உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒத்திப் போடுதல்

3

Posted on : Wednesday, December 19, 2012 | By : ஜெயராஜன் | In :

வெற்றிகள் எல்லாம் எப்போதும் வெகுமானமாக அமைந்து விடுவதில்லை. தோல்விகள் எல்லாம் எப்போதும் அவமானம் தருபவையாக இருந்து விடுவதில்லை.பல சமயம் வெற்றிகள் போதை ஊட்டுவதாக இருக்கின்றன.பல சமயம் தோல்விகள் பாதை காட்டுபவையாக அமைந்து விடுகின்றன.சில சமயம் சில செயல்களை மிகுந்த ஆர்வத்துடன்  செய்யும் போது தேவைக்கு அதிகமாக நேரத்தை அதில் செலவழித்து விடுகிறோம். அதனால் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய இதர பணிகளை ஒத்திப் போடுகிறோம்.மேலும் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே சில வேலைகளைத் துவங்காமலேயே விட்டு விடுகிறோம்.எதையும் எந்தக் குறையும் இன்றி செய்வேன் என்று சொல்லும் பலர் எந்த ஒன்றையும் செய்யாமலே இருந்து விடுவதை நாம் காண்கின்றோம் இதற்கு முன் இதை நான் செய்ததில்லை ,முதல் முறையாக செய்ய வேண்டியிருக்கிறது,அதில் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்று எண்ணுவதால் காரியங்களை ஒத்திப் போடுவதும் உண்டு.அதுவே பின்னர் பெரும் பிரச்சினை ஆகி விடுகிறது.சில சமயம் பிறருக்கு உதவி செய்கிறோம் என்று கூறிக் கொண்டு அடுத்தவர் வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துவிட்டு,தனது காரியங்களை ஒத்திப் போடுவதுண்டு.உரிய நேரத்தில் உடனுக்குடன் பணிகளை செய்து முடிக்கும் பழக்கம் இல்லாமையும் ஒத்திப் போடுவதற்கு ஒரு காரணம்.காலத்தை திட்டமிட்டு நிர்வகிப்பதன் மூலமாக மட்டும் இத்தீய ஒத்திப் போடுதலை ஒத்திப் போட்டு விட முடியாது.பின் என்ன செய்ய வேண்டும்?நமது மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளுதல் தான் அதற்கு ஒரே வழி.

மீன் காப்பாற்றியது

1

Posted on : Wednesday, December 19, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா தனது பயணத்தின்போது ஒரு பெரும் ஞானியை சந்தித்தார்.அவரைப் பார்த்ததுமே அவருக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.எனவே அவரை அணுகி வணங்கினார்.ஒரு பழுத்த மதவாதிபோல முல்லா தோன்றியதால் ஞானியும் அவரை மகிழ்வுடன் வரவேற்றார்.அந்த ஞானி, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ,மீன்கள் ஆகியவற்றின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்.இதை அங்கு வருமுன்னேயே முல்லா கேள்விப்பட்டிருந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது முல்லா,''ஒரு சமயம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னை ஒரு பெரிய மீன்தான் காப்பாற்றியது,'' என்றார்.ஞானிக்கு ஆர்வம் உண்டாகி அந்த  நிகழ்ச்சியை விளக்கமாக சொல்ல சொன்னார்.முல்லா சொன்னார்,''ஒரு முறை கடல் கரை ஓரமாக நீண்ட பயணம் மேற்கொண்டேன்.ஆள் யாரும் இல்லாத இடம் ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு கடும் பசி ஏற்பட்டது.இரண்டு நாளாக சாப்பிடவில்லை.இனிமேலும் தாங்க முடியாத நிலை.வேகமாக கடற்கரைக்கு ஓடி சென்று ஒரு பெரிய மீனை பிடித்து தீயில் வாட்டி சாப்பிட்டேன்.அந்த மீன் மட்டும் இல்லாவிடில் நான் அன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன்.''

அடங்கா சிறுவன்

0

Posted on : Tuesday, December 18, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறுவன் தனது  தோளில் எப்போதும் ஒரு ட்ரம்மை வைத்து அடித்துக் கொண்டே இருப்பான்.அதை அவன் மிக ஆவலுடனும் ரசித்தும் செய்து கொண்டிருந்தான்.ட்ரம் அடிக்க அவனுக்குக்கால நேரம் என்று எதுவும் கிடையாது நினைத்த போதெல்லாம் அடித்துக் கொண்டிருப்பான்.ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாவிட்டாலும் போகப்போக சுற்றியிருந்தவர்களுக்கு அது எரிச்சல் தருவதாக இருந்தது.பலரும் அறிவுறுத்தியும் அவன் மாறுவதாக இல்லை.ஒரு பெரியவர் ட்ரம் அடிப்பதை நிறுத்தா விட்டால் காதில் ஓட்டை போடுவேன் என்று பயமுறுத்தினார்.அதற்கு அவன் மசியவில்லை. ஒருவர்,''இது கோவிலில் செய்யும் புனிதமான வேலை இதை எப்போதும் செய்யக் கூடாது ''என்று அறிவுறுத்தினார்.சிறிது நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் அவன் அடிக்க ஆரம்பித்தான்.ஒருவர் அவனுக்கு தியானம்சொல்லிக் கொடுத்தார்.தியான நேரம் தவிர மற்ற நேரம் தரம் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.எல்லோரும் அவர்களுடைய முயற்சிகளில் தோல்வியையே தழுவினர்.ஆனால் அவன் ட்ரம்மிலிருந்து வரும் கொடூரமான ஒலி  அவர்களை இம்சைப் படுத்தியது.அப்போது வெளியூரிலிருந்து வந்த பெரியவர் விஷயம் அறிந்து அந்த சிறுவனிடம் சென்று,''தம்பி,இந்த ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று தெரியுமா?''என்று கேட்டார்.அவன் தெரியாது என்றான்.அவர்,'' எனக்கும் தெரியாது,உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமா?''என்று கேட்க அவனும் ஆர்வ மிகுதியில் சரியென்று சொன்னான்.உடனே அவர் ஒரு கத்தியை வைத்து ட்ரம்மைக்  கிழித்துப் போட்டார்.ஊர்க்காரர்களின் பிரச்சினை தீர்ந்தது.

