உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பல்வலி

0

Posted on : Thursday, March 31, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பல் மருத்துவர் ஒரு சிறுவனின் பல்லைப் பிடுங்கியதற்காக ஆயிரம் ரூபாய் கேட்டார்.சிறுவனின் அம்மா,''வழக்கமாக இருநூறு ரூபாய்  தானே வாங்குவீர்கள்?''எனக் கேட்டார்.டாக்டர் சொன்னார்,''நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் இன்று உங்கள் பையன் போட்ட சப்தத்தில் வந்திருந்த நான்கு நோயாளிகள் ஓடி விட்டனரே!''
**********
டாக்டரிடம் சென்ற ஒரு முதியவர்,''என் மனைவிக்கு வரவர காது சரியாகக் கேட்கவில்லை.பல முறை கூப்பிட்ட பின்தான் பதில் சொல்கிறாள்,''டாக்டர் சொன்னார்,''வீட்டிற்குப்போய் நான் சொல்கிறாற்போல சோதனை செய்து பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்.முதலில் இருபது அடி தூரத்தில் இருந்து  கூப்பிடுங்கள்.பதில் வராவிடில் பத்து அடி தூரத்தில் இருந்து கூப்பிடுங்கள்.அதற்கும் பதில் வராவிடில் ஐந்து அடி தூரத்திலிருந்து  கூப்பிடுங்கள்.எவ்வளவு தூரத்திலிருந்து பேசும்போது கேட்கிறது என்பதை வைத்து செவிட்டுத் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கலாம்.''
வீட்டிற்குப்போன பெரியவர்,டாக்டர் சொன்னபடி வெவ்வேறு தூரத்தில் இருந்து நான்கு முறை கூப்பிட்டுப் பார்த்தார்.பதில் வரவில்லை.பின் மனைவியின் காதருகே சென்று கூப்பிட்டார்.மனைவி சொன்னார்,''உங்களுக்கு என்னவாயிற்று.ஏற்கனவே நான்கு முறை நீங்கள் கூப்பிட்ட பொது நான்,'என்னவேண்டும்?'என்று கேட்டேனே?''
**********

சிறு மணல்

0

Posted on : Wednesday, March 30, 2011 | By : ஜெயராஜன் | In :

கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம்,இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
**********
வெற்றி என்பதில் எந்தத்  தகுதியும் கிடையாது.உண்மையாகச் சொன்னால்,அது மிகவும் அருவருப்பானது.ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது.வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
**********
ஒருவர் உடல் துன்பத்தில் இருக்கும்போது,நீங்கள் எதைப் போதித்தாலும்  அது அவர்களுக்கு முட்டாள் தனமாகவே படும்.
**********
கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
**********
சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது.சரியான மனிதனுக்கு அல்ல. ஏனென்றால்,இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல் படுகிறது.எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால்,அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.
**********
முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை  விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.
**********

நடக்க வைப்பேன்.

0

Posted on : Wednesday, March 30, 2011 | By : ஜெயராஜன் | In :

விபத்தில் கால் முறிந்து வந்தவரிடம் டாக்டர்,''ஒரு வாரத்தில் உங்களை நடக்க வைப்பேன்,''என்றார்.அப்போது அங்கிருந்த காயமுற்றவரின்  நண்பர் ஒருவர் ஒரு வாரம்  கழித்து அவரைப் பார்க்க வந்தார்.''என்ன,டாக்டர் சொன்னபடி உங்களை நடக்க வைத்து விட்டார் போலிருக்கிறதே!''என்று மகிழ்ச்சியில் கூவினார்.நோயாளி சொன்னார்,''எனக்கு இப்போது நடப்பதைத் தவிர வேறு வழியில்லை.டாக்டருக்கு பீஸ் கொடுக்க என் காரை விற்று விட்டேன்,''
**********
ஒரு நோயாளி டாக்டரிடம்,''எனக்கு கை வலிக்கிறது:வயிறு வலிக்கிறது: தோல் பட்டை வலிக்கிறது:தலையும் வலிக்கிறது.''என்றார்.டாக்டர் தன்னிடம் இருந்த சிறு சுத்தியல் கொண்டு அவர் மூட்டல் தட்டி சோதனை செய்தார்.''இப்போது எப்படி இருக்கிறது?''என்று கேட்டார்.நோயாளி சொன்னார்,''இப்போது மூட்டும் வலிக்கிறது.'
**********
''டாக்டர்,எனக்கு ரொம்ப டல்லாக இருக்கு.யாரோடாவது சண்டை போடுகிற அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்க ஏதேனும் மருந்து கொடுங்களேன்,''என்று கேட்டார் ஒருவர்.டாக்டர் சொன்னார்,''கொஞ்சம் பொறுங்கள் பில் தருகிறேன்.உங்களுக்கு தானே அந்த மூட் வந்து விடும்.''
**********

தைரியசாலி

1

Posted on : Monday, March 28, 2011 | By : ஜெயராஜன் | In :

சாக்ரட்டீசுக்கு விஷம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு சொல்லிய நீதிபதி,கொஞ்சம் இரக்க புத்தி உள்ளவர்.அவர் சாக்ரடீசிடம்,''நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன்.இந்த நகரத்தை விட்டு விரைவில் வெளியேறி விடுங்கள்.நீங்கள் சாகக்கூடாது,''என்றார்.அதற்கு சாக்ரடீஸ்,''இறப்பு என்பது ஒருவனுக்குக் கண்டிப்பாக வரக்கூடியது.கிரேக்கத்திலே நாகரீகமான் இந்த ஏதன்ஸ் நகரே என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்,வேறு யார் என்னை சகித்துக் கொள்வர்?வேறு இடத்திற்குப் போனாலும் இதே நிலைதான் வரும் எனவே இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்த நான் இங்கேயே மரணம் அடைந்து கொள்கிறேன்,''என்றார்.அதற்கு நீதிபதி,''நான் வேறு ஒரு யோசனை சொல்கிறேன்.நீங்கள் பேசுவதனால் தானே  இங்குள்ள இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள்.கொஞ்ச காலம் பேசாமல் இருந்து பாருங்களேன்.இந்த வயதில் அமைதியாக இருப்பது உங்களுக்கும் நல்லது,''என்றார்.சாக்ரட்டீஸ்,''அதாவது,நான் பயந்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.இது என்னால் முடியாத  காரியம்.உண்மையை சொல்லாமல் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.எனவே நீங்கள் எனக்காகக் கவலைப்பட வேண்டாம்.''என்று கூறினார்.சாக்ரடீஸ் போன்ற தைரியசாலிகள் உலக வரலாற்றிலேயே மிகக் குறைவு.

