைகளை அடுப்பில் போட்டு தான் சமையல் செய்தேன்.''முல்லாவை ஏமாற்ற நினைத்த சிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
நாடோடிப்பாடல்கள் மனித உணர்வுகளை அழகாக,தெளிவாகக் காட்டுகின்றன.காதல்,வீரம்,நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியவை.இலக்கண வரம்பை மீறியவை.கற்பனை வளம் கொண்டவை.இதோ,ஒரு பாடல்;
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன்.
ரெண்டு குளம் பாழு;ஒண்ணு தண்ணியே இல்லை.
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணு பேரு.
ரெண்டு பேர் மொண்டி-ஒத்தன் கையே இல்லை.
கையில்லாத குசவன் வனைந்த சட்டி மூணுசட்டி
ரெண்டு சட்டி பச்சை-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணு அரிசி.
ரெண்டரிசி நறுக்கு-ஒண்ணு வேகவேயில்லை.
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணு எருமை.
ரெண்டெருமை மலடு-ஒண்ணு ஈனவே இல்லை..
ஈனாத எருமைக்கு விட்ட காடு மூணு காடு.
ரெண்டு காடு சொட்டை-ஒண்ணில்,புல்லே இல்லை.
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணு பணம்.
ரெண்டு பணம் கள்ள வெள்ளி-ஒண்ணு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணு பேரு.
ரெண்டு பேரு குருடு-ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்கப் பிள்ளைக்கு விட்ட ஊருமூணு ஊரு.
ரெண்டு ஊரு பாழு-ஒண்ணில் குடியே இல்லை.
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணு பேரு.
ரெண்டு பேரு மொட்டை-ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பொண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேரு.
ரெண்டு பேரு பொக்கை-ஒத்தனுக்குப் பல்லே இல்லை..
அலெக்சாண்டரிடம் இந்தியாவிலிருந்து வரும் போது,நான்கு வேதங்களையும் எடுத்து வருமாறு அவருடைய குரு கேட்டுக் கொண்டார்.யாரிடம் இந்த வேதங்கள் உள்ளன என்று விசாரித்ததில் ஒரு பிராமண குடும்பத்தில் இருப்பதாகவும் அதை அவர்கள் நிச்சயம் தர மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.அலெக்சாண்டர் படையுடன் அந்த வீட்டை சூழ்ந்து கொண்டு நான்கு வேதங்களையும் கொடுக்காவிடில் வீட்டிற்குத் தீ வைக்கப் போவதாக மிரட்டினார்.குடும்பத் தலைவன்,மறுநாள் காலை தருவதாக வாக்களித்தான்.இரவு குறிப்பிட்ட பிரார்த்தனை செய்த பின் தான் தர முடியும் என்று கூற அவர்களால் தப்பிச் செல்ல முடியாது என்ற நிலையில் அலெக்சாண்டர் அதற்கு ஒத்துக் கொண்டார்.மறுநாள் காலை அலெக்சாண்டர் வீட்டினுள் சென்று பார்த்த போது,நான்கு வேதங்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன.'நீ என்ன செய்கிறாய்?'என்று அவர் வினவ,குடும்பத்தலைவன் சொன்னார்,''இந்த நான்கு வேதங்களும் நெருப்புக்கு இரையாகி விட்டன.இங்கே இருக்கும் நால்வரும் என்னுடைய மகன்கள்.இரவு முழுவதும் இந்த வேதப் புத்தகங்களை நான் படிக்க,அதை இவர்கள் கவனமாகக் கேட்டு ஞாபகத்தில் வைத்துள்ளனர்.நீங்கள் இவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.''கவனித்துக் கேட்டது அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலுமா?அலெக்சாண்டரால் நம்ப முடியவில்லை.வேறு சில பிராமணர்களை வரவழைத்து இவர்கள் ஞாபகத்தில்வைத்திருப்பது சரியாக இருக்கிறதா என்பதனை சோதித்துப் பார்த்தார்.அவர்கள் வேதத்தில் உள்ளதை எழுத்துப் பிசகாமல் திரும்பச் சொன்னார்கள்.எப்படிஅவர்களால் அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிந்தது?இதன் ரகசியம் இது தான்;உங்கள் ஞாபக சக்தியில் 90% பயனற்றவைகளாக இருக்கின்றன.நீங்கள் குப்பைகளையெல்லாம் மறந்து போகக் கூடிய தகுதி உள்ளவர்களாக இருந்தால்,பிறகு எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி வந்து விடும்.பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.அதனால் அவர்களால் நன்கு வாதங்களை மட்டுமல்ல,அதற்கு மேலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது.
