ஒரு புகழ் பெற்ற அரசன் ,தன்னைக் காட்டிலும் புகழ் பெற்ற அறிஞன் ஒருவனை மட்டம் தட்ட எண்ணினான்.ஒரு கைக்குள்ளே அடங்கக்கூடிய சிறு பறவைக் குஞ்சை கையில் அடக்கி வைத்துக் கொண்டு அறிஞனிடம் வினவினான்,''என் கைக்குள்ளே பறவைக் குஞ்சு உயிரோடிருக்கிறதா,இறந்து விட்டதா?''
அறிஞன் புரிந்து கொண்டான்.உயிரோடிருக்கிறது என்று சொன்னால் அரசன் குஞ்சை நசுக்கிக் கொன்று விடுவான்.இறந்து விட்டது என்றால் கையைத்திறந்து பறவையைப் பறக்க விடுவான். எனவே சொன்னான்,''அரசே,அது உன் விருப்பத்தைப் பொறுத்தது.அந்தப் பறவை சிறகை விரிக்குமா அல்லது செத்து மடியுமா என்பது உன் விருப்பத்தை மட்டுமே ஒட்டிய விஷயம்.''
அது போலவே ஒருவன் வாழ்வில் உயர்வானா அல்லது உதவாக்கரை ஆவானா என்பது அவன் கைக்குள் தான் உள்ளது.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான நீர் ஓடத்திற்கு வெளியே இருக்க வேண்டுமேயன்றி உள்ளே அன்று.
சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓட்டத்திற்கு வெளியே,அது மிதப்பதற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.
--வினோபாஜி
மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,உங்களைக் குறை கூறுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவரவர்க்கு அவரவர் பிழைப்பைக் கவனிக்கும் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது.உங்களை வெறுத்துக் கொண்டிருக்கவோ குறை கூறவோ அவர்களுக்கு நேரமில்லை.நீங்களாக ஏதாவது கோளாறாக நடந்து கொண்டாலன்றி உங்களைப் பற்றி அவர்கள் ஏன்சிந்திக்கப் போகிறார்கள்?
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
ஒரு முறை சில வேடர்கள் காட்டு யானைகளை பிடிக்க காட்டுக்குள் சென்றனர்.பழக்கப்பட்ட சில யானைகளை உடன் அழைத்துக்கொண்டு கையில் கயிறுகள் மற்றும் ஆயுதங்களுடன் போனார்கள்.வேடர்கள் வருவதைப் பார்த்த காட்டு யானைகள் ,''நாம் வேடர்களைக் கண்டு பயப்படவில்லை.அவர்கள் கையில் வைத்துள்ள பாசக் கயறுகளைப் பார்த்தும் கவலைப் படவில்லை.அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப் பற்றியும் கவலையில்லை.ஆனால் தம்முடன் அந்த மனிதர்கள் அழைத்து வந்திருக்கும் நம் இனத்தவரான நாட்டு யானைகளைக் கண்டு தான் நாம் பயப்பட வேண்டியிருக்கிறது.நம்மை எவ்வாறு பிடிக்கலாம் என்னும் உபாயத்தை நாட்டு யானைகள் தான் அந்த வேடர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றன.ஆகவே மற்ற பயத்தைக் காட்டிலும் உறவினருக்கு இருக்கும் பங்காளிக் காய்ச்சலைக் கண்டு தான் நாம் பெரிதும் பயப்பட வேண்டியுள்ளது.''என்று தமக்குள்ள பேசிக்கொண்டன.
போஸ்ட் ஆபீசிற்கு போக வழி தெரியாத ஒரு பாதிரியாருக்கு ,வழி காட்டினான் பையன் ஒருவன்.நன்றி கூறிய பாதிரியார் பையனிடம் சொன்னார்,
''உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்கிறேன்.''பையன் சொன்னான்,''இதோ இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு வழி தெரியாத நீங்களா ,சொர்க்கத்திற்கு வழி கட்டப் போகிறீர்கள்?''
தியாகம் பற்றி இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஒருவன் சொன்னான்,
''என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் உனக்கு ஒரு லட்சம் கொடுப்பேன்.''இரண்டாமவன் சொன்னான்,''என்னிடம் இரண்டு பங்களா இருந்தால் உனக்கு ஒன்று கொடுப்பேன்.''