தோல்வி மனப்பாங்கு

0

Posted on : Tuesday, December 18, 2012 | By : ஜெயராஜன் | In :

பார்க்கின்ற பொழுதில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் நமக்கு சாதகமானதை மட்டும் நம்புகின்ற ஒரு மன நிலையையே மனப்பாங்கு அல்லது கண்ணோட்டம் என்கின்றோம்.தோல்வி பற்றி பொதுவாக நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது?
நாம் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது தோல்வியைத் தழுவி விடுவோமோ எனப் பயந்து விடுகிறோம்.வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத்  தழுவி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கின்றோம். .ஆனால் அவை நடை முறை சாத்தியமாக இருப்பதில்லை.எடுத்துக் கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும், உடனடியாக சரியாக செய்து விட வேண்டும் என்ற பதட்டமும், கால இடைவேளை தேவைப்படுகின்ற வேலைகளை அவசரமாக செய்வதாலும், அகலக்கால் வைத்து விடுவதாலும், பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் அமைந்து விடுவதாலும், தொடங்கும் போது உள்ள ஆர்வம் தொடர்ந்து இல்லாமல் போய்விடுவதாலும் நாம் பல முறை தோல்வியை தழுவி விடுகிறோம்.
தோல்வி என்பது வலிக்கும்.ஆனால் அது புதிதாக உடல் பயிற்சி செய்பவருக்கு உண்டாகும் வலியைப் போன்றதுதான் என்பதனை உணர வேண்டும்.தோல்வி உடனடியாக துன்பத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் நன்மை பயப்பதாக இருக்கும்.
தோல்வி என்பது கசக்கும்.இது வியாதியை குணமாக்கும் மருந்தின்கசப்பைப் போன்றதுதான் என்பதனை அறிய வேண்டும்.தவிர்க்க முடியாததும்  அவசியமானது என்றும் அது நமக்கு உமர்த்துகிறது.
தோல்வியினால் நாம் நகைப்புக்கு உள்ளாகிறோம்.இது நமக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது.இதனால் தீயவர் நட்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது.தோல்விகள், நமக்கு சிந்திக்க, திட்டமிட, புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளிக்கிறது.
தோல்வியும் இயற்கையானதே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்வி அளிக்கும் அனுபவத்தினால் நாம் நம் வழிகளையும் முறைகளையும் சீர்படுத்திக் கொள்ள முடிகிறது.மாற்றத்தை  நம்மிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் நமக்குப் புரிகிறது.தோல்வி என்பது தற்காலிகமானது.அதைப் புரிந்து கொண்டு அதில் வெற்றிக்கான விதைகளைத் தேடுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கிண்டல்,கேலி.

1

Posted on : Saturday, December 15, 2012 | By : ஜெயராஜன் | In :

கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார்.''முப்பது வயதில் நீ ஒரு சமதர்ம வாதியாக இல்லாவிட்டால் உன்னிடம் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல முப்பது வயதுக்குப் பின்னும் நீ சமதர்மவாதியாகத் தொடர்ந்தால்  அப்போதும் உன்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்''என்று சொன்னவர் அவர்.
ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச்
சொன் னார்.ஒருவர் 'கொட்டி' என்றும் இன்னொருவர் 'கோட்டி' என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI  என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?''என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சோம்பேறிகள்

1

Posted on : Friday, December 14, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு ஒரு பலசரக்குக் கடையில் வேலை கிடைத்தது.சரக்கு அறையிலிருந்து மூட்டைகளைத் தூக்கி வந்து லாரியில் ஏற்ற வேண்டியது அவர் வேலை.அவர் அதே வேலை பார்க்கும் மற்றவர்களைப் பார்த்தார். அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூடைகளைத் தூக்கி சென்றனர்.முல்லா முயன்று பார்த்தார்.அவரால் இரண்டு மூடைகளை ஒரே நேரத்தில் தூக்க முடியவில்லை.அதனால் ஒவ்வொரு மூடையாகத் தூக்கிச் சென்று ஏற்றினார்.அவரைக்கவனித்தமுதலாளி,''முல்லா,நீ மட்டும் ஏன் ஒவ்வொரு மூடையாகத் தூக்குகிறாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார், ''முதலாளி, அவர்கள் எல்லாம் சுத்த சோம்பேறிகள்.இரண்டு மூடை தூக்க இரண்டு தடவை இங்கும் அங்கும் நடக்க வேண்டும் என்று பயந்து இரண்டிரண்டு மூடைகளாகத் தூக்குகிறார்கள்.''
******
''முல்லா,உண்மையின் விலை என்ன?''என்று ஒருவர் கேட்டார்.முல்லா சொன்னார்,''உண்மை வேண்டும் என்றால் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டும்,''நண்பர் ,''அது ஏன் அப்படி?''என்று கேட்டார்.முல்லா சிரித்துக் கொண்டே சொன்னார்,''இது பொருளாதாரத்தின் சாதாரண விதி.
அபூர்வமான பொருட்களுக்கு அதிக விலை கொடுத்துத் தானே ஆக வேண்டும்?''
******

ஏற்றுக் கொள்ளுங்கள்.