சரியான கற்றுக் கொள்ளலுக்கு சரியான கவனித்தல் முதலில் அவசியம்.சரியான கவனித்தலுக்கு மனதை வெறுமை செய்வது அவசியம்.சரியாக ஞாபகத்தில் கொள்ளுதல் என்றால் தொடர்ந்து அழுக்குகளை,குப்பைகளை வெளியேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.மனத்தைக் குப்பைகளால் நிரப்பாதீர்கள்.உங்கள் மனம் எல்லா இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது.இதனால் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.மனதில் அவ்வளவு ஆசாபாசங்கள் உள்ளன.
ஒருவன் இறந்தபின்,தான் நரகத்தில் இருப்பதாக உணர்ந்தான்.ஆனால் எல்லோரும் பயமுறுத்தியதை போல்கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகளோ, வேறு எந்த பயங்கரமான் சம்பவங்களோ இல்லை.அவன் ஒரு குளிரூட்டப் பட்ட,அழகான வேலைப் பாடுகளுடனும் எல்லா வசதிகளும் உள்ள ஒரு அறையில் இருந்தான்.ஆனால் அந்த அறையில் வெளியே செல்லும் வழி கிடையாது.அவனுடன் அந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்.கேட்ட ஆசைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப் பட்டன.உடன் இருந்தவர்கள்,ஒரு வயதான பெண்,ஒரு இளம் பெண்,ஒரு இளைஞன்.ஓரிரு நாட்கள் அவர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர்.பேசிப் பேசி,இனிப் பேச ஒன்றுமில்லை என்ற நிலை.பேச்சைத் தொடர வழியில்லை.அங்குள்ள விளக்குகளை அணைக்க இயலாது.அவர்கள் உண்டார்கள்;உறங்கினார்கள்.அவர்கள் தனிமையிலும் இல்லை.ஆக அவர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் உண்டாக்குபவர்கள் ஆகிவிட்டார்கள்.திடீரென விழித்துக் கொண்ட மனிதனுக்கு இது தான் நரகம் என்பது தெரிந்தது.அவனுக்கு அங்கே இனி வாழ்வது முடியாத காரியமாய்த் தோன்றியது.மற்ற மூவரின் இருப்பே சுமையாகத் தெரிந்தது.தற்கொலை செய்து கொள்ள வழியில்லை.இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்ட போது,நரகம் அழிவில்லாதது என்று பதில் வந்தது.ஆக, அடுத்தவர் தான் நரகம்.நம்முடைய மதங்கள் சித்தரிக்கும் நரகத்தை விடக் கொடியது.இதற்குப் பதிலாக எண்ணைக் கொப்பரையில் தூக்கி எறியப் பட்டால் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மூடப் பட்ட அறையில் சிலருடன் எப்போதும் இருப்பது என்பது பெரிய நரகம் தான்!
--- ஜீன் பால் சார்த்ரே சொன்ன கதை.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,ஒருமுறை காரில் தன நண்பர்களுடன் ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.போகும் வழியில் கார் ஒரு புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.கார் நசுங்கி அனைவருக்கும் காயம். கலைவாணர் கொஞ்சம் கூடப் பதட்டப் படாமல் அனைவருக்கும் முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார்.ஒருவரை பக்கத்து ஊருக்கு அனுப்பி ஒரு வாடகைக் கார் பிடித்து வரச் சொன்னார்.புளிய மரத்தடியில் ஒரு விரிப்பை விரித்து எல்லோரையும் உட்காரச் சொன்னார்.வெற்றிலை போட்டுக் கொண்டே எல்லோருடனும் சாதாரணமாகச் சிரித்துப் பேச ஆரம்பித்தார்.