யாரிடம் கேட்பது?

0

Posted on : Monday, March 28, 2011 | By : ஜெயராஜன் | In :

நீண்ட தூரம் புகை வண்டியில் பயணம் செய்து வந்து இறங்கிய கணவனை வரவேற்க வந்திருந்தாள் அவன் மனைவி.அவனைப் பார்த்ததும் அவள்,''என்ன, இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்?''என்று கேட்டாள்.கணவன்,''அதை ஏன் கேட்கிறாய்?நீண்ட தூர பயணம்.மேலும் எனக்குக் கிடைத்த இருக்கை புகை வண்டி செல்லும் திசைக்கு எதிரில் வேறு அமைந்திருந்ததால்,ஒரே தலைவலி.''என்றான்.அவள் உடனேயே,''அப்படியானால் நீங்கள் யாரிடமாவது கேட்டு இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாமே?''என்று கேட்டாள்.அவனும்,''நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் என் முன் இருக்கைகளில் யாருமே இல்லையே!நான் யாரிடம் கேட்பது?''என்றான்.

மூட்டு வலி

0

Posted on : Sunday, March 27, 2011 | By : ஜெயராஜன் | In :

மூட்டு வலிக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரின் அறை முன்  நிறையப் பேர் காத்திருந்தனர்.அப்போது ஒரு வயதான பெண் ஒரு ஊன்று கோலுடன் பாதி  உடல் கூனிய நிலையில் வந்து அமர்ந்தாள்.அவளுடைய முறை வந்தபோது  டாக்டரின் அறைக்குள் சென்றுபின் ஐந்தே நிமிடங்களில் கூனின்றி தலை நிமிர்ந்து நேராக  கைத்தடியுடன் நடந்து வந்தாள்.அதைப் பார்த்து அதிசயப்பட்ட ஒரு பெண்மணி அவளிடம் வேகமாகச் சென்று ,''இது பெரிய அதிசயமாக இருக்கிறதே!டாக்டரின் அறைக்குள் செல்லும்போது கூனிச் சென்ற நீங்கள் எப்படி வெளிய வரும்போது இப்படி நிமிர்ந்து வர முடிந்தது?அப்படி என்னதான் வைத்தியம் செய்தார்?''என்று கேட்டாள்.அந்த பெண் சிரித்துக்கொண்டே சொன்னாள்,''டாக்டர் நான் வைத்திருந்த சிறிய கைத்தடியை வாங்கி வைத்துக்கொண்டு இந்த பெரிய கைத்தடியைக் கொடுத்தார்.''

ஏன்?ஏன்?ஏன்?

0

Posted on : Sunday, March 27, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் காலையில் ஒரு தாய் தன மகனை படுக்கையிலிருந்து எழுப்பச் சென்றார்.''எழுந்திரு,பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டது.''மகன் சிணுங்கிக் கொண்டே சொன்னான்,''நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன்.''தாய் சொன்னாள்,''நீ பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று சொல்வதற்கு ஏதேனும் இரு காரணங்களை சொல்லு பார்ப்போம்,''மகன் சொன்னான்,''பசங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.ஆசிரியர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.''தாய்,''ஓ,அதுதான் காரணமா?சரி,சரி,எழுந்திரு.பள்ளி செல்ல தயாராகு.''என்றாள்.மகன்,''நான் ஏன் பள்ளி செல்ல வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்,''என்று கேட்க,தாயும் சிரித்துக் கொண்டே சொன்னாள்,''ஒன்று உனக்கு ஐம்பது  வயதாகி விட்டது.இரண்டாவது நீ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்.''

சரித்திரம் திரும்புமா?

0

Posted on : Saturday, March 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு,பணத்தைக் கொடுக்க எழுந்தார்.அப்போது சர்வர் வந்து,''ஒரு நிமிடம் சார்,சரித்திரம் மீண்டும் நிகழ்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''என்று கேட்டார்.இது என்ன சம்பந்தமில்லாத கேள்வியாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டு,''நான் நம்புகிறேன்.நான் சரித்திரம் படித்திருப்பதால் அது போன்ற பல நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும்,''என்றார்.சர்வர் சொன்னார்,''நேற்று இந்த மேஜையில் சாப்பிட்ட ஒரு நல்ல மனிதர்,பத்து ரூபாயை எனக்காகக் கொடுத்தார்,''உடனே சாப்பிட வந்தவர் சொன்னார்,''இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.ஒருக்கால் அவர் மீண்டும் நாளை வரக்கூடும்.''

எங்கேயிருந்து?

0

Posted on : Saturday, March 26, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா,ஒரு கப்பல் கம்பெனியில்  நடந்தநேர்முகத்தேர்வுக்கு சென்றார்..கம்பெனியின் மேனேஜர்,''முல்லா,இது ஆபத்தான வேலை.கடலில் கொந்தளிப்புகள் ஏற்பட்டு பெரும் அலைகள் வரும்.அதிலிருந்து உன் கப்பலைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுப்பாய்?''என்று கேட்டார்.முல்லா,''இது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.கப்பலில் உள்ள கனமான பொருளை எடுத்து  லேங்கரில் தொங்க விடுவேன்,''என்றார்.மேனேஜர்,''அடுத்து இன்னொரு பெரிய அலை வந்தால் என்ன செய்வாய்?''என்று கேட்க முல்லாவும்,''இன்னும் கொஞ்சம் கனமான பொருட்களை இன்னொரு லேங்கரில் தொங்க விடுவேன்,''என்றார்.மேனேஜரும் திருப்பத் திரும்ப அடுத்து அலை வந்தால்  என்ன செய்வாய் என்று கேட்க முல்லாவும் சளைக்காமல் அதே பதிலை சொன்னார்.கடுப்படைந்த மேனேஜர்,''இவ்வளவு லேங்கர்களுக்கு எங்கே போவாய்?''என்று கேட்டார்.முல்லாவும்,''நீங்கள் இவ்வளவு அலைகளுக்கு எங்கே போவீர்களோ,அங்கே,''என்றார்.

