உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாக்குவாதம்

0

Posted on : Wednesday, March 31, 2010 | By : ஜெயராஜன் | In :

வாக்குவாதத்திற்கும் உரையாடலுக்கும் என்ன வேறுபாடு?வாக்குவாதத்தில் நீங்கள் அடுத்தவர் சொல்வதைக் கேட்க நீங்கள் தயாராய் இருப்பதில்லை. ஒரு வேளை நீங்கள் கவனித்தால் கூட அந்த கவனித்தால் தவறாக இருக்கும். உண்மையாகவே நீங்கள் கவனிப்பதில்லை.உங்கள் விவாதத்திற்கு தயார்  செய்து கொண்டிருப்பீர்கள்.அடுத்தவர் பேசிக் கொண்டிருக்கும் போதுநீங்கள் முரண்பாட்டிற்குத் தயாராகிறீர்கள்;உங்கள் வாய்ப்புக்காக,மறுபடி விவாதிப்பதற்காகக் காத்திருக்கிறீர்கள்.உங்களுக்குள் ஏற்கனவே ஒரு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளீர்கள்.ஒரு கோட்பாடைக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் தேடலில் இல்லை;அறியாமையில் இல்லை;வெகுளியாய் இல்லை.ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கிறீர்கள்.சில கோட்பாடுகளை எடுத்துச் சொல்கிறீர்கள்.அவற்றை உண்மை என்று நிரூபிக்க முயல்கிறீர்கள்.வாக்குவாதம் செய்பவர்களால் உரையாடலில் ஈடுபட முடியாது.அவர்களால் மோதிக் கொள்ளத் தான் முடியும்.குழப்பம்  வந்தவுடன் ஒருவரை ஒருவர் எதித்துக் கொள்கின்றனர். இந்த மாதிரியான  விவாதத்தில் நீங்கள் எதையாவது நிரூபித்து விட்டதாக நினைக்கலாம். ஆனால் எதுவுமே நிரூபிக்கப் படுவதில்லை.நீங்கள் அடுத்தவரை அமைதியாக்கி விடலாம்.ஆனால் அவர்களை மாற்றிவிட முடியாது. உங்களால் சமாதானப் படுத்த முடியாது.ஏனெனில் இது ஒரு போர் போன்றது.ஒரு நாகரீகமான போர்.வார்த்தைகளைக் கொண்டு சண்டையிடும் போர்.

அடுத்தவர் நிலை

0

Posted on : Wednesday, March 31, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒன்றுமேஇல்லாத விசயத்திற்கு நீங்கள் கோபப் படுகிறீர்கள்.நீங்கள் கதவைத்  திறக்க முயற்சித்து அது திறக்கவில்லை என்றால் பைத்தியமாகி விடுகிறீர்கள். கடிதம் எழுத முயற்சிக்கும் போது,பேனா நன்றாக எழுதா விட்டால் கோபப்  படுகிறீர்கள்.வேதனை அடைகிறீர்கள்.ஏதோ அந்தப் பேனா வேண்டுமென்றே செய்வதைப் போல்,அந்தப் பேனாவில் யாரோ அமர்ந்து கொண்டு உங்களைத் தொந்தரவு செய்ய முயற்சிப்பதாகக் கூட நினைக்கிறீர்கள்.ஒரு குழந்தை மேஜையை இடித்துக் கொண்டது என்றால் உடனே அந்த மேஜையை அடித்து விடும்.பிறகு அந்த மேஜையை எதிரியாகவே பார்க்கும்.இது தன்னையே முன்னிலைப் படுத்துதல்.ஒரு அறிவாளி இது போல் தன்னையே மையமாக நினைக்க மாட்டான். எப்போதும் அடுத்தவர் நிலையிலிருந்து தான் பார்ப்பான்.கதவு திறக்கவில்லை என்றால் திறக்க முயற்சிப்பான்.அங்கே யாரும் கதவை மூட முயற்சிக்கவில்லை.உங்கள் முயற்சியைத் தடுக்கவில்லை.அந்தக் கதவுடன் சண்டை  போட வேண்டியதில்லை.

தட்டிக் கழிக்காதே!

0

Posted on : Tuesday, March 30, 2010 | By : ஜெயராஜன் | In :

அரசுத் துறையைச் சேர்ந்த ஒருவன் சாலை ஓரத்தில் மூன்று  அடி இடைவெளியில் குழிகள் தோண்டிக் கொண்டே சென்றான்.பின்னால் வந்தவன் மண்ணைப் போட்டுக் குழியை மூடிக் கொண்டே சென்றான்.அதைப் பார்த்த ஒருவர்,''இது என்னப்பா பைத்தியக் காரத் தனமாய்வேலை செய்கிறீர்களே?'' என்று கேட்க,'நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத்தான்  செய்கிறோம்.நாங்கள்  மூன்று பேர்.ஒருவன் குழி தோண்ட வேண்டும். அடுத்தவன் அதில் செடி வைக்க வேண்டும்.மூன்றாவது ஆள் அதன் பின் மண்ணைப் போட்டுக் குழியை மூட வேண்டும்.இன்று செடி வைப்பவன் லீவ்  போட்டு விட்டான்.நாங்கள் இருவரும் போய் அதிகாரியிடம் விபரம் சொன்னோம். அதற்கு அவர்,''ஏதாவது காரணம் சொல்லி வேலையைத் தட்டிக் கழிக்கப் பார்க்காதீர்கள்.போய் உங்கள் வேலையைப் பாருங்கள்,''என்றார். நாங்களும் வந்து எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.'என்றார்கள்.

கூண்டுக்கிளி

0

Posted on : Tuesday, March 30, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆப்பிரிக்கக்  கிளி  ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம்,''என்  ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம்  நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளையைக் கண்டு விபரம் சொல்ல,அது உடனே  கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது.'அடடா,இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,'என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல,அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார்.உடனே அந்தக்  கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர்,''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!''என்றார்.அதற்கு அக்கிளியும்,'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.'என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

சிரித்து வாழ்க!

0

Posted on : Monday, March 29, 2010 | By : ஜெயராஜன் | In :

இது எனது முன்னூறாவது இடுகை.
*************************************
அமைச்சர் ஒருவர் மருத்துவமனை ஒன்றிற்கு வந்து நோயாளிகளின் நலன்,அவர்களுக்குள்ள குறைகள் பற்றிக் கேட்டார்.ஒருநோயாளி சொன்னார்,   ''இங்கு ஒரு குறையும் இல்லை.ஆனால் பொழுது விடிந்தால் வேலையற்றவன் யாராவது வந்து கொண்டே இருக்கிறான்.''
***********
தன வீட்டுத் துன்பங்கள்,அலுவலக இன்னல்கள் பற்றி நண்பரிடம் விவரித்தார் ஒருவர்.நண்பர் கூறினார்,''நல்லவர்களுக்குத்தான் சோதனை வருது.உங்களுக்கு ஏன் தான் இவ்வளவு துன்பம் வருதோ?''
**********
''ஒரு குதிரையோட முகம் வடக்கு நோக்கி இருந்தால்,அதன் வால் எதை   நோக்கி இருக்கும்?''
'தெற்கு நோக்கி.'
''இல்லை,பூமியை நோக்கி இருக்கும்!''
**********
நர்ஸ் ஓடி வந்து டாக்டரிடம்,''டாக்டர்,அந்த நோயாளி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டான்.''
'எப்படி,பிழை ச்சுட்டானா ?'
''ஆமா,நம்ம ஆஸ்பத்திரி சுவர் ஏறிக் குதித்து ஓடிட்டான்.''
**********
நீதிபதி; சாமி தலையிலிருந்த கிரீடத்தை ஏன் திருடினாய்?
திருடன்: சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.அது தான்.
**********
மனைவி: பிச்சைக்காரனுக்கு எவ்வளவு போட்டீர்கள்?
கணவன்: செல்லாத ஒரு ரூபாய் நாணயம் ஒன்று இருந்தது,அதைத் தான்  போட்டேன்.
மனைவி: உங்களுக்கு எப்பவுமே சமர்த்து பத்தாது.செல்லாத ஐம்பது காசு நாணயம் ஒன்று இருந்ததே,அதைப் போட்டிருக்கலாமே?
**********
நண்பர்: குழந்தைகளுக்கு மொட்டை போடத் திருப்பதி போறேன்னு சொன்னீங்க.இப்ப நீங்களும் மொட்டை அடிச்சிட்டு வந்து நிக்கிறீங்களே!
மற்றவர்: அதுவா,ஐந்து மொட்டை அடிச்சா ஒரு மொட்டை இனாம்னு சொன்னான்.அது தான்.
**********
மாமியார்: இங்கே நான் கழுதை மாதிரி கத்திக் கொண்டிருக்கிறேன்.அங்கே  என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே?
மருமகள்: பேப்பரைத் தேடிக்கிட்டிருக்கேன்,மாமி.
**********
அரசியல்வாதி: உங்கள் பத்திரிகையில் என்னைப் பற்றி அயோக்கியன், பொய்யன் என்று எழுதியிருக்கிறீர்களாமே?
ஆசிரியர்: இருக்காது.எல்லோருக்கும் தெரிந்த செய்திகளை நாங்கள் எழுதுவதில்லை.
**********
மகன்: அப்பா,தொலைபேசி...
அப்பா: நீயே பேசித்தொலை.
**********

பெறுமானம்

0

Posted on : Sunday, March 28, 2010 | By : ஜெயராஜன் | In :

இல்லற ஞானி ஒருவர் இருந்தார்.ஒரு நாள் அவர் மனைவி கோவிலுக்குச் சென்றிருந்த பொது ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டான்.அவர் வீட்டினுள் சென்று பார்த்ததில் உணவுப் பொருட்களோ அரிசியோ எதுவும்  இல்லை.ஆனால் அவர் மனைவி ஒரு தங்க நகையை பார்வையில் படும் இடத்தில் வைத்திருந்தார்.அவர் உடனே அதை எடுத்து பிச்சைக்காரனுக்குப் போட்டு விட்டார்.அவன் மகிழ்ச்சியுடன் சென்ற சிறிது நேரம் கழித்து அவர் மனைவி வீட்டுக்கு வந்தவுடன் நடந்த விபரத்தைக் கூறினார்.அவர் மனைவி உடனே,''ஐயையோ!அது இருபது ஆயிரம் பெறுமான நகை.அதைப் போய் பிச்சைக்காரனுக்குப் போட்டிருக்கிறீர்களே!உடனே ஓடிப் போய் வாங்கி வாருங்கள்.''என்றார்.அவர் உடனே ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரனைக் கண்டு பிடித்துச் சொன்னார்,'அப்பா,நான் தெரியாமல் போட்ட அந்த நகை    இருபது ஆயிரம் ரூபாய் பெறுமாம்.தயவு செய்து அந்தத் தொகைக்குக் குறைவாக யாருக்கும் விற்று விடாதே.'

