உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எதற்கு பரிசு?

0

Posted on : Thursday, March 15, 2012 | By : ஜெயராஜன் | In :

சீனாவில் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் யான்யிங்.அவருடைய முதல் மூன்று ஆண்டு கால நிர்வாகத்தில் அவரைப்பற்றி நிறையப் புகார்கள் மன்னனுக்கு வந்தன.அவரைப் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்த மன்னன் அவரை அழைத்து தன் முடிவைச் சொன்னான்.யான்யிங்,மன்னரிடம் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் தொடர அனுமதித்தால் புகார் இல்லாது செம்மையாக நிர்வாகம் செய்வதாகக் கூறியதால் அரசரும் அனுமதித்தார்.அதன்பின் அவரைப் பற்றி மன்னரிடம் பாராட்டுக்கள் வந்து குவிந்தன.மகிழ்ச்சி அடைந்த மன்னர் அவரை அழைத்து பரிசு தந்தார்.ஆனால் அதை யான்யிங் ஏற்கவில்லை.ஆச்சரியத்துடன் மன்னர் காரணம் கேட்க,அவர் சொன்னார்,''நான் முதலில் ஆளுநராய் சென்றபோது அங்கு அரசாங்கத்தில் இருந்த ஊழலை ஒழித்தேன்.குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தேன். பணக்காரர்களுக்கும்,செல்வாக்கு படைத்தவர்களுக்கும் தனிச் சலுகை அளித்திட மறுத்தேன்.சலுகையை எதிர்பார்த்தவர்களுக்கு சட்ட பூர்வமானதை மட்டும் அனுமதித்தேன்.மேலதிகாரிகளை உபசரித்தபோது சிக்கனத்தைக் கடைப் பிடித்தேன்.எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் என்னை வெறுத்தனர்.என் மீது புகார்களை அனுப்பினர். பின் இந்த மூன்று ஆண்டுகள்,நான் பணி புரியும் விதத்தை மாற்றிக் கொண்டேன்.ஊழலை உதாசீனம் செய்தேன்.தண்டனைகளைக் குறைத்தேன்.சலுகைகளை வாரி வழங்கினேன்.இப்போது எல்லோரும் என்னை உயர்வாகப் பேசுகிறார்கள்.நான் என்னுடைய முதல் மூன்று ஆண்டு கால பணிக்குத்தான் கௌரவிக்கப் பட்டிருக்க வேண்டும்.இந்த மூன்று ஆண்டு காலப் பணிக்கு நான் தண்டிக்கப் பட வேண்டியவன்.அதனால்தான் நான் பரிசை ஏற்றுக் கொள்ளவில்லை.அதற்கு என் உள்ளுணர்வு ஒப்புக் கொள்ளவில்லை,''மன்னர் அடுத்த வாரமே அவரை வேறு ஒரு பகுதியின் பிரதம மந்திரி ஆக்கி சகல அதிகாரங்களையும் வழங்கினார்.
         ----'எப்போதும் இன்புற்றிருக்க...'என்ற வெ.இறையன்பு எழுதிய நூலிலிருந்து.

மனிதன்குணம்

0

Posted on : Wednesday, March 14, 2012 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது அயர்ச்சி அடைந்து வளரத் துடிக்கிறார்கள்.வளர்ந்த பிறகோ,'குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா'என்று ஏங்குகிறார்கள்.பணத்தை ஈட்டுவதற்கு உடல் நலத்தை இழக்கிறார்கள்.பிறகு,பணத்தை செலவழித்து உடல் நலத்தை மீட்க அரும் பாடு படுகிறார்கள்.எதிர்காலத்தை எண்ணி நிகழ காலத்தை தவற விடுகிறார்கள்.அதனால் அவர்கள் நிகழ காலத்திலும் இல்லை,எதிர் காலத்திலும் இல்லை.அவர்கள் வாழும்போது,சாகப் பவதே இல்லை என்பதுபோல வாழ்கிறார்கள்.சாகும்போது வாழவே இல்லை என்பதுபோல வாடுகிறார்கள்.
                     வே.இறையன்பு எழுதிய 'எப்போதும் இன்புற்றிருக்க...'என்ற நூலிலிருந்து.

