உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-55

0

Posted on : Monday, June 30, 2014 | By : ஜெயராஜன் | In :

நீ நொந்து போயிருந்தால் இறந்த காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள். மிகுந்த ஆர்வத்துடன் இருந்தால் எதிர் காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்.
நல்ல அமைதியுடன் இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்.
********
இரவு நம் கண் பார்வையிலிருந்து உலகை மறைக்கலாம்.ஆனால் இந்த அண்டத்தைக் காட்டுகிறதே!
********
பெரிய மனிதர்களின்  கோபம், எதிரிகளின் முழு சமர்ப்பணத்தைத்தான் எதிர்பார்க்கிறது.
********
பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன.அச்சம் வஞ்சகமாகிறது.வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் நஞ்சாக்குகிறது.
********
அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு.
********
வல்லமை என்றும் கீழோரால்  வெறுக்கப்படுகிறது.
********
காதலிலிருந்துதான் வாழ்க்கைக்கு உண்மை இன்பம்பெற முடியும்.நோய்க்குப் பரிகாரமும் அதுவே.பரிகாரம் இல்லாத நோயும் அதுவே.
********
அனுபவம் என்பது தேர்வை முதலில் நடத்தி விட்டுப் பின்னர் பாடம் சொல்லிக் கொடுப்பது.
********
மனிதனின் அச்சம் தான் நரகம்.
அவனது பேராசைதான் சொர்க்கம்.
********
சந்தேகத்தைக் கட்டுப் படுத்தவே நம்பிக்கை தேவைப் படுகிறது.
********
அகந்தையாலோ,ஆசையாலோ,அச்சத்தாலோ எடுக்கும் முடிவுகள் தீங்கையே கொண்டுவரும்.
********

கலீல் ஜிப்ரான் -8

0

Posted on : Monday, June 16, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சாமியார் கோவில் வாசலில் நின்று மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினர்.
சில நாட்கள் கழித்து அதே கோவில் வாசலில்  ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான்.கேட்டவர் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில்  அவர்கள் எங்கே,தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள்.கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.
இன்னும் சில நாட்கள் கழிந்தன.புதிதாக ஒரு மனிதன் வந்து,ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான்.இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது.பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு;ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா மன்னிப்பாரா என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.
அடுத்து வந்த வேறு ஒருவன்,''கடவுள் மூன்று பேர் உண்டு.அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு,''என்று சொன்னான்.இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர்.கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது  பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும்  அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர்
அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.

கலீல் ஜிப்ரான் -7

0

Posted on : Sunday, June 15, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு பூனை ஒரு நாயிடம் சொன்னது,''நண்பா,நீ முழு மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்.தொடர்ந்து நீ அவ்வாறு செய்தால் ஒரு நான் இறைவன் உனக்கு அருள் புரிவார்.இதில்  சந்தேகத்திற்கே இடமில்லை.இறைவனின் அருட்பார்வை உன் மீது பட்டுவிட்டால் போதும்.வானிலிருந்து எலிகள் மழையாய்ப் பொழியும்.நீ விரும்பும் அளவுக்கு அள்ளியள்ளி உண்ணலாம். ''இதைக் கேட்ட நாய்,விழுந்து விழுந்து சிரித்தது.அது பூனையிடம் சொன்னது, ''ஏ,முட்டாள் பூனையே,எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்து விட்டாயா?என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்,'மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் எலி மழை பொழியாது,எலும்பு மழை தான் பொழியும்.அதை நாம் ஆசை தீரக் கடித்துத் தின்று மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.''
அவரவர் பாடு அவரவர்க்கு.