சித்திரவதை

0

Posted on : Sunday, March 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் மன நோய் மருத்துவ மனையில் பத்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றான்.மன நோய் குணமான உணர்வு ஏற்பட்ட பின் அவன் அந்த டாக்டரிடம் சென்று தான் குணமாகி விட்டதாக கூறினான்.டாக்டர் சொன்னார்,   'பத்து ஆண்டுகள் மருத்துவ சிகிச்சையில் இருந்து விட்டாய்.இன்னும் ஒரு பத்து நாட்கள் பொறு.அனைத்து சோதனைகளையும் ஒரு முறை நான் பார்த்து விடுகிறேன்.'பத்து நாள் சோதனைக்குப் பின் அவன் பூரண குணம் அடைந்ததாக சொல்லி அவன் மருத்துவ மனையிலிருந்து செல்லலாம் என டாக்டர் கூறினார்.பின் அவனிடம் மருத்துவ மனையிலிருந்த காலம் பற்றி என்ன நினைப்பதாகக் கேட்டார்.அவன் சொன்னான்,''மன நோயாளியாக இருந்த பத்து ஆண்டுகள் பத்து நாட்கள் போலப் பறந்து விட்டது.குணமான பின் இங்கிருந்த பத்து நாட்கள்,பத்து ஆண்டுகளைக் கழித்தது போல் சித்திரவதைப் படுத்தி விட்டது.''டாக்டரே இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டார்.

புன்னகை ஏன்?

0

Posted on : Saturday, March 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் இறந்து போன மூன்று பேரின் உடல் அடையாளம் காண்பதற்காக  காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.இறந்த மூன்று பேரின் முகத்திலும் சிறு புன்னகை.இதற்கான காரணத்தை அறிய ஒரு அதிகாரி ஆவல் கொண்டு விசாரித்தார்.
ஒரு உடல் ஒரு கருமியுடையது.அவன் மிக்க மகிழ்ச்சியுடன் பணம் எண்ணிக் கொண்டிருந்த போது,மரணம் ஏற்பட்டுள்ளது.அதனால் தான் அந்தப் புன்னகை.
இரண்டாவது உடலுக்குரியவன் ஒரு சூதாடி.அவன் அன்று சூதாடும் போது  வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலி திடீரென வந்து இறந்து விட்டான்.அது தான் அவனுடைய புன்னகைக்குக் காரணம்.
மூன்றாவது ஆள் மின்னல் தாக்கி இறந்துள்ளான்.அவன் முகத்தில் ஏன்  புன்னகை?அவன் ஒரு அரசியல்வாதி.மின்னலின் ஒளியைக் கண்டவுடன்  அவன் யாரோ தன்னை போட்டோ எடுக்கும் போது வந்த ப்ளாஷ் லைட்  என  எண்ணிவிட்டான்.

யார் உழைப்பு?

0

Posted on : Saturday, March 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் தனது சீடர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்  புத்தர் பிரான்.அவர்களை அழைத்து விசாரித்தார்.ஒவ்வொருவரும் தங்களால் தான் புத்த விஹாரப் பணிகள் செம்மையாக நடைபெறுவதாகக் கூறினர்.அவர்களிடம் ஒரு காலிப் பானையைக் கொண்டு வரச் சொன்ன புத்தர், அதில் ஒவ்வொருவரையும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றச்சொன்னார்.அவர்களும் அப்படியே செய்தார்கள்.பானை தண்ணீரால்  நிரம்பியது.''இப்போது சொல்லுங்கள்,யார் கொண்டு வந்து ஊற்றிய தண்ணீரால் பானை நிரம்பியது?''என்று கேட்டார் புத்தர்.பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர் எல்லோரும்.''இது போல் தான் அனைவரது உழைப்பாலும் விஹாரப் பணிகள் செம்மையாக நடக்கின்றன.''என்றார்  புத்தர்.

மாத்தி யோசி

0

Posted on : Friday, March 26, 2010 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவின் நாசா,விண்வெளியில்  மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும்  போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை  இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை.ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து  புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்.நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும்,கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர்.
ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது;''அவர்கள் பென்சிலை உபயோகித்தார்கள்!''

ஆனந்தம்

0

Posted on : Friday, March 26, 2010 | By : ஜெயராஜன் | In :

சீடன் ஒருவன் குருவின் கோபத்திற்கு ஆளான போது,குரு அளித்த சாபத்தினால் பன்றி ஆனான்.பன்றி ஆகுமுன் நண்பர்களிடம்,தான் பன்றியானதும் தன இருப்பிடத்தை குருவின் மூலம் அறிந்து தன்னைக் கொன்று விட வேண்டும் என்றும் தன்னால் அந்த பன்றி பிறப்பைத் தாங்க முடியாது என்றும் கூறினான்.
சாபம் பலித்து விட்டது..சீடர்கள் குரு மகிழ்ச்சியாய் இருக்கும் போது, அவரிடம் விபரம் கேட்டறிந்து குரு சொன்ன இடத்திற்குச் சென்றார்கள். தாயுடன் இருந்த ஆறு குட்டிகளில் சீடனான பன்றிக் குட்டியைக் கண்டுபிடித்து  தடியால் அடிக்கப் போனார்கள்.ஆனால் அந்தக் குட்டியோ ஓட ஆரம்பித்தது.
'நில்லு,நில்லு,நீ சொல்லித்தானே வந்திருக்கிறோம்' என்றனர் சீடர்கள்.
''அப்போது நான் சொல்லியிருக்கலாம்.ஆனால் இப்போது என்னை அடிக்காதீர்கள்.என்னிடம் என் தாயார் எத்தனை அன்பாக இருக்கிறார்!என்ன பட்டானது என் மேனி!.என்னை அடிக்கவே அடிக்காதீர்கள்.''என்ற
பன்றிக்குட்டி நில்லாமல் ஓடியது.
விக்கித்துப் போன சீடர்கள் குருவிடம்நடந்ததைக் கூறினார்கள்.குரு சொன்னார்,''நீங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பேசாமல் இருந்தேன்.உங்களுக்கு வேண்டுமானால் பன்றி செய்கின்ற காரியங்கள்  அருவருப்பாய் இருக்கலாம்.ஆனால் அதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதனுடைய ஆனந்தத்தை இல்லாமல் செய்ய நம்மால் முடியுமா?''

மகிழ்ச்சியும் கவலையும்

0

Posted on : Thursday, March 25, 2010 | By : ஜெயராஜன் | In :

மூன்று குதிரை வீரர்கள் ஒரு நாள் இரவு ஒரு பாலைவனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி கேட்டது,''இங்கே இறங்குங்கள். இந்த இடத்திலிருந்து கிடைக்கக் கூடியதை எவ்வளவு எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்லுங்கள்.நாளை காலை நீங்கள் மகிழ்ச்சியும் கவலையும் அடைவீர்கள்.''
வீரர்கள் உடனே கீழே இறங்கி அந்த கடும் இருளில் தடவிப் பார்த்து கிடைத்த கற்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர்.மறு நாள் காலை அவர்கள் அந்தப் பைகளை  எடுத்துப் பார்த்த போது அந்தக் கற்கள் அனைத்தும் வைரமாக இருப்பதைக் கண்டனர்.ஒரு பக்கம் அவர்களுக்கு வைரங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதே சமயம் இன்னும் கொஞ்சம் கொண்டு வராமல் போனோமே என்று வருத்தம்.அசரீரி சொன்னது உண்மையாயிற்று.
வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பெரிய சொத்து.வாலிப வயதில் நாம் படிப்பதன் மூலம் நிறைய நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்கிறோம்..  ஆனால் வயதான பின் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம்.

எது கனவு?

0

Posted on : Thursday, March 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் ஞானி சுவாங் ட்சு ஒரு நாள் காலை எழுந்ததும் தனக்கு ஒரு சந்தேகத்தால் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தீர்த்து வைக்க உதவுமாறும் தன சீடர்களைக்  கேட்டுக் கொண்டார்.சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அப்பாற்பட்ட குருவுக்கே  பிரச்சினையா என்று அவர் சொல்லப் போவதை ஆவலுடன் கேட்கத் தயாராயினர்.
குரு சொன்னார்,''சந்தேகம் மிக சிக்கலானது.நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பட்டாம் பூச்சியாய் மலருக்கு மலர் தாவித் தேன் அருந்திக்   கொண்டிருந்தேன்.''சீடர்களுக்கு திகைப்பு.கனவு எல்லோரும் தானே காண்கிறோம்,இதில் என்ன பிரச்சினை?குரு தொடர்ந்தார்,'' பிரச்சினை அதோடு முடியவில்லை.இன்று காலை கண் விழித்ததும் சுவாங் ட்சு ஆக மாறிவிட்டேன்.விவகாரம் என்னவென்றால்,இப்போது அந்த பட்டாம் பூச்சி  தான் சுவாங் ட்சு ஆகக்  கனவு காண்கிறதா என்பது தான்.ஒரு மனிதன் பட்டாம் பூச்சியாகக் கனவு காண முடியுமென்றால்,பட்டாம் பூச்சியும் மனிதனாகக் கனவு காண முடியுமல்லவா?இப்போது எனக்கு உண்மை நிலை தெரிந்தாக வேண்டும்.நான் சுவாங் ட்சுவா,இல்லை பட்டாம் பூச்சியா?''
சீடர்கள்,''இதற்கு பதில் சொல்ல எங்களுக்கு சக்தி இல்லை.இதுவரை நாங்கள் தூக்கத்தில் காண்பது கனவென்றும்,விழிப்பில் காண்பது நனவென்றும் தான் கருதி வந்தோம்.இப்போது நீங்கள் எங்களைக் குழப்பி விட்டீர்கள்.''என்றனர்.
குரு சொன்னார்,''நீங்கள் கனவு காணும் போது,பகலில் பார்த்ததை எல்லாம் மறந்து விடுகிறீர்கள்.பகலின் நிகழ்ச்சிகளின்போது கனவை மறந்து விடுகிறீர்கள்.பகலில் கனவில் கண்டது கொஞ்சமாவது நினைவுக்கு வரும். ஆனால்,கனவில்,பகலில் கண்டது எதுவுமே  நினைவிற்கு வருவதில்லை.  நினைவு தான் முடிவு எடுக்கும் முக்கிய  அம்சம் என்றால் பகலின் கனவுகளை விட இரவின் கனவுகளே மிகவும் உண்மையாக இருக்கின்றன. ஒருவன்எப்போதும் உறங்கிக் கொண்டே இருந்தால்,தான் காணும் கனவு உண்மை அல்ல என்று எப்படி அறிய முடியும்?ஒவ்வொரு கனவும் காணும் போது உண்மையாகத்தான் தெரிகிறது.''
மரணத் தருவாயில்,ஒருவன் தன கடந்த கால வாழ்வைத் திரும்பப் பார்த்தால்.அது கனவைப் போலத்தான் தோன்றும்.வாழ்ந்தோமா.கனவு காண்கிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

ஆண்கள்

0

Posted on : Wednesday, March 24, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன.
7  வயதுக்குக் கீழ்    ---பாலன்
7--10  வயது               ---மீளி
10--14 வயது             ---மறவோன்
14--16 வயது             ---திறலோன்
16  வயது வரை      ---காளை
16--30  வயது            ---விடலை
30 வயதுக்கு மேல் ---முதுமகன்                                

பூக்கள்

0

Posted on : Wednesday, March 24, 2010 | By : ஜெயராஜன் | In :

நமது தமிழ் மொழி ஒரு இனிமையான மொழி.இதன் சொல் வழமை தான்  எவ்வளவு சிறப்பாக இருக்கிறது?
பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.
மொக்கு    ---முகப்பு காட்டும் நிலை
மொட்டு   ----மூட்டும் இறுக்க நிலை
அரும்பு    ----அரும்பும்  சூழ்நிலை
முகிழ்       ----முகிழ்த்து வரும் நிலை
மூகை      ----மணம் முகம் காட்டும் நிலை
மலர்         ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர்        ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ               ----வீழும்  நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.