முதல்வன் இரண்டாமவனின் பையில் இரண்டு பேனா இருப்பதைக் கண்டு ஒன்றைக் கேட்டான்.இரண்டாமவன் முதல்வனின் பையில் இருபது ரூபாய் இருப்பதைப் பார்த்து பத்து ரூபாய் கேட்டான்.அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தில் இல்லை.இல்லாததைக் கொடுப்பதில் தான் எவ்வளவு தியாக மனப்பான்மை?
ஒரு பெண், பெரியவர் ஒருவரிடம் தன கணவன் மிகக் கொடுமைகள் செய்வதாகப் புகார் சொன்னாள்.பெரியவர் சொன்னார்,''ஒரு பேப்பரை எடுத்து உன் கணவன் உனக்கு செய்த நல்ல காரியங்களையும் ,செய்த கொடுமைகளையும் தனித்தனியே எழுதிக் கொண்டு வா.அதைப் படித்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.''என்றார்.
பெண்ணும் ஒரு பேப்பரை எடுத்து முதலில் தன கணவன் செய்த நல்ல காரியங்களை யோசித்து எழுதி முடித்தாள்.அப்போது அவளுக்குத் தோன்றியது,''சே!இவ்வளவு நல்ல காரியங்கள் செய்த என் கணவரையா குறை கூறுகிறேன்?''என்று வருத்தப்பட்டாள்.
ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் தன தோழியிடம் ,''என் மேனேஜர் கோபக்காரர்.எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லித் திட்டிக்கொண்டிருக்கிறார்.எப்படி வேலை பார்த்தாலும் பயனில்லை.''என்று வருத்தப்பட்டு சொன்னாள்.
தோழி ஆறுதலாகக் கூறினாள்,''அவர் எப்படிக் கோபப்பட்டாலும் நீ மட்டும் அவரிடம் நீ காணும் சிறப்பம்சங்களை தினமும் ஒன்றாகக் கூறி வா.''அந்தப் பெண்ணும் அதே போல் ஒரு நாள் ,''இவ்வளவு டென்சனான நேரத்திலும் குழப்பம் இல்லாமல் எப்படி சார் முடிவெடுக்கிறீர்கள்?''என்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பாராட்டி வந்தாள்.
சிறிது நாள் கழித்து தோழி கேட்டாள்,''ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?''
அந்தப் பெண் கூறினாள்,''ஆம்,இப்போது நான் அவரது மனைவி.''
உண்மையை யாரும் நம்புவதில்லை.பசும்பாலிலிருந்துதயாரித்த மோரை தெருத்தெருவாக அலைந்து விற்க வேண்டியுள்ளது.ஆனால் கள்உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது.நல்லது மெதுவாகத்தான் விலை போகும்.விரைவில் விற்பதால் கெட்டதுஒரு போதும் நல்லதாகிவிடாது.
உண்மையைப் போன்ற தவம் இல்லை.பொய்யைப் போன்ற பாவம் இல்லை.உண்மையைப் பொய்,நிந்தை ஒன்றும் செய்து விட முடியாது.காலம் அதனை விழுங்கி விட முடியாது.உண்மைக்கு வெற்றி கிடைத்தே தீரும்.
---கபீர்தாசர்.
ஒரு ஞானி இரவு பகலாக ஆன்மீக நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்.ஒரு தேவதை அவர் முன் தோன்றி ,;;உனக்கு எல்லா வகை ஞானத்தையும் நான் தருகிறேன்.நீ ஏன்இரவில் இவ்வளவு சிரமப்பட்டு உன் சக்தியை வீணாக்குகிறாய்?''
ஞானி சொன்னார்,''உழைக்காமல் கிடைக்கும் பரிசு எதையும் என்னால் அனுபவிக்க முடியாது.நீங்கள் தரும் ஞானம் எனக்கு ஒரு சுமையாகவே இருக்கும்.''
ஆனால் தேவதையோ பிடிவாதமாய் ,''நான் வந்து விட்டேன்.உனக்கு பரிசு ஏதும் தராமல் போக மாட்டேன்.''என்றது.
கடைசியில் ஞானி ,''நீங்கள் ஏதேனும் உதவி செய்தே ஆக வேண்டுமானால் ,இதோ இந்த விளக்கிற்கு சிறிது எண்ணெய்ஊற்றிச் செல்லுங்கள்.பிறர்க்குப் பயன் படுத்தும் ஞானத்தை நான் பெறுவதில் உங்கள் பங்கும் இருக்கும்.''என்று கூறி விட்டு ஆத்ம திருப்தியுடன் படிக்க ஆரம்பித்தார்.