கலீல் ஜிப்ரான் -6

0

Posted on : Saturday, June 14, 2014 | By : ஜெயராஜன் | In :

சாலையில் ஒருவன் குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தான் அப்பக்கம் ஒரு தத்துவஞானி வந்தார்.அவர் அவனைப் பார்த்து,''ஐயோ பாவம்,உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.உன் வேலை மிகக் கடினமானது.அசிங்கமான வேலையும் கூட,''என்றார்.அதை ஒப்புக் கொண்ட அவன்,''ஐயா,என் மீது பரிதாபம் காட்டியதற்கு நன்றி.அது சரி,நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?''என்று கேட்டான்.தத்துவ ஞானி சொன்னார்,''நான் மனிதர்களைப் படிப்பவன்.அவர்களின் மனதையும் அவர்களுடைய செயல்களையும் அவர்களின் ஆசைகளையும் படிக்கிறேன்,''இதைக் கேட்டதும் அந்த ஆள் மெல்ல சிரித்தபடி தனது வேலையைத் தொடர்ந்த வண்ணம் சொன்னான்,''நீங்களும் பாவம்தான் ஐயா.நானும் உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன்.''
மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களும்,அவனது செயல்களும் ஆசைகளும் அவ்வளவு மோசமான குப்பைகள்!

கலீல் ஜிப்ரான் -5

0

Posted on : Friday, June 13, 2014 | By : ஜெயராஜன் | In :

நான் ஒருதுறவியை சந்திக்க சென்றபோது அங்கு ஒரு திருடன் வந்தான். களைத்திருந்தாலும் துறவியை திருடன் பார்த்ததும் பரவசத்துடன் அவர்முன் மண்டியிட்டு,''ஐயா,நான் செய்த பாவங்கள் பெரும் பாரமாக என்னை அழுத்துகின்றன.என்னைக்  காப்பாற்றுங்கள்.''என்றான்.துறவி புன்னகை புரிந்தவாறே,''மகனே,நானும் பாவங்கள் செய்துள்ளேன் .அவை என்னையும் அழுத்துகின்றன.''என்றார்.திருடன் முகத்தில் அதிர்ச்சி.அவன் பதட்டத்துடன் சொன்னான்,''ஐயா,அப்படியெல்லாம் பேசாதீர்கள்.நீங்களும் நானும் ஒன்றா?நான் ஒரு திருடன்;பொல்லாதவன்.''உடனே துறவி, ''மகனே, நானும் ஒரு திருடன்தான்;பொல்லாதவன்தான்.''என்றார்.திருடன்,''ஐயோ,நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை.நான் ஒரு கொலைகாரன்.நான் கொலை செய்தவர்களின் கதறல் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.'' என்றான்.துறவி,''நானும் கொலைகாரன் தான்.உன் அனுபவம் எனக்கும் உள்ளது,''என்றார்.இதைக் கேட்ட திருடன், ஆச்சரியத்துடன்  எழுந்து நின்றான்.பின் அவன் நடையில் ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வெளியே சென்றான்.அவன் பார்வை மறைந்ததும் நான் துறவியிடம் ,''ஏன் இப்படி நீங்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்ததாக சொன்னீர்கள்?அவனுக்கு வரும்போது உங்கள் மீது இருந்த மரியாதையும் நம்பிக்கையும் போய் விட்டன மறுபடியும் அவன் தறுதலையாகத் திரியப் போகிறான்,''என்றேன்.துறவி மெலிதாகப் புன்னகைத்தவாறே சொன்னார்,''மகனே அவனுக்கு என் மீது நம்பிக்கை போய் விட்டது என்பது உண்மைதான்.ஆனால் அவன் இங்கு வரும்போது இருந்ததை  விட அதிக மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் திரும்ப சென்றிருக்கிறான்.''அப்போது தூரத்தில் எங்கோ,அந்தத் திருடன் பாடிய பாடலிலிருந்த மகிழ்ச்சி அந்த மலையையும் பள்ளத்தாக்கையும் நிறைத்தது.