நிலை மாறும்

0

Posted on : Wednesday, March 24, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மன்னன்,யாருமே துணையில்லாத ஒரு சூழ்நிலையில்  ஒரு சிக்கலில்  மாட்டிக்  கொண்டால்  செயல்  படும்  விதம் குறித்து, தன் மந்திரிகளிடம் கேட்டார்.அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதில் அவருக்கு திருப்திகரமாக இல்லை.எனவே ஒரு ஞானியை அணுகிக் கேட்டதில்.அவர் ஒரு சிறு காகிதத்தில் குறிப்பு எழுதிக் கொடுத்து,''இதை இப்போது படிக்கக் கூடாது.உன் மோதிரத்தில் மடித்து வைத்திருந்து அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது எடுத்துப் படி.''என்றார்.
சில மாதங்களில் பக்கத்து நாட்டு அரசன் படை எடுத்து வந்தான். இந்த மன்னன் தோல்வியுற்றதுடன் தனியாக ஓடித் தப்பித்தான்.ஓடி ஓடிக் கடைசியில் ஒரு  மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான்.தன் நிலை குறித்து வருந்திய அரசன்,ஞானி சொன்னது ஞாபகம்வந்து மோதிரத்திற்குள் இருந்த குறிப்பை எடுத்துப் படித்தான்.அதில்,''இந்த நிலை யும்  மாறலாம்,'' என்று  இருந்தது.உடனே அவனுக்கு உற்சாகம் தோன்றியது.பின்னர் நாட்டுக்குள் வந்து தன் படைகளை மீண்டும் திரட்டி,பக்கத்து நாட்டு மன்னனுடன் போரிட்டு வெற்றியடைந்து மீண்டும் தன் நாட்டிற்கு மன்னன் ஆனான்.
மீண்டும் மன்னன் ஆன அவனுக்கு சில மாதங்களில் தான் மிகவும் சிறந்தவன்,யாராலும் அசைக்க முடியாதவன் என்ற  ஆணவம் வரலாயிற்று. அப்போது ஒரு நாள் தற்செயலாக மோதிரத்தினுள் வைத்திருந்த குறிப்பு தவறிக் கீழே விழுந்தது.அதை எடுத்த மன்னன் மீண்டும் படித்தான்,''இந்த நிலையும் மாறலாம்.''மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.அவன் ஆணவம் அப்போதே அழிந்தது.

மோதிரம்

0

Posted on : Tuesday, March 23, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது,ஒரு ஆங்கிலேய பிரபு மன்னர்  ஒருவரை விருந்துக்கு அழைத்தார்.மன்னர் அழகான விலை உயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார்.ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட மன்னர்  அதை கழற்றி அவரிடம் காண்பித்தார்.பிரபு அதைத் தன விரலில் போட்டுப் பார்த்தார்.பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை.தயங்கியபடியே மன்னர் அதைக் கேட்ட போது பிரபு சொன்னார்,''எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''
சில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு அழைத்தார்.அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின்  மனைவியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். விருந்து முடிந்து பிரபு புறப்படும் போது தன் மனைவியை அழைத்தார்.அப்போது மன்னர் சொன்னார்,''எங்கள் அந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு இல்லை.''
பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.

கொடியது

0

Posted on : Tuesday, March 23, 2010 | By : ஜெயராஜன் | In :

மார்கழிக் குளிரில் புலவர் ஒருவர் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்.அப்போது இன்னொரு புலவர் சால்வையுடன் வந்தார்.முதல் புலவர் சொன்னார்,''பனிக்  காலம் கொடியது,''இரண்டாவது புலவர் சொன்னார்,'பனிக்காலம் நன்று.' முதல்  புலவர் சற்று யோசித்து,''ஆமாம்,பனிக்காலம் நன்று,'என்றார். அருகில்  இருந்தவருக்கு ஒரே குழப்பம்.முதல் புலவர் தன கருத்தை வேகமாக மாற்றிக்  கொண்டதற்கான காரணத்தை வினவினார்.அவர் சொன்னார்,'இருவரும் ஒரே கருத்து தான் கொண்டிருக்கிறோம்.'அருகில் இருந்தவருக்கோ குழப்பம் அதிகரித்தது.குறிப்பறிந்து முதல் புலவர் சொன்னார்,''நான் பனிக்காலம் கொடியது என்றேன்.அவர் பனிக்கு ஆலம் நன்று என்றார்.ஆலம் என்றால் விஷம்.அதாவது பனியைக் காட்டிலும் விஷம் பரவாயில்லை என்கிறார்.அவ்வளவு பனிக்கொடுமை.''

சூழ் நிலை

0

Posted on : Monday, March 22, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு தளபதி அடுத்த நாட்டு மீது படையெடுக்க தன வீரர்களுடன் கப்பலில் போய் இறங்கினான்.இறங்கியதும் முதல் வேலையாகத் தாம் வந்த கப்பலைத் தீயிட்டுக் கொளுத்தினான்.படை வீரர்கள் திடுக்கிட்டனர்.தளபதிஅப்போது சொன்னான்,''நாம் நம் எதிரிகளை வென்று அவர்களுடைய கப்பலில் ஊர்  திரும்பலாம்.''வீரர்களுக்கு சூழ்நிலை புரிந்தது.தோல்வி அடைந்தால் ஊர் திரும்பக் கப்பல் இல்லை.எதிரியும் சும்மா விட மாட்டார்கள்.போராடி வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை  என்பதை உணர்ந்து,வெறியுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றனர்.சூழ்நிலையை உருவாக்கியது தளபதி தானே?'சூழ்நிலை சரியில்லை' என்று சிலர் சொல்வார்கள்.சூழ்நிலையை நாம் தான் ஏற்படுத்த வேண்டும்.

மீதி

0

Posted on : Monday, March 22, 2010 | By : ஜெயராஜன் | In :

பேருந்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன்,நடத்துனர் பயணச் சீட்டுக்குக் காசு கேட்கையில்,தான் கொண்டு வந்த ஐந்து ரூபாய் காணவில்லை  என்று அழ ஆரம்பித்தான்.இரக்கப்பட்ட நடத்துனர்,அவன் போக வேண்டிய இடம் கேட்டு ரூபாய் மூன்றுக்கான பயணச் சீட்டை பணம் பெற்றுக் கொள்ளாமலேயே கொடுத்து விட்டு நகர்ந்தார்.சிறுவன் மீண்டும் அழுதான் . நடத்துனர் காரணம் கேட்க அவன் கேட்டான்,''மீதி இரண்டு ரூபாய்....?''

எடை

0

Posted on : Monday, March 22, 2010 | By : ஜெயராஜன் | In :

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான்.தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்.

சிரிப்போ சிரிப்பு

0

Posted on : Sunday, March 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜப்பானைப் பார்.அமெரிக்காவைப் பார்.சிங்கப்பூரைப்பார் என நீட்டி முழக்கி பேசிக் கொண்டிருந்த பேச்சாளருக்கு ஒரு துண்டுச்சீட்டு வந்தது.''உங்கள் கைக்கெடிகாரத்தையும் பாருங்கள்.''
**********
''வயிறு எரியுது டாக்டர்.''
'பயப்படாதீங்க,பீஸ் கொடுக்கும்போது எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்.'
**********
''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''
'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'
**********
''ஒரு அரசியல்வாதிக்கு எந்த ஸ்டேஜில் மாலை போடக்கூடாது?''
'தெரியலையே!'
''கோமா ஸ்டேஜில்.''
**********
''பூகம்பம் வந்து எங்க தெருவில் எல்லா வீட்டிலும் கிராக் வந்துடிச்சு.ஆனால் எங்க வீட்ல மட்டும் வரல.''
'ஒரே வீட்ல இரண்டு கிராக் இருக்கக் கூடாதுன்னு அதுக்குத் தெரிஞ்சிடுச்சி போலிருக்கு.'
**********
தீவிரவாதி ஒருவனின் பையன் தேர்விலே தவறி விட்டான்.அப்பா கேட்டார்,''தேர்வுக்குப் போனாயே,என்ன ஆயிற்று?''
'பையன் சொன்னான்,'அப்பா.அவர்கள் மூன்று மணி நேரம் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.நான் யார் பையன்?நானா அசருவேன்?கடைசி  வரை எதுவுமே சொல்லவில்லையே!'
**********
''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''
'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'
''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'
'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'
''இன்று தான் இறுதி மேட்ச்.''
**********
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
இங்கே தமிழாசிரியர் யார் என்று கேட்டதற்கு,இவர்தான்,'அடியேன்,'என்றாராம்
**********
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''
'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'
''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''
'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
**********
ஒரு மாணவன்:நீ முட்டாள்.
அடுத்தவன்: இல்லை,நீ தான் முட்டாள்.
ஆசிரியர்:நான் ஒருத்தன் இங்கே இருக்கும் போது அங்கே என்னடா பேசிக்கிட்டிருக்கீங்க?
**********

உமர் கயாம்

0

Posted on : Sunday, March 21, 2010 | By : ஜெயராஜன் | In :