பொறுப்பு

0

Posted on : Thursday, March 24, 2011 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எப்போது உங்கள் பொறுப்பை பிறரிடம் கொடுக்கிறீர்களோ,அப்போதே சுதந்திரத்தை இழக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.எப்போது நீங்கள் இருப்பவரிடமோ அல்லது இறந்தவரிடமோ சரணாகதி அடைகிறீர்களோ,அப்போதே உங்களை அழித்துக் கொள்கிறீர்கள்.அது மாத்திரமல்ல.உங்கள் தனித்தன்மையைப்  பொறுத்தவரை,நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்.ஆனால் பல பேர்,தங்களுடைய பொறுப்பிலிருந்து  விடுதலை அடையும்போது மிகவும் திருப்தி கொள்கிறார்கள்.ஏதோ சுமை குறைந்ததுபோல உணருகிறார்கள்.சிலபேர் இந்தப் பொறுப்பை தாங்களே மனமுவந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அவரைத்தான் நீங்கள் உங்களைக் காப்பாற்ற வந்தவர் என்று கருதிக் கொள்கிறீர்கள்.நீங்கள் அவரை நம்பி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள்.இந்த உலகில் ஆராயாமல் நம்புவதைக் காட்டிலும் சுலபமான வேலை எதுவும் இல்லை.ஏனென்றால்,இந்த செயலுக்காக எந்த சிரமும் பட வேண்டியதில்லை.

ரிவர்ஸ் கியர்

0

Posted on : Thursday, March 24, 2011 | By : ஜெயராஜன் | In :

ஹென்றி போர்ட் இறந்த  பின் கடவுளை சந்தித்தார்.கடவுள் அவரிடம் ,''பூமியில் நான் படைத்த படைப்புகளில் உனக்கு திருப்திதானே?''அதற்கு போர்ட் சொன்னார்,''இல்லை.நான் பூமியைப் படைத்து இருந்தால் தற்போது,அதில் உள்ள பல குறைகளை நிவர்த்தி செய்திருக்கமுடியும்.உதாரணமாக,நான் முதலில் ஒரு காரைஉருவாக்கியபோது,பின்னால் செல்லக்கூடிய ரிவர்ஸ் கியர் கிடையாது.பிறகு அதை ஏற்படுத்தினேன்.அதனால் பல நன்மைகள்.ஆனால் வாழ்வை உண்டாக்கிய நீங்கள்.பல தவறுகளை செய்யும் மனிதன்,வாழ்வில் பின்னோக்கி சென்று சரிசெய்ய வழி வகுக்கவில்லை.''

கருத்து வேறுபாடு.

0

Posted on : Wednesday, March 23, 2011 | By : ஜெயராஜன் | In :

சேர்ந்து வாழ வேண்டிய குடும்ப உறுப்பினர்களும் சரி,சேர்ந்து பணி புரிய வேண்டிய அலுவலக ஊழியர்களும் சரி,ஒரு சிறு பிரச்சினை என்றால் கூட  மன வேறுபாடுகளை வேகமாக வளர்த்துக்கொண்டு எதிரெதிர்  திசைகளில் நடக்க ஆரம்பித்து விலகி விலகிப் போய் விடுகிறார்கள்.
எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.வேறு கோணம்,வேறு பார்வைகள் உண்டு.அவர்களை என்ன சொன்னாலும் மாற்ற முடியாது.நான்கு விசயங்களில் முட்டி மோதித் தோல்வி காணும்போது மற்றவர்கள் கருத்துக்கு மதிப்புத் தரத் துவங்குவார்கள்.
தன முனைப்பு,அகங்காரம்,வரட்டுப் பிடிவாதம்,சுய பரிசோதனையின்மை ஆகிய தூண்களைக் கொண்டு நம்மால் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கட்டடத்தில் எல்லோரும் வந்து குடியிருக்க வேண்டும் என எதிர் பார்ப்பது தவறு.
ஒரு சில விசயங்களில் கருத்து வேறுபாடு இருந்தால்,இருந்து விட்டுப் போகட்டும்.அது ஒரு முட்டுச்சந்து,வேறு வழியில்லை என்பதனை  உணர்ந்து அவர்கள் திரும்பட்டும்.அதுவரை நமக்குப் பொறுமை அவசியம்.
சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்காக மன வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.இது நியாயமற்றது.
                                                              --லேனா தமிழ்வாணன்.

டாக்டர்!!

0

Posted on : Wednesday, March 23, 2011 | By : ஜெயராஜன் | In :

தன்னிடம் வந்த சிறுவனைப் பரிசோதித்த டாக்டர் அவனுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி சிரிஞ்சை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்ததுமே அவன் பயங்கரமாகக் கத்தினான்.டாக்டர் கேட்டார்,''நான் இன்னும் ஊசி  குத்தவே இல்லையே அதற்குள் ஏன் அலறுகிறாய்?''சிறுவன் சொன்னான்,''என் கால் மீது உங்கள் பூட்ஸ் அழுத்திக் கொண்டிருக்கிறது.''
**********
டாக்டர்,:இன்று எப்படி இருக்கிறீர்கள்?
நோயாளி:இன்னும் மூச்சு விட சிரமமாய்த்தான் இருக்கிறது,டாக்டர்.
டாக்டர்:பரவாயில்லை,இன்று அதை நிறுத்தி விடுவோம்.
**********
நர்ஸ்:டாக்டர்,பத்தாம் நம்பர் பெட்டில் உள்ள நோயாளிக்கு இரண்டு விதமான  இதயத் துடிப்பு கேட்கிறதே?
டாக்டர்:நல்ல வேலை,என் வாச்சை எங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
**********
''பண விசயத்தில் எனக்கு மிகுந்த கவலையாய் இருக்கு டாக்டர்,''
'இது மாதிரித்தான் போன வாரம் ஒருவர் வந்தார்.அவர் ஒரு தையற்காரருக்குப் பணம் கொடுக்க முடியாமல் போய்,அதனால் கவலைப் படுவதாகக் கூறினார்.நான்,அதை நினைவில் வைத்துக்கொண்டு இராமல் மறந்து விடச் சொன்னேன்.இப்போது அவருக்கு நன்றாயிருப்பதாகக் கூறினார்.'
''எனக்கு அது தெரியும்,டாக்டர்.''
'எப்படி?'
''நான் தான் அந்த தையற்காரர்.''
**********