திருப்தி

0

Posted on : Tuesday, March 13, 2012 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் ஒரு நிலையத்தில் சில இராணுவ வீரர்கள் அவர் இருந்த பெட்டியில் ஏறுவதைக் கண்டார்.நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் மீது அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது .அவர்களுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது உணவுக்கான ஆர்டர் எடுக்கும் ஒருவர் வந்தார்.ஒரு ராணுவ வீரர் சாப்பாட்டின் விலை கேட்டார்.விலை தெரிந்ததும் எந்த வீரரும் உணவுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை.அதைப் பார்த்த அவர்  பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து வீரர்கள்  அனைவருக்கும் சாப்பாடுக்கு ஆர்டர் கொடுத்தார்.அவர்கள் அனைவரும் முதலில் மறுத்தாலும் அந்த பெட்டியில் இருந்த அனைவரும் வற்புறுத்தவே இறுதியில் ஒப்புக் கொண்டனர்.சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெம்பாகவும் இருந்தனர்.பணம் கொடுத்த நபர் இறங்க வேண்டிய நிலையம் வந்தது.வீரர்களிடம் விடை பெற்றுச் செல்லும்போது பெட்டியில் இருந்த ஒருவர் அவரின் பெருந்தனமையான செயலைப் பாராட்டிவிட்டு தன் பங்கு என்று கூறி இரு நூறு ரூபாய் கொடுத்தார்.உடனே மற்ற பயணிகளும் ஆளாளுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.இறுதியில் பணத்தை எண்ணிப் பார்த்ததில் இரண்டு ஆயிரம் ரூபாய் இருந்தது.அப்பணத்தையும் வீரர்களிடமே கொடுத்துவிட்டு முகத்தில் ஒரு திருப்தியுடன் அவர் பெட்டியிலிருந்து இறங்கினார். 
                         --ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தி.   .

நடிப்பு,வேஷம்

0

Posted on : Monday, March 12, 2012 | By : ஜெயராஜன் | In :

தமிழ் சூழலில் மட்டும்தான் ஒருவனைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வதன் மூலம் ஆனந்தம் அடைபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.ஒருவனது இயலாமையை,பலவீனங்களை,சரிவுகளை சொல்லிக் காட்டி அதனால் அவன் வேதனை அடையும்போது பார்த்து ரசிக்கும் குதூகல மனநிலை பலருக்கும் பிடித்திருக்கிறது.சொல்லப்போனால் அதைப் பகிர்ந்து கொள்ளவும்,பதிவு செய்வதிலும் காட்டும் அக்கறையிருக்கிறதே அது மிகவும் முனைப்பானது. இதற்காகச் சிலர் கைப்பணம் செலவு செய்து பயணம் செய்வதில் துவங்கி,மின்னஞ்சல்,செல்போன்,சிறுவெளியீடு,இணைய தளம் என்று ஓடியாடி வேலை செய்கிறார்கள்.
ஒருவனைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வதற்கு முதல் வேலை,அவனை அருகில் உட்கார வைத்துவிட்டு அவனோடு பேசாமல்,அருகில் கிடக்கும் பழைய வார இதழ் ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்தால் போதும்.அவன் குற்ற உணர்வு கொள்ளத் துவங்கி விடுவான்.
மேலும் அவனை அவமதிக்க வேண்டும் என்றால்,இன்னொரு ஆளைப் பற்றிப் பேச ஆரம்பிக்க வேண்டும்.தன்னைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் இருக்கிறானே என்ற குற்ற உணர்வு தானே பொங்கத் துவங்கி விடும்.இத்தோடு நீங்கள் புதிதாக வாங்கிய சட்டை,யாருக்கோ கிடைத்த பரிசுகள்,விருதுகளுள்.உலகத்  திரைப்படங்கள்,அயல் நாட்டு மது விருந்து என்று பேசிக் கொண்டிருந்தால் போதும்.அவன் தாள முடியாத குற்ற உணர்ச்சியின் மிகுதியில் தன்னை ஒரு அற்பப் புழுப்போல உணர்வான்.அல்லது எதிராளியை ஒரு மலேரியாக் கொசு என்று நினைத்துக் கொண்டு அடித்துக் கொல்ல வேண்டுமென ஆத்திரம் அடையத் துவங்குவான்.அதன் பிறகு அவனது வேலை,அந்த ஆளுக்கு எதிராகத் தனது இடைவிடாத அவதூறுகள்,வெறுப்பை பரவவிடுவதுதான்.தனது இயலாமையை ஒத்துக் கொள்ளவும்,தனது அறியாமையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதிலும் தான் எவ்வளவு,நடிப்பு,வெளி வேஷங்கள்?
              ---- எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'கலிலியோ மண்டியிடவில்லை' 'என்ற நூலிலிருந்து.