உமர் கயாம் பாரசீகக் கவிஞர்.பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்வைக் கொண்டாடியவர்.அவருடைய பொன் மொழிகளில் சில;
*நன்மையையும் தீமையும் ஒன்றாய் வாழும் இடமாக நம்மைப் படைத்துவிட்டுநாம் செய்யும் தீமைகளுக்கு நம்மை இறைவன் தண்டிப்பது நீதியாகுமா?
*நாம் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டோமா? இதை விட்டு நீங்க வேண்டும் என்று சொன்னோமா?இல்லை.நம்மை எங்கிருந்தோ இவ்வுலகில் தள்ளி,இங்கும் அங்குமாக அலைத்து இழுத்து சிறிதும் ஈவு இரக்கமின்றி நம்மை வெளியே ஏன் தள்ளி விட வேண்டும்?
* ஆசையோடு நீ,நான் என்று அடித்துப் பிடித்து சில நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அவ்வளவே.பின் நீ ஏது?நான் ஏது?
* மரணம் ஒன்றே உறுதி.ஆகவேஉலகில் யார் உயர்ந்தவன்?யார் தாழ்ந்தவன்?
*நமக்கு இருக்கும் நேரம் மிகக் குறைவு.அந்த நேரமும் விரைவாகக் கழிந்து கொண்டிருக்கிறது.வீணாகத் தத்துவ விசாரத்தில் பொழுதைப் போக்கி,வேதனையை வளர்த்துக் கொள்ளாதே.பாவம்,புண்ணியம் என்று பேசிப்பேசிக் கழிவிரக்கத்தில் அழுந்தி மாயாதே.
*இந்த உலகம் ஒரு பாழடைந்த சத்திரம்.இதில் ஏதோ வருகிறோம்.எவ்வளவு ஆற்றலுடையவராயினும் சிறிது நேரம் தான் தங்குகிறோம்.பிறகு எழுந்து போகிறோம்.எங்கே என்றா கேட்கிறாய்?யாருக்குத் தெரியும்?
*வானத்தை நோக்கிக் கை நீட்டித் தொழாதே.அங்கே உள்ளது வெறும் சூனியம் தான்.

வாத்து மடையன்

1

Posted on : Saturday, March 20, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் புதிய காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் தேங்கி  இருந்ததைக் கண்டான்.அருகில் நின்று கொண்டிருந்தவனிடம்,''இங்கு ஆழம் ஒன்றும் அதிகம் இல்லையே?''என்று கேட்டான்.அவன் இல்லைஎன்று சொன்னான்.ஆனால் காரைத் தண்ணீரில் விட்ட சிறிது நேரத்தில் கார் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.காரின் சொந்தக்காரன்,''மடையா,ஆழம் இல்லை என்று சொன்னாயே?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,'எனக்கும் ஒன்றும் புரியவில்லை.என் வாத்துக்கள் இதைக் கடந்து வந்த போது பாதி தானே நனைந்திருந்தன!'

என்ன வித்தியாசம்?

0

Posted on : Saturday, March 20, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம்  கழித்து வெறும் கையுடன்  வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார்.  சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'
புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை  நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
இப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''

யாருக்கு தாத்தா?

0

Posted on : Friday, March 19, 2010 | By : ஜெயராஜன் | In :

பெயர் தெரியாத ஒரு ராணுவ வீரரின் படம் ஒரு கடையில் விற்பனைக்காகத்   தொங்க  விடப் பட்டிருந்தது.அதை வாங்க விரும்பி ஒருவன் விலை கேட்ட போது,நூறு ரூபாய் என்று கடைக்காரர் சொன்னார்.ஆனால் அவனிடம் தொண்ணூறு ரூபாய் தான் இருந்தது.எனவே அப்படத்தை அவனால் வாங்க முடியவில்லை.இரு நாள் கழித்து நண்பன் ஒருவன் வீட்டிற்குச் சென்ற போது, அந்த வீட்டில் அவன் வாங்க நினைத்த ராணுவ வீரரின் படம் இருக்கவே,அதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.நண்பன் சொன்னான்,''இவர் தான் என் தாத்தா. ராணுவத்தில் பெரிய சேவை செய்தவர்.''இவன் பெரு  மூச்சு விட்டபடியே  நினைத்துக் கொண்டான்,'அன்று மட்டும் என்னிடம் இன்னும் பத்து ரூபாய் இருந்திருந்தால் இன்று இவர் என் தாத்தாவாக இருந்திருப்பார்.''

பொருத்தமானவர்

0

Posted on : Friday, March 19, 2010 | By : ஜெயராஜன் | In :

மதீனாவின் ஆட்சித் தலைவர் உமர் பாரூக்கிற்கு,பரிந்துரைக்கப்பட்ட  இருவருள் ஒருவரை கவர்னர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய பணி.இருவரையும் குறிப்பிட்ட நேரத்தில் தம்மை வந்து சந்திக்க அழைத்தார். முதல் நபர் குறித்த நேரத்தில் வந்தார்,முக மலர்ச்சியுடன் முகமன் கூறினார்.முகம் பொலிவுடன் இருந்தது.இனிமையாகப் பேசினார்.உடைகள் நேர்த்தியாக இருந்தன.இரண்டாம் நபர் சற்றுத் தாமதமாக அரக்கப் பரக்க வந்தார்.அவர் உடைகள் கலைந்திருந்தன.தூசி படிந்திருந்ததைத் தட்டி விட்டுக் கொண்டார்.தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டார்.உடைகள் எளிமையாக இருந்தன.தாமதத்திற்கான காரணத்தை அவர் விளக்கினார்,''வரும் வழியில் ஒரு மூதாட்டியின் கழுதையுடைய ஒரு கால் இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தது.கிழவியால் அதை மீட்க இயலவில்லை.அவளை அந்த நிலையில் விட்டுவிட்டு வர மனமில்லை.எனவே சிரமப்பட்டு கழுதையை மீட்டுக் கொடுத்து விட்டு வந்ததில் தாமதமாகி விட்டது.''முதலாவதாக வந்தவர் சிரித்துக் கொண்டே கேட்டார்,'உங்களுக்கு எது முக்கியம்?கவர்னர் பதவியா?கழுதையின் காலா?' அப்போது உமரின் குழந்தைகள் ஓடி வந்து அவர் மடியில் விழுந்து விளையாடத் துவங்கின.இரண்டாவது நபர் வெட்கத்துடன் சொன்னார்,'என் வீட்டிலும் நான் சென்றவுடன் என் குழந்தைகளுடன் ஒரே கலாட்டா தான். எல்லோரும் என் மீது வந்து விழுவார்கள்.இப்போது கிளம்பும் போது கூட என் கடைசி மகள் என் அங்கியைப் பிடித்து இழுத்து,கூட வருவேன் என்றாள். அது தான் அங்கி கூடக் கசங்கி விட்டது.'முதல் நபர் இதனைக் கேட்டு வியப்படன்,  ''நான் ஒரு போதும்  இவ்வாறு நடப்பதில்லை.என் குழந்தைகள் என்னைப் பார்த்தவுடன் அடங்கிப்போவார்கள்.என் அருகில் வரவே அஞ்சுவார்கள்.''      உமர் சொன்னார்,''இறைவன் உன் இதயத்திலிருந்து கருணையை எடுத்து  விட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்?ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்.படைப்புகள் மீது கருணை காட்டாதவர் மீது படைப்பாளன் கருணை காட்ட மாட்டான்.''
உமர் பின் புன்னகையுடன் தன் செயலாளரை அழைத்து இரண்டாவது நபருக்குப் பதவி நியமனக் கடிதம் அனுப்பச் சொல்லி உத்தரவிட்டார். முதல்  நபரோ வாயடைத்துப் போனார்.
உமர் சொன்னார்,''தூய்மையான அழகான ஆடைகள்,இனிய பேச்சு,பொலிவான தோற்றம் ஆகியவற்றால் மட்டும் தலைவராகிவிட   முடியாது.பெரும் பதவியை ஏற்பவர்கள் கருணை மிகுந்தவராக,மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டவாராக இருக்க வேண்டும்.''

பத்துக்கால்

0

Posted on : Thursday, March 18, 2010 | By : ஜெயராஜன் | In :

பத்துக்கால்  மூன்று  தலை
பார்க்கும் கண்  ஆறு முகம்
இத்தலையில் ஆறு வாய்.
ஈரிரண்டாம் -இத்தனையும்
ஓரிடத்தில்  கண்டேன்!.
உவந்தேன்!களி கூர்ந்தேன்!
யாரிடத்தில் கண்டேன்,பகர்.
                 இப்பாடல் வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியைப் பார்த்துப் பாடப்பட்டது.
பொருள்: உழுது கொண்டிருந்த இரண்டு மாட்டுக்கும் எட்டு  கால்;உழவனுக்கு
இரண்டு கால்;மொத்தம் பத்து கால்.
மாடுகளின் தலை இரண்டு;உழவனின் தலை ஒன்று;மொத்தம் மூன்று தலை.ஆறு கண்கள்.
மாடுகளின் முகம் இரண்டு;உழவனின் முகம் ஒன்று;அப்போது வெயில் ஏறும் நேரம்,எனவே ஏறுமுகம் ஒன்று;ஏர் முகம் ஒன்று;உழுகிற கொழுமுகம் ஒன்று;ஆக மொத்தம் ஆறு முகம்.
மாடுகளின் வாய் இரண்டு;உழவனின் வாய் ஒன்று;கொழு வாய் (கலப்பை நுனி ) ஒன்று ;மொத்தம் நான்கு வாய்.(ஈரிரண்டுநான்கு)

கருமி

0

Posted on : Thursday, March 18, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கஞ்சனிடம் கஞ்சன் என்று எழுதச் சொல்லியதற்கு,கருமி என்று எழுதினானாம்.ஏனென்று கேட்டதற்கு கஞ்சன் என்ற வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள்;கருமி என்ற வார்த்தைக்கோ மூன்று எழுத்துக்கள்  தானே என்றானாம்.
**********
கருமி ஒருவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.தன்னைக் காப்பாற்ற மற்றவர்களைக் கூவி அழைத்தான் அவன் மகன்.தண்ணீருக்குள் இருந்து ஒரு முறை எம்பிப் பார்த்த தந்தை கத்தினான்,''டேய்,அவர்கள் வந்து காப்பாற்றுவதாய் இருந்தால் காப்பாற்றட்டும்;ஆனால் ஐந்து ரூபாய்க்கு மேல் தர ஒத்துக் கொள்ளாதே.''
**********
கஞ்சன் ஒருவனைப் புலி ஒன்று கௌவிக்கொண்டு சென்றது.அவனுடைய மகன் புலிக்குப் பின்னால் ஓடி வந்தான்.வில் அம்புகளோடு புலியை அவன் குறி வைக்கையில் புலியின் வாயிலிருந்து எட்டிப் பார்த்து தந்தை சொன்னான்,''காலைப் பார்த்து அம்பு விடு.புலியின் உடலில் எங்காவது பட்டு தோல் வீணாகி விடப் போகிறது.''
**********

எது பெரியது?