பொன்மொழிகள்-15

0

Posted on : Tuesday, March 22, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொருவர் கையிலும் தராசு:
தன்னை எடை போட இல்லை.
**********
நாயுடன் உறங்குபவன் உண்ணியுடன் எழுந்திருப்பான்.
**********
நூறு அசடுகளுக்கு தலைவனாய் இருப்பதைவிட
ஒரு அறிவாளிக்கு அடிமையாய் இருப்பதே மேல்.
**********
மனிதன் பாவம் செய்யாத நேரம்
அவன் தூங்கும் நேரம்தான்.
**********
சீவப்பட்ட பென்சில் அழகாக எழுதுகிறது.அனுபவங்களால்
காயப்பட்ட மனிதன் உயர்ந்த தத்துவங்களைப் பேசுகிறான்.
**********
அறிவுரை என்பது விளக்கெண்ணெய் போல.
கொடுப்பது சுலபம்.ஏற்றுக் கொள்வது கடினம்.
**********
குழந்தைகள் ஈரமான சிமெண்ட் மாதிரி.அதன் மேல் எது விழுகிறதோ ,
அது ஆழப் பதிந்து விடும்.
**********
ஓடிச் செல்வதில் பயனில்லை:முன்கூட்டியே
புறப்படிருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
**********
தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்.
**********
ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக
இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.
**********
பலர் இன்ன ஜாதியில் பிறந்தோம்என்பதற்காகப் பெருமை கொள்கின்றனர். சிலர் சிறுமை அடைகின்றனர்.ஆனால் நாம் பிறந்த ஜாதி என்பது நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வில்லை.நமக்கும் தெரியாமல் நடந்த ஒரு பாலியல் விபத்து.இதில் பெருமை என்ன?சிறுமை என்ன?
**********

தாயின் நினைவு

0

Posted on : Tuesday, March 22, 2011 | By : ஜெயராஜன் | In :

எந்த உணவு கொடுத்தாலும்,''இது எனக்குப் பிடித்தமானதாயிற்றே,''என்று சொல்லி ஒரு வெட்டு வெட்டுவது முல்லாவின் வழக்கம்.அவனுக்குப் பாடம் கற்பிக்க அரசர் ஒரு விருந்து வைத்தார்.விருந்தில் வைத்த எல்லா உணவுகளையும் ,''எனக்கு இது ரொம்பப் பிடிக்கும்,''என்று சொல்லியவாறு சாப்பிட்டான்.விருந்தின் முடிவில் மிளகாய்த்தூள் மிக அதிகமாகச் சேர்த்து மீன் வறுவல் பரிமாறப்பட்டது.அதை சாப்பிடும்போது முல்லாவின் நாக்கு துடித்தது.மூக்கிலும் கண்களிலும் நீர் வடிந்தது.அரசர்,''முல்லா,ஏன் கண்ணீர் வடிக்கிறாய்?மீன் பிடிக்கவில்லையா?"என்று கேட்டார்.முல்லா சொன்னான்,''அரசே,என் தாய் தினமும் இப்படித்தான் காரமான மீன் கறி சமைத்துப் போடுவாள்.இப்போது அவள் உயிருடன் இல்லை.இதை சாப்பிட்டதும் எனக்கு என் தாயின் நினைவு வந்து விட்டது.அதனால் என்னையறியாது கண்ணீர் வந்து விட்டது.''முல்லா சமாளித்த திறமையைக் கண்டு அரசருக்கு ஆச்சரியம்.

ஏற்ற இடம்

0

Posted on : Monday, March 21, 2011 | By : ஜெயராஜன் | In :

வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர்.வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது.வணிகன் கேட்டான்,''இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?''  .எமதூதர் சொன்னார்,''மூன்று வழிகளில் ஒன்று பூமியிலிருந்து  நாம்  வந்த பாதை.ஒன்று சொர்க்கத்திற்குப் போவது.மூன்றாவது நரகத்திற்குப் போகும் வழி.நீ பூமியில் இருந்தபோது சில நல்ல காரியங்களும்செய்திருக்கிறாய்.சில கெட்ட காரியங்களும் செய்திருக்கிறாய்.எனவே நீ கொஞ்ச காலம் சொர்க்கத்திலும்,கொஞ்ச காலம் நரகத்திலும் இருக்க வேண்டும்.முதலில் எங்கு செல்வது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும்.''என்றார்.வணிகன் உடனே சொன்னான்,''என்னிடம் கேட்டால்,நான் இந்த இடத்திலேயே இருந்து விடுகிறேன்.எவ்வளவு அருமையான முச்சாலை சந்திப்பு!இங்கு மட்டும் ஒரு கடை வைத்து விட்டால் வியாபாரம் எப்படி இருக்கும்!எனக்கு சொர்க்கமும் வேண்டாம்.நரகமும் வேண்டாம்.''

முகபாவம்

0

Posted on : Sunday, March 20, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா?
தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது.
பாராட்டை  உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல  முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது.
மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம்.
மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது:
சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை  வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த தவறை செய்ய மாட்டேன்'',என்றெல்லாம் சிந்திப்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறர் உதவி கேட்கும்போது 
முகம் சிறுத்துப் போகாமல்  புன்னகை மாறாமல் பேச வேண்டும்.இயலாது என்றால்கூட அதை புன்னகை மாறாமல் சொல்ல வேண்டும்.உதவி மறுக்கப்படலாம்.ஆனால் மறுக்கப்பட்ட விதம் மோசமானதாக அமைந்து  விடக்கூடாது.                                                                                                                          
நாம் அவமானப் படுத்தப்படும்போது
மிக அமைதியாய்,மிகவும் சிந்தனை வயப்பட்டவரைப்போல,முடிந்தால் எந்த வித சலனமும் முகத்தில் காட்டாது இருக்க வேண்டும்.
உடன்பாடற்ற கருத்தை ஒருவர் சொல்லும்போது 
இலேசான கேலிப் புன்னகை  அல்லது ஒரு அதிருப்தி சிரிப்பு.
நாம் பாதிக்கப்படும்போது.
இந்த பாதிப்பு என்னை  ஒன்றும் செய்து விடாது என்பதுபோல அந்த விஷயத்தை அதிகம் பொருட்படுத்தாதவர்போல (அது உள்ளுக்குள் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தினாலும்) முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் கேலி செய்யப்படும்போது 
அது இயல்பான  நகைச்சுவை என்றால் நாமும் சேர்ந்து சிரிக்கலாம்.
கேலியில் எந்தவித உண்மையும் இல்லை:சற்று மோசமான விஷயம் என்றால் இலேசான அலட்சியப் பார்வை போதும்.
பிறர் நம்மைப் பார்க்க வரும்போது 
நிச்சயம்  பிரகாசமாய் ,சற்றும் முகம் சுளிக்காமல் மிக மகிழ்ச்சியாய் முகம் இருக்க வேண்டும்.