எளிமையான ஒரு குரு.புரியக்கூடிய, இதயத்தை தொடக்கூடிய அளவு பேசுபவர்.
இன்னொரு குரு.கர்வம் கொண்டவர்.வாதாடுவதில் வல்லவர்.இவர் எளிமையானவரை பார்க்க வந்தார்.வந்தவர் மரியாதை கூடச் செலுத்தாமல் ,''என்னைப் பணிய வைக்க உம்மால் முடியுமா?''என்றார் அகங்காரத்தோடு.
''இங்கே வாருங்கள் ,என் பக்கம்.''என்றார் முதல்வர்.இவர் வந்தார்.
''கொஞ்சம் இடப்பக்கம் வாருங்கள்,''என்றார்.இவர் வந்தார்.
''இல்லை.இது சரிப்படாது.வலப் பக்கம் வந்து விட்டால் வாதம் தொடர வசதியாக இருக்கும்.''இவரும் வலப்பக்கம் மாறினார்.
''பார்த்தீர்களா?இப்போது நான் சொன்ன படியெல்லாம் கேட்டீர்கள் அல்லவா?இப்படித்தான் நான் பணிய வைப்பது.''
உன் உடல் நிலை சரியில்லையா?டாக்டரிடம் போ.
டாக்டர்கள் பிழைக்க வேண்டாமா?
டாக்டர் எழுதிக் கொடுக்கும் எல்லா மருந்தையும் கடையில் வாங்கு.
கடைக்காரர் பிழைக்க வேண்டாமா?
வாங்கிய மருந்து எதையும் சாப்பிடாதே.
நீ பிழைக்க வேண்டாமா?
குனிந்த தலை குனிந்தபடி மூட்டை சுமந்து செல்லும் கழுதையைப் பார்த்து ஒரு காகம் வருத்தப்பட்டது.''பாவம்,இந்தக் கழுதை எப்போது பார்த்தாலும் யாருக்காகவோ மூட்டை சுமந்து கஷ்டப்படுகின்றது.''
''நாம் என்ன செய்ய முடியும் ?கழுதை தான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.,''என்றது இன்னொரு காகம்.
''ஏன் அப்படிச் சொல்கிறாய்?''என்று கேட்டது முதல் காகம்.
''குனிந்து கொண்டே இருப்பவன் சுமந்து கொண்டே இருப்பான்.''என்றது அடுத்த காகம்.
இலங்கைக் கவிஞர் காசி ஆனந்தன்.
ஒருவன் தன குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.அவன் 'ஐயோ' என்றால் குதிரை நிற்கும்.'அப்பாடா' என்றால் ஓடும்.ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,'ஐயோ'என்றான்.உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக 'அப்பாடா' என்றான்.மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
ஒரு ராஜாவுக்கு தாராள மனசு.ஒரு நாள் மீனவன் ஒருவன் அழகான வண்ண மீனை ராஜாவிடம் கொடுத்தான்.உடனே ராஜா நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணிக்கு எரிச்சல்.ஒரு சாதாரண மீனுக்கு நூறு பொற்காசா என்று.ராஜாவை நச்சரித்து நூறு பொற்காசுகளை திரும்ப வாங்கச்சொல்லி ஒரு யோசனையும் சொன்னாள்.''இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்.பதில் சொல்லாவிடில் காசைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.''என்றாள்.அரசனும் மீனவனைக் கூப்பிட்டு அக்கேள்வி கேட்க ,அவன்,''இது ஆணுமல்ல ,பெண்ணுமல்ல,அலி.''என்றான்.இப்பதிலைக்கேட்டு பரவசமடைந்து அரசன் இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தான்.
ராணிக்கு மகாஎரிச்சல்.எப்படி இருநூறு பொற்காசுகளைத் திரும்ப வாங்குவது என யோசித்தாள்.
மீனவன் பொற்காசுகளைத் தூக்கிச் செல்லும் போது ஒரு காசு தவறி கீழே விழுந்தது.ராணி சொன்னாள்,''பாருங்கள்!இவன் பேராசைக்காரன்.இருநூறு காசில் ஒன்று விழுந்ததற்கே பெருந்தன்மை இல்லாது ஓடி எடுக்கிறானே, காசைத் திரும்ப வாங்குங்கள்.''