பொன்மொழிகள்-27

0

Posted on : Sunday, March 11, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பழக்கத்தை சும்மா ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விட முடியாது.தாஜா செய்து ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக் கொண்டு வர வேண்டும்.
**********
பணம்  பேசக்  கூடியது  மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.
**********
ஒவ்வொரு திறமை வாய்ந்த மனிதனின் மூளையிலும் முட்டாள் தனமான பக்கம் ஒன்று கட்டாயம் உண்டு.
**********
சிறு கேள்விகளுக்கு நீண்ட விடை அளிப்பவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவன் எதையோ மறைக்கிறான்.
**********
முகஸ்துதி உப்பைப் போன்றது.கொஞ்சம் உபயோகித்தால் தான் ருசியாய் இருக்கும்.அதிகமானால் கரிப்பாக இருக்கும்.  
**********
இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள்.செய்தால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.
இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்யுங்கள்.செய்தால் ஒரு நண்பன் கிடைப்பான்.
**********
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.
**********
நாம் அனைவரும் மரண தண்டனைக்குள்ளானவர்கள் தான்.தூக்கிடும் நாள் தான் வித்தியாசம்.
**********
செய்து காட்டுபவர்கள்தான் குழந்தைக்குத் தேவை.குறை காண்பவர்கள் அல்ல.
**********
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் மூடன்.
ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.
தன்னை அறியாமல் தவறு செய்து பின் திருத்திக் கொள்பவன் மனிதன்.
**********

உபதேசம்

0

Posted on : Saturday, March 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் காலை நேரம்.புத்தர் உபதேசம் செய்ய வரும் நேரம்.கூட்டம் அலை மோதியது.புத்தர் வந்தார்.உடனே எங்கும் அமைதி.எல்லோருக்கும் புத்தரின் உபதேசங்களைக் கேட்க ஆவல்.நீண்ட தூரத்திலிருந்து அவர்கள் வந்திருந்தனர்.புத்தர் வந்து அமர்ந்தார்.கூட்டம் நடக்குமிடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது.புத்தர் உபதேசத்தை ஆரம்பிக்க இருந்த தருணத்தில் மரத்திலிருந்த ஒரு பறவை கீச்சிட ஆரம்பித்தது.அதன் குரல் மிக இனிமையாக இருந்தது.அந்த அமைதியான சூழலில் அந்தப் பறவையின் குரல் ரம்மியமாக இருந்தது.புத்தர் அந்தப் பறவையின் இனிய குரல் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.அவர் தன் பேச்சை ஆரம்பிக்கவில்லை.சிறிது நரத்தில் அப்பறவை அங்கிருந்து பறந்து சென்று விட்டது.எல்லோரும் புத்தரின் பேச்சைக் கேட்கத் தயாரானபோது புத்தர் சொன்னார்,''இன்றைய மிகச்சிறந்த  உபதேசம் முடிந்துவிட்டது.அனைவரும் செல்லலாம்.''

கோபத்தைப் பிடி.

0

Posted on : Friday, March 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஞானியிடம் சென்று,''எனக்கு மிகவும் எளிதாகக் கோபம் வந்து விடுகிறது.அதனைக் கட்டுப்படுத்துவதுதான்  சிரமமாக இருக்கிறது.இதற்கு எப்படித் தீர்வு காண்பது?''என்று தன் பிரச்சினையைக் கூறித் தீர்வு கேட்டார்.ஞானி சொன்னார்,''உங்களுக்குக் கோபப்படுவது என்பது சுலபமான ஒன்று.அதனைக் கட்டுப் படுத்துவதுதான் சிரமமான ஒன்று.சுலபமான காரியத்தைச் செய்வது சுலபம்.கடினமான காரியத்தைச் செய்வது கடினம்.கடினமான காரியத்தை நீங்கள் செய்யவே வேண்டாம்.சுலபமான காரியத்தைச் செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டோம்...இப்போது,நீங்கள் காலையிலிருந்து மாலை வரை கோபத்துடனேயே இருக்க வேண்டும்.கோபப்படுவது சுலபம் என்று கூறி விட்டீர்கள்.மாலை வரை கோபத்துடன் இருந்து காட்டுங்கள்,''
இப்படி அவர் கூறியபின்தான் வந்தவருக்கு கோபத்தின் நடைமுறைத் தன்மை புரிந்தது.
கோபமோ எதுவோ,அது அது போக்கில் வந்துவிட்டு,அதுபோக்கில் போய் விடுகிறது.அது ஏதோ நமக்குக் கட்டுப் பட்டதுபோல நினைத்து நாம் அதனுடன் போராடி,தேவையற்ற பிரச்சினைகளை எல்லாம் கொண்டு வந்து விடுகிறோம்.
          ---''ஸ்ரீ பகவத் பார்வையில் ஜென் கதைகள்'' என்னும் நூலிலிருந்து.