என்ன சொல்கிறார்?

0

Posted on : Friday, March 18, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் தன கணவரை டாக்டரிடம் அழைத்து சென்றாள்.எல்லாப் பரிசோதனைகளையும் முடித்த பின்னர் டாக்டர்,அந்தப் பெண்ணைத்  தனியே கூப்பிட்டு அவள் கணவரின் நோயின் தன்மை குறித்து விளக்கினார்.''உன் கணவர் தீவிரமான மனக் குழப்ப நோயில் இருக்கிறார்.நான் சொல்லும் அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டு அதன்படி நீ செய்யாவிடில் உன் கணவர் உயிர் இழக்க நேரிடும்.எப்போதும் அவரிடம் இன் முகம் காட்டு.காலை,பகல் இரவிற்கு நல்ல ஆரோக்யமான எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைக் கொடு.வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி துன்புறுத்தாதே.உன்னுடைய பிரச்சினைகளை அவரிடம் பேசாதே.அது அவருடைய மனக் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும்.அவனை கேலி செய்யாதே.மொத்தத்தில் அவரை மிக  அன்புடன் நடத்து.நான் சொன்னபடி செய்தால் ஒரு ஆண்டில் உன் கணவர் முழுமையாகக் குணம் அடைந்து விடுவார்.''என்றார் டாக்டர்.வீட்டிற்குப் போகும் வழியில் கணவன்,''டாக்டர் என்ன சொல்கிறார்?''என்று கேட்க மனைவி சொன்னால்,''நீங்கள் விரைவில் இறந்து விடுவீர்களாம்.''

அடைக்கும் தாழ்

0

Posted on : Friday, March 18, 2011 | By : ஜெயராஜன் | In :

தனக்கு விருப்பம் இல்லாத ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்தப்படும் மனிதர் அடுத்து எப்படிப்பட்டவர் ஆவார்?மூன்று சாத்தியங்கள் உள்ளன.
*தன மீதுள்ள தளையை அறுத்து புரட்சிக்காரராகலாம் .
**இது தளையே அல்ல,சுகமான சுமைதான் என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை ஆகலாம்.
***தன மீது கவிழ்ந்திருக்கும் இரண்டு வகை வாழ்வின் இன்ப துன்பங்களும் கூடாது:இரண்டின் இன்பங்கள் மட்டும் வேண்டும் என்று அதற்காக சூழ்ச்சிகள் செய்து சுயநலத்தின் உச்சியில் குற்றவாளி ஆகலாம்.
நமது சமூகத்தில் முதல் வகையினர் குறைவு.இரண்டாம் வகை வாழ்வைத்தான் பெரும்பாலோனோர் வாழ்கிறோம்.மூன்றாம் வகையினரும் குறைவு.ஆனால் இந்த நடுநிலைப் பிரிவினரிடமிருந்து தான் புரட்சியாளரும் வருவார்:குற்றவாளியும் உதிப்பார்.நாம் ஏற்றுக்கொண்ட அடிமைத்தனத்திலிருந்து நமக்கே சகிக்க முடியாத அலுப்பு ஏற்படும்போது,எந்தப் பக்கம் குதிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி.
மாட்டிக் கொள்ளாதவரை குற்றவாளியாக இருப்பதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றொரு கோட்பாடு நாளுக்கு நாள் இங்கு வலுவடைந்து வருகிறது.மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற பயமே பலரைக் குற்றவாளிகள் ஆக்காமல் தடுக்கிறது.இந்த மனப்பான்மைகளை நமது  கல்வியும்,குடும்பமும்,அரசியலும் தான் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன.
எது குற்றம் என்ற சமூக வரைக்கும்,சட்ட வரைக்கும்,தனி மனிதர் கருத்துக்கும் தொடர்பு இல்லாதபோது குழப்பங்கள் அதிகரித்து குற்றங்களும் அதிகரிக்கின்றன.
குழந்தைகளின் கல்வி முதல் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் வரை எல்லாமே அவர்கள் மீது நம் விருப்பங்களைத் திணிக்கும் விஷயங்களாக இங்கே மாற்றப்பட்டு விட்டன.எல்லாம் அன்பின் பெயரால்தான்.இந்த   நிர்ப்பந்தங்கள் ஒவ்வொன்றும் எதிர்காலக் குற்றத்தின் விதியா,புரட்சியின் விதியா என்று அறிய முடியாமல் காத்துக் கொண்டிருக்கின்றன.விதிகள் அழுகி விளைச்சலே  இல்லாத அடிமைத்தனம் மாறிவிடும் வரையில் சமூக நிம்மதி காப்பாற்றப்படுகிறது .ஒவ்வொரு புதுக் குற்றத்திற்கும் பின்னர்தான் அது தொடர்பான நீதிக் கொள்கையை சமூகம் வகுத்துக் கொள்ள முடிகிறது. சமூகத்தில் நடக்கும் எந்த குற்றமும் நியாயப் படுத்தப் பட வேண்டியதில்லை.ஆனால் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதனதன் நியாயம்  என்று ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கிறது.அன்பே அடைக்கும் தாழ் ஆக முடியும்.
                                                                             ----எழுத்தாளர் ஞாநி

வாய்ப்பு

0

Posted on : Thursday, March 17, 2011 | By : ஜெயராஜன் | In :

நோயாளி: நான் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா,டாக்டர்?
டாக்டர்: நூறு சதவீதம் உறுதியாக நீங்கள் பிழைத்து விடுவீர்கள்.
நோயாளி:ரொம்ப  மகிழ்ச்சி.ஆனால் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்,டாக்டர்?
டாக்டர்: இந்த நோய் வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் இறந்து விடுவார்கள்.  இதே வியாதிக்காக என்னிடம் வந்த ஒன்பது பேர் இறந்து விட்டார்கள்.நீங்கள் பத்தாவது ஆள்.
**********
தன நோய்க்கு மருத்துவம் பார்க்க சிறந்த டாக்டர் ஒருவரை சொல்லுமாறு ஒருவன் தன நண்பனிடம் கேட்டான்.அவனுமொரு டாக்டர் பேரை சொல்லி,''ஆனால் அவர் முதல் முறை எண்ணூறு ரூபாயும் அடுத்த தடவைகளில் ஐநூறு ரூபாயும் வாங்குவார்,''என்றான்.இவன் அந்த டாக்டரிடம் போய்,''நான் சென்ற முறை உங்களிடம் வந்து  சிகிச்சை பெற்றது ஞாபகம் இருக்கிறதா,டாக்டர்?''என்று கேட்டான்.டாக்டர் ஒன்றும் கூறாது  அவனை சோதனை செய்து விட்டு,''சென்ற முறை நான் கொடுத்த மாத்திரை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள்,''என்றார்.
**********
இரவில் தனக்கு உறக்கமே வருவதில்லை என்று ஒருவன் டாக்டரிடம் கூறினான்.டாக்டர் அவனை நன்கு பரிசோதித்துவிட்டு,''உனக்கு ஒரு குறையுமில்லை.உன் கவலைகளுடன்  படுக்கைக்கு செல்லாதே,தூக்கம் தானே வரும்.''என்றார்.''நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது,டாக்டர்.ஆனால் என் மனைவி தனியாகத் தூங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே?''என்றான்.
**********