ராஜா கேட்டார்,''ஏன் இப்படி அற்பத்தனமாய் ந்கடந்து கொண்டாய்?''
மீனவனோ ,''ஒவ்வொரு காசிலும் உங்கள் முகமும் ,ராணியின் முகமும் பொறிக்கப் பட்டிருக்கிறது.அது கீழே விழுந்து யார் காலிலாவது பட்டால் உங்களுக்கு அவமானம்.அதனால் தான் எடுத்தேன்.''என்றான்.மகிழ்ச்சியுற்ற ராஜா அவனுக்கு இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணி இப்போது வாயைத் திறக்க வில்லை.
நான் மாறும் போது தானும் மாறியும்
நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்.
உலகத்தைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!பேசி உலகத்தை நீ ஒன்றும் செய்ய முடியாது.
உன்னைப் பற்றி பேசுகிறாயா?
நிறுத்து!உன்னைப்பற்றி நீ பேசினால் யாரும் கேட்டுக் கொண்டிருக்க
மாட்டார்கள்.
உன் அனுபவத்தைப் பற்றி பேசுகிறாயா?
வேண்டாம்!ஒவ்வொருவரும் மூட்டை மூட்டையாக வைத்து
இருப்பார்கள்.உன் பேச்சு செலாவணியாகாது.
பிறருக்கு நன்மை செய்வதைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!செய்!
பாரதப் போர் முடிந்தது.தர்மர் முடி சூட்டிக் கொண்டார்.கண்ணன் துவாரகைக்கு விடை பெரும் நேரம் வந்தது.வேதனையுடன் தர்மர் சொல்கிறார்,
''கண்ணா,எங்கள் தெய்வமே,
உன்னைப் போகாதே என்று சொன்னால் அது அபமங்களம்.
உன்னை இரு என்று கட்டளையிட்டால் அது மமதை ஆகும்.
உன்னைப்போ என்று சொன்னால் செய் நன்றி மறந்தவனாவேன்.
உன் இஷ்டம் போல் செய் என்றால் அது அசட்டையாக கருதப்படும்.
இந்த இக்கட்டான சூழ் நிலையில் உன்னிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுதான்.உன் இதயத்தில் எங்களுக்கு எப்போதும் தனி இடம் வேண்டும்.உன்னை மறவாதிருக்க வேண்டும்.''
ஒரு மகானைத் தேடி ஒருவன் படபடப்போடும் கோபத்தோடும் வந்தான்.கால் செருப்பை கழட்டிகோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தான்.கதவை வேகமாக அடித்துச் சாத்தினான்.அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தான்.மகான் சொன்னார்,''அப்பா,உன் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா.''
''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?''என வினவினான்.அவன்.
''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?''எனக் கேட்டார் மகான்.
அவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.
''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.
தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.
பாவத்தையும் புண்ணியத்தையும் மறந்து விடுங்கள்..இரண்டும் அபத்தமானவை.பாவம் புரிந்தவன் குற்ற உணர்வு அடைகிறான்..குற்ற உணர்வு உடையவன் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?புண்ணியாத்மாவகத் தன்னைக் கருதிக்கொள்பவனும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. தான் எதைச் செய்தாலும் தப்பாகி விடுமோ என்று அஞ்சுகிறான்.தன்னுடைய புனிதத் தன்மை கெட்டுவிடுமோ என்ற அச்சம்.ஆக,பாவம் புண்ணியம் இரண்டுமே மனித இனத்தின் மகிழ்ச்சியைக் கூறு போடுபவை.பாவிகள் குற்ற உணர்வில் குதூகலத்தை இழக்கிறார்கள்.புண்ணியவான்கள் அகந்தையில் இழக்கிறார்கள்.
கிராமத்தில் ஒரு கிழவன் தன வீட்டு சுவர் மீது அமர்ந்திருந்தான்.சாலையில் போய் வருகிற வாகனங்களை பார்ப்பதே அவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. காரில் போய்க்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இறங்கி கிழவனிடம் வந்தான். ''பெரியவரே,இந்த சுவற்றில் ஐந்து நிமிடம் கூட என்னால் உட்கார்ந்து இருக்க முடியாது. எங்காவது சுற்றிக்கொண்டே இருந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி.ஆனால்நீ எனக்கு நேர் மாறாக சுவரிலேயே உட்கார்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாய். அது எப்படி?''என்று கேட்டான்.