அப்போது அந்த வழியே சென்ற சிலர் கலைவாணரை அடையாளம் கண்டு பதட்டத்துடன் வந்து விபத்து பற்றி விசாரித்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்தனர்.கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஒன்னுமில்லீங்க.எல்லோருக்கும் களைப்பாய் இருந்தது.எனவே வண்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.''அந்த நிலையில் வேறு யாராலும் இப்படி நிதானமாகப் பேச முடியுமா?அது தான் கலைவாணர்!
சாக்ரடீசுக்கு சிறையில்நஞ்சு கொடுக்கப் படுவதற்கு முன் டெல்பியிலிருந்த தெய்வீக அசரீரி,அவரை,முழு உலகிலும் மிக அறிவு கொண்டவர் என்று மொழிந்தது.இதைக் கேட்டு மகிழ்வடைந்த பலர் ஏதென்ஸ் சென்று அவரிடம்,''இதுவரை இதுபோல் நடந்தது இல்லை.இதற்கு முன் யாரையும் டெல்பியின் தெய்வ வாக்கு உலகிலேயே சிறந்த அறிஞர் என்று கூறியதில்லை.உங்களைத் தான் சிறந்த அறிஞர் என்று கூறியிருக்கிறது.நீங்கள் தான் உலகின் சிறந்த அறிஞர்.''என்றனர்.
அதற்கு சாக்ரடீஸ் ,''நீங்கள் டெல்பிக்குத் திரும்பச்சென்று,இது நாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும்,இம்முறை அது தவறு செய்து விட்டது என்று அதனிடம் கூற வேண்டும்.ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது.''செய்தி கொண்டு வந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
அவர்கள் திரும்பச் சென்று தெய்வ வாக்கிடம்,''சாக்ரடீஸ் இதை மறுக்கிறார்.அவர் உலகிலேயே சிறந்த அறிவாளி இல்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறுகின்றார்,''என்றனர்.
இங்கே தான் இந்த சம்பவத்தின் அழகே இருக்கிறது.தெய்வ வாக்கு,''அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.இதில் முரண்பாடு எதுவுமில்லை.''என்று கூறியது.
அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த குடியிருப்பில் பேசுவது கேட்கவே செய்யும்.ஒரு அடுக்கு மாடி வீட்டில் அனைவரும் ஒரு விஷயத்தைப் பற்றி புதிராக உணர்ந்தனர்.ஒவ்வொரு தம்பதியினரும் சண்டையிட்டுக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருக்க,ஒருவர் வீட்டிலிருந்து மட்டும் எப்போதும் சிரிப்பு சப்தம் கேட்க முடிந்தது.ஒரு நாள் விபரம் அறிய அனைவருமொன்று கூடி அவரிடம் கேட்டார்கள்.அவர் சொன்னார்,''என்னை வற்புறுத்தாதீர்கள்.அந்த ரகசியம் அவமானகரமானது.''அனைவரும் மிக வற்புறுத்திக் கேட்க அவர் சொன்னார்,''என் மனைவி சாமான்களை என் மீது வீசுவாள்.அவள் குறி தவறினால் நான் சிரிப்பேன்.என்னைத் தாக்கி விட்டால் அவள் சிரிப்பாள்.நான் அவள் தாக்குதலை தவிர்க்க கற்றுக் கொண்டுள்ளேன், அவள் என்னை எப்படித் தாக்குவது என்று கற்றுக் கொள்கிறாள்.''
இருபது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர்,தனது மனைவியிடமிருந்து மண விலக்கு கேட்க,அவர்களது சிரிப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த நீதிபதி,காரணம் கேட்டார்.அவர் சொன்னார்,''அவள் என்னை அடிக்கிறாள்.நான் பலவருடங்களாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.''
நீதிபதி கேட்டார்,''இத்தனைஆண்டுகள் சமாளித்த உனக்கு இன்னும் சில ஆண்டுகள் சமாளிக்க முடியாதா?''