பிம்பங்கள்

0

Posted on : Thursday, March 17, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் யாருடனும் நேரிடையாக உறவை அமைத்துக் கொள்வதில்லை.கடந்த  காலங்களில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நாம் பழகி வரும் அனைவரைப்பற்றியும் தனித்தனியாக பிம்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம்.அந்த பிம்பங்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாதபடி தடுத்து விடுகின்றன.இதன் காரணமாக மனிதன் வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருவது மட்டுமல்லாது,போட்டியும்,பொறாமையும் நிறைந்த  உலகச் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறான்.நாம் வாழ்ந்த சூழ்நிலை,நாம் தேடிக்கொண்ட அறிவு,நமக்குக் கிடைத்த அனுபவங்கள் போன்றவை ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன.ஒருவன் உங்களைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினால் அதை என்றும் நீங்கள் மறப்பதில்லை.அவனுடைய அந்தச் செய்கை ,''இவன் ஆணவம் நிறைந்தவன்,இப்படிப்பட்டவன் உறவு நமக்குத் தேவையில்லை''என்று அவனைப்பற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.அவனைச் சந்திக்கும் போதெல்லாம் அந்த பிம்பம் உங்களுக்கும் அவனுக்கும் குறுக்கே நின்று அவனிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள உங்களைத் தடுத்து விடுகிறது. ஒரே வீட்டில் வாழும் கணவன் மனைவி கூட நேர்மையாக உறவு வைத்துக் கொள்ளாது பிம்பங்கள் மூலமாகவே உறவை ஏற்படுத்திக் கொண்டு தங்கள்  மன வாழ்வை வேதனை நிறைந்ததாக மாற்றி விடுகின்றனர்.மதக் கலவரங்கள்  அரசியல் பிரச்சினைகள் எல்லாம் இம்மாதிரி பிம்பங்களினாலேயே ஏற்படுகின்றன.இதைத் தடுக்க என்ன வழி?யாரையும்  பார்க்கும்போது  எந்த  மாதிரியான  ஒரு பிம்பத்தையும்  ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் .இப்போது நாம் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் கடந்த காலத்தில் நாம் ஏற்படுத்தியிருந்த பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.உறவுகள் அதன்பின் பலப்படும்.
                                               --ஜெ.கிருஷ்ண மூர்த்தி..

நம் வீடு

1

Posted on : Tuesday, March 15, 2011 | By : ஜெயராஜன் | In :

புதிதாக வந்த பாதிரியார் சர்ச்சுக்கு சொந்தமான வீடுகளை பார்வையிட்டார்.அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து,''உங்கள் வீட்டில் கூரை ஒழுகுகிறது.உங்கள் வீட்டில் சுற்று சுவர் இடியும் நிலை உள்ளது.மொத்தத்தில் உங்களுடைய இந்த வீடு பாதுகாப்பற்றதாக இருக்கிறது.''என்றார்.கருணையுடன் செவிமடுத்த பாதிரியார்,''நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாகக் குடியிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.அந்தப் பெண்மணியும் முப்பது ஆண்டுகள் என்றார்.பாதிரியார் சொன்னார்,''அப்படியானால்,நீங்கள் சொல்லும்போதே.உங்கள் வீட்டில் என்று சொல்வதற்குப் பதிலாக  நமது வீட்டில்  இந்தக் குறைகள் இருக்கின்றன என்று சொல்லலாமே?''அந்தப் பெண்மணியும்,''நீங்கள் சொல்வது சரிதான்,''என்றார்.அந்தக் குறைகளைக் கவனிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார் பாதிரியார்.சில நாட்கள் சென்றபின் ஒருநாள்,பாதிரியார்,மற்றும் சில பாதிரியார்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அநதப் பெண்மணி வேகமாக ஓடி வந்தார்.என்ன என்று கேட்க அந்தப்பெண் சொன்னார்,''சற்றுமுன் ஒரு பெரிய பாம்பு நம் வீட்டில் உள்ள நம்  படுக்கை அறையில்  நுழைந்து நம் படுக்கையின் மீது ஏறி விட்டது.உடனே வந்து அடிக்க வாருங்கள் ''

யார் குரு?

0

Posted on : Tuesday, March 15, 2011 | By : ஜெயராஜன் | In :

எப்போதும் பிறர் மூலமாகவே நீங்கள் மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள். அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட உங்களைக் கோபம் அடையச் செய்யும்.அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பார்வையே உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைப் பொறுத்தவரை ஒரு குருதான்.இப்படி இந்த குருக்கள் உங்களைத் தங்கள் பக்கம் இழுக்கும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்?நீங்களே உங்களுக்கு குருவாக ஆகுங்கள்.அப்போது மற்றவர்கள் எல்லாம் உங்களுக்குக் கீழ் அடிமையைப்போல வேலை செய்வார்கள்.