கிழவன் சொன்னான்,''அப்பனே,ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசமில்லை.நீ காருக்குள் இருந்தபடி சுவர்களையும் ,வேலிகளையும்பார்த்துக் கொண்டு போகிறாய்.நான் இங்கே உட்கார்ந்து கொண்டு போகிற வருகிற கார்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..எல்லாம் ஒன்று தான்.''
தண்ணீர் தெளிவானது.கண்ணாடி தெளிவானது. அதே போல் தான் மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும் படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போதுதான் அடுத்தவரைப் பார்த்து சிரிக்க தோன்றும்.தெளிவு வந்து விட்டால் தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம்.நம்முடைய அகந்தையில் செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.
ஒரு மனிதன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தபோது ,தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக் கொண்டான்.பிடி தளர்ந்தால் பாதாளம் போகும் அபாயம்!அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை.இப்போது கடவுளை நினைத்து ,''கடவுளே,உன்னை நான் முழுமையாக நம்புகிறேன்.நீ தான் காப்பாற்ற வேண்டும்,''என வேண்டினான்.அப்போது வானிலிருந்து ஒரு குரல்!
குரல்: நீ என்னை நம்ப மாட்டாய் .
மனிதன்: கடவுளே ,என்னைக் கை விட்டு விடாதே.நிச்சயம் நம்புகிறேன்.
குரல்:எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன்:கடவுளே,நீ தான் காப்பாற்ற வேண்டும்.
குரல்:சரி,உன்னைக் காப்பாற்றுகிறேன்.முதலில் நீ பிடித்திருக்கும் வேரை
விட்டு விடு.
மனிதன்:வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்க வில்லை.
ஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் வந்ததைப் பற்றி ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் சொன்ன விளக்கம் ;
''வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போதுஎங்கள் கையில் தேசம் இருந்தது.அவர்கள் கையில் பைபிள் இருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.கற்றுக் கொண்டோம்.அப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.அவர்கள் கையில் தேசம் இருந்தது.''
தன்னைப் பார்க்க வந்த ஒரு அறிஞரை ,ஒரு ஞானி உபசரித்து ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார்.அறிஞருக்கு ,தனக்கு அளிக்கப்பட்டஆசனம் ஞானி அமர்ந்திருந்த ஆசனத்தைவிட சற்றுக் குறைவாய் இருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.அவர் ஞானியிடம் ,''நீங்கள் என்னை அவமதித்து விட்டீர்கள்.நான் படித்த படிப்புக்கு இப்படித் தாழ்வான இருக்கையைத்தந்து கேவலப்படுத்தலாமா?''என்று கோபமாகக் கேட்டார்.ஞானி உடனே தன இருக்கையை அவருக்கு அளித்து விட்டுத்தான் கீழே அமர்ந்து அவருடன் பேசினார்.சிறிது நேரத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் அருகே இருந்த ஒரு மரத்தின்மேல் ஒரு குருவி வந்து அமர்ந்தது.அதைக் கவனித்த ஞானி பேச்சு வாக்கில் ,''அறிஞரே ,அதோ உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் குருவி தங்களை விட அதிகம் படித்திருக்குமோ?''என்று நாசூக்காக கேட்க அறிஞர் தன செயலுக்கு வெட்கப்பட்டு த்தலை குனிந்தார்.
குடையும் ஒரு சுமை தான்
மழை இல்லாத போது.
படிப்பும் ஒரு சுமை தான்
வேலையில்லாதபோது.
மொகலாய மன்னர் பாபரின் பெருமையைக் கேள்விப்பட்டு ஒரு வெளி நாட்டவர் அவரைப் பார்க்க அரண்மனைக்குப் போனார்.கட்டுப்பாடும் கம்பீரமும் உள்ள பாபரின் அரண்மனைக்குள் நுழைவதே சிரமம் என நினைத்ததற்கு மாறாக அரசன் இருக்குமிடத்திற்கு தங்கு தடையில்லாமல் போக முடிந்தது.யாரும் தடுக்கவில்லை.பாபரின் அறைக்குள் எட்டிப் பார்த்தபோது இன்னும் வியப்பு.பாபர் மிகச் சாதாரணமாக வேலையாட்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.சபையில் அவ்வளவு கம்பீரமாக இருப்பவர் இவ்வளவு சாதாரணமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதன் காரணத்தை மன்னரிடமே கேட்டார்.அப்போது பாபர் அமைதியாக அறையின் மூலையிலிருந்த ஒரு வில்லையும் அம்பையும் காட்டினார்.பின் சொன்னார்,''அந்த வில்லை போர் முனைக்கு எடுத்துச் செல்லும் போதுதான்
கிண்ணென்று நாண்ஏற்றி பாணங்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.மற்ற நேரங்களிலும் அதை இறுக்கமாகக் கட்டி நாணஏற்றி வைத்தால் ,அந்த இறுக்கம் தாளாது ஒடிந்து விடும்.மனிதர்களும் அப்படித்தான்.வளைந்து குழைந்துஇருக்க முடிந்தவர்களே நிமிர்ந்து நிற்கும் போது வலுவாகத் தாக்குப் பிடித்து நிற்பார்கள்.எப்போதும் வளையாமல் இருப்பவர்கள் எந்தக் கணத்திலும் உடைந்து போகிறவர்களாகவே இருப்பார்கள்.''