1

Posted on : Friday, December 14, 2012 | By : ஜெயராஜன் | In :

காற்றோடு சண்டை போட முடியுமா?கடலோடு மோதிப் பார்க்க முடியுமா?நம்மால் முடியாத பல விசயங்கள் உள்ளன.நிச்சயமாக நேரிடப் போகின்ற ஒன்றை உங்களால் தடுத்து நிறுத்தி விட முடியுமா?மலையை உடைக்கிறேன் பார் என்று மண்டையை உடைத்துக் கொள்ளலாமா?ஆகவே உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
நம்மால் தடுக்க முடியாத , மாற்ற முடியாத மற்றும் புரிந்து கொள்ள முடியாத விசயங்கள் உலகில் நிறைய உள்ளன.நம்மால் மாற்ற முடியாதவைகளுக்கு எதிராக ஏன் போரிட வேண்டும்?தனது கட்டுப் பாட்டிற்கு மீறி நடக்கக் கூடியவைகளை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.தனது நிகழ் காலக் குறைகளையும்,பிறரும் தங்களது குறைகளுடனேயே வாழ்கிறார்கள் என்ப தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் .எதை நீங்கள் தவிர்க்க முடியாதோ,எதை நீங்கள் மாற்றமுடியாதோ,அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

என்ன காரணம்?

1

Posted on : Thursday, December 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதர் தான்,'மனைவிக்கு பயப்படாதவர்கள்சங்கம்'என்று ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் தகுதியுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் கூடுமாறும் அறிவிப்பு கொடுத்திருந்தார்.அதற்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.முல்லாவும் அங்கு ஆவலுடன் சென்றார்.தலைவர்,''ஆரம்பத்திலேயே இவ்வளவு பேர் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்,உண்மையிலேயே மனைவிக்குப் பயப்படாதவர்கள் மட்டும் இங்குள்ள நாற்காலிகளில் அமருங்கள்.மற்றவர்கள் தயவுசெய்து வெளியே போய் விடுங்கள்,'' என்றார்.அனைவரும் அமர்ந்து விட்டனர்.முல்லா மட்டும் நாற்காலியில் அமரவில்லை.தலைவர் காரணம் கேட்க முல்லா சொன்னார்,''எனக்கும் உட்கார ஆசைதான்.ஆனால் நேற்று இரவு என் வீட்டில்  நடந்த சண்டையில் என் மனைவி அடி பின்னிவிட்டாள்.உடலெங்கும் வேதனையாய் இருக்கிறது.அதனால் எதிலும் உட்காரக்கூட என்னால் முடியவில்லை.''

கோபத்திலிருந்து விடுதலை

0

Posted on : Thursday, December 13, 2012 | By : ஜெயராஜன் | In :

கோபம் என்பது ஒரு அரக்ககுணம்.ஒருவருக்கொருவரிடையே உள்ள மன வேறுபாட்டினாலும் ,மற்றவர்களின் பேச்சை,செயலை ஏற்றுக் கொள்ள முடியாத போதும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும்,பலவீனங்களையும் பார்த்து சகித்துக் கொள்ள முடியாததாலும் மனிதனுக்கு கோபம் வருகிறது. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
*மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத போதும்,ஏற்றுக் கொள்ள இயலாத போதும்,எதிர்க்கும் போதும் அன்புடன் அவர்களுக்கு விளக்கி சொல்லி  திருத்த முயல வேண்டும்.
*உங்கள் கோபத்தை உங்களாலேயே அடக்க முடியாதபோது அடுத்தவர்களின் குறைகளை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்?கோபித்துக் கொள்வதை விடுத்து அவர்களைத் திருத்த முயற்சி செய்யலாமே?
*விரோதிகளிடம் பேசும்போது கூட அன்பான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள்.இதனால் உங்கள் கோபம் தலை தூக்காது.மற்றவர்களின் கோபமும் தணிந்து விடும்.
*அதிக வெப்ப நிலையில் உள்ள இரும்பைக்கூட குளிர்ந்த இரும்பு வெட்டி விடுகிறது.ஆகவே காரசாரமாகப் பேசுபவரிடம் அமைதியாகப் பேசினால் உறுதியாக வெற்றி கிடைக்கும்.
*மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும்போது நாமும்  துன்பம் அடைகிறோம் என்பதனை உணர வேண்டும்.அமைதியாக காரியங்களை செய்து வெற்றி காண வேண்டும்.
*சிறு கோபமோ,பெரிய கோபமோ முதலில் ஏதோ பலன் கிட்டியதுபோலத் தோன்றினாலும் நன்கு யோசித்தால் அதில் நிரந்தரப் பயன் ஏதும் இல்லை என்பது விளங்கும்.எல்லாவற்றிற்கும் மேல் கோபத்தினால் நாம் விலை மதிப்பற்ற நமது நிம்மதியை இழந்து விடுகிறோம்.
*மற்றவர்கள் நம்மீது கோபித்தால் அது நமக்குப் பிடிக்கிறதா?அதேபோல நமது கோபமும் அடுத்தவர்களுக்குப் பிடிக்காதல்லவா?ரோஜாவாக இருந்தால்  எவ்வளவு அழகாக இருக்கும்?அதை விடுத்து ஏன் ரோஜாவின் முள்ளாக இருக்க வேண்டும்?தீர்க்கமாக சிந்தித்தால் கோபம் நம்மைவிட்டு தானாகவே ஓடிவிடும்!