பைத்தியம்

0

Posted on : Monday, March 14, 2011 | By : ஜெயராஜன் | In :

ராமு,ஒரு மனோதத்துவ டாக்டரைப் பார்த்து,''சார்,எனக்கு ஒரு பிரச்சினை.ஒவ்வொரு முறை நான் கட்டிலில் படுத்திருக்கும் போதும்  கட்டிலுக்குக் கீழே யாரோ படுத்திருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது.உடனே நான் கட்டிலுக்கு அடியில் சென்று பார்ப்பேன்.உடனே கட்டிலின் மேலே யாரோ படுத்திருப்பது போலத் தோன்றுகிறது.இப்படி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருப்பேன்.எனக்குப் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது,''என்றான்.டாக்டர் சொன்னார்,''என்னிடம் தொடர்ந்து இரண்டு வருடம் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் நான் சரி செய்து விடுவேன்,''  ராமு கேட்டான்,''நீங்கள் எவ்வளவு கட்டணம் வாங்குவீர்கள்? ''டாக்டர் சொன்னார்,''ஒரு தடவை பார்ப்பதற்கு நூறு ரூபாய்தான்,'' ''நான் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிச் சென்றவன் திரும்ப டாக்டரிடம் வரவேயில்லை.சில நாட்கள் கழித்து ஒரு இடத்தில் இருவரும் தற்செயலாக சந்தித்தபோது டாக்டர் ஏன் திரும்ப தன்னை வந்து பார்க்கவில்லை என்று கேட்டார்.ராமு சொன்னான்,''நீங்கள் ஒவ்வொரு தடவைக்கும் நூறு ரூபாய் கேட்கிறீர்கள்.ஆனால் நான் ஒரே தடவை  நூறு ரூபாய் கொடுத்து என் பிரச்சினையை சரி செய்து விட்டேன்,''என்றான்.டாக்டர் ஆச்சரியப்பட்டு,எப்படி என்று கேட்டார்.அவனும் சொன்னான்,''நான் ஒரு தச்சனிடம் என் பிரச்சினையை சொன்னேன்.அவன் கட்டிலின் நான்கு கால்களையும் அறுத்தெடுத்து விட்டான்.

பதில்

0

Posted on : Monday, March 14, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் இரண்டு கோவில் பூசாரிகளுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர். பூசாரிகள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது  என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,''எங்கே போகிறாய்?''என்று கேட்டான்.அடுத்தவன் பதில் சொன்னான்,''காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,''என்றான்.  கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,''இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை  வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,''என்றார்.சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,''நீ எங்கே செல்கிறாய்?''என்று கேட்க,அவன் சொன்னான்,''கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,''என்றான்.இவனுக்கு சிரமமாகி விட்டது.தன தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப்  பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க அவனும் சொன்னான்.அவர் சொன்னார்,''அந்தப் பையன் அந்தக் கூட்டத்தார்க்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய்  என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,''
அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,''காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.'' மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக்கூறி ''நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,''என்றான்.
வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள்.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்..

இயற்கை

0

Posted on : Saturday, March 12, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் டாக்டரிடம் கூறினார்,''டாக்டர்,நேற்று நான் உங்களிடம் என் மகன் படுக்கையில் சிறு நீர் கழிப்பது குறித்துப் பேசினேன்.நீங்கள் கூட அது இயற்கை தான் என்றும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னீர்கள்.ஆனால் எனக்கு அது உடன் பாடாய் இல்லை.இருந்தாலும்,வீட்டில் போய் இதுபற்றி பேசினேன்.அவன் மனைவி கூட இது இயகையானது இல்லை என்று தான் பயப்படுகிறாள்.
**********
மருத்துவ மனையில் இருந்த ஒரு நோயாளி,''டாக்டர்,இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.உண்மையில் எனக்கு என்ன பிரச்சினை?''என்று கேட்டார்..டாக்டரும் முழுமையாக சோதித்துவிட்டு,''எனக்கு உண்மையை சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.நீங்கள் உயிருடன் இன்னும் பத்து....''என்று அவர் முடிக்குமுன்,நோயாளி,''சொல்லுங்கள்,பத்து வருடமா, மாதமா,வாரமா,நாட்களா?''.என்று கேட்டார்.டாக்டர் தலையை ஆட்டிவிட்டு,''பத்து,ஒன்பது,எட்டு.......''என்று எண்ண ஆரம்பித்தார்.
**********
''டாக்டர்,எனக்கு கையெல்லாம் ரொம்பவே நடுங்குது.''
'நீங்கள் அதிகம் குடிப்பீர்களா?'
''என்னத்த சொல்ல,அதுதான் குடிக்குமுன் முக்கால் வாசி சிந்தி விடுகிறதே!''
**********
நர்ஸ்:டாக்டர் நீங்கள் பார்த்த நோயாளி,படிக்கட்டில் இறங்கி செல்லும்போது விழுந்து இறந்து விட்டார்.நான் என்ன செய்ய?''
டாக்டர்:படிக்கட்டில் அவன் உடலைத் திருப்பிப்போடு .யாரும் பார்த்தால் அவன் என்னைப் பார்க்க வரும்போது ,விழுந்து இறந்துவிட்டான் என்று நினைப்பார்கள்.
**********
டாக்டர் தன மாணவர்களுக்கு ஒரு எக்ஸ் ரேயைக் காண்பித்து,''இந்த நோயாளி மூட்டு எலும்பு வளைந்து இருப்பதால்,நொண்டுகிறார்.''என்று விளக்கிவிட்டு,ஒரு மாணவனைப்பார்த்து,'',''இந்த மாதிரி கேசில் நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டார்.அந்த மாணவன் சொன்னான்,''ஏன்,நானும் கூடத்தான் நொண்டுவேன்''
**********

டிஜிட்

0

Posted on : Friday, March 11, 2011 | By : ஜெயராஜன் | In :

calculate என்ற வார்த்தை கேல்குலஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இதற்குக் கல் என்று பொருள்.முற்காலத்தில் ஒரு மனிதனிடம் எத்தனை  விலங்குகள் உள்ளது எனக் கேட்டால் குறிப்பால் உணர்த்த ஒரு விலங்குக்கு ஒரு கல் என்ற கணக்கில் குவியலாய்க் காட்டும் பழக்கம் இருந்தது.
பின்னர் கை விரல்களைக் கொண்டு கணக்குப் போட்டார்கள்.கை விரலுக்கு லத்தீன் மொழியில் டிஜிட்ஸ் என்ற சொல் உண்டு.இதிலிருந்து தான் டிஜிட்  (digit)என்ற வார்த்தை உருவாயிற்று
**********
முதலை உணவு சாப்பிட்ட பின் உணவில் உள்ள அதிக உப்பு சத்தையும் தண்ணீரையும் கண்ணீர் ரூபமாக வெளி விடுகிறது.இது உண்மையான கண்ணீர் இல்லை என்பதால் தான் கண்ணீர் விட்டு நடிப்பதை முதலைக் கண்ணீர் என்று சொல்கிறார்கள்.
*********
சுமார் இருநூறு கிலோ எடையுள்ள கரடிக்குப் பிறக்கும் குட்டியின் எடை  அரைக் கிலோ தான் இருக்கும்.அதாவது ஒரு எலியின் எடை அளவே இருக்கும்.
**********
போதி மரம் என்பது அரச மரம் தான்.புத்தர் 49நாட்கள் போதி மரத்தடியில் இருந்து ஞானம் பெற்றார்.
**********
ஆங்கில மொழி ஒரு வணிக மொழி.
லத்தீன் மொழி ஒரு சட்ட மொழி.
ஜெர்மன் ஒரு தத்துவ மொழி.
கிரேக்கம் ஒரு இசை மொழி.
**********