அந்த மனிதர் சொன்னார்,''விஷயம் அதுவல்ல.முதலில் என்னால் அவளுடைய தாக்குதல்களைத் தவிர்க்க முடிந்தது.இப்போது அவள் நன்றாகக் குறி வைக்கிறாள்.கடந்த பத்து ஆண்டுகளாக அவள் மட்டும் தான் சிரிக்கிறாள்.ஆரம்பத்தில் பாதிப் பாதியாக இருந்த பிரச்சினை இப்போது எனக்கு முழு பாதிப்பாக மாறி விட்டது.என்னால் தாங்க முடியவில்லை.நான் ஒரு முழு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறேன்.இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது.''
ராஜா டோஜ்ஜின் தன் அரண்மனையில் அறிஞர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார்.எனவே காளிதாசர் உட்படப் பல அறிஞர்கள் அங்கே குவிந்திருந்தனர்.ஒரு நாள் அரசவைக்கு வந்த ஒருவன்,தான் முப்பது மொழிகளில் சரளமாகப் பேச வல்லவன் என்றும் அதில் எது அவன் தாய் மொழி என்று கண்டு பிடிக்கும் அறிஞருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகவும்,கண்டுபிடிக்க முடியாவிடில் ஒவ்வொரு அறிஞரும் தலா ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டும் என சவால் விட்டான்.எல்லா அறிஞர்களும் இப்போட்டியில் தோற்றனர்.அவன் எல்லா மொழிகளையும் சரளமாகப் பேசியதால் யாராலும் வித்தியாசம் காண இயலவில்லை. காளிதாசர் அவனை மேடைக்கு அழைத்து,அவன் கடைசிப் படியில் ஏறியதும் அவனைப் பிடித்துக் கீழே தள்ளினார்.அவன் படிக்கட்டிக்களில் உருண்ட போது கோபத்தில் கத்தினான்.காளிதாசர் சொன்னார்,''இப்போது எந்த மொழியில் கத்தினாயோ,அது தான் உனது தாய் மொழி,''என்றார்.அவன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
கோபத்தில் உங்கள் நினைவு உங்கள் வசம் இருப்பதில்லை.மேலும் இது தன் சவாலுக்கு பதில் என்பதை அவன் உணரவில்லை.அவனது மனதின் அடி ஆழத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது அவனது தாய் மொழி தான்.
அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.போரஸ் வெற்றிமுகத்தில் இருந்தார்.ஒரு நாள் மாலை போருக்குப் பின் தன் கூடாரத்தில் இருந்த போது ஒரு பெண்மணி அவரை நோக்கி வந்தார்.அந்தப் பெண் அலெக்சாண்டரின் மனைவி என்பதை அறிந்து கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.அந்தப்பெண்,போரில் தன் கணவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்று வேண்டினாள்.பின் திடீரென ஒரு ரக்ஷாபந்தன் கயிறினைப் போரஸின் கரத்தில் கட்டினாள்.பின் வந்த வழியே சென்று விட்டாள்.
மறுநாள் கடுமையான போர் நடந்தது.போரஸ் அலேக்சாண்டரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்ச முனைந்த போது தன் கையிலிருந்த ரக்ஷா பந்தன் கயிறினைக் கவனித்தார்.உடனே ஈட்டியை பின்னோக்கி இழுத்து விட்டுசொன்னார்,''உன் மனைவி என் சகோதரி.அவள் விதவையாகக் கூடாது.''
ஒருவன் சிவ பெருமானை நோக்கி வருடக் கணக்காகத் தவமிருந்தான்.சிவன் அவன் எதிரில் தோன்றி மூன்று வரங்கள் தருவதாகக் கூறினார்.முதல் இரண்டு வெகுமதிகள் அவன் குழப்பத்தால் வீணாயிற்று.மூன்றாவது வரம் என்ன கேட்கலாம் என அவரிடமே வினவினான்.அவர் சொன்னார்,''ஒரே ஒரு விருப்பம்,ஒரே ஒரு ஆசை தான் மதிப்பு வாய்ந்தது.அது தான் ஆசையின்மை.நீ கேட்க வேண்டியது ஆசையின்மையைத்தான்.நீ வேறு எதைக் கேட்டாலும்,அடுத்த கணமே வேறு ஏதாவது வேண்டுமென விரும்புவாய்.''
0