நான் மூட்டை தூக்க நேரிட்ட போது,அதன் பாரத்தினால் வேதனைப் பட்டிருப்பேனே ஒழிய ,மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒரு போதும் வேதனைப் பட்டதில்லை.
----தந்தை பெரியார்
பன்றி,பசுவிடம் தன ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன்.இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .''
பசு கூறியது,''நீ கூறுவது உண்மையே.அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''
தஞ்சை பெரிய கோவில் கட்டும் பணிநடந்து கொண்டிருந்தது.மன்னன் இராஜ ராஜன் மாறு வேடத்தில் வந்து,அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.
''அய்யா,என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று ஒருவனைக் கேட்டான்.
அவன் பதில் சொன்னான்,''நான் ஒரு சுவரை கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மன்னன் அதே கேள்வியை இன்னொருவரிடம் கேட்டான்.
அவன் சொன்னான்,''நான் ஒரு கோவிலின் மதில் சுவரைக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மூன்றாவது நபரிடம் அதே கேள்வியைக் கேட்டதற்கு அவன் சொன்னான்,''அய்யா,
வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஒரு மாபெரும் கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.''இதைத்தான் நாம் ஈடுபாடு என்கிறோம்.
ஒரு எண்ணெய்வியாபாரி செக்கில் எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்தார்.அப்போது தர்க்கம் படித்த ஞானி ஒருவர் அங்கே வந்தார்.
ஞானி; செக்கு மாட்டுக் கழுத்தில் ஏன்மணி கட்டியிருக்கிறாய்?
வியாபாரி; வேறு வேலை பார்க்க அப்பப்போ நான் பக்கத்தில் வீட்டிற்குப் போவேன்.மணி சப்தம் கேட்டால் மாடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வேன்.
ஞானி; அந்த மாடு சுற்றாமல் ,நின்ற இடத்திலேயே தலையை மட்டும் ஆட்டி சப்தம் கொடுத்தால்........?
வியாபாரி;அய்யா,எங்க மாடு உங்க அளவுக்கு தர்க்கம் படிக்க வில்லை.அதனாலே அதற்கு குதர்க்கம் தெரியாது.
வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர்.
ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடித்துக் கொன்றது. ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசையாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்றது.
கழியை எடுத்துக் கொண்டு பூனையைத் துரத்தினார் அவர்.
மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்துக் கொன்றது.
வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.ஆனந்தமும் இல்லை;ஆத்திரமும் இல்லை.
வேண்டாத எலியைக் கொன்ற போதுமகிழ்ச்சி.
வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம்;துக்கம்.
வேண்டும்,வேண்டாம் என்ற எல்லைக் குள் வராத குருவியைக் கொன்ற போது மகிழ்ச்சியும் இல்லை;துக்கமும் இல்லை.
அது மட்டுமல்ல......
பசிக்கு,தனக்கு வாய்த்த இரை எதுவாயினும் அதைப் பிடித்து தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.
இந்த மன நிலை தான் யோகியின் சமநிலை.
நண்பனே.
என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்?
நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை.
என்னை உண்மையில் தேடினால்
ஒரு கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய்.
நான் உன் நம்பிக்கையில் இருக்கிறேன் நண்பனே!