பூர்த்தி

0

Posted on : Friday, March 11, 2011 | By : ஜெயராஜன் | In :

சுடாத மாவுப் பலகாரம் ஒன்றை காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் போட்டால்,முதலில் படபடவென சப்தம் உண்டாகும்.பின்னர் அந்தப் பலகாரம் பொரியப் பொரிய  அதன் சப்தம் குறைகிறது.முழுவதும் பொரிந்து விட்டால் சப்தம் முற்றிலும் நின்று விடுகிறது.அதே போல ஒருவனிடம் ஞானம் அற்பமாய் இருக்கும் வரை அவன் வாதம் புரிந்து,பிரசங்கமும் பிரச்சாரமும் செய்து கொண்டு போகிறான்.ஆனால் ஞானம் பூர்த்தி அடைந்ததும் இந்த விதமான வீண் வேளைகளில் அவன் மனம் செல்வதில்லை.
                                                --ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நாகரீகம்

0

Posted on : Friday, March 11, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆப்பிரிக்கக் காடுகளில் ஆய்வு செய்ய இங்கிலாந்திலிருந்து ஒரு  விஞ்ஞானியும் அவரது உதவியாளரும் வந்தனர்.ஒரு நாள் அவர்கள் மனித மாமிசம் சாப்பிடும் ஒரு கும்பலிடம் மாட்டிக் கொண்டனர்.விஞ்ஞானி பயந்து விட்டார்.அப்போது அந்த கும்பலில் ஒருவன் ஆங்கிலத்தில் அவர் எங்கிருந்து வருகிறார் என்ற விபரம் கேட்டான்.ஆச்சரியமடைந்த அவர் அவனுக்கு ஆங்கிலம் எப்படித் தெரியும் என்று கேட்க, அவனும் தான் சிறிது காலம் லண்டனில் இருந்து படித்ததாகக் கூறினான்.''நாகரீகமான ஒருவன் இருக்கிறான்,நாம் தப்பினோம்,''என்று எண்ணிய விஞ்ஞானி,''அப்படியானால் உங்கள் கூட்டத்திற்கு நல்ல நாகரீகம் கற்றுக் கொடுத்திருப்பாயே ?''என்று கேட்டார்.அவன் அமைதியாக சொன்னான்,''ஆமாம்,இப்போதெல்லாம் எங்கள் ஆட்கள் நர மாமிசத்தை ஸ்பூன்,முள் கரண்டி கொண்டுதான் சாப்பிடுகிறார்கள்.''

டாக்டர்!டாக்டர்!!

1

Posted on : Tuesday, March 08, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கண் டாக்டர்,புதிதாக வேலையில் சேர்ந்த தன உதவியாளரிடம் கூறினார்,''இங்கு கண் சிகிச்சைக்கு வருபவர்களிடம் எவ்வாறு கட்டணம் வசூலிப்பது என்பதை முதலில் உனக்கு சொல்லித்தருகிறேன்.நான் எழுதிக் கொடுத்துள்ளபடி கண்ணாடியை தயார் செய்து,கண்ணாடியை மாட்டும்போது ,அவர் இதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்பார்.உடனே 750 ரூபாய் என்று சொல்.அவர் கண்ணை அப்போது பார்.அவர் கண்கள் படபடக்காமல் சாதாரணமாக இருந்தால்,அது கண்ணாடி பிரேமுக்கு மட்டும் என்றும்,லென்சுக்கு தனியே 500 ரூபாய் ஆகும் என்று சொல்.அப்போதும் அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால் அந்த விலை ஒரு லென்சுக்கு என்று சொல்.''
**********
ஆப்பரேசனுக்குப்பின் மயக்கம் தெளிந்து எழுந்த நோயாளியிடம் டாக்டர் வந்து மெதுவாக சொன்னார்,''ஒரு தவறு நடந்து விட்டது ஆப்பரேசனின்போது எனது கை உறையை உள்ளேயே வைத்து தைத்து விட்டேன்.அதை எடுக்க மீண்டும் ஒரு ஆப்பரேசன் செய்ய வேண்டியிருக்கிறது.''உடனே நோயாளி அலறி அடித்துக்கொண்டு சொன்னார்,''ஐயையோ.என்னை ஆளை விடுங்கள்.உங்கள் கை உறைக்கு உரிய பணத்தையும் நான் கட்டி விடுகிறேன்.''
**********
அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ஒருவரின் வீட்டில் தண்ணீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது உடனே பிளம்பர் ஒருவர் வந்து அதை சரி செய்தார்.கூலி எவ்வளவு என்று டாக்டர் கேட்க,பிளம்பர்  ஆயிரம் ரூபாய் என்றார்.அதிர்ந்து போன டாக்டர்,''அடேயப்பா,நான் கூட ஒரு ஆபரேசனுக்கு அவ்வளவு பணம் வாங்குவதில்லையே!''என்றார்.பிளம்பர் சாவகாசமாக சொன்னார்,''நான் கூட அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது அவ்வளவு பணம் கிடைக்கவில்லை அதனால்தான் பிளம்பராகிவிட்டேன்.''
**********
உடல் நலமில்லை என்று ஒருவர் ஒரு டாக்டரிடம் சொன்னார்.அவரை நன்கு பரிசோதித்தபின் டாக்டர் மூன்று  நிறங்களில் மாத்திரைகளைக் கொடுத்து சொன்னார்,''காலை உணவுக்குப்பின் சிவப்பு மாத்திரையை சாப்பிட்டுவிட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.மதிய உணவுக்குப்பின் மஞ்சள் நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இரவு படுக்குமுன் பச்சை நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.''''எனக்கு என்ன வியாதி,டாக்டர்?''என்று நோயாளி கேட்டார்.டாக்டர் சொன்னார்,''நீ தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை.''
**********