கலீல் ஜிப்ரான் -4

1

Posted on : Thursday, June 12, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நதி  கடலில் கலப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தது.அதில் இருந்த இரண்டு நீரோடைகள் தமக்குள் பேசிக் கொண்டன.முதல் ஓடை அடுத்ததிடம்
கே ட்டது,''நண்பா,உன் பயணம் நல்லபடியாக இருந்ததா?'' இரண்டாம் ஓடை சொன்னது,''அதை ஏன் கேட்கிறாய்.நான் வந்த வழி மிக மோசமாக இருந்தது. சரியான வழி நடத்துபவர் இல்லாமல், கண்ட பாதைகளில் பல சோம்பேறி மனிதர்களைக்கடந்து வந்தேன்.அது சரி,உன்  பயணம் எப்படி இருந்தது?''முதல் ஓடை சொன்னது,''நான் வந்த பாதை எங்கும் ஒரே சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம். மலைப்பாதையில் நறு மணம் மிக்க மலர்களையும் மரங்களையும் கடந்து வந்தேன்.அழகிய ஆண்களும் பெண்களும் என் நீரை அள்ளிக் குடித்தார்கள். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தார்கள்.''இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நதி அதட்டலாக சத்தம் கொடுத்தது,''என்ன சலசலப்பு அங்கே?எல்லோரும் பேசாமல் என்னோடு வாருங்கள்.நாம் இப்போது பெரிய கடலில் கலக்கப் போகிறோம்.இனி எதுவும் பேசாமல் என்னோடு வந்தாலே போதும்.கடலுக்குள் கலக்கும்போது நம்முடைய பழைய அனுபவங்களோ, மகிழ்ச்சிகளோ,வருத்தங்களோ,சலிப்புகளோ எதுவும் ஞாபகம் இருக்கப் போவதில்லை.நம் கடல் அன்னையின் இதயத்தை அடைந்தபின் நாம் எல்லோரும்சமம்தான்.''

கலீல் ஜிப்ரான் -3

0

Posted on : Wednesday, June 11, 2014 | By : ஜெயராஜன் | In :

இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர். இருவரில் ஒருவருக்குத்தான்.நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்.சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான். அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்.திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,''உனக்கு  நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?'' இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத்  தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது.நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில்  அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.''

கலீல் ஜிப்ரான்-2

0

Posted on : Tuesday, June 10, 2014 | By : ஜெயராஜன் | In :

மன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன்.அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,''இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.''அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்?''என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,''என்னைப் போல
எ ப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்?''என்று கேட்டான்.என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.'' பின்னர் அவன் என்னிடம்,''நீ இங்கே எப்படி வந்தாய்? என்னைப் போல்தானா?'' என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான்  வந்திருப்பதாகக் கூறினேன்.அவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்,''ஓஹோ,அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா?''

கலீல் ஜிப்ரான்

2

Posted on : Monday, June 09, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிப்பி இன்னொரு சிப்பியிடம் சொன்னது,''ஐயோ,என்னால் வலி தாங்க முடியவில்லையே!''இரண்டாவது சிப்பி காரணம் கேட்க முதல்  சிப்பி, ''என்னுள் ஒரு கனமான உருண்டைப் பந்து ஒன்று சுழல்வது போல இருக்கிறது.அதனால் ரொம்பவலி.''என்றது.இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.மிகுந்த பெருமையுடன் அது கூவியது,''நல்ல வேளை,எனக்கு அப்படி எந்த வலியும் ஏற்படவில்லை. நான் நலமுடன் உள்ளேன்.இறைவனுக்கு நன்றி.''சிப்பி இரண்டும் பேசிக் கொண்டிருந்ததை ஒரு நண்டு கேட்டுக் கொண்டிருந்தது .அது இரண்டாவது சிப்பியிடம் சொன்னது,''உனக்கு தற்போது எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம்.உன் நண்பனை சிரமப்படுத்தும் அந்த வலி,இன்னும் சில நாட்களில் ஒரு அழகான முத்தை உருவாக்கும்.வலியைத் தாங்க விரும்பாத நீ எப்போதும் இப்படி வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான்.''
There is no gain without pain.