உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அன்பின் பரிசு.

1

Posted on : Saturday, October 04, 2014 | By : ஜெயராஜன் | In :

இஸ்லாம் நெறிகளில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த சுலைமான், மரணத்துக்குப் பின் சொர்க்கம் அடைந்தார்.இறைவன் கேட்டார்,''சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?''சுலைமான் சொன்னார்,''ஆண்டவனே,உம்மை நாள்தோறும் முறை தவறாமல் ஐந்து முறை தொழுததனால் எனக்கு கடவுளின் கருணை கிடைத்திருக்கலாம்.'' இறைவன் சொன்னார்,''இல்லை மகனே,ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா?அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்.''சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை.தொழாமல் இருந்ததற்குப் பரிசா?இறைவன் தொடர்ந்தார்,''மகனே,ஒரு குளிர் காலக் காலைப் பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு அவசரமாய்ப் புறப்பட்டாய்.கடுமையான பனியில் வாடி,குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறு பூனைக்குட்டியை ஓடிச் சென்று அள்ளி அணைத்து விரல்களால் அதன் உடலை வருடி,ஆறுதல் அளித்தாய்.மார்புறப் பூனையைத் தழுவியதால் உன் உடல் வெப்பம் கிடைத்து குட்டி சம நிலையை அடைந்தது.நெஞ்சில் அணைத்த பூனையை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது,பள்ளிவாசல் தொழுகை முடிந்து விட்டது.பிற உயிர்களிடம் காட்டும் பெருங்கருணை தான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல்.என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது.''

பக்குவம்

0

Posted on : Wednesday, September 03, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுத்துவதும் இல்லை.தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள்.மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.

கடவுள் கல்லா?

1

Posted on : Monday, September 01, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க குழுவாய் சிலர் வந்திருந்தனர்.அவர்கள் பெரியாரிடம்,''ஐயா,நாங்கள் எல்லாம் தங்களது சுய மரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.தாங்கள் இந்த சமூகத்துக்கு செய்யும் தொண்டு  மிக சிறப்பானது.ஆனாலும் எங்களுக்கு உங்கள் மீது சிறு வருத்தமும் உண்டு.நாங்கள் அனுதினமும் வணங்கும் ஆண்டவன் சிலைகளை நீங்கள் வெறும் கல்  என்கிறீர்கள்.அப்படி சொல்வதை மட்டும் நீங்கள் நிறுத்தினால் நாங்கள் மிக மகிழ்வடைவோம்,'' என்றார்கள். பெரியார், ''கல்லை கல்  என்று சொல்லாமல் வேறு எப்படி  அய்யா சொல்வார்கள்?''என்று கேட்டவர்,''சரி நீங்கள் என் பின்னால் வாருங்கள்,''என்றார்.அவர் எங்கே செல்கிறார் என்பதை ஆவலுடன் கவனித்த அவர்கள்,அவர் ஒரு கோவிலுக்குள் செல்வதைக் கண்டதும் மிக வியப்புக்குள்ளானார்கள் .பெரியார் நேரே கடவுளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த பூசாரியிடம் சென்றார்.அவரிடம், பெரியார் கேட்டார்,''ஐயா,இந்த சாமி சிலை பொன்னால் ஆனதா,இல்லை ஐம்பொன்னால் ஆனதா?''அர்ச்சகர் சொன்னார்,''இல்லை ஐயா,இது கல்தான்,''உடனே பெரியார் வந்திருந்தவர்களிடம் திரும்பி சொன்னார்,''ஐயா,பூசாரி சொன்னதைக் கேட்டுக் கிட்டீங்களா?அவரே இது கல்தான் என்று சொல்லிவிட்டார்.இப்போதாவது நான் சொன்னது உண்மை என்று நம்புகிறீர்களா?''வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

திதிகள்.

0

Posted on : Thursday, August 28, 2014 | By : ஜெயராஜன் | In :

பலர் அன்றாட வாழ்வில் முக்கிய  காரியங்களை திதி பார்த்து செய்கின்றனர்.திதியின் பேர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள் அவற்றின் பொருள் தெரியுமா?அமாவாசை மற்றும்  பவுர்ணமியில் இருந்து
ஒவ்வொரு நாளும் அவை மாறுகின்றன.
பிரதமை=முதன்மை,அதாவது முதல் நாள்.(நாட்டின் முதல்வன் பிரதமர்)
துவிதியை.துவி என்றால் இரண்டு.(சைக்கிளைதுவிச்சக்கரவண்டி என்பர்)
திரிதியை.இதற்கு மூன்றாவது என்று பொருள்.
சதுர்த்தி.சதுர்  என்றால் நான்கு.(சதுரம் என்பது நான்கு பக்கங்களை உடையது.)
பஞ்சமி.பாஞ்ச் என்றால் ஐந்து.
சஷ்டி என்றால் ஆறு.
சப்தமி.சப்த என்றால் ஏழு.(சப்த கன்னியர் என்று ஏழு கன்னிமார் தெய்வங்களைக் குறிப்பிடுவர்.)
அஷ்டமி.அஷ்ட என்றால் எட்டு.(உடலில் எட்டு கோணல்கள் இருந்தால் அஷ்ட கோணல் என்பர்.)
நவமி.நவம் என்றால் ஒன்பது.(நவராத்திரி.)
தசமி.தசம் என்றால் பத்து.(தசாவதாரம் என்பது பத்து அவதாரம்)
ஏகாதசி.ஏகம் +தசம்.அதாவது ஒன்று+பத்து=பதினொன்று.
துவாதசி.துவம்+தசம்.அதாவது இரண்டு+பத்து=பன்னிரண்டு.
திரயோதசி.திரியோ+தசம்.அதாவது மூன்று+பத்து.
சதுர்த்தசி.சதுர் +தசம்.அதாவது நான்கு+பத்து.
பதினைந்தாவது நாள் அமாவாசை அல்லது பவுர்ணமி.