வாக்குமூலம்

2

Posted on : Wednesday, December 12, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்.கணவன்,மனைவி இருவருமே கருப்பு.மூன்று குழந்தைகளும் கருப்பு.இப்போது நான்காவது குழந்தை பிறந்திருக்கிறது.அந்த குழந்தை சிவப்பாக பிறந்துள்ளது.கணவனுக்கு மனைவியின் மீது கடும் சந்தேகம் ஏற்பட்டது.கணவன் மனைவியிடம் உண்மையை சொல்லுமாறு பலவாறு கேட்டான்.மனைவி கடைசிவரைஇந்தக் குழந்தைக்குத் தகப்பன் அவன்தான்என்று கூறிக்கொண்டே இருந்தாள்.ஒரு நிலையில் அவன் கோபம் கட்டுக்கடங்காமல் போனபோது அவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுவிட்டு,''சாகும் முன்பாவது உண்மையை சொல்லிவிடு,''என்று கோபமாகக் கேட்டான்.அவள் அப்போதும் ,''இந்தக் குழந்தை உன் குழந்தை தான்,''என்று அவன் தலையில் கைவைத்து சத்தியம்செய்தாள்.கணவனுக்கு தான் தவறு செய்து விட்டோமோ என்கின்ற ஆதங்கம் வந்து விட்டது.கனிவுடன் அவளை நோக்கினான்.அப்போது அவள் அவனை அருகில் அழைத்து,''நான் சாகும் முன் நீண்ட நாட்களாக உங்களிடம் மறைத்த உண்மையை இப்போது சொல்லி விடுகிறேன்.இந்தக் குழந்தை உங்கள் குழந்தை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.ஆனால்முதல் மூன்று குழந்தைகளும் உங்கள் குழந்தைகள் அல்ல.''

வாதத்திறமை

1

Posted on : Tuesday, December 11, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு புரட்சியாளர்.பொது உடைமைவாதி.தீவிர நாத்திகவாதி.அவர் இறந்தவுடன் அவரை நரகத்திற்குக் கொண்டு போனார்கள்.ஒரு வாரம் கழிந்தது..நரகத்தின் அதிபதி மிகுந்த விசனத்துடன் சொர்க்கத்தின் அதிபதியைப் பார்க்க வந்தார்.விபரம்என்ன என்று கேட்க அவர் சொன்னார்,''ஒரு புரட்சியாளரை என்னிடம் அனுப்பியிருக்கிறார்கள்.அவரோட தொல்லை தாங்க முடியவில்லை.தண்டனைகள் கடுமையாயிருக்கிறது என்று எல்லோரையும் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறார்.குளிர் பதனவசதி வேண்டுமாம்.ரொம்ப நேரம் வேலை வங்கக் கூடாதாம்.அவர் வந்ததும் அனைவரும் அவர் பின்னே சென்று விட்டனர்.எனக்காக அவரை ஒரு மாதம் மட்டும் உங்களிடம் வைத்துக் கொள்ளுங்களேன்,''சொர்க்கத்தின் அதிபதி,''இது பற்றி கடவுளிடம் கேட்க வேண்டாமா?''என்று கேட்க நரகத்தலைவர்,''ஒரு மாதம்தானே,நமக்குள் இது இருக்கட்டும்.ஒரு மாதம் கழிந்தபின் நானே வந்து அவரை அழைத்து சென்று விடுகிறேன்,''என்று சொல்லவும் தட்ட முடியாமல் அந்த புரட்சியாளரை சொர்க்கத்தில் தங்க அனுமதி கொடுத்தார்.ஒரு மாதம் கழிந்தது.வாக்குத் தவறாமல் நரகத்தலைவர் வந்து சொர்க்கத்திலிருந்த  அந்த மனிதரை அழைத்து செல்ல வந்தார்.இப்போது சொர்க்கத்தலைவர் ,''அதற்குள் ஒரு மாதம் ஆகி விட்டதா!அவர் என்னிடமே இருக்கட்டுமே!இந்த ஒரு மாதத்தில் எனக்கு அவர் நல்ல நண்பர் ஆகி விட்டார்.என்னுடன் நல்லபல விவாதங்களை நடத்துகிறார்.பொழுது போவதே தெரியவில்லை.'' என்றார்.அதிர்ச்சியுற்ற நரகத்தலைவர்,''நிரந்தரமாக அவர் உங்களிடம் இருக்க வேண்டுமானால் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டுமே''என்று கவலை தெரிவித்தார்.உடனே சொர்க்கத்தலைவர் சொன்னார்,''கடவுளா!கடவுள் என்ற ஒன்றே கிடையாதே!கடவுள் இருக்கிறார் என்று யார் சொன்னது?''

உப்பா,சர்க்கரையா?

1

Posted on : Sunday, December 09, 2012 | By : ஜெயராஜன் | In :

பாரசீகத்தை சாஞ்சன் என்னும் மன்னன் ஆண்டபோது அவரது அரசவையில் ரஷீத்,பொகானி என்ற இரண்டு பெரும் புலவர்கள் இருந்தனர்.இருவருமே சிறப்பாக செயல் படக்கூடியவர்கள்.இருந்தபோதும் அவர்களுக்குள் கடும் காழ்ப்புணர்ச்சி.ஒருவரை ஒருவர் காலை  வாருவதற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.ஒருநாள் மன்னர் பொகானியிடம் கேட்டார்,''ரஷீத்தின் கவிதைகள் எப்படி?உங்கள் அபிப்பிராயம் என்ன?''பொகானி சொன்னார், ''நன்றாகத்தான் இருக்கிறது.ஆனாலும் உப்பு போதாது.''மன்னர் சிரித்துக் கொண்டே ரஷீத்திடம் இதுபற்றி அவருடைய பதிலைக் கேட்டார்.ரஷீத்தும் சிரித்துக் கொண்டே,''அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ''என்றார். அவருடைய பதில் கேட்டு அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்,பொகானி.ரஷீத் தொடர்ந்தார்,''எனது கவிதை வரிகளில் தேனும் சர்க்கரையும் அதிகமாக இருக்கும்.உப்பு அதில் இருந்தால் அது கெட்டு விடும்.அதனால்தான் என் கவிதைகளில் நான் உப்பு சேர்ப்பதில்லை.ஆனால் பொகானி யின் கவிதைகளில் உப்பு அதிகம்.ஏனெனில் அவருடைய கவிதைகள் அழுகிய முட்டைக்கோஸ்,கத்தரிக்காய் போன்றது.அது தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் நிறைய உப்பு போட வேண்டும் அல்லவா?''