ஒற்றைக்கால் செருப்பு

0

Posted on : Thursday, March 08, 2012 | By : ஜெயராஜன் | In :

போதி தர்மர் புத்த மதக் கொள்கைகளைப் பரப்ப ஒவ்வொரு நாடாகச் சென்று கொண்டிருந்தார்.அவர் வருகையை அறிந்த ஒரு நாட்டு மன்னன் தன் பரிவாரங்களுடன் தன் நாட்டின் எல்லையில் நின்று கொண்டிருந்தான்.போதி தர்மர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார்.அவர் நடையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அமைச்சர் கூர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது;போதிதர்மர் ஒரு காலில் மட்டும் செருப்பை அணிந்து கொண்டு இன்னொரு செருப்பை கையில் வைத்துக் கொண்டும் இருந்தார்.கையில் செருப்புடன் மன்னரைப் பார்த்தால் மன்னருக்கு மரியாதைக் குறைவாயிருக்குமே என்று அமைச்சர் எண்ணினார்.என்ன செய்யலாம் என்று யோசித்த அமைச்சர் போதிதர்மரிடம் சென்று மரியாதையுடன்,''ஐயன்மீர்,தாங்கள் சுமக்கும் செருப்பை அடியேன் சுமக்க அருள் புரிய வேண்டும்,''போதிதர்மர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''பரவாயில்லை.இந்த செருப்பு இத்தனை ஆண்டு காலமாக என்னை சுமந்து வந்தது.இப்போது அதை நான் சுமப்பதுதான் முறையாகும்,''
ஞானிகளுக்கு, அறுந்த செருப்புக்கும் அரசனின்   மரியாதைக்கும்  பெரிய  வித்தியாசம் ஒன்றும் இல்லை.

வேகாதது

0

Posted on : Wednesday, March 07, 2012 | By : ஜெயராஜன் | In :

நாம தேவர் என்ற ஞானி சில ஞானிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.அவர்களுள் கோராகும்பர் என்பவரும் இருந்தார்.அவரது தொழில் மண் பாண்டங்கள் செய்வது.நாமதேவருக்கு தன் ஞானம் பற்றி சிறிது செருக்கு உண்டு.அவர் கோராகும்பரைப் பார்த்து,''நீங்கள் செய்யும் மண் பாண்டங்கள் நன்றாக வெந்து விட்டதா என்று கையினால் தட்டிப் பார்த்தே கண்டு பிடித்து விடுவீர்கள் அல்லவா?''என்று கேலியாகக் கேட்க கோராகும்பரும் ஆம் என்று சொன்னார்.''அப்படியானால் இங்கே உள்ள அனைத்து ஞானிகளையும் உங்கள் கையால் தட்டிப் பார்த்து அவர்கள் பக்குவம் அடைந்து விட்டார்களா என்று கூறுங்கள்,''என்றார் நாமதேவர்.கோராகும்பரும் ஒவ்வொருவர் தலையிலும் தன் கையால் தட்டிக் கொண்டே வந்தார்.நாமதேவரின் தலையிலும் அவர் தட்டியபோது அவருக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது,''உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையே தட்டி சோதிப்பாய்?''என்று நாமதேவர் வெகுண்டார்.கோராகும்பர் அமைதியாகச் சொன்னார்,''இந்தப் பாண்டம் மட்டும் சரியாக வேகவில்லை.''