விமரிசனம்

0

Posted on : Wednesday, August 27, 2014 | By : ஜெயராஜன் | In :

விமரிசனங்கள் பல வகையானவை.அவற்றை எப்படி எதிர்கொள்வது?
 
காகித அம்பு:
சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி,மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.
கால்பந்து:
சில விமரிசனங்கள்,விளையாட்டாக,உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.
கண்ணாடி:
சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
கத்தி:
சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும்.நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பதுபோல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள்.விலகி விடுங்கள்.
































  

ஐன்ஸ்டின் பொன்மொழிகள்-2

0

Posted on : Tuesday, August 26, 2014 | By : ஜெயராஜன் | In :

வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதில்லை.
******
நாம் வீழ்ச்சி  அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல நண்பர்கள் வருவார்கள்.நாம் உயர்வு அடைந்து விட்டாலோ,தங்களுடைய உதவியால்தான் என்று பறை அடிப்பார்கள்.
******
எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும்.கெட்டவர்களுக்கு அது கிரீடம். நல்லவருக்கு அது நஞ்சு.
******
வயிற்றெரிச்சல் தனது வன்ம விஷத்தையே உறிஞ்சிக் குடித்துத் தனக்குத்தானே நஞ்சிட்டு நாசப் படுத்திக் கொள்ளும்.
******
வழக்கம் என்பது வன்மையான,வஞ்சகமான ஒரு வாத்தியார்.அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தின் காலடியை நம் மீது ஊன்றி விடுவார்.
******
நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம்,பயன்,நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
******
தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்ல முயற்சி   செய்யக் கூடாது.
******
பேராசைக்குக் கூட  நிறைய சொத்து உண்டு.ஆனால் பொறாமைக்கோ, வேதனை விரக்தியைத் தவிர வேறு எந்த லாபமும் இல்லை.
******
புகழை நோக்கி ஓடாதீர்கள்;புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.
******
என்னிடம் உள்ள மிக சிறந்த நற்பண்பில் கூட ஏதோ கொஞ்சம் பாவத்தின் சாயம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்.
******
 சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும்.பெருந்துன்பங்கள் ஊமையாக்கும்.
******
தேவை என்பது ஒரு மூர்க்கமான வாத்தியாரம்மா.
******
தலைக் கனம் என்பது இரண்டு வகை.தன்னைப்  பெரிதாக நினைப்பது.முதல் வகை.தலைக்கனமுள்ள பிறரைத் தாழ்வாக நினைப்பது இரண்டாம் வகை.
******
செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்தைப் பொறுத்தது.
******
சட்டங்கள் இல்லாவிடில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவோம்.
******
சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம்,கர்வம்,பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
******
படைக்கலங்களின் முழக்கம்,சட்டத்தின் குரலை மூழ்கடித்து விடுகிறது.
******

ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்.

0

Posted on : Monday, August 25, 2014 | By : ஜெயராஜன் | In :

ஆசையும்,இன்பம் துய்த்தலுமே நம்மை ஆத்திரக்காரர்களாக உருமாற்றுகின்றன.
******
மூடனுக்குக் கல்வியறிவின் மீது கோபம்;குடிகாரனுக்கு யோக்கியன் மீது ஆத்திரம்;ஒழுக்க சீலனுக்கு அயோக்கியத்தனம் செய்யச் சொல்வதே தண்டனை.தேகப் பயிற்சியே சோம்பேறிக்குத் தண்டனை.
******
மக்கள் தங்கள் ஆசைகளுக்கும்,விசமத்திற்கும் வன்செயலுக்கும் உற்சாகம் என்னும்  பெயரை சூட்டுகிறார்கள்.
******
நமது மூளையை மற்றவர்களின் மூளையோடு தேத்தப் பள பளப்ப்பாக்கிக் கொள்வது நல்லது.
******
நல்ல சுபாவமும்,நேர்மைப் பயிற்சியும் இல்லாதவனுக்கு மற்ற அறிவனைத்தும் தொந்தரவுதான்.
******
பெண்ணொருத்தி தன் அழகை  அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த வித சித்திரவதையையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பாள்.
******
ஒரே மாதிரியான இரு தலைமுடியோ,இரு தானியங்களோ,இரு கருத்துக்களோ,இந்த உலகில் இருந்ததில்லை.வேறுபாடு தான் இந்த உலகின் பொதுவான பண்பு.
******
மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சில நேரங்களில் வெற்றி பெறுவதுண்டு.
******
தடைகளை நீக்க வன்முறை நிரந்தரமாக்கப் படும்போது பேரழிவே எஞ்சியிருக்கும்.
******
தலைமையினைக் கேள்வி கேட்க முடியாத செயல்பாடுகள் உண்மைக்குப்
புறம்பானவைகளாகவே இருக்கும்.
******
ஒரு பொருளைப் பார்ப்பதால் மட்டும் முக்கியத்துவம் ஏற்படாது.எப்படிப் பார்க்கிறோம் என்பதனால்தான் ஏற்படும்.
******