யார் பேசலாம்?

1

Posted on : Sunday, December 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை பீகார் மாநில சம்பந்தமான பிரச்சினை ஒன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது.காலத்தின் அருமை கருதிஅவைத் தலைவர் இந்த விவாதத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் பேசலாம் என்றார்.அப்போது பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எழுந்து பேச ஆரம்பித்தார்.உடனே அவைத்தலைவர் தலையிட்டு,''நீங்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவராயிற்றே.அதனால் நீங்கள் பேசக் கூடாது,'' என்றார்.அதற்கு வாஜ்பாய்,''நானும் பீகாரிதானே,'' என்றார். அவைத் தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.வாஜ்பாயியே பின்னர் சிரித்துக் கொண்டு சொன்னார்,''என் முழுப் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய் தானே!அதனால் நானும் பேசலாம் என்று நினைத்தேன்.''

போருக்கான செலவு

3

Posted on : Saturday, December 08, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒப்புயர்வற்ற விண்வெளி அறிவியல் நிபுணரும் எழுத்தாளருமான கார்ல் சாகன் சொல்கிறார்,''மனித சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள  வில்லை  என்றால்,மனித இனத்திற்கு புதிய வாய்ப்புகளும்,மகிழ்ச்சிகரமான அனுபவங்களும் எப்போதும் கிடைக்கும்,''ஆனால் இன்று ஒவ்வொரு நாடும் போருக்காக செய்யும் செலவுகள் ,சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வழிவகை செய்வதாகவே இருக்கிறது.. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் போருக்காக செலவிடப்படும் பணம் கிடைக்குமானால், அதைக் கொண்டு மனித இனம் முழுமைக்கும் கீழ்க்கண்ட நலன்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
*இரண்டு கோடி படுக்கைகள் கொண்ட முப்பதாயிரம் மருத்துவ மனைகள் கட்ட முடியும்.
*நாற்பது கோடி குழந்தைகள் படிப்பதற்கு ஆறு லட்சம் பள்ளிகள் திறக்க முடியும்.
*இரண்டு கோடி மனிதர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக்கூடிய இருபதாயிரம் தொழிற் சாலைகள் தொடங்க முடியும்.
*முப்பது கோடி மக்களுக்கு வேண்டிய ஆறு கோடி குடியிருப்பு மனைகளைக் கட்டிக் கொடுக்க முடியும்.
*நூறு கோடி மக்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை உற்பத்தி செய்யலாம்.
இதைப்பற்றி யார் சிந்திக்கப் போகிறார்கள்?

லஞ்சம்

0

Posted on : Friday, December 07, 2012 | By : ஜெயராஜன் | In :

நாட்டில் லஞ்சம் எங்கும் தலை விரித்தாடுகிறது என்று சொல்கிறோம்.பல நூற்றாண்டுகளுக்கு முன் கடுமையான நிர்வாக நியதிகளைப் படைத்த சாணக்கியர் இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
''நாக்கின் மீது வைக்கப்பட்டது தேனானாலும்,விசமானாலும் ருசி பார்க்காமல் இருப்பது எப்படி இயலாத காரியமோ,அப்படியே பண விவகாரங்களைப் பார்க்கின்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது அரசாங்கப் பணத்தை ருசி பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.''
''நீரில் நீந்தும் மீன்கள் எப்போது நீரைக் குடிக்கின்றன என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்.அது போலவே,அந்தந்த காரியங்களை நிர்வாகம் செய்யும் திறமையான அதிகாரிகள்,பணத்தை எவ்வாறு அபகரித்துக் கொள்வார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம்.''
''வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது குறிப்பிடலாம்.ஆனால் மேலுக்கு எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள் எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.''
********
அந்தக் காலத்தில் சாப்பாட்டின் அளவு எவ்வளவு இருந்தது  என்பதை சாணக்கியரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீரனுக்கு::ஒரு படி அரிசி,கால் படி பருப்பு வகைகள்,இதில் பதினாறில் ஒரு பாகம் உப்பு,நான்கில் ஒரு பாகம் எண்ணெய்அல்லது நெய்.
ஆண்களுக்கு:ஒரு படி அரிசி,அதற்கு ஆறில் ஒரு பங்கு பருப்பு வகைகள்,அதில் பாதிக்கு எண்ணெய் .
பெண்களுக்கு:ஆண்களின் உணவில் முக்கால் பங்கு.
சிறுவர்களுக்கு:அரைப்பங்கு.
********

மன்னர் வந்தார்.

1

Posted on : Thursday, December 06, 2012 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பேதைப் பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார்.''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார்.அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களைக் காப்பாற்ற வேண்டியகட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார்.மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோஎன்னைப் பார்க்க வந்தார் என்று..''என்றார்.விஷயம் தெரிந்த அப்பெண் ஆனந்த அதிர்ச்சியுற்றார்.