0

Posted on : Wednesday, March 17, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு காவல் துறை அதிகாரி,ஒரு காரை நிறுத்தி அதை ஓட்டி வந்தவரிடம் சொன்னார்,''சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்ததற்காக  உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாகக் கொடுக்கிறோம்.''என்றார்.காரை ஓட்டி வந்தவருக்கு மகிழ்ச்சி.அதிகாரி கேட்டார் ,''இந்தப் பணத்தை எப்படி உபயோகப் படுத்தப் போகிறீர்கள்?''அந்த ஆள் சொன்னான்,'முதலில் ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து கார் ஓட்ட லைசென்ஸ் பெறுவேன்.'அப்போது  அருகில் அமர்ந்திருந்த அவன் மனைவி அதிகாரியைப் பார்த்துச் சொன்னாள்,'அவர் பேசுவதைக் கேட்காதீர்கள்.அவர் அதிகம் குடிக்கும் போது இப்படி புத்திசாலி மாதிரி பேசுவார்.'பின் சீட்டிலிருந்த ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்து உளறினான்,'எனக்குத் தெரியும்,நீ இந்த திருடிய காருடன் ரொம்ப தூரம் போக முடியாது என்று.'அதிகாரிக்கு மயக்கமே வந்து விட்டது.

வார்த்தையின் சிறப்பு

0

Posted on : Wednesday, March 17, 2010 | By : ஜெயராஜன் | In :

ஞானி ஒருவர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொது ஒரு பெண,தன் குழந்தைக்கு உடல் நலம் சரி  இல்லை என்று கூறி,அவர் வந்து குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.ஞானியும் ஆவலுடன் கிராமத்திற்கு வந்தார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.ஞானி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.கூட்டத்தில் இருந்த ஒருவன் ஆவேசமாக,''மருந்து கொடுத்து குணமாகாத இந்தக் குழந்தை இவருடைய பிரார்த்தனையால் மட்டும் குணமாகிவிடுமா?''என்று கேட்டான்.ஞானி உடனே,'நீ ஒன்றும் தெரியாத முட்டாள்.'என்றார்.அவனுக்குஅதுஅவமானமாகப்போய்விட்டது.கோபத்துடன் ஞானியை அடிக்க விரைந்தான்.அப்போது ஞானி அவனிடம் சாந்தமாகச் சொன்னார்,'நான் உன்னை முட்டாள் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கு உனக்கு இவ்வளவு கோபம் உண்டாக்கக் கூடிய தன்மை இருந்தால்.வேறொரு வார்த்தைக்கு ஏன்ஒரு குழந்தையைக் குணமாக்கக் கூடிய தன்மை இருக்காது?'அவன் மௌனமாக அங்கிருந்து வெளியேறினான்.

நாயின் வால்

0

Posted on : Tuesday, March 16, 2010 | By : ஜெயராஜன் | In :

பண ஆசை பிடித்த ஒருவன்,தன சொல் கேட்கும் பூதம்ஒன்று இருந்தால் தன் ஆசை எல்லாம் நிறைவேறும் எனக் கருதி ஒரு முனிவரை அணுகித் தொந்தரவு செய்ய அவரும்,''நான் உனக்கு அடிமையாய் ஒரு பூதம் தருகிறேன்,ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன சக்தியால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.அவன் ஆணைகளைச்  சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.
இந்த உலகமும் நாயின் வால் போல் தான் உள்ளது.அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும் இன்னும் சரி செய்ய முடியவில்லை...
இது சுவாமி விவேகானந்தர் கூறிய கதை. 

என் வீடு

0

Posted on : Tuesday, March 16, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா வீட்டில் இல்லாத பொது திருடன் ஒருவன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடிக் கொண்டு போய் விட்டான்.திருடியது யார் என பொறுமையாய்க் கண்டு பிடித்த முல்லா அத்திருடன் வீட்டுத் திண்ணையில் போய் படுத்துக் கொண்டார்.திருடன் காரணம் கேட்க,''என் பொருட்கள் எங்கிருக்கிறதோ அது தானே என் வீடு?''என்று எதிர்க் கேள்வி கேட்டார் முல்லா.

சொர்க்கம்

0

Posted on : Monday, March 15, 2010 | By : ஜெயராஜன் | In :

வயதான கணவன்.சக்கரை நோய் மற்று பல விதமான நோய்கள் .எனவே மனைவி உணவில் கடும் கட்டுப்பாடு வைத்தாள்.வாய்க்கு இதமாக எதுவும் சாப்பிட முடியவில்லை.இரண்டு பேரும் இறந்ததும் சொர்க்கம்போனார்கள். சொர்க்கத்தில் வகை வகையான உணவு.கணவன் சாப்பிடத் தயங்கினான்.  கடவுள் சொன்னார்,''இங்கு என்ன சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.சும்மா  சாப்பிடுங்கள்.''கணவன் மனைவியிடம் சீறினான்,'அடிப்பாவி கெடுத்தியே,  பூலோகத்தில் என்னை சாப்பிட விடாமல் கெடுத்தாயே?எல்லாம் சாப்பிட்டிருந்தால்,அங்கேயும் ருசியாக சாப்பிட்டு இருந்திருப்பேன்,இங்கேயும் ஐந்தாறு வருடம் முன்னாலேயே வந்து இந்த உணவைஎல்லாம் விரும்பியபடி சாப்பிட்டிருப்பேனே?''

எந்த குதிரை?

0

Posted on : Monday, March 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் காலை ஒருவன் மிகப் பதற்றத்துடன் ஒரு டாக்டரிடம் வந்தான்.''டாக்டர்,இன்று காலை தெரியாமல் ஒரு குதிரையை விழுங்கி விட்டேன்.''டாக்டர் கேட்டார்,''என்னப்பா இது,யாராவது குதிரையை விழுங்கு வார்களா ?ஈயை வேண்டுமானால் விழுங்கி இருப்பாய்.''
''என்ன டாக்டர்,குதிரைக்கும் ஈக்கும் வித்தியாசம் தெரியாதவனா நான்?குதிரைவயிற்றில்இருந்துகொண்டுஉதைக்குது.ஏதாவதுஉடனே செய்யுங்கள்.'' என்றான் வந்தவன்.
 மனோதத்துவ ரீதியில் தான் இவரைக் குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்த டாக்டர் ,உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்தார்.தன உதவியாளரைக் கூப்பிட்டு,பக்கத்திலுள்ள குதிரை பயிற்சி நிலையத்திலிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு எடுத்து வந்து நோயாளி இருந்த அறை ஜன்னலுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்ட ஏற்பாடு செய்தார்.மயக்கம் தெளிந்து அவன் எழுந்த போது,டாக்டர்,''இதோ,இந்த குதிரை தான் உன் வயிற்றில் இருந்தது.அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விட்டேன்.இப்போது உனக்கு திருப்தியா?''என்று கேட்டார்.
 ''ஐயையோ டாகடர்.இக்குதிரை பழுப்பு நிறத்தில் அல்லவா இருக்கிறது?நான் விழுங்கிய குதிரை வெள்ளை நிறம்.''என்றான்.டாக்டர் மயங்கி விழுந்தார்.

தரம்

0

Posted on : Sunday, March 14, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சமயம் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் ஒரு கவிஞரைப் பார்க்க வந்திருந்தார்.கவிஞர் ஒரு தட்டில் சுடச்சுட இட்டிலி கொண்டு வந்து கட்டாயம் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்தினார்.கவிஞரின் வேண்டுகோளுக்காக அழ.வள்ளியப்பா இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்டார். அதைப் பார்த்த கவிஞர்,''என்ன இட்டிலி நன்றாக இல்லையா?''என்று கேட்டார்.அழ.வள்ளியப்பாவோ,'இல்லை...இரண்டாம் தரம்...'என்று இழுத்தார். நண்பர் அதிர்ச்சியுற்றார்.உடனே அழ.வள்ளியப்பா,'இல்லை,இல்லை.இட்டிலி முதல்தரம்!நான் தான் இரண்டாம் தரம்.'என்றார்.கவிஞர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.அதைப் புரிந்து கொண்டு அழ.வள்ளியப்பா சொன்னார்,'ஏற்கனவே நண்பர் ஒருவர் வீட்டில் சிற்றுண்டியை முடித்து விட்டேன்.இப்போது நீங்களும் வற்புறுத்தியதால் இரண்டாம் தரமாகச் சாப்பிட நேர்ந்தது.அதைத் தான் சொன்னேன்..'அர்த்தம் புரிந்து கவிஞர் நகைத்தார்.

அதிர்ச்சி

0

Posted on : Saturday, March 13, 2010 | By : ஜெயராஜன் | In :

மிக அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மாளிகைகளை உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் மன்னனுக்குக் கட்டிக் கொடுத்தான் ஒரு தச்சன்.ஆனால் அவனுக்கு ஒரு வருத்தம்.மன்னர் அவன் வேலைத் திறமை குறித்து ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்து பேசியதில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த தச்சன்  மன்னரிடம் சென்று தான் ஓய்வுபெறப்போவதாகக்கூறினான்.மன்னர்,''அதுஉன் விருப்பம்.ஆனால் அதற்குமுன் எனக்கு ஒரு அழகான மாளிகை கட்டிக் கொடுத்து விடு.''என்று சொன்னார்.வேறு வழியின்றி விருப்பமில்லாமல் ஏனோ தானோவென்று வேலை செய்து முடித்தான்.மன்னர் வந்து பார்த்து விட்டு,''இவ்வளவு தானா?இன்னும் வேலைப் பாடு இருக்கிறதா?''என்று வினவ,'இனி செய்வதற்கு ஒன்றுமில்லை,'என்றான் தச்சன்.மன்னர் மறுநாள் அவனை சபைக்கு வரச்செய்து,அவனைப் புகழ்ந்து பேசி,அவன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு  தனது பரிசாக அவன் புதிதாகக் கட்டிய வீட்டையே அவனுக்குப் பரிசாகத் தந்தார்.தச்சனால் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனது வீட்டைக் கட்டுகிறோம் என்று அறிந்திருந்தால் எவ்வளவு வேலைப்பாடு செய்திருக்கலாம்என்று புலம்பினான்.என்ன செய்வது?அவனது சலிப்பும் அக்கறையின்மையும் அவசரப் புத்தியும் தான் பலன் கிட்டாததன் காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது.