---கபீர்தாசர்
சிரமம் இல்லாத வேலை எதுவும் கிடையாது.சிரமம் வரும் போது ,நம்மை விடிவு காலத்திற்கு இட்டுச் செல்லும் பணியும் துவங்கி விட்டது என்று பொருள்.நம் உடலும் மனமும் அப்பொதுநன்கு பழக்கப்பட்டு பக்குவப்படும்.இதை விடப் பெரிய உடல் சிரமங்களையும் ,உள்ளச் சிரமங்களையும் எதிர் கொள்ள நாம் தயாராகி விடுகிறோம்.சிரமங்கள் என்பவை அனுபவப் பாடங்கள்.அவை வலிந்து திணிக்கப் படும்போது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பாடம் சிரமமாக இருக்கிறது என்பதற்காக முதல் வகுப்பிலேயே உட்கார்ந்திருக்க முடியுமா?
ஒருவர் மீது நாம் அன்பு செலுத்துகிறோம் என்றால் என்ன பொருள்?அவர்களுடைய அந்தரங்கமான பலவீனங்கள் நமக்குத் தெரிந்த போதிலும் ,அதற்காக அவர்களுடைய மற்ற தகுதிகளையும் பெருமைகளையும் குலைக்காமல் ,அந்தப் பலவீனமும் சேர்ந்தவர்கள் தான் அவர்கள்,என்று புரிந்து கொள்வது தான்.
----ஜெயகாந்தன்
ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''
ஒரு குருவிற்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள்.ஒரு சீடன் குருவிடம் சென்று ,தியானம் செய்யும் போதுபுகை பிடிக்கலாமா என்று கேட்க ,குருவிற்கு கோபம் வந்து திட்டிவிட்டார்.
அன்று மாலை அடுத்த சீடன் சாவகாசமாகப் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.முதல் சீடன் அவனிடம் சென்று குரு அவனை மட்டும் புகை பிடிக்க எப்படி அனுமதித்தார் எனக் கேட்டான்.அதற்கு அவன் சொன்னான்.''நான் ,குருவிடம் ,புகைக்கும் போது தியானம் செய்யலாமா எனக் கேட்டேன்.ஆஹா,எவ்வளவு சிறந்த விஷயம் எனக் கூறி குரு அனுமதித்துவிட்டார்.''
பெரிய பதவியில் உள்ள ஒரு அதிகாரி ஆபீசின் பின்புறமுள்ள கிணற்றில் விழுந்து விட்டார்.அவரைக் காப்பாற்ற ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.ஒரே பரபரப்பு.ஒருவர் கயிறைக் கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.இன்னும் சிலர் சட்டைகளைக் கழற்றி முடிச்சுப் போட்டு கிணற்றுக்குள் விட்டு ,''ஐயா,இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்''என்று கத்தினார்கள்.பெண்ஊழியர்கள் கிணற்றைச் சுற்றி நின்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.ஒவ்வொருவரும் தீவிரமாக அதிகாரியைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.அந்த அலுவலரை பாதி அளவு மேலே தூக்கிக் கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன் ,''இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகி விட்டது.புது ஆபீசர் வாசலுக்கு வந்து விட்டார்.''என்று தகவல் சொன்னார்.அவ்வளவுதான்.கிணற்றுக்குள் இருந்த ஆபிசரை அப்படியே போட்டு விட்டு புது ஆபிசரை வரவேற்க எல்லோரும் வாசலுக்கு ஓடி விட்டார்கள்.பதவிக்கு இருக்கும் மகிமை இது தான்!
ஒரு ஆபீசர் தன நாய்க்கு பிறந்த நாள் விழா ஒன்றிற்குத் தன வீட்டில் ஏற்பாடு செய்தார்.அலுவகத்தில் பணிபுரியும் அனைவரும் பரிசுகளுடன் வந்து விழாவை சிறப்பித்தார்கள்.ஒரே கோலாகலம்.கொண்டாட்டம்.
சில மாதங்களுக்குப் பின் அந்த ஆபீசர் பதவி ஒய்வு பெற்றார்.அதன் பின் ஒரு நாய் கூட அவர் வீட்டிற்கு வரவில்லை.
ஒருவரைப் பிடிக்காமல் போனால் ,அவர் கையில் வெறும் ஷ்பூனைப் பிடித்திருக்கும் விதம் கூட உங்களுக்கு எரிச்சலைத் தரும்.ஆனால் அதே நபர் உங்களுக்கு மிகவும் பிடித்தவராய் இருந்தால் ,அவர் முழுத் தட்டையும் ,சாப்பாட்டுடன் உங்கள் மடியில் கொட்டி விட்டால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.இந்த மனம் தான் எவ்வளவு விசித்திரமானது?
0