தேர்ந்த தகவல்கள்

1

Posted on : Thursday, December 06, 2012 | By : ஜெயராஜன் | In :

மூங்கில் ஒரு நாளைக்கு பதினைந்து அங்குலம் வரை வளரும்.
******
ஈ,எறும்பு முதலிய பூச்சிகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
******
ஹவாய் நாட்டின் மொழிக்கு பன்னிரண்டு எழுத்துக்கள்தான் உண்டு. உலகிலேயே குறைந்த எழுத்துக்கள் கொண்ட மொழி இதுதான்.
******
மெட்ரே டி டயாஸ் (madro de dias)என்ற பிரெஞ்சுச் சொல்லின் மறு வடிவமே மதராஸ் ஆகும்.
******
இந்தியாவின் முதல் நகராட்சி சென்னைதான்.இது உருவானது 1688ல் .
******
துப்பாக்கியைத் தனது நாட்டின் கொடியில் சின்னமாக வைத்திருக்கும் ஒரே நாடு மொசாம்பிக்.
******
ஒருவர் தும்மும்போது நீர்த்திவலைகள் மணிக்கு நூறு மைல் வேகத்தில் செல்லக் கூடியவை.
******
வெள்ளைப் புரட்சி என்பது பால் வளம் பெருக்குதல்.
******
இந்தியாவில் முதல் முதலாக ஒரு ரூபாய் நாணயம் 1542ல் மன்னர் செர்ஷாவின் ஆட்சியில் வெளியிடப்பட்டது.இது சுத்தமான வெள்ளியில் 179கிராம் எடை கொண்டது.
******
பாண்டிச்சேரியின் முன்னாள் பெயர்கள் வேதபுரி,அகத்தீஸ்வரம்.
******
எவரெஸ்ட் சிகரம் இந்தியாவின் முன்னாள் சர்வேயர் ஜெனரல் சர்.ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
******
யூகலிப்டஸ் மரம் 'பச்சைத்தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
******
அரசாங்க முத்திரையில் பதிக்கப்பட்டுள்ள 'சத்யமேவ ஜெயதே'எனும் வாசகம் முண்டக உபநிசத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
******


கடி, கடி

1

Posted on : Wednesday, December 05, 2012 | By : ஜெயராஜன் | In :

''நிதி நிறுவனத்துக்கும்,குதிரைப் பந்தயத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன தெரியுமா?''
'நீயே சொல்லு,'
''நிதி நிறுவன அதிபர்  ஓட மாட்டார் என்று நினைத்துப் பணத்தைப் போட்டால்  அவர் ஓடி விடுவார்.ஓடிவிடும் என்று நினைத்து குதிரையின் மீது பணம் கட்டினால் அது ஓடாது.''
******
''நான் தோசை செய்தேன்.''
நிஜமாவா?
''நிஜ மாவில் செய்யவில்லை.அரிசி மாவில் செய்தேன்.
******
''இந்தக் கடிதம் மொட்டைக் கடிதம் என்று எப்படி சொல்கிறாய்?''
'நாலு மூலையிலும் சந்தனம் தடவி இருக்கே!'
******
நம்ம தலைவர் பேசிக்கிட்டிருந்தபோது எதிரே இருந்த மரங்களெல்லாம் விழுந்து விட்டதாமே!
''அவருதான் பேசியே அறுத்திட்டாரே!''
******
''ஏண்டா தேர்வு அறையில் தூங்குகிறே?''
'நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலை என்று முழிச்சிக்கிட்டு இருக்காதே என்று சொன்னீர்கள்?
******
ஆசிரியர்:ஏதேனும் ஒரு திரவத்தின் பெயரை சொல்லு,''
மாணவன்:உபத்திரவம்.
******
''எங்க அப்பா பத்து ஆண்டாக வியாபாரம் செய்கிறார்.ஆனால் சேமிப்பே இல்லை.''
'என்ன வியாபாரம்?'
சேமியா வியாபாரம்.''
******
''ரெண்டு கண்ணிருக்கே,அரிசியில் ஒழுங்காய் கல்லைப் பொறுக்க முடியாதா?''
'முப்பத்திரண்டு பல்லு இருக்கே,மெல்ல முடியாதா?'
******
''போன வாரம் உங்க கடையில் வாங்கின பருப்பில முழுவதும் ஓட்டையாயிருந்தது.''
நீங்க எழுதிக் கொடுத்ததைப் பாருங்க!நீங்க துவாரம் பருப்பு வேண்டும்  என்று தானே எழுதியிருக்கிறீர்கள்!'
******

பயம்

2

Posted on : Wednesday, December 05, 2012 | By : ஜெயராஜன் | In :

அன்றாட வாழ்க்கையை ஒட்டிய பயம்,இறப்பைப் பற்றிய பயம்,துயரம் விளைந்து  விடுமோ என்ற பயம்,அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற பயம்,இருப்பதை இழந்து விடுவோமோ என்ற பயம் இப்படி பல்வேறு பயங்களில்  நாம் வாழ்கிறோம்.பயத்தைப் போக்க சிறந்த வழி,அப்பயத்தை நேரடியாக எதிர்கொள்வதுதான்.எவ்வளவு பயப்படுகிறோமோ அந்த அளவு அது நம்மை பயமுறுத்துகிறது.இதற்கு என்னதான் தீர்வு?
கடந்ததை மறந்து விடுங்கள்.கடந்த காலத்தில் நடந்த எதையும் உங்களால் மாற்ற முடியாது.மாற்ற முடியாத ஒன்றை எதற்காக மனதில் வைத்து வதைபடுகிரீர்கள்?கண்ணிலிருந்து மறைந்ததைப் பற்றியோ,கண்ணுக்குப் புலப்படாததைப் பற்றியோ கவலைப் படுவதால் ஒரு பயனும் இல்லை.ஆறாத ரணம் என்று எதுவும் இல்லை.ஒரு வாரத்தில் ஆறும்.அல்லது ஒரு மாதத்தில் ஆறும்.நேற்றைய காயம் நாளைய வடு.அது மறைவதில்லை.அதே சமயம் வலிப்பதுமில்லை.ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறந்து கொள்கிறது.இது இயற்கை வகுத்த நியதியாகும்.உங்களால் சுமக்க முடியாத எந்த சுமையையும் கடவுள் உங்களுக்கு அளிக்க மாட்டார்.ஆகவே கவலைப்பட ஏதுமில்லை.அன்றைய உணவு,அன்றைய உறக்கம் என்பதுபோல அன்றைக்கான கவலைகளே போதும்.நேற்றைய கவலை,இன்றைய கவலை,நாளைய கவலை என்று பளுவைத் தூக்கிக் கொள்ளாதீர்கள்.