இது சிரிக்க

0

Posted on : Saturday, March 13, 2010 | By : ஜெயராஜன் | In :

கர்நாடக சங்கீதத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு பாடகர்.அப்போது முன் வரிசையில் ஒரு அழகான வாலிபர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழகுள்ள துரைஇவர் யாரடி?''என்று பாடினார்.அடுத்து ஒரு குள்ளமான ரசிகர் ஒருவர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழ  குள்ள துரை இவர் யாரடி?''என்று பிரித்துப் பாடினார்.பின்னர் ஒரு வளர்ந்த வாலிபர் வந்தார்.அவரைப்பார்த்தவுடன்,''அழகுள்ள துரை ஆறடி'' என்று புலவர் ஆளுக்கேற்ற மாதிரி பாடி கை தட்டலைப் பெற்றார்.
**********
பாடகர்  கர்னாடகசங்கீதம் ஒன்றைப் பாடி ஆரம்பித்த போது,எல்லோரும் எழுந்து போக ஆரம்பித்தனர்.காரணம் வேறொன்றுமில்லை.''தூது போனாயே,''என்னும் வரியை,''தூ தூ போ நாயே,'' என்று இழுத்துப் பாடியதால் வந்த வினை.
**********
கடற்கரையில் சிறுவன் அப்பாவிடம் கேட்கிறான்,''அப்பா அவர்யார்?'' 'அவரா,கடலை விற்பவர்.'
''அப்போ,இவ்வளவு பெரிய கடல் அவருக்கு சொந்தமா?''
*********
''வரவர எனக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது.''
'அன்னைக்கு நான் தூரத்தில் போய்க் கொண்டிருந்தேன்.என்னை சரியாய் அடையாளம் தெரிந்து கூப்பிட்டாயே?'
''போகும் போது தானே,எனக்கு வரவரத்தான் கண்ணு தெரியலேன்னு சொன்னேன்.''
**********
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.எலி சொல்லியது,'சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
**********

மார்கஸ் அரேலியஸ்

0

Posted on : Friday, March 12, 2010 | By : ஜெயராஜன் | In :

மார்கஸ் அரேலியஸ் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.கிரேக்கத்தின் அரசனாக இருந்த போதும் ஒரு ஞானியாகவே வாழ்ந்தவர்.அவருடைய பொன் மொழிகளில் சில:
*கோபத்தில்  செய்யப்படும் பாவத்தை விட  ஆசையில் செய்யும் பாவமே மிக மோசமானது.
*நமது உடலின் உறுப்புக்களைப் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு சேர்ந்திணைந்து செயல்படவே பிறந்துள்ளோம்.
*ஒரே பீடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஊது பத்திகள் விரைவாக சிலவும்  மெதுவாக சிலவும் எரிந்து புகைந்து தணிகின்றன.இறுதியில் தணிந்து மறைதல் என்பது இரண்டுக்கும் ஒரே மாதிரி தானே?
*மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்.நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான்  பேரமைதி கிட்டுகிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.
*உனது வாழ்க்கை முறையை சற்று வசதியாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதைத் தவிர புகழால் வேறு என்ன பயன்?
*உனது புகழுரைகளால் தங்கத்தின் பளபளப்பும் வைரத்தின் ஒளி விடும் தன்மையும் மாறிவிடுமா?
*நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பான்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிடைக்கும்.
*'இது நல்லது,''இது கெட்டது,'என்னும் அவசரத் தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே.
*புற விஷயங்கள் பிரச்சினையே அல்ல.ஆனால் அவற்றைப்  பற்றிய நமது மதிப்பீடுகளே  பிரச்சினை.
*மற்றவர்களின் தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டிராதே.அவற்றை அவர்களிடமே விட்டு விடு.
*செய்பவரைப் பார்க்காது அவரது செயல்களை மட்டும் சீர் தூக்கிப்பார்.
*அச்சத்தின் அடிப்படையில் பிரார்த்தனை செய்யாதே.ஆசை மற்றும் துயரத்தின் பொருட்டாகவும் வேண்டாம்.
*யாரோ என்னை இழிவாகப் பேசுகிறார்கள்.அது அவர்களது பிரச்சினை.மற்றவர்களை இழிவாகப் பேசாதிருப்பது என் கடமை.
*கோபத்திற்கும் துயரத்திற்கும் காரணமான விசயங்களை விட,அந்தக் கோபமும் துயரமும் தான் அதிக இழப்பைத் தருகின்றன.
*மற்றவர்களை நேசிப்பதை விட நம்மை நாமே அதிகம் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறோம்.

ஒற்றுமை

0

Posted on : Thursday, March 11, 2010 | By : ஜெயராஜன் | In :

சாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு,தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து,இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு   என்றார்.
அவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான்.தந்தை உடனே,''பரவாயில்லை.இதோ பல கம்புகள் உள்ள கட்டு.இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,''என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது.உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,''அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா?தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது.அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை   விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.''
உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில்  தந்தையும் குணமடைந்தார்.

ஓவியம்

0

Posted on : Thursday, March 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் துறவிகளின் மடாலயத்திற்கு புகழ் பெற்ற சித்திரக்காரன் ஒருவன் வந்தான்.தான் வரைந்த பௌத்த சித்திரங்களைக் கடவுள் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும்,எனவே, தான் கடவுளை விடவும் உயர்ந்தவன் என்ற மமதையுடனும் இறுமாப்புடனும் பேசினான்.அவனை வரவேற்ற மடாலயத்தின் மூத்த துறவி,தானும் ஒரு சிற்பி என்றும்,மற்ற சிற்பங்கள் போலன்றி தன சிற்பம் நிமிடத்துக்கு நிமிடம்உரு மாறக் கூடியது என்றும் அது ஓரிடத்தில் நிற்காமல் இயங்கக் கூடியது என்றும் சொல்ல,சித்திரக்காரனால் நம்ப முடியவில்லை.துறவியும் மறுநாள் காலை அவனுக்குக் காட்டுவதாகக் கூறி அவனை அங்கு தங்கச் செய்தார்.
மறுநாள் காலை துறவி அவனை அழைத்து வந்து காட்டினார்.அங்கு ஒரு பெரிய ஐஸ் கட்டி இருந்தது.''இதுதான் நான் உருவாக்கிய சிற்பம்.இது நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும்.இதைப் போன்ற ஆச்சரியமான சிற்பம் எதையும் நீ பார்த்திருக்க முடியாது.''என்றார்  துறவி. சிறிது நேரத்தில் ஐஸ் உருகித் தண்ணீராய்ஓடியது.துறவி,''பார்த்தாயா?எனது சிற்பம் ஓரிடத்தில் நிற்காமல் ஓடவும் செய்கிறது.''என்றார்.தண்ணீர் சிறிது நேரத்தில் ஆவியாகி விட்டது.''இப்போது என் சிற்பம் பிரபஞ்சத்தில் கலந்து விட்டது.இதை விடப் பெரிய கலைப் படைப்பு என்ன இருக்கிறது?''என்று கேட்டார்.சித்திரக்காரன் மமதை அழிந்து மடாலயத்தில் சீடனாய்ச் சேர்ந்து விட்டான்.

முதியவர்களுக்காக

0

Posted on : Wednesday, March 10, 2010 | By : ஜெயராஜன் | In :

இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
                   செய்..
பிறர் தம் வலியும்  வருத்தமும் கேட்கும் கரிசனம் கொஞ்சம் வளரச் செய்.
வெறுமையை பொறுமையாய் ஏற்கச்செய்.
உதடுகள் இருக்க மூடச்செய்.இல்லையெனில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்
                  என் காயங்களையும் வலிகளையும் பிறரிடம் பகிரும் இன்பம்
                  தேடும் என் மனம்.
இத்தனை ஆண்டுகளாக நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்த
                  வாழ்க்கைப் பாடத்தை இப்போதேனும் சரியாகப் புரியச்செய்.
இனிமையாக என்னை இருக்கச்செய்.
நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாலேயே மற்றவர்களை விட அறிவாளி என
                  என்னும் அகந்தை ஓடச்செய்.
சமீபத்தில் நடந்த மாற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை
                  பெருகச்செய்.
உனக்குத் தெரியும் என்று என் முடிவு என...அதுவரை
ஓரிரு நண்பர்களையாவது உலகில் எனக்காக இருக்கச்செய்.

சலிப்பு தீர

0

Posted on : Wednesday, March 10, 2010 | By : ஜெயராஜன் | In :

சலிப்பிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் வெளிவர மிக எளிய வாழ்வியல் முறை,வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதுதான்.
சாப்பிடும் போது ஒரு ரசகுல்லாவின்  சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்.இரண்டு மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை சாப்பிடுவதும் ஒரே ஒரு ரசகுல்லாவை முழு சுவையும் வாயிலே கரைந்து போகும் அளவிற்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே.
சுவையின் உச்சத்தை ஒரே ஒரு முறை ருசித்து விட்டால் ஒருரசகுல்லா போதும்.திருப்தி  கிடைத்துவிடும்.சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால்  பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது.சலிப்பும் கஷ்டமுமே மிஞ்சும்.
நீங்கள் அனுபவத்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும்  நிதானித்து அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.அப்போது 'இன்னும் கொஞ்சம்'என்று தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது.சலிப்பு நெருங்கவே நெருங்காது.

வாடிக்கையாக

0

Posted on : Tuesday, March 09, 2010 | By : ஜெயராஜன் | In :

பால் ஷெம்என்பவர் ஒரு சிற்றூரில் ராபியாக (யூத மத போதகர்) இருந்தார்.கிராமத்தில் ஏதாவது துயரம் நேரும்போதெல்லாம் அவர் காட்டுக்குள் போய் ஒரு மரத்தின் அடியில் குறிப்பிட்ட சடங்கைச் செய்து விட்டு பின் கடவுளிடம் வேண்டுவார்.அத்துன்பம் உடனே அவ்வூரை விட்டு அகன்று விடும்.இது வாடிக்கையாக நடந்து வந்தது.
ஒரு நாள் பால் ஷெம் இறந்து விட்டார்.மீண்டும் கிராமத்தில் ஒரு துன்பம் வந்தது.புது ராபிக்குக் கலக்கம் ஏற்பட்டது.அவருக்கு குறிப்பிட்ட அந்த மரமும் இடமும் தெரியாது.இருந்தாலும் காட்டிற்குள் சென்று ஏதோ ஒரு மரத்தடியில் நெருப்பை மூட்டி  சடங்கை செய்து விட்டுக் கடவுளை வேண்டினார்,''என் குரு  வழக்கமாக வந்த இடம் எனக்குத் தெரியாது.ஆனால் உனக்குத் தெரியும்.எனவே சரியான இடத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.என் ஊர் துன்பத்தில் உள்ளது.ஏதாவது பார்த்துச்செய்யும்,''
துன்பம்  போய் விட்டது.இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது.
பின் இந்த ராபியும் ஒரு நாள் இறந்தார்.ஊரில் மறுபடியும் ஒரு துன்பம் வந்தது.புதிய ராபிக்கு நிம்மதி இல்லை.அவருக்கு இடமும்
தெரியாது.வேண்டுதலும்  என்னவெனத்   தெரியாது.சடங்குத் தீயை எப்படி மூட்டுவது என்பதும் தெரியாது.ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நெருப்பு  மூட்டிக்  கடவுளிடம் சொன்னார்,''எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் அனைத்து அறிந்தவர் நீர்.உமக்கு அவை ஏற்கனவே தெரியும்.எனவே எனக்குத் தெரிய வேண்டியதில்லை.தேவையானதைச் செய்யும்,''அவர் கிராமத்திற்குத் திரும்பி வந்த போது கிராமம் துன்பத்திலிருந்து மீண்டது.
பின் அவரும் இறந்தார்.அப்போது கிராமம் ஒரு துன்பத்தில் சிக்கியது.ஊர் மக்கள் புது ராபியிடம் வந்தார்கள்.அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.அவர் கடவுளிடம் சொன்னார்,''நான் எங்கும் போக விரும்பவில்லை.கடவுளே,நீர் எல்லா இடத்திலும் இருக்கிறீர்.எனக்கு எந்த வேண்டுதலும் தெரியாது.எந்த சடங்கும் தெரியாது.அதனால் என்ன?எனக்குத் தெரிந்திருக்கிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை.உமக்கு எல்லாம் தெரியும்.இனி நீர் செய்ய வேண்டியதை செய்யும்.''உடனே பேரிடர் நீங்கியது. இந்தக் கதையை கடவுள் மிகவும் ரசித்தார் என்று சொல்லப்படுகிறது.