குறை

0

Posted on : Tuesday, March 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண்மணி,தன் வீட்டுத் தேவைக்கு சற்று தொலைவிலிருந்து தினம் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம்.ஒரு கம்பில் இரு முனைகளிலும்  இரு பானைகளை தொங்கவிட்டுக் கொண்டு சென்று தண்ணீர் எடுத்து வருவார். இரண்டு பானைகளில் ஒரு பானையில் தண்ணீர் கொஞ்சம் ஒழுகும் இதனால் வீட்டிற்குச் செல்லும்போது அதில் பாதி அளவிற்குத்தான் தண்ணீர் இருக்கும்.ஒரு நாள் நல்ல நிலையிலிருந்த பானை ஓட்டைப் பானையைப் பார்த்து கிண்டல் செய்தது,''உன்னால் முழு உபயோகம் இல்லையே,'' அந்த ஓட்டைப் பானைக்கும் தன் மீதே வருத்தம் வந்தது.அது அந்தப் பெண்மணியிடம் வருத்தத்துடன் சொன்னது,''அம்மா,என்னால் உனக்கு பாதிப் பானை தண்ணீர் வீணாகிறது.என்னால் உனக்குத் தொல்லை.பேசாமல் என்னை கழட்டிவிட்டு வேறு பானையை உபயோகியுங்கள்,''அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டே சொன்னாள்,''உன்னால் பயன் இல்லை என்று ஏன் எண்ணுகிறாய்?''
நான் வரும் பாதையைப் பார்த்தாயா?உன் பக்கம் தண்ணீர் ஒழுகியதால் நான் அந்தப் பக்கம் சில பூச் செடிகளை நட்டேன்.தினமும் தண்ணீர் விழுந்ததால் அச்செடிகள் நன்கு வளர்ந்து இப்போது பூத்துக் குலுங்குகின்றன.எனக்கு நிறைய பூக்கள் கிடைக்கின்றன,''அந்தப் பானைக்கு தன்னாலும் பயன் இருக்கிறது என்பது தெரிந்து மகிழ்ச்சி ஏற்பட்டது.
இதுபோலத்தான் நம்மிடையே குறை இல்லாத மனிதர்களே கிடையாது யாரிடம் என்ன குறை இருந்தாலும் அக்குறையுடன் அவர்களை ஏற்றுக் கொள்ளப் பழகினால் அதுதான் உண்மையான நட்பு.உண்மையான பாசம்.

என்ன வித்தியாசம்?

0

Posted on : Saturday, March 03, 2012 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானி ரபியாவிடம் ஒருவர் கேட்டார்,''உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?''ரபியா சொன்னார்,''நான்கு அங்குலம்?''கேட்டவர்க்கு இந்த விசித்திரமான பதிலின் பொருள் தெரியாதை அறிந்து அவரே சொன்னார்,''காதுக்கும்,கண்ணிற்கும் உள்ள இந்த இடைவெளிதான் பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம் .ஏனெனில் காதால் கேட்பது பொய்.கண்ணால் பார்ப்பதுதான் மெய்.''
இந்த விசயத்தில் நமது வள்ளுவர் இன்னும் தெளிவான கருத்தைக் கூறியுள்ளார்.அதாவது,கண்ணால் பார்ப்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய்.தீர விசாரித்து அறிவதே மெய்.

எது ஆன்மிகம்?

0

Posted on : Thursday, March 01, 2012 | By : ஜெயராஜன் | In :

சூபி பெண் ஞானி ரபியா தன சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்.அப்போது ஹாசன் என்ற துறவி அங்கு வந்து சேர்ந்தார்.ஹாசன் கர்வத்துடன் ரபியாவைப் பார்த்து சொன்னார்,''எனக்கு நீரில் நடக்கத் தெரியும்.நீங்களும் நீருக்கு வாருங்கள்.அங்கு நாம் அமர்ந்து ஆன்மீக விவாதங்கள் நடத்தலாம்,''ரபியா அமைதியாக சொன்னார்,''நீங்கள் இந்தக் குழுவிலிருந்து தனிமைப் படுத்திக் காட்ட விரும்புவது போலத் தெரிகிறது.பரவாயில்லை,நீங்கள் என்னுடன் வாருங்களேன்,அப்படியேகாற்றில் பறந்தபடி வானில் நமது விவாதத்தை வைத்துக் கொள்வோம்,''இந்தப் பதிலை எதிர்பாராத ஹாசன்,''என்னிடம் பறக்கும் சக்தி இல்லை,''என்று சொன்னார்.ரபியா சொன்னார்,''நீங்கள் சொன்ன நீரில் நடக்கும் சக்தி ஒரு மீனுக்குக் கூட இருக்கிறது.அதேபோல நான் சொன்ன காற்றில் பறக்கும் சக்தி சாதாரண ஈயிடமே இருக்கிறது.இந்த சக்திகளெல்லாம் நம்மைப் பற்றி பெருமை பேசவோ,அடுத்தவரைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளவோ உதவுமே தவிர,ஆன்மீகத்துக்கு உதவாது,''