சுலபம்

1

Posted on : Tuesday, December 04, 2012 | By : ஜெயராஜன் | In :

அந்தரே என்பவர் இலங்கை மன்னரின் சபையில் இருந்த விகடகவி.அவர் சிறுவனாயிருக்கும்போது வீட்டிற்கு அருகில் ஒரு கிழவியிடம் அப்பங்கள் வாங்கி வருவார்.கிழவி ஒரு நாள் அவரை எமாற்ற நினைத்து சிறு சிறு அப்பங்களாகத் தந்தாள்.அந்தரே ,''ஏன் சிறு அப்பங்களாகத் தருகிறாய்?''என வினவ கிழவியும் ,''நீ சிறிய பையன்.சிறு அப்பத்தைத் தூக்கிச் செல்வது எளிதாக இருக்கும்.''என்றாள்'பணம் கொடுக்கும்போது அந்தரே ஒரு ரூபாய்க்குப் பதிலாக ஐம்பது காசுகள் மட்டும் கொடுத்தவுடன் கிழவி,''காசு குறைவாக இருக்கிறதே?''என்று கேட்டாள்.அதற்கு அந்தரே,''வயதான உனக்கு காசை எண்ணிப் பார்க்க சுலபமாக இருக்கும் என்றுதான் குறைவாகக் கொடுத்தேன்.''என்றார்.

பொன்மொழிகள்-36

0

Posted on : Tuesday, December 04, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறியலாம்.
******
எவனிடம் வீரமில்லாத ஒழுக்கமோ,ஒழுக்கம் இல்லாத வீரமோ உள்ளதோ அவனே கோழை.
******
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பன் வேறில்லை.
******
பொருளற்றவனைக் காட்டிலும் பொருளுடையவனே மிகவும் துன்புறுகிறான்.
******
மற்றவருக்கு ஆறுதல் சொல்லும்போது இருக்கும் தைரியம் தனக்கு தேவைப்படும்போது இருப்பதில்லை.
******
திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
******
சிக்கனமாக இல்லாதவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
******
புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து.
******
உலகிற்கு மனிதன் தனியாக வருவதுபோல உலகிலிருந்து தனியாகவே போகிறான்.
******
எதிரி ஓடிவிட்டால் எவனும் வீரன்தான்.
******
வறுமையில் கசந்தால்தான் செல்வத்தின் இனிமை தெரியும்.
******
செயலே புகழ் பரப்பும்;வாய் அல்ல.
******
சிரிப்பு,குழந்தை உலகின் இசை.
******

என்ன பெயர் வைப்பது?

1

Posted on : Monday, December 03, 2012 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்தில் ஒரு மூத்த அரசியல்வாதி இருந்தார்.அவர் உடல் பருத்த மனிதர்.அவருடைய தொப்பை மிகப் பெரியதாக இருக்கும்.அவரைக் கேலி செய்ய நினைத்த சர்ச்சில் ,''என்ன சார்,எப்போது உங்களுக்கு பிரசவம்?குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதாக உத்தேசம்?''என்று பலர் முன்னால்  கேட்டார்.அவரும் சளைக்காமல்,''ஆணாக இருந்தால் மன்னரின் நினைவாக ஜார்ஜ் என்று பெயர் சூட்டுவேன்.பெண்ணாகப் பிறந்தால், ராணியின் நினைவாக மேரி என்று பெயர் சூட்டுவேன்.வெறும் வாயுவாக இருந்தால்,உங்கள் நினைவாக சர்ச்சில் வயிறு என்று என் வயிற்றுக்கு பெயர் சூட்டி விடுவேன்.''என்றார்.அதன்பின் அங்கே சர்ச்சில் நிற்பாரா என்ன?
********
இந்தி நடிகர் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தில் ஜோக்கராக நடித்து புகழ் பெற்றிருந்த நேரம்.அவரை ஒரு அரசியல்வாதி சந்தித்தார்.,''நீங்கள் ஏன் ராஜ்ய சபா எம்.பி.பதவிக்குப் போட்டி போடக் கூடாது?''என்று கேட்டார்.அதற்கு ராஜ்கபூர் சொன்னார்,''பாராளுமன்றத்தில் நான் முட்டாளாக இருப்பதை விட படத்தில் ஜோக்கராகவே இருந்து விட்டுப் போகிறேனே!''
********

இரண்டு முகம்

1

Posted on : Monday, December 03, 2012 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கனின் முகம் வடுக்களுடனும் சிடுசிடுப்பாக இருப்பது போலும் இருக்கும்.ஆனால் அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருந்தது.ஒரு நாள் பொது விவாதம் ஒன்றில் லிங்கன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு எதிராகப் பேசிய ஒரு அரசியல்வாதி அவருக்கே  உரித்தான பாணியில்,''லிங்கன் இரட்டை முகம் கொண்டவர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி முகத்தை மாற்றி வைத்துப் பேசுவார்,''என்று பேசினார்.அவர் சொல்ல வந்தது,லிங்கன் தனது  கொள்கையில் ஒரே மாதிரி கருத்துடன் இருப்பதில்லை என்பதே.ஆனாலும் லிங்கன் பேசும்போது,''எதிர்க் கட்சி நண்பரின் இந்தக் கூற்றை பார்வையாளர்களான உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.எனக்கு மட்டும் இரண்டு முகங்கள் இருந்தால்,இந்த அசிங்கமான முகத்தை ஏன் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்?மாற்றிக் கொண்டிருக்க மாட்டேனா?''என்றதும் எதிர்க் கட்சிக்காரரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