விளையாட்டா?

0

Posted on : Monday, March 08, 2010 | By : ஜெயராஜன் | In :

மதுக் கடையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார் முல்லா.அவர் ஒரு கோழை.ஆனால் மது அவருக்கு துணிச்சலைத் தந்தது.அப்போது அங்கு கொலைகாரன் போல் தோற்றமளித்த ஒருவன்  வந்தான்.சுய நினைவில் இருந்தால் முல்லா அஞ்சி ஓடியிருப்பார்.ஆனால் மதுவின் துணையால் அவருக்கு அறவே அச்சம் இல்லை.அஞ்சாது அவர் அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த முரடன் அவர் காலின் மேல் ஓங்கி மிதித்தான்.முல்லாவுக்குக் கோபம் வந்தது.வெகுண்டெழுந்து கேட்டார்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்?இது வேண்டுமென்றா அல்லது வேடிக்கைகாகவா?''முரடன் ஓங்கி மிதித்ததில் முல்லாவுக்கு போதை இறங்கி விட்டது.சுய நினைவுக்கு வந்து விட்டார்.அந்த இடைவெளிக்குள் முரடனைககேள்விகேட்டுவிட்டார்.அந்தஆள்சொன்னான்,'காரியமாத்தாண்டா,'
முல்லா சொன்னார்,''அப்படிஎன்றால் உங்களுக்கு நன்றி.காரியாமாகத்தான் என்றால் சரி.ஏனெனில் எனக்கு இந்த விளையாட்டெல்லாம் பிடிக்காது.''

தண்டனை ஏன்?

0

Posted on : Monday, March 08, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு முனிவர் ஒரு அரசனிடம்மரணத்தை வெல்லும்  அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார்.அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான்.கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.''இறவாக்கனியை உண்டஎன்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது.''என்றான் காவலாளி.'தவறு செய்தவனுக்குத் தண்டனை என்பதை யாராலும் மாற்ற முடியாது.இது சாதாரண பழம்.எப்படி உன் உயிரைக் காக்கும்?' என்று அரசன் கேட்டான்.''சாதாரணமான பழம் என்றால் அதைத் தின்ற எனக்கு நீங்கள் ஏன் மரண தண்டனை அளிக்க வேண்டும்?''என்று காவலாளி வினவினான்.அவனது புத்திக் கூர்மை அரசனை வியக்க வைத்தது.அவனைத் தன மந்திரியாக்கிக் கொண்டான்.

தன்னம்பிக்கை

0

Posted on : Sunday, March 07, 2010 | By : ஜெயராஜன் | In :

சுவாமி விவேகானந்தர் தன் சீடருடன் ஒரு கோச் வண்டியில் பாரீசில் சென்று கொண்டிருந்தார்.ஒரு இடத்தில் கோச் ஓட்டியவர் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு எதிரே இருந்த வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை அரவணைத்து முத்தம் கொடுத்துப் பின்னர் வந்து வண்டியை இயக்க ஆரம்பித்தார்.சீடர் அக்குழந்தைகள் யாரெனக் கேட்க அவை தன் குழந்தைகள் தாம் என்றார்.அக்குழந்தைகள் மிகவும் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தென் பட்டது பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''நான் இந்த நாட்டிலுள்ள ஒரு பெரிய வங்கியின் சொந்தக் காரன்.வங்கி சமீபத்தில் நொடித்து விட்டது.இருந்த கொஞ்சம் பணத்தில் ஒரு சிறு வீடு வாங்கினேன். யாருக்கும் நான் சுமையாக இருக்க விரும்பவில்லை.நானும் என் மனைவியும் உழைப்போம்.என்றாவது ஒரு நாள் எங்கள் வங்கியை மீட்போம்.''விவேகானந்தர் சொன்னார்,'இவர் தான் உண்மையான ஞானி;வேதாந்தி.பெரிய வேதாந்தங்கள் சொல்வதை செயல் படுத்துபவர்.இவரிடம் தான் எவ்வளவு தன்னம்பிக்கை?'

மோகம்

0

Posted on : Sunday, March 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜவஹர்லால் நேரு ஒரு நாள் வெளி நாட்டு சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தார்.ஒருவர் கேட்டார்,''வெளி நாட்டுத் துணிகளை தீ வைத்துக் கொளுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் மட்டும் வெளி நாட்டு சிகரெட் மீது மோகம் கொண்டுள்ளீர்களே?''
'நானும் வெளி நாட்டு சிகரெட்டை எரித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.'என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினார் நேரு.

விலங்குகள்

0

Posted on : Saturday, March 06, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதனுக்கு ஆறறிவு.விலங்குகளுக்குஐந்தறிவு.எனினும் விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அச்சமின்மை:
விலங்குகள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் தருணங்கள் தவிர வேறு எப்போதும் அச்சப்படுவதில்லை.மனிதன் அச்சப்படாத விசயமே இல்லை.ஒரு சிங்கம் ஒரு மான் கூட்டத்தில் பாய்ந்தால் அவை ஒன்றொன்றும் ஒவ்வொரு திசையில் ஓடும்.ஆனால் சிங்கம் ஒரு மானைப் பிடித்து விட்டால் அடுத்த மானைப் பிடிக்காது.அதனால் மற்ற மான்கள் அதன் பின் அச்சமின்றி நடமாடும்.
தோல்வி கண்டு அஞ்சாமை :
ஒரு பூனை ஒரு  எலியைப் பிடிக்கத் துரத்துகிறது.எலி தப்பி விடுகிறது.பூனை இதைத் தோல்வியாகக் கருதித் துவள்வதில்லை.அது,அடுத்த எலி கிடைக்குமா என்று,சாதாரணமாகத் தேட ஆரம்பித்து விடுகிறது.மனிதன் ஒரு தோல்வி அடைந்தாலே வேதனைப் படுகிறான்;முடங்கி விடுகிறான்.
குழந்தைகளை முறைப்படி வளர்த்தல்:
விலங்குகள் குட்டிகளுக்கு இரை தேடி கொடுக்கின்றன.நடக்கக் கற்றுக் கொடுத்து,ஓடக் கற்றுக் கொடுத்து,பின் அவற்றை சுதந்திரமாக விடுகின்றன.மனிதனோ,மகன்,பேரன் என்று எல்லோரையும் சுமந்து அவர்களை முறையாக வளர்க்காமல் ,அவர்களை சுதந்திரமாய் வாழவும் விடுவதில்லை.
எதிர்  காலம் பற்றி அஞ்சாமை:
ஞானிகள் கூறுவது போல் நிகழ காலத்தில் வாழ்வது விலங்குகள் தான்.அவை நாளைய தினம் பற்றிக் கவலைப் படுவதில்லை.மனிதன் தான்,நாளை என்னவாகும்,வருங்காலம் எப்படி இருக்கும் என்று கவலைப் பட்டு இன்றைய மகிழ்வை இழக்கின்றான்.
வாழு,வாழவிடு:
மிருகங்கள்,தான் நன்றாக வாழ்வதுடன் தன இனத்தையும் நன்கு வாழ விடும்.மிருகங்கள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை,தன இனத்தில் யாரையும் கொலை செய்வதும் இல்லை.மனிதன் தானும் வாழமாட்டான்;மற்றவரையும் வாழ விட மாட்டான்.

பெண்ணின் பெருமை

0

Posted on : Saturday, March 06, 2010 | By : ஜெயராஜன் | In :

இயந்திரக் கோளாறில்  சிக்கிய ஹெலிகாப்டரிலிருந்து கயிற்றில் பதினோரு பேர் தொங்கினர்.பத்து ஆண்கள்;ஒரு பெண்.அத்தனை போரையும் கயிறுதாங்காது;யாராவது ஒருவர் கையை விட்டு கீழே விழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.யார் அந்த ஒருவர் என்பது தான் பிரச்சினை.விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பெண் பேசத் துவங்கினாள்,''நான் கயிற்றிலிருந்து குதிக்கப் போகிறேன்.பெண்ணின் பிறப்பே தியாகத்தில் தான் முழுமைபெறுகிறது.கணவனுக்காக,குழந்தைகளுக்காக,...ஏன்?மற்றவர்களுக்காக விட்டுத் தருபவளே பெண்.பலனை எதிர் பாராமல் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே பெண்ணின் பெருமை.''
பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை அந்த பத்துப் பேரிடமிருந்தும் கேட்டது.

வறுமை

0

Posted on : Friday, March 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே.யைச் சந்திக்க ஒருவர் வந்தார்.''ஐயா, மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய் கொடுங்கள்.நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன்.''என்றார்.'அப்படியா சரி.இப்போதே வாசி,'என்றார் என.எஸ்.கே.வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார்.வாசிப்பில் சுருதி,தாளம்,ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை.
இசையைக் கேட்டுக் கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லி விட்டு நூறு ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து,'நீங்கள் நாதஸ்வரம் வாசிக்கவில்லை.உங்களது வறுமையைத் தான் வாசித்தீர்கள்.நன்றாகக் கற்றுக் கொண்டு பிறகு வந்து வாசியுங்கள்.இப்போது சாப்பிட்டு விட்டுப் போங்கள்.'என்றார்.

யார் செய்தது?

0

Posted on : Friday, March 05, 2010 | By : ஜெயராஜன் | In :

உலகப் போரில் ஹிட்லர் செய்த அட்டூழியங்களை எல்லாம் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார் பிகாசோ.இதைக் கேள்விப்பட்டு அவற்றைப் பறிமுதல் செய்த ஹிட்லர்,''இதெல்லாம் நீ செய்ததா?''என்று ஓவியங்களைக் காட்டிக் கேட்டார்.'இல்லையில்லை,இதெல்லாம் நீங்கள் செய்ததுதான்.'என்றார் பிகாசோ.

தண்ணீர்

0

Posted on : Friday, March 05, 2010 | By : ஜெயராஜன் | In :

தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார்,
''இதுவே மேலும் குளிர்ந்தால்...?''
'பனிக்கட்டி'என்றான் சீடன்.
''கொதித்தால்...?''
'நீராவி'
ஞானி சொன்னார்,
''மனிதனும் குளிரும் போது திடமாகிறான்.
கொதிக்கும் போது ஆவியாகிறான்.''

பொன் மொழிகள் -5

0

Posted on : Thursday, March 04, 2010 | By : ஜெயராஜன் | In :

எல்லாம் வேடிக்கை தான்!நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை.
*********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
*********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது
பலவீனமான கொள்கையின் அறிகுறி.
*********
சுண்டெலி பூனையைப் பார்த்து சிரித்தால்
பக்கத்திலே அதற்கு ஒரு வளை இருக்கிறது என்று பொருள்.
*********
காசு வாங்காமல்,எதுவும் உனக்குக் கிடைத்தால்
அதற்கு உண்டான விலை இன்னமும்
வசூலிக்கப் படவில்லை என்பது தான் பொருள்.
********
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நம்மைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில்,நாம் குழந்தைகளாக இருந்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் பெரியவர்களாக இருந்ததில்லை.
********
வாழ்க்கையில் பயம் இருக்கலாம்.ஆனால்
பயமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது.
********
படுக்கைக்கு செல்லும் முன் செருப்புக்களோடு உன்
மனக் கவலைகளையும் வீட்டுக்கு வெளியே ஏறி.
********
இளமையாக இருக்கிறீர்களே என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால்,உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
********
''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்றுகேட்பார்கள்.ஆனால்
புகழ்ந்து பேசுவதைத்தான் விரும்புவார்கள்.
********
பணம் என்பது ஆறாவது  அறிவு .       
அது இல்லாவிடில் ஐந்தறிவும்வீண்தான்.
********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையே
உள்ள இடைவெளி.
********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான்
எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலை தான் கொல்லும்
********
பொறாமையை நீ துணைக்கு அழைத்தால் முதலில்
அது உன் எதிரியை நெஞ்சில்  அடிக்கும்.
பின் உன்னையே வயிற்றில் அடிக்கும்.
********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
********
மனிதர்கள் மோசமானவர்கள்.அபாயம் நீங்கியவுடன்
அவர்கள் ஆண்டவனை உடனடியாக மறந்து விடுகிறார்கள்.
********
சிறிது காலமே வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி அழகு.
********
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொது அழுபவன் தெம்பற்றவன்.
அழுகையிலிருந்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவன் நெஞ்சுரமுள்ளவன்.
********
 ஆனால் என்ற வெறுக்கத்தக்க சொல் வந்து விட்டால்
முன்னால் சொன்னது  எல்லாம் வீணாகிவிடும்.அதைவிட
இல்லை என்று மறுப்பதோ,அவமானப்படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்கு பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன;முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
********

குறுக்கீடு

0

Posted on : Thursday, March 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பட்டாம் பூச்சி ,தன்  கூட்டிலிருந்து  வெளியே  வர  சற்றே  சிரமப்பட்டுக்  கொண்டிருந்தது .அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் ,அது விரைவில் வெளியே வர உதவி செய்ய நினைத்தார்.உடனே அந்தக்  கூட்டின்  மீது  வேகமாக  ஊதினார்.அதனால் கூடு லேசாக உடைந்து அப்பூச்சி வெளியே இலகுவாக வந்தது.ஆனால் என்ன பரிதாபம்!அது முழுமையான பட்டாம் பூச்சியாக இல்லை.
அடுத்தவர் முன்னேற்றத்தில் குறுக்கிட்டு நீங்கள் விரைவு படுத்த முடியாது.நீங்கள் செய்யும் பேருதவி குறுக்கீட்டைத் தவிர்ப்பது தான்..

பண்டிதர்கள்

0

Posted on : Wednesday, March 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார்.ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து பேசினார்.ஆனால் கூட இருந்த பண்டிதரோ மற்றவரை ஒரு கழுதை என்றார்.பின் முகம் கழுவப் போனவர் வந்ததும் இவர் முகம் கழுவச் சென்றார். இரண்டாமவரைப் பற்றி முதல்வரிடம் பெருமையாகப் பேச 'அவர் ஒன்றும் தெரியாத மாடு,''என்றார்.பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு அருந்த அமர்ந்தனர்.ஒருவர் தட்டில் புல்லும்,மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப் பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர்.தங்களை அவமானப் படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர்.செல்வந்தர் சொன்னார்,''நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள்என்று கருதித் தான் விருந்துக்கு அழைத்தேன்.ஆனால் நீங்கள் யாரென்று உங்கள் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன்.என் மீது ஏன்வீணாய்க் கோபப் படுகிறீர்கள்?''பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.

அனுபவம்

0

Posted on : Wednesday, March 03, 2010 | By : ஜெயராஜன் | In :

அனுபவங்கள் வழி காட்ட வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது.அனுபவம் சிறந்த பள்ளி.ஆனால் ஒருவன் அதில் தானே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அறுபது வயதில் ஒருவர் புரிந்து கொண்ட தத்துவங்களை முப்பது வயதுள்ள ஒருவருக்கு ஏன்புரிய வைக்கமுயற்சி செய்ய வேண்டும்?கரையில் நின்று கொண்டு மற்றவர் நீச்சல் அடிப்பதைப் பார்த்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?தண்ணீரில் குதித்து கையைக் காலை அசைத்துத் தானே நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்?பழுத்த இலை உதிர்ந்து பச்சை இலைக்கு வழி விடுவது தான் இயற்கை நியதி.ஒவ்வொரு தலை முறையும் தங்களை விட அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக வாழும் என்று நம்ப வேண்டும்.''எல்லாமே குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது,''என்று பேசுவது  தவறு.அவரவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி அவரவர்வாழக் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கையில் தான் உலகத்தின் வளர்ச்சி இருக்கிறது.

புரிதல்

0

Posted on : Tuesday, March 02, 2010 | By : ஜெயராஜன் | In :

அநாதை விடுதியில் ஒரு பிச்சைக்காரி அழுது கொண்டிருந்தாள்.''ஏன் அழுகிறாய்?''என்று அங்கே இருந்த பார்வையற்ற மூன்று பெண்கள் கேட்டனர்.
'என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன்.திடீரென இறந்து விட்டது.'என்றாள் பிச்சைக்காரி.''பால் எப்படியிருக்கும்?''எனக் கேட்டாள் ஒரு பார்வையற்ற பெண்.'வெள்ளையாக  இருக்கும்,'என்றார் அங்கிருந்த ஒருவர்.வெள்ளை எப்படி இருக்கும் என அடுத்த பார்வையற்ற பெண் கேட்டாள்.கொக்கு மாதிரி இருக்குமென இன்னொருவர் சொன்னார்.கொக்கு எப்படி இருக்குமென  மூன்றாவது பார்வையற்ற பெண் கேட்டாள்.உடனே ஒரு கொக்கைப் பிடித்து கொண்டு வந்து அந்தப் பெண்களின் கைகளில் கொடுத்தார்கள்.அதைத் தொட்டுப் பார்த்தஅந்த பார்வையற்ற பெண்கள் ''இவ்வளவு பெரிய ஒரு பொருளை குழந்தையின் வாயில் திணித்தால் குழந்தை சாகாமல் என்ன செய்யும்?''
இதைப் போலத் தான் பல சமயங்களில்  பல விசயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம் கருத்துக்களை அள்ளி வீசுகிறோம்.

நினைப்பு

0

Posted on : Tuesday, March 02, 2010 | By : ஜெயராஜன் | In :

நான் இருபது வயது வாலிபனாகும் வரை அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப் பட்டதில்லை.
அதற்குப்பின் என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட  ஆரம்பித்தேன்.
அறுபது வயதாகிய போது தான் அவர்கள் யாருமே என்னைப்பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

திருட்டு

0

Posted on : Tuesday, March 02, 2010 | By : ஜெயராஜன் | In :

கடைத் தெருவுக்கு தன் புது சைக்கிளுடன் வந்த ஒருவர்,தன சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு சைக்கிளைப் பற்றிய நினைவே இல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.அந்த சைக்கிளுக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லை.
மறுநாள் காலை திடீரென அவருக்கு சைக்கிள் ஞாபகம் வந்தது.கடைத்தெருவுக்கு ஓடோடிச் சென்றார்.சைக்கிள் நிச்சயம் திருடு போயிருக்கும் என்று நினைத்தார்.என்ன ஆச்சரியம்!சைக்கிள் அவர் விட்டுச் சென்ற இடத்திலே பத்திரமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்ல விரைந்தார்.இறைவனை வழிபட்டு வெளியே வந்து பார்த்தால் சைக்கிள் திருட்டு  போயிருந்தது.

கொடாக்கண்டன்

0

Posted on : Monday, March 01, 2010 | By : ஜெயராஜன் | In :

கஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
ஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.அவனிடம் கஞ்சனின் மனைவி,''இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,''எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,'அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.'என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.
ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.இப்போது கஞ்சன் வெளியே வந்து,''இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,''என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,''இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?''என்று கேட்க கஞ்சன் சொன்னான்,''நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.''

நீ பாதி நான் பாதி

0

Posted on : Monday, March 01, 2010 | By : ஜெயராஜன் | In :

பக்த துக்காராமின் குடும்பம் மிக வறுமையில் வாடியது.ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லை.அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி,சந்தையில் விற்று வரும்படி சொன்னார்.துக்காராமோ சந்தைக்கு செல்லும் வழியிலேயே யார் யார் எல்லாம் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கரும்பை இனாமாகக் கொடுத்து விட்டு ஒரே ஒரு கரும்புடன் வீடு திரும்பினார்.
அதைக் கண்டு அவர் மனைவிக்குக் கடும் கோபம் வந்தது.அவர் அந்தக் கரும்பை பிடுங்கி அவரை ஒரு அடி அடித்தார்.கரும்பு இரண்டாக உடைந்து விட்டது.உடனே துக்காராம் சொன்னார்,''நல்லதாய்ப் போயிற்று.எனக்கு ஒரு பாதி;உனக்கு ஒரு பாதி.சாப்பிடலாம் வா.''