புத்திசாலிகள்

2

Posted on : Sunday, December 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ருமேனியாவை ஆண்ட ஒரு மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.தலைமறைவாக இருந்த அவர் இங்கிலாந்து,மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளை சந்தித்து ''நான் இங்கிலாந்துக்கு பத்து இளைஞர்களையும்,அமெரிக்காவுக்கு பத்து இளைஞர்களையும் அனுப்பி வைக்கிறேன்.அவர்களுக்கு அரசாங்க நிர்வாகப் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து எங்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்பி வையுங்கள்.நான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்போது அவர்கள் எனக்கு உபயோகமாயிருப்பார்கள்.''என்று கேட்டுக் கொண்டார்.அதேபோல இளைஞர்களும் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.சில மாதங்கள் கழித்து பயிற்சி முடிந்தது.மன்னரும் ஆட்சியைப் பிடித்தார்.மன்னரின் நண்பர் கேட்டார், ''பயிற்சி பெற்ற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?''மன்னர் சொன்னார்,''இங்கிலாந்தில் தேர்ச்சி பெற்ற பத்து பேரும் புத்திசாலிகளாக  இருப்பதால் அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி விட்டேன்.'' நண்பர்,''அமெரிக்க போனவர்கள் எப்படி?''என்று கேட்க மன்னர் அமைதியாக,''அவர்கள் அதி புத்திசாலிகள்!அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள்.''என்றார்.

மீண்டும் 'கடி'

2

Posted on : Sunday, December 02, 2012 | By : ஜெயராஜன் | In :

''உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே, அது ஏன்?''
'உண்மை கசக்குமே!'
********
''தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.''
''ஏன்,என்ன பிரச்சினை?'
''தினசரிஎன்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.''
********
கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?
மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
********
டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.''
********
''மாப்பிள்ளை இருபது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும் கேட்கிறாராமே!''
''இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜமாயிடுத்தே!'
''அதற்காக அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாமா கேட்பார்கள்?''
********
''ஆபிசுக்கு தாமதமா வர்ற கேசியர் மாலா ஏன் தலைவிரி கோலமா வர்றாங்க?''
'ஆபீசுக்கு தாமதமா வந்தா இப்ப வந்திருக்கிற மேனேஜர் பின்னிடுவாராம்,பின்னி!'
********
தொலைபேசியில் ஒருவர்:ஹலோ,அறுவைக்கு எதிர்ப்பதம் என்ன?
மற்றவர்:அறுக்காதே,வை.
********
''வாம்மா,மாப்பிள்ள எப்படி இருக்கிறார்?என்னை ரொம்பக் கேட்டதாகச் சொல்லியிருப்பாரே?''
'ரொம்ப இல்லப்பா,கொஞ்சம்தான்.பத்தாயிரம் ரூபாய்தான் கேட்டதா சொல்லச்சொன்னார்.'
********
நண்பன்:உன் மனைவிக்கு பெரிய அட்டிகை செய்து போட்டதற்குப் பதிலாக ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
மற்றவர்:அவளும் அதைத்தான் விரும்பினாள்.ஆனாலும் கார் கவரிங்கில்  கிடைக்காதே!
********
பெண்ணின் தாயார்:நாங்க  நாற்பது பவுன் போடுவோம்.நீங்க என்ன போடுவீங்க?
பையனின் தாயார்:அதில் அரைப் பவுன் குறைந்தாலும் சண்டை போடுவோம்.
********

குடை

1

Posted on : Saturday, December 01, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைனிடம் ஒரு பழைய குடை இருந்தது.அவர் எப்போதும் இந்தக் குடையுடன் தான் காணப்படுவார்.ஒரு நாள் அவருக்கே இந்தக் குடை கிழிந்து அசிங்கமாக இருக்கிறதே என்று தோன்றியது .அதை உடனே வழியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றார்.சிறிது நேரத்திலேயே அவருடைய நண்பர் ஒருவர்,''என்ன உன் குடையைத் தவறிக் கீழே விட்டு விட்டாயா?யாரோ குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். நல்லவேளை,அதை நான் பார்த்ததால் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். கவனமாகப் பார்த்துக்கொள்,''என்று கூறிக் கொடுத்துச் சென்றார், ட்வைன் தலையில் அடித்துக் கொண்டார்.கீழே போட்டால்தானே எடுத்துக் கொடுக்கிறார்கள் என்று எண்ணிய அவர் மறுநாள் .அக்குடையை ஒரு கிணற்றில் போட்டு விட்டு சென்றார்.மறுநாளே கிணற்றைத் தூர் வாரச் சென்ற ஒருவன் குடையை எடுத்து அது ட்வைனுடையது என்பதறிந்து அவரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டான்.அவருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது.எங்கு போட்டாலும்,வேண்டாம் என்று நினைத்த குடை திரும்ப வந்து விடுகிறதே என்று வருந்திய அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்.அடுத்த நாள் மழை பெய்து கொண்டிருந்தது.அவரைப் பார்க்க வந்த நண்பர் வெளியே செல்ல அவரிடம் ஏதாவது குடை இரவல் தர முடியுமா என்று கேட்டார்.மகிழ்ச்சியுடன் அவரும் தனது குடையை எடுத்துக் கொடுத்தார்.அதன்பின் அந்தக் குடையைப் பற்றிய கவலை அவருக்கு வரவே இல்லை.இரவல் கொடுத்த பொருள் திரும்ப வருமா?

திருடன்

1

Posted on : Saturday, December 01, 2012 | By : ஜெயராஜன் | In :

திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது  தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான்.அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.''அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை!